திருமுறை 2 · 2.023 · 11

திருவானைக்கா

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
ஆனைக்கா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மழையார் மிடறா மழுவா ளுடையாய்உழையார் கரவா உமையாள் கணவாவிழவா ரும்வெணா வலின்மே வியஎம்அழகா எனும்ஆ யிழையாள் அவளே.
சொற்பிரிப்பு
மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!உழை ஆர் கரவா! உமையாள் கணவா!விழவு ஆரும் வெண்நாவலின் மேவிய எம்அழகா!" எனும் - ஆயிழையாள் அவளே.
உரை

மழை மேகம் போன்ற கரிய கண்டத்தை உடையவனே! மழுப்படையை ஏந்திய நாதனே! மானைக் கையில் ஏந்தியவனே! திருவானைக்கா திருத்தலத்தில் வெண்ணாவல் மரத்தடியில் அமர்ந்திருப்பவனே! உமையவளால் அழகன் என்று போற்றப்படும் பெருமானே! உம்மை வணங்குகிறேன்.

2

கொலையார் கரியின் னுரிமூ டியனேமலையார் சிலையா வளைவித் தவனேவிலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்நிலையா அருளாய் எனும்நே ரிழையே.
சொற்பிரிப்பு
கொலை ஆர் கரியின்(ன்) உரி மூடியனே!மலை ஆர் சிலையா வளைவித்தவனே!விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!நிலையா அருளாய்!" எனும் - நேரிழையே.
உரை

கொலைத்தன்மை மிக்க யானையைக் கொன்று அதன் தோலை ஆடையாக அணிந்தவனே! மேருமலையை வில்லாக வளைத்தவனே! என்னை ஆண்டு கொண்டவனே! வெண்ணாவல் தலத்துள் பொருந்தியவனே! உமையவளால் எப்பொழுதும் 'அருள்பவன்’ என்று போற்றப்படுபவனே உன்னை நான் வணங்குகின்றேன்.

3

காலா லுயிர்கா லனைவீ டுசெய்தாய்பாலோ டுநெய்யா டியபால் வணனேவேலா டுகையா யெம்வெண்நா வலுளாய்ஆலார் நிழலாய் எனும்ஆ யிழையே.
சொற்பிரிப்பு
காலால் உயிர் காலனை வீடுசெய்தாய்!பாலோடு நெய் ஆடிய பால்வணனே!வேல் ஆடு கையாய்! எம் வெண்நாவல் உளாய்!ஆல் ஆர் நிழலாய்!" எனும் -ஆயிழையே.
உரை

உயிர்களைக் கவர்ந்து செல்லும் காலனைக் காலால் காய்ந்தவனே! பால் நெய் இவற்றால் நீராடப் பெற்றவனே! சூலப்படையினைக் கையில் ஏந்தியவனே! வெண்ணாவல் தலத்துள் மேவியவனே! உமையவளால் கல்லால மரத்தடியில் அறம் உரைத்தவன் என்று போற்றப்படுபவனே! உன்னை நான் போற்றுகின்றேன்.

4

சுறவக் கொடிகொண் டவன்நீ றதுவாய்உறநெற் றிவிழித் தஎம்உத் தமனேவிறல்மிக் ககரிக் கருள்செய் தவனேஅறமிக் கதுவென் னுமென்ஆ யிழையே.
சொற்பிரிப்பு
சுறவக் கொடி கொண்டவன் நீறுஅதுஆய்உற, நெற்றி விழித்த எம் உத்தமனே!விறல் மிக்க கரிக்கு அருள் செய்தவனே!அறம் மிக்கது" என் எனும் -ஆயிழையே.
உரை

மீன்கொடி ஏந்திவந்த மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிக் கண்ணால் விழித்தவனே! பக்தி கொண்டு வழிபட்ட யானைக்கு அருளியவனே! என்னால் அறமிக்க செயல்களைச் செய்பவன் நீதான் என்று பாராட்டப் பெறுபவனே! உன்னை நான் வணங்குகிறேன்.

5

செங்கட் பெயர்கொண் டவன்செம் பியர்கோன்அங்கட் கருணை பெரிதா யவனேவெங்கண் விடையா யெம்வெண்நா வலுளாய்அங்கத் தயர்வா யினள்ஆ யிழையே.
சொற்பிரிப்பு
செங்கண் பெயர் கொண்டவன் - செம்பியர்கோன்அம் கண் கருணை பெரிதுஆயவனே!வெங் கண் விடையாய்! எம் வெண்நாவல் உளாய்!அங்கத்து அயர்வு ஆயினள், ஆயிழையே.
உரை

முற்பிறப்பில் சிலந்தியாய் இருந்து வழிபட்ட உயிர் மறுபிறப்பில் செம்பியான் என்ற கோசோழனாய் அரச கோச்செங்கட்சோழன் என்ற திருப்பெயரோடு விளங்கிடப் பேரருள் புரிந்தவனே! இடப வாகனனே! வெண்ணாவல் கோயிலில் உறைபவனே! என்று பலவாறு மலைமகள் நைந்து கூவி உடல் சோர்வுற்றாள். உன்னை நான் வணங்குகின்றேன்.

6

குன்றே யமர்வாய் கொலையார் புலியின்தன்தோ லுடையாய் சடையாய் பிறையாய்வென்றாய் புரமூன் றைவெண்நா வலுளேநின்றா யருளாய் எனும்நே ரிழையே.
சொற்பிரிப்பு
குன்றே அமர்வாய் ! கொலை ஆர் புலியின்தன் தோல் உடையாய்! சடையாய்! பிறையாய்!வென்றாய்,புரம் மூன்றை! வெண்நாவலுளேநின்றாய், அருளாய்!" எனும் - நேரிழையே.
உரை

கயிலாய மலையில் வீற்றிருப்பவனே! கொடிய புலியின் தோலை உடுத்தியவனே! நீண்ட சடாமுடியினைக் கொண்டவனே! பிறைநிலவைத் தலையில் தாங்கியவனே! முப்புரங்களையும் அழித்தவனே! வெண்ணாவல் தலத்துள் இருப்பவனே! அருள்வாயாக என்று உமாதேவி வேண்டுகின்றாள்

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
உரை

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.

8

மலையன் றெடுத்த அரக்கன் முடிதோள்தொலையவ் விரலூன் றியதூ மழுவாவிலையா லெனையா ளும்வெண்நா வலுளாய்அலசா மல்நல்காய் எனும்ஆ யிழையே.
சொற்பிரிப்பு
மலை அன்று எடுத்த(வ்) அரக்கன் முடிதோள்தொலைய(வ்) விரல் ஊன்றிய தூ மழுவா!விலையால் எனை ஆளும் வெண்நாவல் உளாய்!அலசாமல் நல்காய்!" எனும் - ஆயிழையே.
உரை

கயிலை மலையைப் பெயர்த்த அரக்கனாகிய இராவணனின் முடியையும் தோள்களையும் கால்விரலால் அழுத்தி முடிவில் அருள் செய்தவனே! தூய மழு என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவனே! என்னை ஆட்கொள்ள வெண்ணாவல் மரத்தடியில் அமர்ந்தவனே! என்று உமாதேவியால் வணங்கப் பெறுபவனே! காத்தருள்வாயாக.

9

திருவார் தருநா ரணன்நான் முகனும்மருவா வெருவா அழலாய் நிமிர்ந்தாய்விரையா ரும்வெண்நா வலுள்மே வியஎம்அரவா எனும்ஆ யிழையா ளவளே.
சொற்பிரிப்பு
திரு ஆர்தரு நாரணன், நான்முகனும்,அருவா, வெருவா, அழல்ஆய் நிமிர்ந்தாய்!விரை ஆரும் வெண்நாவலுள் மேவிய எம்அரவா!" எனும் - ஆயிழையாள் அவளே.
உரை

திருமகளைப் பெற்ற திருமாலும் பிரமனும் நெருங்காநிலையில் அவர்கள் அஞ்சிட அழலாய் நின்றவனே! மணமிக்க வெண்ணாவல் மரத்தடியில் கோயில் கொண்டவனே! உமாதேவியால் அரனே என்று அழைக்கப்படும் எம்பெருமானே! உன்னை நானும் இறைஞ்சுகின்றேன்.

10

புத்தர் பலரோ டமண்பொய்த் தவர்கள்ஒத்தவ் வுரைசொல் லிவையோ ரகிலார்மெய்த்தே வர்வணங் கும்வெண்நா வலுளாய்அத்தா அருளாய் எனும்ஆ யிழையே.
சொற்பிரிப்பு
புத்தர் பலரோடு அமண்பொய்த்தவர்கள்ஒத்த(வ்) உரை சொல் இவை ஓரகிலார்;மெய்த் தேவர் வணங்கும் வெண்நாவல்உளாய்!அத்தா அருளாய்!” எனும் - ஆயிழையே.
உரை

புத்தர்களும் சமணர்களும் பொய்த்தவம் புரிபவர்கள். ஒன்றுபட்டு அவர்கள் சொல்லும் வார்த்தைகளை நம்ப வேண்டாம். மெய்த்தவர்களான தேவர்கள் புத்தரும் சமணரும் கூறுவனவற்றை ஏற்காமல் வெண்ணாவல் தலத்துள் கோயில் கொண்ட எம்பெருமானைப் புகழ்ந்து பாடுவார்கள். உமையவளால் அன்புடைய இறைவன் என்று போற்றப்படும் எம்பெருமானே! உன்னை வணங்கும் எனக்கு அருள்வாயாக!

11

வெண்நா வலமர்ந் துறைவே தியனைக்கண்ணார் கமழ்கா ழியர்தந் தலைவன்பண்ணோ டிவைபா டியபத் தும்வல்லார்விண்ணோ ரவரேத் தவிரும் புவரே.
சொற்பிரிப்பு
வெண்நாவல் அமர்ந்து உறை வேதியனைக்,கண் ஆர் கமழ் காழியர் தம் தலைவன்,பண்ணோடு இவை பாடிய பத்தும் வல்லார்விண்ணோர் அவர் ஏத்த விரும்புவரே.சுவாமி : நீர்த்திரள்நாதர்;அம்பாள் : அகிலாண்ட நாயகி.
உரை

வெண்ணாவல் திருத்தலத்தில் கோயில் கொண்டு அமர்ந்துள்ள எம்பெருமானை, ஞானம் கைவரப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் பண்ணோடு பத்துப் பாடல்களைப் பாடியருளி உள்ளார். அப்பத்துப் பாடல்களையும் உணர்ந்து அன்புடன் பாட வல்லவர்கள் தேவர்களாலும் விரும்பிப் புகழப்படுவார்கள்.