திருமுறை 2 · 2.022 · 11

திருக்குடவாயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
குடவாயில்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

திகழுந் திருமா லொடுநான் முகனும்புகழும் பெருமான் அடியார் புகலமகிழும் பெருமான் குடவா யில்மன்னிநிகழும் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
திகழும் திருமாலொடு நான்முகனும்புகழும் பெருமான்; அடியார் புகல,மகிழும் பெருமான் - குடவாயில் மன்னிநிகழும் பெருங்கோயில் நிலாயவனே.
உரை

பெருமைமிக்க திருமாலும் நான்முகனும் புகழ்ந்து போற்றும் எம்பெருமான்; அன்புடன் அடியவர்கள் புகழ்ந்து பாடிட மகிழும் எம் பெருமான்; குடவாயில் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள பெருங்கோயிலில் நிலையாகக் கோயில் கொண்டுள்ளார்.

2

ஓடுந் நதியும் மதியோ டுரகம்சூடுஞ் சடையன் விடைகொல் கொடிமேல்கூடுங் குழகன் குடவா யில்தனில்நீடும் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
ஓடும் நதியும், மதியோடு, உரகம்,சூடும் சடையன்; விடை தொல்கொடிமேல்கூடும் குழகன் - குடவாயில் தனில்நீடும் பெருங்கோயில் நிலாயவனே.
உரை

பாய்ந்து ஓடிவரும் நதியையும் ஊர்ந்து செல்லும் நிலாவையும் சீறும் பாம்பையும் சடையில் தரித்தவர்; இடபத்தைக் கொடியாக ஏந்தியும் இடபத்தின் மீது (அமர்ந்தும்) ஏறியும்      காட்சி தருபவர்; எம்பெருமான் குடவாயில் திருத்தலத்தில் நிலைபெற்று இருப்பவரே.

3

கலையான் மறையான் கனலேந் துகையான்மலையா ளவள்பா கமகிழ்ந் தபிரான்கொலையார் சிலையான் குடவா யில்தனில்நிலையார் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்;மலையாள் அவள் பாகம் மகிழ்ந்த பிரான்;கொலை ஆர் சிலையான் - குடவாயில் தனில்நிலை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.
உரை

பீதாம்பரதாரியாகிய திருமாலாகவும், மறைகள் ஓதிய பிரம்மாவாகவும்       விளங்கும் எம்பெருமானே! கனலைக் கையில் ஏந்திய எம்பெருமானே! உமையாளை இடப்பாகத்தில்கொண்டு மகிழ்ந்து காட்சி தருபவரே! முப்புரத்தை எரிக்க மேருமலையை வில்லாக வளைத்த எம்பிரானே! குடவாயில் தன்னில் மன்னும் பெருங்கோயிலில் நிலையாகக் கோயில் கொண்டுள்ளார்.

4

சுலவுஞ் சடையான் சுடுகா டிடமாநலமென் முலையாள் நகைசெய் யநடம்குலவுங் குழகன் குடவா யில்தனில்நிலவும் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
சுலவும் சடையான்; சுடுகாடு இடமா,நல மென்முலையாள் நகைசெய்ய,நடம்குலவும் குழகன் - குடவாயில் தனில்நிலவும் பெருங்கோயில் நிலாயவனே.
உரை

விரிந்து பரந்து விளங்கும் செஞ்சடையான்; சுடுகாட்டை இடமாகக் கொண்டு ஆடல் புரிபவர்; உமாதேவி மகிழுமாறு நடனம் புரிபவர்; குடவாயில் தலத்தில் அமைந்திருக்கும் பெருங்கோயிலில் நிலையாகக் கோவில் கொண்டவர்.

5

என்றன் உளமே வியிருந் தபிரான்கன்றன் மணிபோல் மிடறன் கயிலைக்குன்றன் குழகன் குடவா யில்தனில்நின்ற பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;கன்றன்; மணி போல் மிடறன்; கயிலைக்குன்றன்; குழகன் - குடவாயில் தனில்நின்ற பெருங்கோயில் நிலாயவனே.
உரை

என்னுடைய உள்ளத்தில் விரும்பி இருப்பவர்; நீலமணி போன்ற கரிய கண்டத்தைக் கொண்டு அருள்பவர்; கயிலை மலையை இடமாகக் கொண்ட அழகானவர்; அன்புடையவர்; குடவாயில் தலத்தில் அமைந்த பெருங்கோயிலில் கோயில் கொண்டவர்.

6

அலைசேர் புனலன் னனலன் னமலன்தலைசேர் பலியன் சதுரன் விதிரும்கொலைசேர் படையன் குடவா யில்தனில்நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
அலை சேர் புனலன்(ன்); அனலன்(ன்); அமலன்;தலை சேர் பலியன்; சதுரன்; விதிரும்கொலை சேர் படையன் - குடவாயில் தனில்நிலை சேர் பெருங்கோயில் நிலாயவனே.
உரை

அலைகள் பொருந்திய கங்கை நதியைச் சடையில் தாங்கி அருள் செய்யும் எம்பெருமான்; நெருப்பைக் கையில் ஏந்திய ஈசன்; மும்மலம் அற்ற அமலன்; கபாலத்தைக் கையில் ஏந்தி பலிதேர்ந்து வருபவன்; ஆற்றல் நிறைந்தவன்; சூலப்படையை ஏந்திய எம்பெருமான்; குடவாயில் தன்னில் உள்ள பெருங்கோயிலில் கோயில் கொண்டுள்ளார்.

7

அறையார் கழலன் னழலன் னியலின்பறையாழ் முழவும் மறைபா டநடம்குறையா அழகன் குடவா யில்தனில்நிறையார் பெருங்கோ யில்நிலா யவனே.
சொற்பிரிப்பு
அறை ஆர் கழலன்(ன்); அழலன்(ன்); இயலின்பறை யாழ் முழவும் மறை பாட,நடம்குறையா அழகன் - குடவாயில் தனில்நிறை ஆர் பெருங்கோயில் நிலாயவனே.
உரை

ஒலிக்கின்ற கழலைக் காலில் அணிந்தவன்; நெருப்பைக் கையில் ஏந்தியவன்; பறை, யாழ், முழவு போன்ற இன்னிசைக் கருவிகள் முழங்க, மறைபாட நடனமிடும் அடிகளாகிய எம்பெருமான் குடவாயில் தலத்தில் உள்ள பெருங்கோயிலில் கோயில் கொண்டுள்ளார்.

8

வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்வரையா ரவொர்கால் விரல்வைத் தபிரான்வரையார் மதில்சூழ் குடவா யில்மன்னும்வரையார் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.
சொற்பிரிப்பு
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்)வரை ஆர் ஒர் கால் விரல் வைத்த பிரான்வரை ஆர் மதில் சூழ் குடவாயில் மன்னும்வரை ஆர் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.
உரை

மலை போன்ற வலிய தோள்களைக் கொண்ட அரக்கனாகிய இராவணன் வருந்த உலகிலேயே பெரிய மலையாகிய கயிலாய மலையைத் தன் கால் விரலால் ஊன்றி அழுத்தியவர்; மலைபோன்ற உயர்ந்த மதில்கள் சூழ்ந்த குடவாயில் தலத்தில் என்றும் நிலையாக அமைந்த பெருங்கோயிலில் கோயில் கொண்டவர்.

9

பொன்னொப் பவனும் புயலொப் பவனும்தன்னொப் பறியாத் தழலாய் நிமிர்ந்தான்கொன்னற் படையான் குடவா யில்தனில்மன்னும் பெருங்கோ யில்மகிழ்ந் தவனே.
சொற்பிரிப்பு
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும்,தன் ஒப்பு அறியாத் தழல்ஆய் நிமிர்ந்தான்;கொல்-நல் படையான் - குடவாயில் தனில்மன்னும் பெருங்கோயில் மகிழ்ந்தவனே.
உரை

பொன் போன்ற நிறமுடைய பிரமனும், மழை மேகம் போன்ற நிறமுடையவனும்அறியமுடியாதவாறு செந்தழல் பிழம்பாய் ஓங்கி உயர்ந்து நின்ற எம்பெருமான்; தீமைகளை அழிக்கும் கொடிய படைக்கலங்களைக் கையில் ஏந்தியவன்; குடவாயில் தலத்தில் மன்னும் பெருங்கோயிலில் கோயில் கொண்டவன்.

10

வெயிலின் நிலையார் விரிபோர் வையினார்பயிலும் முரையே பகர்பா விகள்பால்குயிலன் குழகன் குடவா யில்தனில்உயரும் பெருங்கோ யிலுயர்ந் தவனே.
சொற்பிரிப்பு
வெயிலின் நிலையார், விரி போர்வையினார்,பயிலும்(ம்) உரையே பகர் பாவிகள்பால்குயிலன்; குழகன் - குடவாயில் தனில்உயரும் பெருங்கோயில் உயர்ந்தவனே.
உரை

வெயிலின் நிறம் போன்ற தூய காவி உடையினை அணிந்து கொண்டே சமணர்கள் செந்தழல் மேனியனாகிய சிவனைப் பழித்து உரைப்பர். அந்தப் பாவியரின் சொற்களில் பொருந்தி அமையாத குழகனே ஈசன் ஆவான். அவன் குடவாயில் தலத்தில் அமைந்த பெருங்கோயிலில் கோயில் கொண்டுள்ளான்.

11

கடுவாய் மலிநீர் குடவா யில்தனில்நெடுமா பெருங்கோ யில்நிலா யவனைத்தடமார் புகலித் தமிழார் விரகன்வடமார் தமிழ்வல் லவர்நல் லவரே.
சொற்பிரிப்பு
கடுவாய் மலி நீர் குடவாயில் தனில்நெடு மா பெருங்கோயில் நிலாயவனை,தடம் ஆர் புகலித் தமிழ் ஆர் விரகன்,வடம் ஆர் தமிழ் வல்லவர் நல்லவரே.சுவாமி : கோணேசுவரர்;அம்பாள் : பெரியநாயகியம்மை.
உரை

நீர்வளம் மிகுந்த குடவாயில் தலத்தில் உள்ள பெருங்கோயிலில் உறைகின்ற எம்பெருமானை, தோண்டிய இடமெல்லாம் நீர் ஊறுகின்ற தன்மைபோல, நினைத்த போதெல்லாம் தமிழ்பாடும் திருஞான சம்பந்தப் பெருமான் அன்புடன் பல பாக்கள் பாடி அருளியுள்ளார். அத்தமிழ்ப் பாடல்களைப் பாடவல்லார்கள் நல்லவர்களாவார்கள் என்க.