திருமுறை 2 · 2.021 · 11

திருக்கழிப்பாலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
கழிப்பாலை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

புனலா டியபுன் சடையாய் அரணம்அனலா கவிழித் தவனே அழகார்கனலா டலினாய் கழிப்பா லையுளாய்உனவார் கழல்கை தொழுதுள் குதுமே.
சொற்பிரிப்பு
புனல் ஆடிய புன் சடையாய்! அரணம்அனல்ஆக விழித்தவனே! அழகு ஆர்கனல் ஆடலினாய்! கழிப்பாலை உளாய்!உன வார் கழல் கை தொழுது உள்குதுமே.
உரை

கங்கையைத் தலையில் தரித்த எம்பெருமானே! முப்புரங்கள் சாம்பலாகுமாறு விழித்து எரித்தவனே! நெருப்பினைக் கையில் ஏந்தி அழகுற ஆடியவனே! கழிப்பாலைக் கடவுளே! உன் நீழ்கழலடிகளைத் தொழுது போற்றி வணங்குகின்றேன்.

2

துணையா கவொர்தூ வளமா தினையும்இணையா கவுகந் தவனே இறைவாகணையால் எயிலெய் கழிப்பா லையுளாய்இணையார் கழலேத் தஇடர் கெடுமே.
சொற்பிரிப்பு
துணை ஆக ஒர் தூ வள மாதினையும்இணை ஆக உகந்தவனே! இறைவா!கணையால் எயில் எய் கழிப்பாலை உளாய்!இணை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.
உரை

தூயவளாம் உமையவளைத் துணையாக ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமானே! அவளுக்கும் தனக்கு இணையான சிறப்பினைக் கொடுத்தவனே! இறைவனே ! கணைகளைக் கையில் கொண்டு முப்புரங்களை அழித்தவனே! கழிப்பாலையுள் உள்ள உனது திருவடிகளைத் தொழுது எங்களது இடர் நீங்கப் பெறுவோமாக!

3

நெடியாய்! குறியாய்! நிமிர் புன்சடையின்முடியாய்! சுடுவெண் பொடி முற் றணிவாய்!கடியார் பொழில்சூழ் கழிப்பாலை யுளாய்!அடியார்க் கடையா அவலம் மவையே.
சொற்பிரிப்பு
நெடியாய்! குறியாய்! நிமிர் புன்சடையின்முடியாய்! சுடுவெண் பொடி முற்று அணிவாய்!கடி ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!அடியார்க்கு அடையா அவலம்(ம்) அவையே.
உரை

பேரண்டமாக விளங்கும் இறைவனே! அணுவுக்குள் அணுவாய் மிகச் சிறிய நிலையிலும் பொருந்தியவனே! சடைமுடி உடைய சிவனே! வெண்ணீறு அணிந்தவனே! மணம் மிகும் சோலைகள் நிறைந்த கழிப்பாலைத் திருத்தலத்துள் உறைபவனே! உன்னை வணங்கும் அடியார்களுக்கு அவலங்கள் வந்து பொருந்தாவாம் என்க.

4

எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீவளிகா யமென வெளிமன் னியதூஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.
சொற்பிரிப்பு
எளியாய்! அரியாய்! நிலம், நீரொடு, தீ,வளி, காயம்,என வெளி மன்னிய தூஒளியாய்! உனையே தொழுது உன்னுமவர்க்குஅளியாய்! கழிப்பாலை அமர்ந்தவனே.
உரை

கழிப்பாலைத் தலத்துள் அமர்ந்தவனே! நீயே அன்பர்களுக்கு எளியோனாகவும் அல்லாதவர்களுக்கு அரியனாகவும் விளங்குகிறாய். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாகவும் உள்ளாய். தூய ஒளியாகவும் உள்ளாய், உன்னைத் தொழுது தியானிப்பவர்க்கு திருவருட்பேறு எய்தும்.

5

நடம்நண் ணியொர்நா கமசைத் தவனேவிடம்நண் ணியதூ மிடறா விகிர்தாகடல்நண் ணுகழிப் பதிகா வலனேஉடன்நண் ணிவணங் குவனுன் னடியே.
சொற்பிரிப்பு
நடம் நண்ணி,ஒர் நாகம் அசைத்தவனே!விடம் நண்ணிய தூ மிடறா! விகிர்தா!கடல் நண்ணு கழிப்பதி காவலனே!உடல் நண்ணி வணங்குவன், உன் அடியே.
உரை

நடனம் ஆடுதலை விரும்புபவனே! பாம்பை ஆபரணமாக அணிந்தவனே! விடத்தை மிடற்றில் அடக்கி அருளியவனே! அன்பு நிறைந்தவனே! கடல் சூழ்ந்த கழிப்பாலைத் தலத்தில் உறைபவனே! உன் திருவடிகளை நிலம் வீழ்ந்து வணங்குகின்றேன்.

6

பிறையார் சடையாய் பெரியாய் பெரியம்மறையார் தருவாய் மையினா யுலகிற்கறையார் பொழில்சூழ் கழிப்பா லையுளாய்இறையார் கழலேத் தஇடர் கெடுமே.
சொற்பிரிப்பு
பிறை ஆர் சடையாய்! பெரியாய்! பெரிய(ம்)மறை ஆர் தரு வாய்மையினாய்! உலகில்கறை ஆர் பொழில் சூழ் கழிப்பாலை உளாய்!இறை ஆர் கழல் ஏத்த, இடர் கெடுமே.
உரை

பிறைச் சந்திரனைத் தலையில் தரித்தவனே! முதற்பொருளாய் விளங்கும் பெரியவனே! நான்மறையினை அருளிச் செய்த திருவாயினை உடையவனே! குளிர்ந்த சோலைகள் நிறைந்த திருக்கழிப்பாலைத் தலத்துள் கோயில் கொண்டு விளங்குபவனே ! உன்னுடைய திருவடிகளையே போற்றி வணங்குபவர்களின் இடர்கள் எல்லாம் நீங்கும்.

7

முதிருஞ் சடையின் முடிமேல் விளங்குங்கதிர்வெண் பிறையாய் கழிப்பா லையுளாய்எதிர்கொள் மொழியால் இரந்தேத் துமவர்க்கதிரும் வினையா யினஆ சறுமே.
சொற்பிரிப்பு
முதிரும் சடையின் முடிமேல் விளங்கும்கதிர் வெண்பிறையாய்! கழிப்பாலை உளாய்!எதிர்கொள் மொழியால் இரந்து ஏத்துமவர்க்குஅதிரும் வினை ஆயின ஆசு அறுமே.
உரை

நீண்ட சடாமுடியின் மேல் அழகிய பிறைச் சந்திரனை அணிந்து அருள்பவனே! திருக்கழிப்பாலைத் தலத்துள் கோயில் கொண்டவனே! உன்னை வணங்கிப் போற்றும் அடியார் பெருமக்களின் வினைகள் எல்லாம் தானாகவே நீங்கிவிடும்.

8

எரியார் கணையால் எயிலெய் தவனேவிரியார் தருவீழ் சடையாய் இரவிற்கரிகா டலினாய் கழிப்பா லையுளாய்உரிதா கிவணங் குவனுன் னடியே.
சொற்பிரிப்பு
எரி ஆர் கணையால் எயில் எய்தவனே!விரி ஆர் தரு வீழ் சடையாய்! இரவில்கரி கடலினாய்! கழிப்பாலை உளாய்!உரிது ஆகி வணங்குவன், உன் அடியே.
உரை

அக்கினித் தேவனைக் கூர்மையான அம்பாகக் கொண்டு அசுரர்களின் முப்புரங்களையும் எரித்து அழித்தவனே! நாற்புரமும் விரிந்த சடையினைக் கொண்டவனே !இரவில் சுடுகாட்டில் ஆடுவதில் மகிழ்பவனே! திருக்கழிப்பாலையுள் கோயில் கொண்டுள்ளஉனது திருவடிகளை எப்போதும் நான் வணங்குவேன்.

9

நலநா ரணன்நான் முகன்நண் ணலுறக்கனலா னவனே கழிப்பா லையுளாய்உனவார் கழலே தொழுதுன் னுமவர்க்கிலதாம் வினைதான் எயிலெய் தவனே.
சொற்பிரிப்பு
நல நாரணன், நான்முகன், நண்ணல்உற,கனல் ஆனவனே!கழிப்பாலை உளாய்!உன வார் கழலே தொழுது உன்னுமவர்க்குஇலதுஆம் வினைதான்; எயில் எய்தவனே!
உரை

காத்தல் தொழிலைச் செய்யும் நாராயணனும் படைத்தல் தொழிலைச் செய்யும் பிரமனும் உனது அடிமுடி தேடிய பொழுது, அவர்கள் காண முடியாமல் ஒளி உருவாய் நின்றவனே! மதில்கள் மூன்றையும் அழித்தவனே! கழிப்பாலையுள் உறைபவனே! உன்னுடைய திருவடிகளையே நினைந்து தொழும் அடியவர்களுக்கு வினை இல்லை, துன்பம் இல்லையாம்.

10

தவர்கொண் டதொழிற் சமண்வே டரொடுந்துவர்கொண் டனநுண் துகிலா டையரும்அவர்கொண் டனவிட் டடிகள் ளுறையும்உவர்கொண் டகழிப் பதியுள் குதுமே.
சொற்பிரிப்பு
தவர் கொண்ட தொழில் சமண்வேடரொடும்துவர் கொண்டன நுண்துகில் ஆடையரும்,அவர் கொண்டன விட்டு, அடிகள் உறையும்உவர் கொண்ட - கழிப்பதி உள்குதுமே.
உரை

சமணர்களும் சாக்கியர்களும் தவவேடம் கொண்டவர்கள். துவராடையை அணிந்தவர்கள். நல்லாடையை நீக்கிய அவர்களது சொற்களை நாங்கள் ஏற்கமாட்டோம்.தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையுள் கோயில் கொண்டுள்ள இறைவனாகிய உன்னை நாங்கள் வணங்குவோமாக.

11

கழியார் பதிகா வலனைப் புகலிப்பழியா மறைஞா னசம்பந் தனசொல்வழிபா டிவைகொண் டடிவாழ்த் தவல்லார்கெழியார் இமையோ ரொடுகே டிலரே.
சொற்பிரிப்பு
கழி ஆர் பதி காவலனைப் புகலிப்பழியா மறை ஞானசம்பந்தன சொல்வழிபாடு இவை கொண்டு அடி வாழ்த்த வல்லார்,கெழியார், இமையோரொடு; கேடு இலரே.சுவாமி : பால்வண்ணநாதர்;அம்பாள் : வேதநாயகியம்மை.
உரை

உப்பங்கழிகள் நிறைந்திருக்கும் திருக்கழிப்பாலைத் திருத்தலத்தில் கோயில் கொண்ட எம்பெருமானே! உன்னை உன் பெருமையை ஞானசம்பந்தப் பெருமான் உள்ளவாறு சொல்லிப் பாடிப் பாராட்டியுள்ளார். நாங்களும் அவர் பாடிய பாடல்களைப் பாடி உன்னை வணங்கித் தொழுவோர்கள் உன் அருளை நிறைவாகப் பெற்று தேவர்களோடு இணைந்து கேடிலராய் என்றும் வாழ்ந்திருப்பார்கள்.