திருமுறை 2 · 2.020 · 11

திருஅழுந்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
அழுந்தூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தொழுமா றுவல்லார் துயர்தீ ரநினைந்தெழுமா றுவல்லார் இசைபாட விம்மிஅழுமா றுவல்லார் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
சொற்பிரிப்பு
தொழும்ஆறு வல்லார், துயர் தீர நினைந்துஎழும்ஆறு வல்லார், இசை பாட விம்மிஅழும்ஆறு வல்லார், அழுந்தை மறையோர்வழிபாடுசெய் மா மடம் மன்னினையே.
உரை

எப்பொருளையும் விரும்பாமல் உன்னைத் தொழுபவர்கள்; தங்கள் துயர்தீர வேண்டி உன்னைத் தொழுபவர்கள்; பக்தியினால் பாடிவிம்மி அரற்றும் அடியவர்கள் : ஆகம முறைப்படி வழிபடும் மறையவர்கள் ஆகிய அனைவருக்கும் அருள, திருவழுந்தூரில் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டனையே.

2

கடலே றியநஞ் சமுதுண் டவனேஉடலே உயிரே உணர்வே யெழிலேஅடலே றுடையாய் அழுந்தை மறையோர்விடலே தொழமா மடம்மே வினையே.
சொற்பிரிப்பு
கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே!உடலே! உயிரே! உணர்வே! எழிலே!அடல் ஏறு உடையாய்! அழுந்தை மறையோர்விடலே! தொழ, மா மடம் மேவினையே.
உரை

கடலில் தோன்றிய விடத்தை அமுதாக உண்டருளியவனே! எனது உடலாகவும், உயிராகவும், உணர்வாகவும் உள்ளவனே! அழகானவனே! இடப வாகனத்தை உடையவனே! மறையோர்களால் வணங்கப்படுபவனே! திருவழுந்தூரில் கோயில் கொண்டு அருள் வழங்க திருவுள்ளம் கொண்டனையே.

3

கழிகா டலனே கனலா டலினாய்பழிபா டிலனே யவையே பயிலும்அழிபா டிலராய் அழுந்தை மறையோர்வழிபா டுசெய்மா மடம்மன் னினையே.
சொற்பிரிப்பு
கழிகாடலனே! கனல்ஆடலினாய்!பழிபாடு இலனே! அவையே பயிலும்அழிபாடு இலராய், அழுந்தை மறையோர்வழிபாடு செய் மா மடம் மன்னினையே.
உரை

சுடுகாட்டில், நெருப்பைக் கையில் ஏந்தி ஆடிக்கொண்டிருப்பவனே ! குற்றமற்றவனே! நல்லதையே பயின்று அழிபாடு இன்றி வழிபாடு செய்யும் மறையவர்கள் நிறைந்த அழுந்தூர்தன்னில் அமர்ந்தவனே!

4

வானே மலையே யெனமன் னுயிரேதானே தொழுவார் தொழுதாள் மணியேஆனே சிவனே அழுந்தை யவரெம்மானே யெனமா மடம்மன் னினையே.
சொற்பிரிப்பு
வானே! மலையே! என மன்உயிரே!தானே தொழுவார் தொழு தாள் மணியே!ஆனே! சிவனே! அழுந்தையவர், “எம்மானே!" என, மா மடம் மன்னினையே.
உரை

வானாக விளங்குபவனே! மலையாகத் திகழ்பவனே! உயிராக உறைபவனே! தானே விரும்பித் தொழும் அடியார்களுக்குத் திருவடிப்பேற்றை அருள்பவனே! சிவன் ஆனவனே! அழுந்தை நகரில் கோயில் கொண்டனையே.

5

அலையார் புனல்சூழ் அழுந்தைப் பெருமான்நிலையார் மறியும் நிறைவெண் மழுவும்இலையார் படையும் மிவையேந் துசெல்வநிலையா வதுகொள் கெனநீ நினையே.
சொற்பிரிப்பு
அலை ஆர் புனல் சூழ் அழுந்தைப் பெருமான்!நிலை ஆர் மறியும், நிறை வெண்மழுவும்,இலை ஆர் படையும்(ம்), இவை ஏந்து செல்வ!நிலையா அது கொள்க என, நீ நினையே!
உரை

அலைகள் விளங்கும் நீர்நிலைகள் சூழ்ந்த அழுந்தை நகரில் எழுந்தருளிய சிவனே ! நீ அலையும் மானை அசையாமல் உன் கையில் அடக்கியுள்ளாய். ஒளிமிக்க மழுவையும் சூலப்படையையும் எப்பொழுதும் ஏந்தி உள்ளாய். இயக்கத்தையும் இயக்கமின்மையையும்          உன்னிடத்தில் பொருத்திக் காட்டும் உன்னை நானும் வணங்குகிறேன்.

6

நறவார் தலையின் நயவா வுலகில்பிறவா தவனே பிணியில் லவனேஅறையார் கழலாய் அழுந்தை மறையோர்மறவா தெழமா மடம்மன் னினையே.
சொற்பிரிப்பு
நறவு ஆர் தலையின் நயவா! உலகில்பிறவாதவனே! பிணி இல்லவனே!அறை ஆர் கழலாய்! அழுந்தை மறையோர்மறவாது எழ, மா மடம் மன்னினையே.
உரை

தலையில் தலைமாலை அணிந்தவனே! பிறவா யாக்கைப் பெரியோனே ! பிணிக்கப்படும் வினையால் பிணைக்கப்படாதவனே! பிணிக்கப்படும் வினை முதலானவற்றால் ஆட்படாத நின்மலனே! ஒலிக்கின்ற கழலினை அணிந்தவனே! அழுந்தை நகரில் வாழும் மறையோர்களால் மறவாது வணங்கப்படுபவனே! உன்னை நானும் மறவாமல் வணங்கிடுவேன்.

7

தடுமா றுவல்லாய் தலைவா மதியம்சுடுமா றுவல்லாய் சுடரார் சடையில்அடுமா றுவல்லாய் அழுந்தை மறையோர்நெடுமா நகர்கை தொழநின் றனையே.
சொற்பிரிப்பு
தடுமாறு வல்லாய்! தலைவா! மதியம்சுடும் ஆறு வல்லாய்! சுடர்ஆர் சடையில்அடும்ஆறு வல்லாய்! அழுந்தை மறையோர்நெடு மா நகர் கைதொழ, நின்றனையே.
உரை

தடுமாற்றம் இல்லாச் சிவபெருமானே! உன்னை நாடிவரும் எங்களை முதலில் நீ தடுமாறச் செய்வாய். உன் காலில் விழுந்த சந்திரனை நீ தலையில் வைத்துள்ளாய். ஓடிவரும் கங்கையை நீ உன் தலையில் நிலைபெறச் செய்தாய். அழுந்தை நகரில் கோயில் கொண்டு மறையவர்களுக்கு அருளும் நீ எனக்கும் அருள்வாயாக!

8

பெரியாய் சிறியாய் பிறையாய் மிடறும்கரியாய் கரிகா டுயர்வீ டுடையாய்அரியாய் எளியாய் அழுந்தை மறையோர்வெரியார் தொழமா மடம்மே வினையே.
சொற்பிரிப்பு
பெரியாய்! சிறியாய்! பிறையாய்! மிடறும்கரியாய்! கரிகாடு உயர்வீடு உடையாய்!அரியாய்! எளியாய்! அழுந்தை மறையோர்வெரியார் தொழ மா மடம் மேவினையே.
உரை

சிவபெருமானே! பெரியவனும் நீயே! மிகமிகச் சிறியவனும் நீயே! ஒளிமிக்க பிறையைத் தலையில் கொண்டவனும் நீயே! கரிய விடத்தைக் கண்டத்தில் அடக்கியவனும் நீயே! சுடுகாட்டில் உறைபவனும் நீயே! நாட்டில் கோயில் கொண்டு அருள்பவனும் நீயே! திருவழுந்தையில் மறையவர்களால் வேதமுறைப்படி வணங்கப்பெறுபவனும் நீயே! அடியவர்களில் அன்புக்குரியவனும் நீயே! உன்னை நானும் வணங்குகின்றேன்.

9

மணிநீள் முடியான் மலையை அரக்கன்தணியா தெடுத்தான் உடலந் நெரித்தஅணியார் விரலாய் அழுந்தை மறையோர்மணிமா மடம்மன் னியிருந் தனையே.
சொற்பிரிப்பு
மணி நீள் முடியால் மலையை அரக்கன்தணியாது எடுத்தான் உடலம் நெரித்தஅணி ஆர் விரலாய்! அழுந்தை மறையோர்மணிமா மடம் மன்னி இருந்தனையே.
உரை

மணிகள் பதித்த அழகிய தலைமுடியைக் கொண்ட இராவணன், தன்முனைப்பு கொண்டு நீயிருக்கும் கயிலாய மலையை எடுக்க முயன்றான். அப்பொழுது உன் கால்விரலால் அவனை அடர்த்த, அவன் அழுது புலம்பித் தொழுத பின்னர், அவனுக்கு அருளினாய். திருவழுந்தையூரில் மறையவர்களுக்கு உன் அடியினால் அருளிக் கொண்டு இருக்கிறாய். என்னே உன் திருவடி அருள்!

10

முடியார் சடையாய் முனநா ளிருவர்நெடியான் மலரான் நிகழ்வா லிவர்கள்அடிமே லறியார் அழுந்தை மறையோர்படியாற் றொழமா மடம்பற் றினையே.
சொற்பிரிப்பு
முடி ஆர் சடையாய்! முனம்நாள், இருவர்நெடியான்,மலரான் - நிகழ்வால் இவர்கள்அடி மேல் அறியார்; அழுந்தை மறையோர்படியால்-தொழ மா மடம் பற்றினையே.
உரை

நீண்ட சடாமுடியினைக் கொண்ட எம்பெருமானே! திருமாலும் பிரமனும் உன் அடிமுடி தேடியும் அவர்களால் காண முடியாமல் அயர்வுறுமாறு செய்தவனே! ஆனால் திருவழுந்தைத் தலத்தில் உன்முடிபோல் உயர்ந்த கோபுரத் தரிசனத்தையும் அருளுகின்றாய். உன் திருவடித் தரிசனத்தையும் மறையவர்களுக்கு அருளுகின்றாய்.

11

அருஞா னம்வல்லார் அழுந்தை மறையோர்பெருஞா னமுடைப் பெருமா னவனைத்திருஞா னசம்பந் தனசெந் தமிழ்கள்உருஞா னமுண்டாம் உணர்ந்தார் தமக்கே.
சொற்பிரிப்பு
அரு ஞானம் வல்லார் அழுந்தை மறையோர்பெரு ஞானம் உடைப் பெருமான் அவனைத்திருஞானசம்பந்தன செந்தமிழ்கள்,உருஞானம் உண்டுஆம், உணர்ந்தார்தமக்கே.சுவாமி : வேதபுரீசுவரர்;அம்பாள் : சௌந்தராம்பிகையம்மை.
உரை

அருமையான மறையோதும் மறையோர்கள் தொழும் திருவழுந்தைத் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானை, திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய தமிழ் மாலைகளைக் (பாடல்கள்) கொண்டு வழிபாடு செய்பவர்கள் உண்மையான திருவருள் ஞானம் பெற்றுச் சிறப்புறுவார்கள் என்க.