திருமுறை 2 · 2.019 · 11

திருநெல்லிக்கா

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
நெல்லிக்கா
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளிமறத்தால் மதில்மூன் றுடன்மாண் பழித்ததிறத்தால் தெரிவெய் தியதீவெண் டிங்கள்நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
அறத்தால் உயிர் காவல்அமர்ந்து அருளி,மறத்தால் மதில்மூன்று உடன் மாண்பு அழித்ததிறத்தால் தெரிவு எய்திய தீ, வெண்திங்கள்,நிறத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

எம்பெருமான் அறக்கருணை கொண்டு உயிர்களைக் காத்தருளுகிறான்.மறக்கருணை கொண்டு முப்புரங்களை அழித்தருளுகிறான். அறக்கருணையும் மறக்கருணையும் பொருந்தி இருப்பதை விளக்குவதைப் போன்றே அவன் வெண்ணீறு அணிந்து செம்மேனியனாய் திருநெல்லிக்கா என்ற தலத்தில் காட்சியளிக்கின்றான். 

2

பதிதா னிடுகா டுபைங்கொன் றைதொங்கல்மதிதா னதுசூ டியமைந் தனுந்தான்விதிதான் வினைதான் விழுப்பம் பயக்கும்நெதிதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்;மதிதான் அது சூடிய மைந்தனும் தான்;விதி தான்; வினை தான்; விழுப்பம் பயக்கும்நெதி தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

எம்பெருமான் நெருப்பு நிறைந்துள்ள சுடுகாட்டில் இருக்கிறான். அவனே குளிர்ந்த கொன்றை மலர் மாலையையும் நிலவையும் தலையில் அணிந்துள்ளான். அழிக்கும் விதியாகவும் விதிக்குக் காரணமான வினையாகவும் மாறுபட்ட நிலையில் (சூடும் குளிர்ச்சியும் போல்) திருநெல்லிக்காவுள் மேவியுள்ளான்.

3

நலந்தா னவன்நான் முகன்றன் தலையைக்கலந்தா னதுகொண் டகபா லியுந்தான்புலந்தான் புகழா லெரிவிண் புகழும்நிலந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
நலம்தான் அவன்; நான்முகன் தன் தலையைக்கலம் தான் அது கொண்ட கபாலியும் தான்;புலம் தான்; புகழால் எரி விண் புகழும்நிலம் தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

உயிர்களுக்கு நன்மை செய்யும் எம்பெருமானே! உயிர்களுக்காக உலகைப் படைத்த பிரமனின் தலையைக் கொய்தான். அதனை பிச்சைப் பாத்திரமாக ஏந்தி பலிதேர்ந்து வருகிறான். பலிதேர்ந்து வரும் அவனே தேவர்களின் மிகுபுகழுக்கும் உரியவனாய்த் திருநெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான்.

4

தலைதா னதுஏந் தியதம் மடிகள்கலைதான் திரிகா டிடம்நா டிடமாமலைதா னெடுத்தான் மதில்மூன் றுடையநிலைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
தலைதான் அது ஏந்திய தம் அடிகள்;கலைதான் திரி காடு இடம் நாடுஇடம் ஆம்;மலைதான் எடுத்தான், மதில்மூன்று உடைய;நிலை தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

பிரமனின் தலையைக் கையில் ஏந்தி எம்பெருமான் நாட்டிலும் காட்டிலும் ஓடி ஆடித் திரிகிறான். முப்புரத்தையுடை அசுரர்களை அழிப்பதற்காக மேருமலையை வில்லாக வளைத்தான். அப்பெருமான் திருநெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான்.

5

தவந்தான் கதிதான் மதிவார் சடைமேல்உவந்தான் சுறவேந் தனுரு வழியச்சிவந்தான் செயச்செய் துசெறுத் துலகில்நிவந்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
தவம் தான்; கதி தான்; மதி வார்சடைமேல்உவந்தான்; சுறவேந்தன் உரு அழியச்சிவந்தான்; செயச்செய்து செறுத்து உலகில்நிவந்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

சிவபெருமானே தவம் செய்பவன் ஆவான். தவத்தின் முடிவும் அவனே ஆவான். சந்திரனைத் தலையில் தரித்தவனும் அவனே. மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்தவனும் அவனே. பூவுலகில் ஏற்படுகின்ற மாறுபட்ட செயல்களுக்கு உரியவனும் அவனே, விரும்பி திருநெல்லிக்காவுள் மேவியுள்ளான்.

6

வெறியார் மலர்க்கொன் றையந்தார் விரும்பிமறியார் மலைமங் கைமகிழ்ந் தவன்றான்குறியாற் குறிகொண் டவர்போய்க் குறுகும்நெறியான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
வெறி ஆர் மலர்க்கொன்றை அம்தார் விரும்பி;மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்;குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும்நெறியான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

எம்பெருமான், மணமிக்க கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளான். அவனே மலைமகளை விரும்பி மணந்துள்ளான். சூரியன், சந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் தாம் நற்பேறு பெற வேண்டும் என்னும் பெருநோக்கத்தால், நம் இறைவனிடம் வந்து சேரவிரும்பியதால், நம் இறைவன் தன்னை அடையாளம் காட்டும் நிலையில் அவனே திருநெல்லிக்கா தலத்துள் கோயில் கொண்டு அருள் வழங்கி வருகின்றான்.

7

பிறைதான் சடைச்சேர்த் தியஎந் தைபெம்மான்இறைதான் இறவாக் கயிலை மலையான்மறைதான் புனலொண் மதிமல் குசென்னிநிறைதான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்;இறை தான்; இறவாக் கயிலைமலையான்;மறை தான்; புனல், ஒண் மதி, மல்கு, சென்னிநிறை தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

தலையில் பிறையைத் தாங்கி நிற்கும் எம்பெருமானே, கயிலாய மலையின் உச்சியில் அமர்ந்துள்ளான். மறைகளுக்கும் மேலானவன் அவனே; கங்கை, சந்திரன் முதலியவைகளைத் தன் தலையில் அணிந்து மக்களுக்கு வெளிப்படுமாறு செய்துள்ளான். அவனே, துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த நெல்லிக்கா போல நெல்லிக்காவுள் உறைந்துள்ளான் என்க.

8

மறைத்தான் பிணிமா தொருபா கந்தன்னைமிறைத்தான் வரையா லரக்கன் மிகையைக்குறைத்தான் சடைமேற் குளிர்கோல் வளையைநிறைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
மறைத்தான், பிணி மாது ஒருபாகம் தன்னை;மிறைத்தான், வரையால் அரக்கன் மிகையைக்குறைத்தான்; சடைமேல் குளிர் கோல்வளையைநிறைத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

எம்பெருமான் உமாதேவியைப் பிணித்து இருக்கிறான். அவனே பிணித்ததைப் பிறர் அறியாவண்ணம் அர்த்தநாரியாய் ஒன்றுபட்டும் காட்சியளிக்கிறான். கயிலாய மலையைத் தூக்க முயன்ற அரக்கனை அடர்த்தும் அருளியுள்ளான். கங்கையைத் தலையில் தாங்கி மறைத்து வைத்தலையும் புரிகிறான். அவனே நெல்லிக்காவுள் உள்ளான் என்க.

9

தழல்தா மரையான் வையந்தா யவனும்கழல்தான் முடிகா ணியநா ணொளிரும்அழல்தான் அடியார்க் கருளாய்ப் பயக்கும்நிழல்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
தழல் தாமரையான், வையம் தாயவனும்,கழல்தான் முடி காணிய, நாண் ஒளிரும்அழல்தான்; அடியார்க்கு அருள் ஆய்ப் பயக்கும்நிழல் தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

குளிர்ந்த செந்தாமரை மலரில் இருக்கும் பிரமனுக்கும் நெடிய வடிவு எடுத்து உலகை அளந்த திருமாலுக்கும் எம்பெருமான் ஒளிர்ந்து ஓங்கும் நெருப்பு வடிவு கொண்டே காட்சி கொடுத்து அருளினான். அவனே சிவனடியார் பொருட்டு குளிர்ந்த நிலையில் நெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான் என்க.

10

கனத்தார் திரைமாண் டழற்கான் றநஞ்சைஎனத்தா வெனவாங் கியதுண் டகண்டன்மனத்தாற் சமண்சாக் கியர்மாண் பழியநினைத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே.
சொற்பிரிப்பு
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை,"என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்;மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழியநினைத்தான் - நெல்லிக்காவுள் நிலாயவனே.
உரை

பாற்கடலில் தோன்றிய நஞ்சைக் கொண்டுவந்த தேவர்கள், அத்தனே! காவாய் என முறையிட்டு இறைஞ்சியபோது நஞ்சை உண்டு காத்தருளியவன் எம்பெருமான்! அவனே இப்போது சமணரும் சாக்கியரும் மனம் திருந்தாமல் கொடுமை செய்வதைத் தடுக்க திருநெல்லிக்காவுள் கோயில் கொண்டுள்ளான் என்க.

11

புகரே துமிலா தபுத்தே ளுலகின்நிகரா நெல்லிக்கா வுள்நிலா யவனைநகரானல ஞான சம்பந் தன்சொன்னபகர்வா ரவர்பா வமிலா தவரே.
சொற்பிரிப்பு
புகர்ஏதும் இலாத புத்தேள் உலகின்நிகர் ஆம் நெல்லிக்காவுள் நிலாயவனை,நகரா நல ஞான சம்பந்தன் சொன்ன,பகர்வார் அவர் பாவம் இலாதவரே.சுவாமி : நெல்லிவனேசுவரர்;அம்பாள் : மங்களநாயகியம்மை.
உரை

திருநெல்லிக்கா திருத்தலம் குற்றமற்ற திருத்தலம். தேவர் உலகிற்கு நிகரான சிறப்புபொருந்திய திருத்தலம். அத்திருத்தலத்தில் மேவியுள்ள எம்பெருமானை நன்நகராகிய சீர்காழி தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார், அவர் பாடிய பாடல்களை மனமுருகி பாடவல்லார்கள் பாவம் இல்லாதவர்கள் - புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள் என்க.