திருமுறை 2 · 2.018 · 11

திருமருகல்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
மருகல்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை
குறிப்பு
விடந்தீர்த்ததிருப்பதிகம்

1

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்விடையா யெனுமால் வெருவா விழுமால்மடையார் குவளை மலரும் மருகல்உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.
சொற்பிரிப்பு
“சடையாய்!" எனுமால்; “சரண்நீ!" எனுமால்;"விடையாய்!'' எனுமால்; வெருவா விழுமால்;மடை ஆர் குவளை மலரும் மருகல்உடையாய்! - தகுமோ, இவள் உண் மெலிவே?
உரை

நீர் நிறைந்த மடைகளில் குவளைப் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பும் அழகிய திருமருகல் என்னும் தலத்தில் உறைகின்ற இறைவனே! கணவனாக வரப்போகும் தலைவனைப் பிரிந்த இப்பெண், இறைவா உன்னையே சரணடைந்து சடையாய் என்று அலறுகிறாள். நீயே சரண் எனப் புலம்புகிறாள். விடையாய் என்ற பலவிதமாக அழுது புலம்புகிறாள். மயங்கி விழுகிறாள். இவளது துன்பத்தை நீவிர் போக்கி அருளுவீராக.

2

சிந்தா யெனுமால் சிவனே யெனுமால்முந்தா யெனுமால் முதல்வா எனுமால்கொந்தார் குவளை குலவும் மருகல்எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே.
சொற்பிரிப்பு
'சிந்தாய்!" எனுமால்; "சிவனே!" எனுமால்;''முந்தாய்!"எனுமால்; "முதல்வா!" எனுமால்; -கொந்து ஆர் குவளை குலவும் மருகல்எந்தாய்!-தகுமோ, இவள் ஏசறவே?
உரை

குவளை மலர்கள் நிறைந்து விளங்கும் மருகல் தலத்துறை இறைவனே! இவள் "சிந்தையில் உறையும் இறைவனே! சிவபெருமானே! எல்லாவற்றிற்கும் முந்தியவனே ! முதல்வனே!” என்றெல்லாம் உன்னை அழைத்துப் புலம்புகிறாள். இவளது துன்பத்தை நீக்கி அருள்வீராக!

3

அறையார் கழலும் அழல்வா யரவும்பிறையார் சடையும் உடையாய் பெரியமறையார் மருகல் மகிழ்வா யிவளைஇறையார் வளைகொண் டெழில்வவ் வினையே.
சொற்பிரிப்பு
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,பிறை ஆர் சடையும்(ம்), உடையாய்! பெரியமறையார் மருகல் மகிழ்வாய்! இவளைஇறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
உரை

மருகல் திருத்தலத்தில் உறைபவன் நீயே! ஆர்த்து ஒலிக்கும் கழலையும், நஞ்சுடைய பாம்பையும், பிறைச் சந்திரனையும் அணிந்தவன் நீயே! பெரும் மறையாம் அருமறையை அருளிய நீ இவளுக்கு அருள வேண்டாவோ. இவள் இப்போது தன் கையில் உள்ள வளையல்கள் தானாக நெகிழ்ந்து தரையில் கிடக்க தன் அழகையும் இழந்து துடிக்கின்றாளே! இவளது துயரைத் துடைக்க வேண்டாமோ!

4

ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம்பலிநீ திரிவாய் பழியில் புகழாய்மலிநீர் மருகல் மகிழ்வா யிவளைமெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே.
சொற்பிரிப்பு
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளைமெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
உரை

ஓடிவரும் கங்கையைத் தலையில் தாங்கியவன் நீ! பிரம்ம கபாலம் ஏந்திபலிதேர்ந்து வருபவன் நீ! குற்றமற்ற புகழுக்கு உரியவன் நீ! திருமருகல் தலத்தில் கோயில்கொண்டுள்ளவன் நீ! நீயே துன்புறும் இப்பெண்ணிற்குத் தக்கவாறு உதவாமல் இருக்கலாமோ?

5

துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்னமணிநீ லகண்டம் உடையாய் மருகல்கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே.
சொற்பிரிப்பு
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்னமணிநீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள் தன்அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
உரை

கரிய நிறமுடன் மழைமேகம் காட்சியளிப்பது போல, இறைவா நீ, நீலகண்டனாகக் காட்சியளிக்கின்றாய். கரிய வண்டுகள் ஒலிக்கும் குவளை மலர்கள் நிறைந்த மருகல் தலத்தில் கோயில் கொண்டுள்ளாய். அழகான நீலமலர் போன்ற கண்களைக் கொண்ட இப்பெண் துன்புற நீ பார்த்துக் கொண்டிருக்கலாமோ?

6

பலரும் பரவப் படுவாய் சடைமேல்மலரும் பிறையொன் றுடையாய் மருகல்புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்தலரும் படுமோ அடியா ளிவளே.
சொற்பிரிப்பு
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!புலரும் தனையும் துயிலாள், புடை போந்துஅலரும் படுமோ, அடியாள் இவளே?
உரை

அடியவர்கள் பலராலும் போற்றி வணங்கப் பெறும் இறையவனே! சடைமேல் பிறைநிலவைத் தாங்கி அருட்காட்சி கொடுப்பவனே! மருகல் தலத்து உறைபவனே! இப்பெண் இரவு முழுவதும் துயிலாமல் உன் திருவடிகளையே சார்ந்து நின்று கொண்டிருக்கிறாளே.  இவளுக்கு அருள வேண்டாமா? உலகம் இவளைப் பழிக்கும் நிலையிலிருந்து காக்க வேண்டாமா?

7

வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனாஎழுவாள் நினைவாள் இரவும் பகலும்மழுவா ளுடையாய் மருகற் பெருமான்தொழுவா ளிவளைத் துயராக் கினையே.
சொற்பிரிப்பு
வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனாஎழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
உரை

மழுவினையும் வாளினையும் தாங்கியபடியே மருகல் தலத்துள் கோயில் கொண்ட எம்பெருமானே! இப்பெண் உன்னை வணங்கும் நிலையிலிருந்து ஒருபோதும் தவிராள். தூக்கத்திலிருந்து எழும்போதும் உன் நாமத்தைக் கூறிக்கொண்டே எழுவாள். எப்பொழுதும் உன்னையே தொழும் இத்தலத்தில் அடியவள் துன்பமடைய நீ பார்த்துக் கொண்டிருக்கலாமோ?

8

இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத்துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான்அலங்கல் லிவளை அலராக் கினையே.
சொற்பிரிப்பு
இலங்கைக்கு இறைவன் விலங்கல்(ல்) எடுப்ப,துலங்கல் விரல் ஊன்றலும், தோன்றலனாய்;வலம்கொள் மதில் சூழ் மருகல்பெருமான்!அலங்கல்(ல்) இவளை அலர் ஆக்கினையே?
உரை

மதில்கள் சூழ்ந்த மருகல் தலத்தில் உறைபவனே! இலங்கை வேந்தன் இராவணன் தன்முனைப்பால் நீ இருக்கும் கயிலாய மலையை எடுக்க முயன்றான். நீ அவனை முதலில் அடர்த்துப் பின்பு அருள் செய்தாய். ஆனால் பூவினும் மென்மையான இப்பெண் துன்பப்படுகின்றபோதும் அருளாது இருக்கின்றாயே! இது முறையோ?

9

எரியார் சடையும் அடியும் இருவர்தெரியா ததொர்தீத் திரளா யவனேமரியார் பிரியா மருகற் பெருமான்அரியாள் இவளை அயர்வாக் கினையே.
சொற்பிரிப்பு
எரி ஆர் சடையும்(ம்), அடியும்(ம்), இருவர்தெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே!மரியார் பிரியா மருகல் பெருமான்!அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
உரை

ஒளிமிக்க சடையினை உடையவனே! பிரமன், திருமால் ஆகிய இருவராலும் அறிய முடியாத ஒளிப்பிளம்பாக நின்றவனே! அடியார்களைவிட்டு நீங்காமல் திருமருகல் தலத்தில்கோயில் கொண்டவனே! உன் அடியவளாக விளங்கும் இப்பெண்ணிற்கு நீ துன்பத்தைத் தரலாமோ? விரைவில் இவளது துயரத்தை நீக்கி அருள்வாயாக!

10

அறிவில் சமணும் மலர்சாக் கியரும்நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்மறியேந் துகையாய் மருகற் பெருமான்நெறியார் குழலி நிறைநீக் கினையே.
சொற்பிரிப்பு
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
உரை

நல்அறிவில்லாத சமணர்களும் சாக்கியர்களும் நெறியற்ற செயல்களைச் செய்து துன்புறுவர். மானைக் கையில் ஏந்திய எம்பெருமானே! இப்பெண் முறையான நெறியில் வாழ்பவள் அன்றோ? இவளுக்கு நீ துன்பம் தரலாமோ? இவளது துன்பத்தை நீக்கி அருள்வாயாக.

11

வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே.
சொற்பிரிப்பு
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.சுவாமி : மாணிக்கவண்ணர்;அம்பாள் : வண்டுவார் குழலி.
உரை

தன் வயத்தினராகிய மருகல் பெருமானுடைய திருக்குறிப்பின் வழிமேவும் ஞானசம்பந்தன் அப்பெருமானின் திருவடிகளை நினைந்து பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அவற்றையே பக்தியுடன் பாட வல்லவர்கள் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கும்.