திருமுறை 2 · 2.016 · 11

திருமணஞ்சேரி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
மணஞ்சேரி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்துகுயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகிமயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
அயில் ஆரும் அம்பு அதனால் புரம் மூன்று எய்து,குயில் ஆரும் மென்மொழியாள் ஒருகூறுஆகி,மயில் ஆரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்பயில்வானைப் பற்றி நின்றார்க்கு இல்லை, பாவமே.
உரை

கூர்மையான அம்பினால் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். அவர்உமாதேவியை திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர். மயில்கள் விளையாடும் சோலைகள் நிறைந்த மணஞ்சேரி என்னும் இத்திருத்தலத்தில் உறைகின்றவர். அவரைப்பற்றி நின்றார்க்குப் பாவம் இல்லை என்க.

2

விதியானை விண்ணவர் தாந்தொழு தேத்தியநெதியானை நீள்சடை மேல்நிகழ் வித்தவான்மதியானை வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்பதியானைப் பாடவல் லார்வினை பாறுமே.
சொற்பிரிப்பு
விதியானை,விண்ணவர்தாம் தொழுது ஏத்தியநெதியானை,நீள்சடை மேல் நிகழ்வித்த வான்மதியானை,வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரிப்பதியானை, பாட வல்லார் வினை பாறுமே.
உரை

எல்லாவற்றிற்கும் காரணம் ஆனவனை, விண்ணவர் தொழுது ஏத்தும் செல்வனை, நீண்ட சடையில் நிலவினை வைத்தவனை, பொழில் சூழ்ந்த திருமணஞ்சேரியில் கோயில் கொண்டவனைப் புகழ்ந்து பாடவல்லவர்களின் வினைகள் நீங்கப் பெறும்.

3

எய்ப்பானார்க் கின்புறு தேனளித் தூறியஇப்பாலா யெனையும் ஆள வுரியானைவைப்பான மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரிமெய்ப்பானை மேவிநின் றார்வினை வீடுமே.
சொற்பிரிப்பு
எய்ப்பு ஆனார்க்கு இன்புஉறு தேன் அளித்து ஊறியஇப்பால்ஆய் எனையும் ஆள உரியானை,வைப்பு ஆன மாடங்கள் சூழ்ந்த மணஞ்சேரிமெய்ப்பானை, மேவி நின்றார் வினை வீடுமே.
உரை

விரதம் பூண்டு இளைத்த மேனியராய் எய்த்துப் போனவர்களுக்குத் தேன் போன்றவனை, என்னையும் ஆட்கொண்டருளும் எம்பெருமானை, உறுதியான மாடங்கள் நிறைந்த திருமணஞ்சேரி என்னும் இத்திருத்தலத்தில் மெய்ப்பொருளாய் விளங்குபவனை மேவி ஏத்தும் அடியார்களின் வினைகள் நீங்கிடும் என்க

4

விடையானை மேலுல கேழுமிப் பாரெலாம்உடையானை ஊழிதோ றூழி உளதாயபடையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரிஅடைவானை யடையவல் லார்க்கில்லை யல்லலே.
சொற்பிரிப்பு
விடையானை, மேல்உலகு ஏழும் இப் பார்எல்லாம்உடையானை, ஊழிதோறு ஊழி உளது ஆயபடையானை, பண்இசை பாடு மணஞ்சேரிஅடைவானை, அடைய வல்லார்க்கு இல்லை அல்லலே.
உரை

இடப வாகனத்தை உடையவனை, ஈரேழு உலகங்களையும் உடையவனை ஊழிதோறும் தனது எண்ணத்தின்படியே படைத்து அருள்பவனை, பண்ணிசை பாடப்பெறும் திருமணஞ்சேரியில் உறைபவனை அடைய வல்ல அடியார்களுக்கு துன்பங்களே இல்லையாம் என்க.

5

எறியார்பூங் கொன்றையி னோடும் இளமத்தம்வெறியாருஞ் செஞ்சடை யார மிலைத்தானைமறியாருங் கையுடை யானை மணஞ்சேரிச்செறிவானைச் செப்பவல் லார்க் கிடர் சேராவே.
சொற்பிரிப்பு
எறி ஆர் பூங்கொன்றையினோடு இள மத்தம்வெறி ஆரும் செஞ்சடை ஆர மிலைந்தானைமறி ஆரும் கை உடையானை, மணஞ்சேரிச்செறிவானை, செப்ப வல்லார்க்கு இடர் சேராவே.
உரை

ஒளிமிக்க கொன்றை மலர்களையும் ஊமத்தம் பூக்களையும் நீண்ட மணங்கமழும் சடையில் கொண்டவனை, ஆடுகின்ற மானை அடக்கிக் கையில் தாங்கியவனை, மணஞ்சேரித் தலத்தில் கோயில் கொண்டவனைப் புகழ்ந்து பாடவல்லார்க்கு இடர் சேராதாம் என்க.

6

மொழியானை முன்னொரு நான்மறை யாறங்கம்பழியாமைப் பண்ணிசை யான பகர்வானைவழியானை வானவ ரேத்து மணஞ்சேரிஇழியாமை யேத்தவல் லார்க்கெய்தும் இன்பமே.
சொற்பிரிப்பு
மொழியானை, முன் ஒரு நால்மறை ஆறுஅங்கம்;பழியாமைப் பண் இசைஆன பகர்வானை:வழியானை வானவர் ஏத்தும் மணஞ்சேரிஇழியாமை ஏத்த வல்லார்க்கு எய்தும், இன்பமே.
உரை

மணஞ்சேரி இறைவனாகிய சிவபெருமான் ஆதியிலிருந்தே 'ஓம்' என்ற அடிப்படை மந்திரமாக விளங்குபவன். நான்கு மறைகளையும் அருளியவனை, ஆறு அங்கங்களையும் அளித்தவனை, பண்ணிசையாய்ப் பொருந்தியவனை, நன்னெறியால் விளங்குபவனை, வானவர்கள் வணங்கும் திருமணஞ்சேரி ஆகிய இத்திருத்தலத்தில் கோயில் கொண்டவனை மனத்தில் குற்றமின்றிப் பாடிடும் அடியார்களுக்கு இன்பமே கிட்டும் என்க.

7

எண்ணானை யெண்ணமர் சீரிமை யோர்கட்குக்கண்ணானைக் கண்ணொரு மூன்று முடையானைமண்ணானை மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிப்பெண்ணானைப் பேசநின் றார்பெரி யோர்களே.
சொற்பிரிப்பு
எண்ணானை,எண் அமர் சீர் இமையோர்கட்குக்கண்ணானை,கண் ஒருமூன்றும் உடையானை,மண்ணானை, மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிபெண்ணானை, பேச நின்றார் பெரியோர்களே.
உரை

நம் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனை, உள்ளத்தில் பொருந்தி வழிபடும் அடியவர்களுக்கு ஞானக்கண்ணாக விளங்குபவனை, சூரியன், சந்திரன், அக்கினி என்னும் மூன்று கண்களைக் கொண்டவனை, நிலமாக விளங்குபவனை, வயல் சூழ்ந்த மணஞ்சேரித் தலத்தில் உமாதேவியோடு உறைபவனைப் புகழ்ந்து பேசுபவர்கள் என்றும் பெரியோர்களாய் போற்றப்படுவர்.

8

எடுத்தானை யெழில்முடி யெட்டும் இரண்டுந்தோள்கெடுத்தானைக் கேடிலாச் செம்மை யுடையானைமடுத்தார வண்டிசை பாடும் மணஞ்சேரிபிடித்தாரப் பேணவல் லார்பெரியோர்களே.
சொற்பிரிப்பு
எடுத்தானை எழில் முடி எட்டும் இரண்டும் தோள்கெடுத்தானை,கேடு இலாச் செம்மை உடையானை,மடுத்து ஆர வண்டு இசை பாடும் மணஞ்சேரிபிடித்து ஆரப் பேண வல்லார் பெரியோர்களே.
உரை

கயிலாய மலையைத் தூக்கி நகர்த்த முற்பட்ட இராவணனின் தோள்களை வலியிழக்கச் செய்தவனை, கேடற்ற சிறப்புக்கள் பொருந்தியவனை, வண்டுகள் ஒலிக்கும் மணஞ்சேரித் தலத்தில் உறைபவனைப் பற்றிப்பிடித்தவர்கள் பெரியோர்களாய்த் திகழ்வார்கள் என்க.

9

சொல்லானைத் தோற்றங்கண் டானும் நெடுமாலும்கல்லானைக் கற்றன சொல்லித் தொழுதோங்கவல்லார்நன் மாதவ ரேத்தும் மணஞ்சேரிஎல்லாமாம் எம்பெரு மான்கழல் ஏத்துமே.
சொற்பிரிப்பு
சொல்லானை; தோற்றம் கண்டானும்,நெடுமாலும்,கல்லானை; கற்றன சொல்லித் தொழுது ஓங்கவல்லார், நல் மா தவர் ஏத்து மணஞ்சேரிஎல்லாம் ஆம் எம்பெருமான்; கழல் ஏத்துமே!
உரை

வேதமொழியாக விளங்கும் பெருமானை, படைக்கும் பிரமனும், காக்கும் திருமாலும் காணமுடியா வகையில் நின்றானை, தாம் கற்ற முறையில் திருந்தச் சொல்லி வணங்கும் அடியவர்களிடத்தும் மாதவர்களிடத்தும் பொருந்தி உள்ளவனை, மணஞ்சேரியில் கோயில் கொண்டவனை, எம்பெருமானை வாழ்த்தி வணங்குவோமாக.

10

சற்றேயுந் தாமறி வில்சமண் சாக்கியர்சொற்றேயும் வண்ணமொர் செம்மை யுடையானைவற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரிபற்றாக வாழ்பவர் மேல்வினை பற்றாவே.
சொற்பிரிப்பு
சற்றேயும் தாம் அறிவு இல் சமண்சாக்கியர்சொல்-தேயும் வண்ண மொர் செம்மை உடையானை,வற்றாத வாவிகள் சூழ்ந்த மணஞ்சேரிபற்று ஆக வாழ்பவர் மேல் வினை பற்றாவே.
உரை

சமணர்களும், சாக்கியர்களும் கொஞ்சம்கூட பொருந்தாமல் உரையாற்றுவார்கள் .அவர்களது சொற்கள் தேயுமாறு செம்மையாய் விளங்குபவர் நம் பெருமான் ஆவார். அவர் நீர்வற்றாத குளங்கள் நிறைந்த திருமணஞ்சேரியில் கோயில் கொண்டுள்ளார். அவரிடம் பற்றுக்கொண்டு வாழும் அடியவர்களை வினைகள் பற்றா என்க.

11

கண்ணாருங் காழியர் கோன்கருத் தார்வித்ததண்ணார்சீர் ஞானசம் பந்தன் தமிழ்மாலைமண்ணாரும் மாவயல் சூழ்ந்த மணஞ்சேரிபண்ணாரப் பாடவல் லார்க்கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
கண் ஆரும் காழியர்கோன் கருத்து ஆர்வித்ததண் ஆர் சீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை,மண் ஆரும் மா வயல் சூழ்ந்த மணஞ்சேரிபண் ஆரப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.சுவாமி : மணவாளநாயகர்;அம்பாள் : யாழ்மொழியம்மை.
உரை

எம்பெருமான் சீர்காழிப்பதியில் நம் கண்ணுக்கினிய காட்சிதரும் வகையில் கோயில் கொண்டுள்ளார். அச்சீர்காழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் திருமணஞ்சேரியில் இறைவன் உறைவதைப் புகழ்ந்து பாடியுள்ளார். அதனை நாமும் பாடிப் பரவுவோம், நம் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக.