திருமுறை 2 · 2.015 · 11

திருக்காறாயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
காறாயில்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீரானே நீள்சடை மேலொர் நிரை கொன்றைத்தாரானே தாமரை மேலயன் தான்தொழும்சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே.
சொற்பிரிப்பு
"நீரானே! நீள்சடைமேல் ஒரு நிரை கொன்றைத்தாரானே! தாமரைமேல் அயன் தான் தொழும்சீரானே! சீர் திகழும் திருக் காறாயில்ஊரானே!" என்பவர் ஊனம் இலாதாரே.
உரை

கங்கையைத் தலையில் தரித்தவனை, நீண்ட சடையில் கொன்றை மலர் மாலையைஅணிந்தவனை, தாமரை மலர்மீது விளங்கும் பிரமனால் தொழப்பட்டவனை, சிறப்புமிக்க திருக்காறாயில் தலத்தில் பொருந்தியவனை வழிபடுபவர் குறைபாடு அற்றவர் ஆவர்.

2

மதியானே வரியர வோடுடன் மத்தஞ்சேர்விதியானே விதியுடை வேதியர் தாந்தொழும்நெதியானே நீர்வயல் சூழ்திருக் காறாயில்பதியானே யென்பவர் பாவமி லாதாரே.
சொற்பிரிப்பு
"மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்விதியானே! விதி உடை வேதியர் தாம் தொழும்நெதியானே! நீர் வயல் சூழ் திருக் காறாயில்பதியானே!" என்பவர் பாவம் இலாதாரே.
உரை

பிறைமதியைத் தலையில் சூடிய இறைவன் என்றும் பாம்பையும் ஊமத்த மலரையும் அணிந்தவன் என்றும் வேதவிதிப்படி அந்தணர்களால் தொழப்படுபவன் என்றும் வயல்கள் சூழ்ந்த காறாயில் பதியில் உறைபவன் என்றும் உளம் மகிழ்ந்து கூறும் அடியார்கள் பாவமில்லாதவர் ஆவர் என்க.

3

விண்ணானே விண்ணவ ரேத்திவி ரும்புஞ்சீர்மண்ணானே மண்ணிடை வாழுமு யிர்க்கெல்லாம்கண்ணானே கடிபொழில் சூழ்திருக் காறாயில்எண்ணானே யென்பவர் ஏதமி லாதாரே.
சொற்பிரிப்பு
"விண்ணானே! விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர்மண்ணானே! மண் இடை வாழும் உயிர்க்கு எல்லாம்கண்ணானே! கடிபொழில் சூழ் திருக் காறாயில்எண்ணானே!" என்பவர் ஏதம் இலாதாரே.
உரை

ஆகாயம் போல் அனைத்தையும் தன்னுள் அடக்கியவன் என்றும், தேவர்களால் வழிபடப்படுபவன் என்றும், மண்ணில் பொருந்தியவன் என்றும், மண்ணில் வாழும் உயிர்களுக்குக் கண் போன்றவன் என்றும், மணமிக்க சோலைகள் நிறைந்த திருக்காறாயில் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டவன் என்றும் ஈசனே என்றும் போற்றுபவர்கள் குற்றம் நீங்கப் பெற்றவர்கள் ஆவர்.

4

தாயானே தந்தையு மாகிய தன்மைகள்ஆயானே ஆயநல் லன்பர்க்க ணியானேசேயானே சீர்திக ழுந்திருக் காறாயில்மேயானே யென்பவர் மேல்வினை மேவாவே.
சொற்பிரிப்பு
"தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள்ஆயானே! ஆய நல் அன்பர்க்கு அணியானே!சேயானே! சீர் திகழும் திருக் காறாயில்மேயானே!" என்பவர் மேல் வினை மேவாவே.
உரை

தாயாக விளங்குபவனே! தந்தையாய் விளங்கி அருள்புரியும் நாதனே! நல்லடியார்களுக்கு அருகிருந்து உதவுபவனே! அல்லாதவர்களையும் சேய்மையில் இருந்து காப்பவனே! சீர் திகழும் திருக்காறாயில் தலத்தில் உறைபவனே என்றெல்லாம் இறைவனை போற்றி வணங்குபவர்களை வினைகள் சென்று அடையாவாம்.

5

கலையானே கலைமலி செம்பொற் கயிலாயமலையானே மலைபவர் மும்மதில் மாய்வித்தசிலையானே சீர்திக ழுந்திருக் காறாயில்நிலையானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
சொற்பிரிப்பு
'கலையானே! கலை மலி செம்பொன் கயிலாயமலையானே! மலைபவர் மும்மதில் மாய்வித்தசிலையானே சீர் திகழும் திருக் காறாயில்நிலையானே!" என்பவர் மேல் வினை நில்லாவே.
உரை

வேத சாத்திரப் பொருளானே! வேதம் முழங்கும் கயிலாய மலையில் பொருந்தியவனே! முப்புரங்களை அழித்த பெருமானே! சீர்திகழ் காறாயில் தலத்தில்  உறைபவனே என்று போற்றி வணங்குபவரிடத்து வினைகள் சென்று சேராவாம்.

6

ஆற்றானே ஆறணி செஞ்சடை யாடரவேற்றானே யேழுல கும்மிமை யோர்களும்போற்றானே பொழில்திக ழுந்திருக் காறாயில்நீற்றானே யென்பவர் மேல்வினை நில்லாவே.
சொற்பிரிப்பு
"ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவுஏற்றானே! ஏழ்உலகும்(ம்) இமையோர்களும்போற்றானே! பொழில் திகழும் திருக் காறாயில்நீற்றானே!" என்பவர் மேல் வினை நில்லாவே.
உரை

யாவையுமாகி இருப்பவனே! கங்கை நதியை அணிந்த சடையில் அரவையும் ஏற்றவனே! ஏழுலக உயிர்களாலும் இமையவர்களாலும் தொழப் பெறுபவனே! பொழில்கள் நிறைந்ததிருக்காறாயில் தலத்தில் கோயில் கொண்டவனே! திருநீற்றை அணிந்தவனே! என்று போற்றித் துதிப்பவர்களிடத்து வினைகள் நிலை பெறாவாம் என்க.

7

சேர்த்தானே தீவினை தேய்ந்தறத் தேவர்கள்ஏத்தானே யேத்துநன் மாமுனி வர்க்கிடர்காத்தானே கார்வயல் சூழ்திருக் காறாயில்ஆர்த்தானே யென்பவர் மேல்வினை யடராவே.
சொற்பிரிப்பு
"சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்ஏத்தானை! ஏத்தும் நல் மா முனிவர்க்கு இடர்காத்தானே! கார் வயல் சூழ் திருக் காறாயில்ஆர்த்தானே!" என்பவர் மேல் வினை அடராவே.
உரை

பல பிறவிகள் வாயிலாகச் சேர்ந்த தீயவினைகள் அற்று நீங்கும்படி செய்த பெருமானே! தேவர்களால் வழிபடப்படுபவனே! வழிபடும் முனிவர்களின் துன்பங்களை நீக்குபவனே! வயல்கள் சூழ்ந்த திருக்காறாயில் தலத்தில் பொருந்தியவனே! எனத் துதி செய்து வணங்குபவர்களிடத்து தீவினைகள் சென்று சேராவாம்.

8

கடுத்தானே காலனைக் காலாற் கயிலாயம்எடுத்தானை யேதமா கம்முனி வர்க்கிடர்கெடுத்தானே கேழ்கிள ருந்திருக் காறாயில்அடுத்தானே யென்பவர் மேல்வினை யடராவே.
சொற்பிரிப்பு
"கடுத்தானே காலனைக் காலால் கயிலாயம்எடுத்தானை ஏதம் ஆக(ம்) முனிவர்க்கு இடர்கெடுத்தானே ! கேழ் கிளரும் திருக் காறாயில்அடுத்தானே!" என்பவர் மேல் வினை அடராவே.
உரை

காலனைக் காலால் காய்ந்தவனே! கயிலாயத்தை எடுத்த இராவணனின் வலிமையைக் கெடுத்தவனே! முனிவர்களின் துன்பத்தை நீக்கியவனே! ஒளிதிகழ் திருக்காறாயில் தலத்துள் உறைபவனே! என இவ்வாறு போற்றி வழிபடும் அடியவர்களிடத்து வினைகள் சென்று பொருந்தாவாம்.

9

பிறையானே பேணிய பாடலொ டின்னிசைமறையானே மாலொடு நான்முகன் காணாதஇறையானே யெழில்திக ழுந்திருக் காறாயில்உறைவானே யென்பவர் மேல்வினை ஓடுமே.
சொற்பிரிப்பு
"பிறையானே! பேணிய பாடலொடு இன்இசைமறையானே! மாலொடு நான்முகன் காணாதஇறையானே! எழில் திகழும் திருக் காறாயில்உறைவானே!'' என்பவர் மேல் வினை ஓடுமே.
உரை

பிறை நிலவைத் தலையில் அணிந்தவனே! பண்ணும் பாடலும் பொருந்தியதைப் போல் வேதமும் பயனுமாய் பொருந்தி நிற்பவனே! திருமால், பிரமன் இவர்களால் அறிய முடியா ஒளியாய் விளங்குபவனே! அழகுமிக்க திருக்காறாயில் தலத்தில் உறைபவனே ! எனப் போற்றித் துதிப்பவர்களை வினைகள் சென்று சேராவாம்.

10

செடியாரும் புன்சமண் சீவரத் தார்களும்படியாரும் பாவிகள் பேச்சுப் பயனில்லைகடியாரும் பூம்பொழில் சூழ்திருக் காறாயில்குடியாருங் கொள்கையி னார்க்கில்லை குற்றமே.
சொற்பிரிப்பு
செடி ஆரும் புன்சமண் சீவரத்தார்களும்படி ஆரும் பாவிகள் பேச்சுப் பயன் இல்லை;கடி ஆரும் பூம்பொழில் சூழ் திருக் காறாயில்குடி ஆரும் கொள்கையினார்க்கு இல்லை, குற்றமே.
உரை

கொடிய சமணர்களும் சாக்கியர்களும் பயனற்ற சொற்களையே பேசித் திரிவர். அவர்களது பேச்சினைக் கேட்பதில் பயன் ஏதும் இல்லை. எனவே அடியவர்களே! பொழில் சூழ்ந்த காறாயில் இறைவனின் புகழையே எப்போதும் பேசும் அடியார்களைக் குற்றங்கள் வந்து பொருந்தா!

11

ஏய்ந்தசீ ரெழில்திக ழுந்திருக் காறாயில்ஆய்ந்தசீ ரானடி யேத்தி அருள்பெற்றபாய்ந்தநீர்க் காழியுள் ஞானசம் பந்தன்சொல்வாய்ந்தவா றேத்துவார் வானுல காள்வாரே.
சொற்பிரிப்பு
ஏய்ந்த சீர் எழில் திகழும் திருக் காறாயில்ஆய்ந்த சீரான் அடி ஏத்தி அருள் பெற்றபாய்ந்த நீர்க் காழியுண் ஞானசம்பந்தன் சொல்வாய்ந்தஆறு ஏத்துவார் வான்உலகு ஆள்வாரே.சுவாமி : கண்ணாயிரநாதர்;அம்பாள் : கயிலாயநாயகியம்மை.
உரை

நீர்வளம் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவர் திருஞானசம்பந்தர் ஆவார்.அவர், எழில் மிக்க திருக்காறாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் புகழ்ந்து பாடியுள்ளார். இறைவனருளையும் பெற்றுள்ளார். அவர் பாடியருளிய பாடல்களை அடியவர்கள் பாடி இறையருள் பெற்று வானுலகு ஆளும் சிறப்பைப் பெறுவர்.