திருமுறை 2 · 2.013 · 11

திருக்கோழம்பம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
கோழம்பம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர்ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர்கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்பம் மேவியஏற்றானை யேத்துமின் நும்மிடர் ஏகவே.
சொற்பிரிப்பு
நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்ஆற்றானை, அழகு அமர் மென்முலையாளை ஓர் -கூற்றானை, குளிர் பொழில் கோழம்பம் மேவியஏற்றானை, ஏத்துமின், நும் இடர் ஏகவே!
உரை

திருவெண்ணீறு பூசிய பெருமானை, நீண்ட சடையின்மீது கங்கையைத் தரித்தவனை, உமையவளை உடம்பின் பாகத்தில் உடையவனை, குளிர்ச்சியான சோலைகளால் சூழப்பெற்ற கோழம்பம் என்னும் திருத்தலத்தில் உறைவானை, இடப வாகனனை வழிபடுங்கள். அடியவர்களே உங்கள் இடர் தீரும்.

2

மையான கண்டனை மான்மறி யேந்தியகையானைக் கடிபொழிற் கோழம்பம் மேவியசெய்யானைத் தேன்நெய்பா லுந்திகழ்ந் தாடியமெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே.
சொற்பிரிப்பு
மை ஆன கண்டனை, மான் மறி ஏந்தியகையானை, கடிபொழில் கோழம்பம் மேவியசெய்யானை, தேன் நெய் பாலும் திகழ்ந்து ஆடியமெய்யானை, மேவுவார் மேல் வினை மேவாவே.
உரை

நீல கண்டத்தை உடையவனை, மானை ஏந்திய கையானை, சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத் தலத்தில் கோயில் கொண்டவனை, தேன், நெய், பால் இவற்றால், சூடப்பெறுபவனை, மெய்யானவனை நினைந்து பாடுபவர்களை வினைகள் சென்று பொருந்தாவாம் என்க.

3

ஏதனை யேதமி லாஇமை யோர்தொழும்வேதனை வெண்குழை தோடுவி ளங்கியகாதனைக் கடிபொழிற் கோழம்பம் மேவியநாதனை யேத்துமின் நும்வினை நையவே.
சொற்பிரிப்பு
ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்வேதனை, வெண்குழை தோடு விளங்கியகாதனை, கடிபொழில் கோழம்பம் மேவியநாதனை, ஏத்துமின், நும் வினை நையவே!
உரை

எல்லாவற்றுக்கும் காரணமானவனை, தங்களது குற்றங்கள் நீங்க தேவர்களால் தொழப்பெறும் வேதமுதல்வனை, ஆணும் பெண்ணுமாய் குழையும் தோடும் கொண்டவனை, சோலைகள் சூழ்ந்த திருக்கோழம்பத்தில் கோயில் கொண்டவனை நம் தலைவனாகிய சிவபெருமானை, அடியவர்களே துதி செய்யுங்கள். வினைகள் நீங்கும்.

4

சடையானைத் தண்மல ரான்சிர மேந்தியவிடையானை வேதமும் வேள்வியு ஆயநன்குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம்உடையானை உள்குமின் உள்ளங்கு ளிரவே.
சொற்பிரிப்பு
சடையானை, தண்மலரான் சிரம் ஏந்தியவிடையானை, வேதமும் வேள்வியும் ஆய நன்குஉடையானை, குளிர்பொழில் சூழ் திருக்கோழம்பம்உடையானை, உள்குமின், உள்ளம் குளிரவே!
உரை

செஞ்சடையவனை, பிரமனின் கபாலத்தைக் கையில் ஏந்தியவனை, இடப வாகனனை, வேதமாகவும் வேள்வியாகவும் விளங்குபவனை, சோலைகள் நிறைந்த திருக்கோழம்பத்தில் மேவியவனை நினைத்தாலே நம் உள்ளம் குளிரும் என்க.

5

காரானைக் கடிகமழ் கொன்றையம் போதணிதாரானைத் தையலொர் பால்மகிழ்ந் தோங்கியசீரானைச் செறிபொழிற் கோழம்பம் மேவியஊரானை யேத்துமின் நும்மிடர் ஒல்கவே.
சொற்பிரிப்பு
காரானை, கடி கமழ் கொன்றை அம்போது அணிதாரானை, தையல் ஓர்பால் மகிழ்ந்து ஓங்கியசீரானை, செறி பொழில் கோழம்பம் மேவியஊரானை, ஏத்துமின், நும் இடர் ஒல்கவே!
உரை

மேகம் போன்று குளிர்ந்து அருள்பவனை, மணமிக்க கொன்றை மாலையை அணிபவனை, உமாதேவியை திருமேனியின் ஒருபாகத்தில் கொண்டுள்ளவனை சோலைகள் நிறைந்த கோழம்பத்தலத்தில் உறைபவனை வழிபடின் நம் துன்பங்கள் நீங்கும் என்க.

6

பண்டாலின் நீழலா னைப்பரஞ் சோதியைவிண்டார்கள் தம்புரம் மூன்றுட னேவேவக்கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக்கொண்டானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.
சொற்பிரிப்பு
பண்டு ஆலின் நீழலானை, பரஞ்சோதியை,விண்டார்கள் தம் புரம் மூன்று உடனே வேவக்கண்டானை, கடி கமழ் கோழம்பம் கோயிலாக்கொண்டானைக், கூறுமின், உள்ளம் குளிரவே!
உரை

முன்னொரு காலத்தில் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு அருள் செய்தவனை, மாறுபட்ட முப்புர அசுரர்களை சிரித்தே அழித்தவனை, திருக்கோழம்பத்தில் கோயில் கொண்டவனை வழிபடின் நம் உள்ளம் குளிரும், அமைதி பெறும் என்க.

7

சொல்லானைச் சுடுகணை யால்புரம் மூன்றெய்தவில்லானை வேதமும் வேள்வியு மானானைக்கொல்லானை உரியானைக் கோழம்பம் மேவியநல்லானை யேத்துமின் நும்மிடர் நையவே.
சொற்பிரிப்பு
சொல்லானை, சுடுகணையால் புரம் மூன்று எய்தவில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை,கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவியநல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!
உரை

மந்திர மொழியாக விளங்குபவனை நெருப்புக் கணையால் முப்புரங்களை எரிவிக்க மேருமலை என்னும் தேரில் ஏறி நின்றவனை, வேதமும் வேள்வியும் ஆனவனை கரிய யானையைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாகக் கொண்டவனை திருக்கோழம்பத்து உறைவானை, நல்லவனை வழிபடின் நம் துயரெல்லாம் நீங்கும் என்க.

8

விற்றானை வல்லரக் கர்விறல் வேந்தனைக்குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச்செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம்பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே.
சொற்பிரிப்பு
வில்-தானை வல் அரக்கர் விறல் வேந்தனைக்குற்றானை, திருவிரலால்; கொடுங்காலனைச்செற்றானை; சீர் திகழும் திருக் கோழம்பம்பற்றானை; பற்றுவார் மேல் வினை பற்றாவே.
உரை

மேருமலையை வில்லாக வளைத்தவனை, அரக்கர் வேந்தன் இராவணனின் அகந்தையை தன் கால்விரல் கொண்டு அடக்கியவனை, காலனைக் காலால் காய்ந்தவனை, திருக்கோழம்பத்து உறைவானைப் பற்றினால் நம்மை வினைகள் பற்றாவாம்.

9

நெடியானோ டயனறி யாவகை நின்றதோர்படியானைப் பண்டரங்க வேடம்ப யின்றானைக்கடியாருங் கோழம்பம் மேவிய வெள்ளேற்றின்கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே.
சொற்பிரிப்பு
நெடியானோடு அயன் அறியா வகை நின்றது ஓர்படியானை, பண்டங்க வேடம் பயின்றானை,கடி ஆரும் கோழம்பம் மேவிய வெள் ஏற்றின்கொடியானை, கூறுமின் உள்ளம் குளிரவே!
உரை

திருமாலும், பிரமனும் அடிமுடி தேடி அறியா வகையில் நெருப்பு வடிவாய் நின்றவனை, பாண்டரங்கம் என்னும் கூத்தினை ஆடிட, அதற்குரிய வேடத்தைக் கொண்டவனை, சோலைகள் நிறைந்த கோழம்பப் பதியில் உறைபவனை பாடிப்பரவுவாரின் உள்ளங்கள் குளிர்வு பெறும்.

10

புத்தருந் தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப்பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக்கொத்தலர் தண்பொழிற் கோழம்பம் மேவியஅத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே.
சொற்பிரிப்பு
புத்தரும்,தோகை அம்பீலி கொள் பொய்ம்மொழிப்பித்தரும், பேசுவ பேச்சு அல்ல பீடு உடைக்கொத்து அலர் தண்பொழில் கோழம்பம் மேவியஅத்தனை ஏத்துமின், அல்லல் அறுக்கவே!
உரை

புத்தரும், மயிற்பீலியைக் கையில் கொண்ட சமணரும் பொய்மொழிகளையே எப்பொழுதும் பேசித் திரிவர். அவர்களுடைய சொற்கள் மெய்யானவை அல்லவாம். எனவே,  அடியவர்களே நீங்கள் மலர்கள் நிறைந்த சோலையில் உறையும் மெய்ம்மையாம் சிவனையே வழிபாடு செய்யுங்கள். உங்களது துன்பம் எல்லாம் நீங்கப் பெறும் என்க.

11

தண்புன லோங்குதண் ணந்தராய் மாநகர்நண்புடை ஞானசம் பந்தன்நம் பான்உறைவிண்பொழிற் கோழம்பம் மேவிய பத்திவைபண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே.
சொற்பிரிப்பு
தண்புனல் ஓங்கு தண்அம் தராய் மா நகர்நண்பு உடை ஞானசம்பந்தன், நம்பான் உறைவிண் பொழில் கோழம்பம் மேவிய பத்து இவைபண் கொளப் பாட வல்லார்க்கு இல்லை, பாவமே.சுவாமி : கோகுலேசுவரர்;அம்பாள் : சவுந்தரியம்மை.
உரை

"குளிர்ந்த நீர் வளம் கொண்ட திருத்தலம் சீர்காழி. அப்பதியில் அவதரித்தவரே திருஞானசம்பந்தர். அவர் உயர்ந்த சோலைகள் சூழ்ந்த கோழம்பரை பக்தியுடன் பாடி அருளியுள்ளார்.  அதனை நாமும் பாடி நம் பாவங்கள் நீங்கப் பெறுவோமாக."