திருமுறை 2 · 2.012 · 11

திருவேகம்பம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு
குறிப்பு
திருவேகம்பம்

1

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானைஇறையானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்துறைவானை யல்லதுள் காதென துள்ளமே.
சொற்பிரிப்பு
மறையானை,மாசு இலாப் புன்சடை மல்கு வெண் பிறையானை,பெண்ணொடு ஆண் ஆகிய பெம்மானை,இறையானை,ஏர் கொள் கச்சித் திரு ஏகம்பத்துஉறைவானை, அல்லது உள்காது எனது உள்ளமே.
உரை

ஏகம்பத்துறை இறைவா! வேத வடிவானவனே! தலையில் பிறையைத் தாங்கியவனே! பெண்ணோடு ஆணாகிய பெம்மானே! இறைவனே! உன்னை அல்லாது வேறு எதையும் என் உள்ளம் நினையாது.

2

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனைநச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.
சொற்பிரிப்பு
நொச்சியே, வன்னி, கொன்றை, மதி,கூவிளம்,உச்சியே புனைதல் வேடம்; விடைஊர்தியான்;கச்சி ஏகம்பம் மேய கறைக்கண்டனைநச்சியே தொழுமின்! நும்மேல் வினை நையுமே.
உரை

ஏகம்பத்துறை இறைவனே! நொச்சி இலை, வன்னி இலை, வில்வ இலை, கொன்றை மலர், சந்திரன் ஆகிய ஐந்தினையும் தலையில் தாங்கி அழகுறக் காட்சி அளிப்பவனே! கச்சிப்பதியில் உறைபவனே! இடப வாகனத்தில் காட்சி தரும் நீலகண்டனே! உம்மை அன்புடன் விரும்பித் தொழும் அடியவர்களுக்குஅவர்களது வினைகள் அழிந்தே போகும் என்க.

3

பாராரு முழவமொந் தைகுழல் யாழொலிசீராலே பாடலா டல்சிதை வில்லதோர்ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.
சொற்பிரிப்பு
பார் ஆரும் முழவம், மொந்தை, குழல்,யாழ்,ஒலிசீராலே பாடல் ஆடல் சிதைவு இல்லது ஓர்ஏர் ஆர் பூங் கச்சி ஏகம்பனை, எம்மானை,சேராதார் இன்பம் ஆய(ந்) நெறி சேராரே.
உரை

ஏகம்பத்துறை இறைவனை, அடியார்கள் சிறந்த முழவு, மொந்தை, குழல், யாழ் போன்றவைகளை முழக்கி அன்புடன் பாடிப் பரவுவர். அதுபோல அன்புடன் பாடிப் பரவாதவர்கள்      அவர் அருள் இன்ப வழியை அடையாதவர்களே ஆவார்கள் என்க.

4

குன்றேய்க்கு நெடுவெண்மா டக்கொடி கூடிப்போய்மின்றேய்க்கு முகில்கள் தோயும் வியன் கச்சியுள்மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்சென் றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.
சொற்பிரிப்பு
குன்று ஏய்க்கும் நெடுவெண்மாடக் கொடி கூடிப் போய்மின் தேய்க்கும் முகில்கள் தோயும் வியன்கச்சியுள்,மன்று ஏய்க்கும் மல்கு சீரால் மலி ஏகம்பம்சென்று ஏய்க்கும் சிந்தையார்மேல் வினை சேராவே.
உரை

ஏகம்பத்துறை இறைவா! நீவிர் கோயில் கொண்டுள்ள கச்சியம்பதியில் உயர்ந்த மாடங்கள் பொருந்தியுள்ளன. அம்மாடங்களில் உள்ள கொடிகள் மேகத்தைத் தடவும் நிலையில் உயர்ந்து விளங்குகின்றன. அத்தகைய கச்சியில் உறையும் இறைவனை நினைந்து நினைந்து வணங்கும் அடியவர்களுக்கு என்றும் வினை பொருந்தாது என்க.

5

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம்கடையேபோய் மூன்றுங்கொண் டான்கலிக் கச்சியுள்புடையேபொன் மலருங்கம் பைக்கரை யேகம்பம்உடையானை யல்லதுள் காதென துள்ளமே.
சொற்பிரிப்பு
சடையானை, தலை கை ஏந்திப் பலி தருவார்தம்கடையே போய் மூன்றும் கொண்டான் கலிக் கச்சியுள்,புடையே பொன் மலரும் கம்பைக்கரை ஏகம்பம்உடையானை, அல்லது உள்காது, எனது உள்ளமே.
உரை

ஏகம்பத்துறை இறைவா! நீவிர் அழகிய சடாமுடியினைக் கொண்டவர் ஆவீர். நீர் பிரம கபாலத்தைக் கையில் ஏந்திக் கொண்டு தாருகாவனத்துச் சென்று முனிபத்தினிகளின் உடல்,பொருள், ஆவி மூன்றையும் கவர்ந்தருளினீர். கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கும் கம்பை நதிக்கரையில் விளங்கும் ஏகம்பத் திருக்கோவில் வீற்றிருப்பவரே. உமது திருவடிகளைத் தவிர என் உள்ளம் வேறு எதையும் நாடாது என்க.

6

மழுவாளோ டெழில்கொள்சூ லப்படை வல்லார்தம்கெழுவாளோ ரிமையாருச் சியுமை யாள்கங்கைவழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்தொழுவாரே விழுமியார் மேல்வினை துன்னாவே.
சொற்பிரிப்பு
மழுவாளோடு எழில் கொள் சூலப்படைவல்லார்தம்கெழு வாளோர் இமையார், உச்சி உமையாள் கங்கைவழுவாமே மல்கு சீரால் வளர் - ஏகம்பம்தொழுவாரே விழுமியார்; மேல்வினை துன்னாவே.
உரை

ஏகம்பத்துறை இறைவா! நீவிர் மழு, வாள், அழகிய திரிசூலம் இவற்றைக் கையில்தாங்கியுள்ளீர்! உமையவளை இடப்பாகத்தும் கங்கையாளைத் தலையிலும் கொண்டு அழகுறக்         காட்சி அருளுகின்றீர். திருஏகம்பத்துள் உறைகின்ற உம்மை அன்புடன் வணங்கும் அடியார்களை வினைகள் சேராவாம் என்க.

7

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனைநண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்தண்ணலா ராடுகின் றவலங் காரம்மே.
சொற்பிரிப்பு
விண் உளார்; மறைகள் வேதம் விரித்து ஓதுவார்கண் உளார்; கழலின் வெல்வார், கரி காலனை;நண்ணுவார் எழில் கொள் கச்சிநகர் ஏகம்பத்துஅண்ணலார்; ஆடுகின்ற அலங்கார(ம்)மே!
உரை

ஏகம்பத்துறை இறைவா! நீவிர் உயர்ந்த வேதத்துள்ளும், அவ்வேதத்தை விரித்து ஓதும் அந்தணர் உள்ளத்துள்ளும் நிறைந்துள்ளீர். காலனை கழலணிந்த காலால் உதைத்து அருளினீர்! ஏகம்பத்துள் கோயில் கொண்டுள்ளீர். அடியார் தரும் பூசனைப் பொருட்களை ஏற்று நீர் ஆடிடும் அழகே அழகாம் என்க.

8

தூயானைத் தூயவா யம்மறை யோதியவாயானை வாளரக் கன்வலி வாட்டியதீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
சொற்பிரிப்பு
தூயானை,தூயஆய(ம்) மறை ஓதியவாயானை,வாள் அரக்கன் வலி வாட்டியதீயானை, தீது இல் கச்சித் திரு ஏகம்பம்மேயானை, மேவுவார் என் தலைமேலாரே.
உரை

ஏகம்பத்துறை இறைவா! நீரே தூயவர். தூய்மை பொருந்திய மறையை ஓதிய வாயினர். கொடிய இராவணனின் வலிமையைக் குறைத்தவர். தீயினைக் கரத்தில் ஏந்தியவர். கச்சியில் கோயில் கொண்டவர். உம்மை வணங்கும் அடியார்களே எம்மால் வணங்கத் தக்கவர்கள் ஆவார்கள்.

9

நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்ஏகம்பம் மேவியா டுமிறை யிருவர்க்கும்மாகம்பம் அறியும்வண் ணத்தவ னல்லனே.
சொற்பிரிப்பு
நாகம் பூண்; ஏறுஅது ஏறல்; நறுங்கொன்றை, தார்;பாகம் பெண்; பலியும் ஏற்பர்; மறை பாடுவர்;ஏகம்பம் மேவி ஆடும் இறை இருவர்க்கும்மா கம்பம் அறியும் வண்ணத்தவன் அல்லனே!
உரை

ஏகம்பத்துறை இறைவா! நீரே நாகத்தை அணிகலன்களாகக் கொண்டவர். இடப வாகனத்தில் அமர்ந்து அருளுபவர். நறுங்கொன்றை மலரைச் சூடியவர். உமையாளை இடப்பாகத்தில்      கொண்டவர். கபாலம் ஏந்திப் பலி கொள்பவர். வேதம் அருளியவர். ஏகம்பத்தில் உறைபவர். பிரமன், திருமால் இருவரும் அறிய முடியாமல் பெரிய தீப்பிழம்பு தூண் போன்று நெடிது விளங்குபவர் ஆவீர். உம்மை வணங்கி மகிழ்வோம்.

10

போதியார் பிண்டியா ரென்றிவர் பொய்ந்நூலைவாதியா வம்மினம் மாவெனுங் கச்சியுள்ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்நீதியால் தொழுமின்நும் மேல்வினை நில்லாவே.
சொற்பிரிப்பு
போதியார், பிண்டியார், என்று இவர் பொய்ந்நூலைவாதியா வம்மின்! அம்மா எனும் கச்சியுள்ஆதியார் மேவி ஆடும் திரு ஏகம்பம்நீதியால் - தொழுமின்! நும்மேல் வினை நில்லாவே.
உரை

ஏகம்பத்துறை இறைவா! பௌத்தர்களும் சமணர்களும் பொய்நூலை அடிப்படையாகக் கொண்டு வாதம் செய்வார்கள். ஏகம்பத்துறை இறைவனை உணராமல்பேசும் அவர்கள் கூற்றை நாங்கள் ஏற்க மாட்டோம். கச்சியுள் பொருந்தி விளங்கும் இறைவனையே   நாங்கள் முறைப்படி தொழுவோம். எங்கள் வினை நில்லாது ஓடிவிடும் என்க.

11

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்கந்தண்பூங் காழியூ ரன்கலிக் கோவையால்சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே.
சொற்பிரிப்பு
அம் தண் பூங்கச்சி ஏகம்பனை, அம்மானை,கந்து அண் பூங்காழிஊரன் கவிக்கோவையால்சந்தமே பாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன் சொல் பாடி ஆட, கெடும்,பாவமே.சுவாமி : தழுவக்குழைந்த நாதர்; அம்பாள் : ஏலவார்குழலி.
உரை

ஏகம்பத்துறை இறைவா! அழகிய பூக்களால் குளிர்ந்து விளங்கும் கச்சியம்பதியில் கோயில் கொண்ட இறைவா! சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தர் பாடிய சந்த நயமிக்க தமிழ்ப்பாடல்களை நாங்கள் பாடி உம்மை வணங்குவோம். அன்பர்களாகிய எங்கள் பாவமும் நீங்கும் அன்றே!