திருமுறை 2 · 2.010 · 11

திருமங்கலக்குடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
மங்கலக்குடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சீரி னார்மணி யும்மகில் சந்துஞ்செ றிவரைவாரி நீர்வரு பொன்னிவ டமங்க லக்குடிநீரின் மாமுனி வன்நெடுங் கைகொடு நீர்தனைப்பூரித் தாட்டியர்ச் சிக்கஇ ருந்த புராணனே.
சொற்பிரிப்பு
சீரின் ஆர் மணியும்(ம்) அகில் சந்தும் செறி வரைவாரி நீர் வரு பொன்னி வடமங்கலக்குடிநீரின் மா முனிவன் நெடுங்கைகொடு நீர்தனைப்பூரித்து ஆட்டி அர்ச்சிக்க இருந்த புராணனே.
உரை

வடமங்கலக்குடி எம்பெருமானே! ஒளி மிக்க மணி, அகில், சந்தனம் ஆகியவற்றை மலையிலிருந்து உருட்டிக் கொண்டு வரும் காவிரியாற்றின் கரையில் உள்ள பதியே திருமங்கலக்குடியாகும். அவ்வூரில் முன்னொரு காலத்தில் வாழ்ந்த முனிவர் ஒருவர் அக்காவிரி நீற்றைக் கங்கை பொருந்திய உமது தலையில் ஊற்றிப் பூசித்துச் சிறந்தார் என்பர். எந்த நீரையும் ஏற்றருளும் பெருமானே நீரே எம் தலைவர் ஆவீர்!

2

பணங்கொ ளாடர வல்குல்நல் லார்பயின் றேத்தவேமணங்கொள் மாமயி லாலும்பொ ழில்மங்க லக்குடிஇணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திடஅணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே.
சொற்பிரிப்பு
பணம் கொள் ஆடுஅரவு அல்குல் நல்லார் பயின்று ஏத்தவே,மணம் கொள் மா மயில் ஆலும் பொழில் மங்கலக்குடி,இணங்கு இலா மறையோர் இமையோர் தொழுது ஏத்திட,அணங்கினோடு இருந்தான் அடியே சரண் ஆகுமே.
உரை

வடமங்கலக்குடி எம்பெருமானே! அழகுமிக்க பெண்கள் நாள்தோறும் திருக்கோவில் வந்து உம்மை வழிபடுகிறார்கள். திருக்கோயிலைச் சுற்றி மயில்கள் ஆடும் மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர். திருமாலும் பிரமனும் தேடியும் காண முடியாத உம்மை இந்த நகரில் வாழும் மறையோதும் அந்தணர்களும் தேவர்களும் நெருங்கி நாளும் வணங்குகின்றனர். உமாதேவியுடன் பொருந்தி விளங்கும் உம்மை நாங்களும் வணங்கி உமது அடியைச் சரணடைவோமாக.

3

கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்மருங்கெ லாம்மண மார்பொழில் சூழ்மங்க லக்குடிஅரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடுவிரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே.
சொற்பிரிப்பு
கருங்கையானையின் ஈர்உரி போர்த்திடு கள்வனார்,மருங்குஎலாம் மணம் ஆர் பொழில் சூழ் மங்கலக்குடி,அரும்பு சேர் மலர்க்கொன்றையினான் அடி அன்பொடுவிரும்பி ஏத்த வல்லார் வினை ஆயின வீடுமே.
உரை

மங்கலக்குடி எம்பெருமானே! நீவிர் கரிய யானையின் தோலை உரித்துப்      போர்த்திக் கொண்டு எம் உள்ளம் கவரும் கள்வராவீர்! மணம் மிக்க பொழில்கள் நிறைந்த மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! கொன்றை மலரை விரும்பிச் சூடும் உமது திருவடிகளை நாங்கள் விரும்பிப் போற்றுவோம். எங்கள் வினைகள் நீங்கப் பெறுவோம்.

4

பறையி னோடொலி பாடலும் ஆடலும் பாரிடம்மறையி னோடியல் மல்கிடு வார்மங்க லக்குடிக்குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்றுமுறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே.
சொற்பிரிப்பு
'பறையினோடு ஒலிபாடலும் ஆடலும் பாரிடம்,மறையினோடு இயல் மல்கிடுவார் மங்கலக்குடிக்குறைவு இலா நிறைவே! குணம் இல் குணமே!" என்றுமுறையினால் வணங்கு(ம்) அவர் முன்நெறி காண்பரே.
உரை

மங்கலக்குடியில் அருள்புரியும் எம்பெருமானே! நீர், இன்னிசை வாத்தியங்கள் முழங்க, பூதகணங்கள் பாடியாட, அந்தணர்கள் வேதங்களை ஓத மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உம்மை குறைவில்லா நிறைவு என்றும் குணமில் குணம் என்றும் உணர்ந்து வணங்கும் அடியார்கள் உயர் நெறியை உணர்ந்து அதனை அடைவார்கள் என்க.

5

ஆனி லங்கிளர் ஐந்தும் அவிர்முடி யாடியோர்மானி லங்கையி னான்மண மார்மங்க லக்குடிஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமேஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே.
சொற்பிரிப்பு
ஆனில்அம்கிளர்ஐந்தும் அவிர் முடி ஆடி,ஓர்மான் நில் அம் கையினான், மணம் ஆர் மங்கலக்குடி,ஊன்இல் வெண்தலைக் கை உடையான் உயர் பாதமேஞானம் ஆக நின்று ஏத்த வல்லார் வினை நாசமே.
உரை

மங்கலக்குடியில் அருள்புரியும் எம்பெருமானே! நீவிர் பசுவின்பால், தயிர், நெய்,கோமயம், கோசலம் என்னும் பஞ்சகவ்வியத்தை ஏற்றருள்வீர்! கையில் மானை அடக்கி நிற்பதுபோல அடியவர்களின் அலையும் மனத்தை அடக்கி நிற்பீர்! கையில் கபாலத்தை ஏந்தி நிற்பீர். உமது திருவடிகளை ஞானத்தால் உணர்ந்து ஏத்துபவர்களின் வினைகள் நிச்சயம் நாசமடையும்!

6

தேனு மாயமு தாகிநின் றான்தெளி சிந்தையுள்வானு மாய்மதி சூடவல் லான்மங்க லக்குடிக்கோனை நாடொறும் ஏத்திக் குணங்கொடு கூறுவார்ஊனமானவை போயறும் உய்யும்வ கையதே.
சொற்பிரிப்பு
தேனுமாய் அமுதுஆகி நின்றான், தெளிசிந்தையுள்;வானுமாய் மதி சூட வல்லான்; மங்கலக்குடிக்கோனை நாள்தொறும் ஏத்திக் குணம்கொடு கூறுவார்ஊனம் ஆனவை போய் அறும்; உய்யும்வகை, அதே.
உரை

மங்கலக்குடி இறையவனே! நீவிர் தெளிந்த உள்ளம் கொண்ட அடியவர்களுக்குத் தேனாகவும் அமுதாகவும் விளங்குகின்றீர்! மதிசூட வல்ல நீவிர் வான் வெளியாகவும் விளங்குகின்றீர்! மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள உம்மை அடியவர்களாகிய நாங்கள் நாளும் ஏத்தி உமது குணங்களை மனத்திற்கொண்டு வணங்குவோம். எங்களுக்கு உய்யும் திறம் அதுவே. எங்களது குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி அருளுவீர்!

7

வேள் படுத்திடு கண்ணினன் மேருவில் லாகவேவாள ரக்கர் புரமெரித் தான்மங்க லக்குடிஆளும் ஆதிப்பி ரானடி கள்ளடைந் தேத்தவேகோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே.
சொற்பிரிப்பு
வேள் படுத்திடு கண்ணினன், மேரு வில்ஆகவேவாள் அரக்கர் புரம் எரித்தான், மங்கலக்குடிஆளும் ஆதிப்பிரான், அடிகள்(ள்) அடைந்து ஏத்தவே,கோளும் நாள்அவை போய் அறும்; குற்றம் இல்லார்களே.
உரை

மங்கலக்குடி எம்பெருமானே! நீர் மன்மதனை நெற்றிக்கண்ணால் சாம்பலாக்கினீர் ! கொடிய அரக்கர்களுக்கு உரித்தாய முப்புரங்களையும் சிரித்தே அழித்தீர்! மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ளீர்! உமது திருவடிகளை ஏத்தி வணங்கிட எங்களுக்கு கிரகங்களாலும் விண்மீன்களாலும் உண்டாகும் தீமைகள் நிச்சயம் நீங்கப் பெறும். நாங்கள் குற்றம் இல்லாதவர்களாய் விளங்கிடுவோமாக!.

8

பொலியும் மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திடவலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங்க லக்குடிப்புலியின் ஆடையி னானடி யேத்திடும் புண்ணியர்மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே.
சொற்பிரிப்பு
பொலியும் மால்வரை புக்கு எடுத்தான் புகழ்ந்து ஏத்திடவலியும் வாளொடு நாள் கொடுத்தான்; மங்கலக்குடிப்புலியின் ஆடையினான்; அடி ஏத்திடும் புண்ணியர்மலியும் வான்உலகம் புக வல்லவர்; காண்மினே!
உரை

மங்கலக்குடி எம்பெருமானே! உமது கயிலாய மலையினைப் பெயர்த்து எடுக்க முயன்றான் இராவணன். முதலில் துன்புற்றுப் பிறகு தெளிந்து உம்மைப் புகழ்ந்து பாடினான். அதனால் வலிமைமிக்க வாளையும் நீண்ட வாழ்நாளையும் பெற்றான். புலித்தோல் ஆடை அணிந்த உமது திருவடிகளை வணங்கிடும் புண்ணியர்கள் உயர்ந்த முத்திப் பேற்றை எளிதாகப் பெறுவர் அன்றோ!

9

ஞாலம் முன்படைத் தான்நளிர் மாமலர் மேலயன்மாலுங் காணவொ ணாஎரி யான்மங்க லக்குடிஏல வார்குழ லாளொரு பாகமி டங்கொடுகோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே.
சொற்பிரிப்பு
ஞாலம் முன் படைத்தான் நளிர் மாமலர்மேல் அயன்,         மாலும் காண ஒணா எரியான்: மங்கலக்குடிஏல வார்குழலாள் ஒருபாகம் இடம்கொடுகோலம்ஆகி நின்றான்; குணம் கூறும் குணம் அதே.
உரை

மங்கலக்குடி பெருமானே! நீர் தாமரை மலர்மேல் இருந்து உலகைப் படைக்கும்பிரமனாலும் திருமாலாலும் காண முடியாத ஒளி உருவினர் ஆவீர்! மங்கலக்குடியில் மணமிக்க கூந்தலைக் கொண்ட உமாதேவியோடு பொருந்தி அழகுற நிற்கும் உம்மைப் போற்றிப் புகழ வல்லவர்கள் நற்பண்புமிக்க சிறப்புறுவர் என்க.

10

மெய்யின் மாசினர் மேனிவி ரிதுவ ராடையர்பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங்க லக்குடிச்செய்ய மேனிச்செ ழும்புனற் கங்கைசெ றிசடைஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே.
சொற்பிரிப்பு
மெய்யில் மாசினர், மேனி விரி துவர் ஆடையர்,பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர் மங்கலக்குடிச்செய்யமேனிச் செழும் புனல் கங்கை செறி சடைஐயன் சேவடி ஏத்த வல்லார்க்கு அழகு ஆகுமே.
உரை

மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! மெய்மாசு கொண்டும் துவராடை உடுத்தியும் விளங்கும் சமணரும் சாக்கியரும் உம்மைப் பற்றி உணராமல் பொய் வார்த்தை கூறித் திரிவர். ஆனால் மெய்யன்பர்கள் (சிவனடியார்கள்) அதனை ஒருபோதும் நம்ப மாட்டார்கள். சிவந்த மேனியையும், தலையில் கங்கையாற்றையும், சடாமுடிகளையும் கொண்ட உம்மையே ஏத்தி வழிபாடு செய்வார்கள். அதுவே அடியவர்க்குரிய அழகாகும்.

11

மந்த மாம்பொழில் சூழ்மங்க லக்குடி மன்னியஎந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன்சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல்முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே.
சொற்பிரிப்பு
மந்தமாம் பொழில் சூழ் மங்கலக்குடி மன்னியஎந்தையை எழில் ஆர் பொழில் காழியர் காவலன்சிந்தை செய்து அடி சேர்த்திடு ஞானசம்பந்தன் சொல்முந்தி ஏத்த வல்லார், இமையோர் முதல் ஆவரே.
உரை

மங்கலக்குடி பெருமானே! எழில் மிக்க சோலைகளால் நிறைந்த சீர்காழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் எப்பொழுதும் சிந்தை செய்வது மங்கலக்குடியில் கோயில் கொண்டுள்ள உம்மைத்தான். அவர் உம்மைப் புகழ்ந்து பாடிய பாடல்களை அடியார்களாகிய நாங்களும் பாடிப் பரவுவோம். தேவர் முதல்வர் ஆவோமாக!