திருமுறை 2 · 2.009 · 11

திருமழபாடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
மழபாடி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

களையும் வல்வினை யஞ்சல்நெஞ் சேகரு தார்புரம்உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலாவளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண்டளையுங் கொன்றையந் தார்மழ பாடியுள் அண்ணலே.
சொற்பிரிப்பு
களையும், வல்வினை: அஞ்சல், நெஞ்சே! கருதார் புரம்உளையும் பூசல் செய்தான்; உயர் மால்வரை நல் விலாவளைய வெஞ்சரம் வாங்கி எய்தான் - மதுத் தும்பிவண்டுஅளையும் கொன்றைஅம்தார் மழபாடியுள் அண்ணலே.
உரை

மழபாடியுள் அண்ணலே! நீவிர் உம்மை வணங்காமல் பகைமை கொண்ட முப்புரத்து அசுரர்களை மேருமலையை வில்லாக வளைத்து, சரமும் தொடுக்க முயன்று முடிவில் சிரித்தே அதனை  அழித்தருளிய பெருமைக்கு உரியவர் ஆவீர்! முப்புரம் அழித்தல் என்பது மும்மல அழிவுதானே! எனவே நாங்கள் எங்கள் வினை நீக்குதல் பற்றி அஞ்சமாட்டோம். வண்டுகள் நிறைந்த கொன்றை மாலை அணிந்த உம் திருவடிகளையே வணங்கி வினை நீங்கப் பெறுவோமாக!

2

காச்சி லாதபொன் நோக்குங்க னவயி ரத்திரள்ஆச்சி லாதப ளிங்கினன் அஞ்சுமுன் ஆடினான்பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின்வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே.
சொற்பிரிப்பு
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்ஆச்சிலாத பளிங்கினன்; அஞ்சும் முன் ஆடினான்;பேச்சினால் உமக்கு ஆவது என்? - பேதைகாள்; பேணுமின்!வாச்ச மாளிகை சூழ் மழபாடியை வாழ்த்துமே:
உரை

மழபாடி அண்ணலே! நீவிர் ஒளிமிக்க பொன்னும், உறுதியான வைரமும், தெளிந்த பளிங்கும் போன்று விளங்குகின்றீர்! பஞ்ச கவ்வியத்தை விரும்பி ஆடுகின்றீர்! வாசனைமிக்க மழபாடித் திருத்தலத்தில் உறைகின்றீர்! உம்மை வாழ்த்துவது ஒன்றே எம் வாழ்வின் பயனாம் என்க.

3

உரங்கெ டுப்பவன் உம்பர்க ளாயவர் தங்களைப்பரங்கெ டுப்பவன் நஞ்சையுண் டுபக லோன்றனைமுரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன்வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே.
சொற்பிரிப்பு
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர் தங்களை;பரம் கெடுப்பவன், நஞ்சை உண்டு; பகலோன் தனைமுரண் கெடுப்பவன்: முப்புரம் தீ எழச் செற்று, முன்,வரம் கொடுப்பவன் - மா மழபாடியுள் வள்ளலே.
உரை

மழபாடி வள்ளலே! நீவிர் பகைமை கொண்டவர்களை அழிப்பவர் ஆவீர். ! வணங்கியவர்களுக்கு உரம் கொடுப்பவர் ஆவீர்! சூரியனின் பற்களை உடைத்து முப்புரங்களையும் எரித்தவர் ஆவீர்! நஞ்சை உண்டு  உலகைக் காத்தவர் ஆவீர். மழபாடி வள்ளலே! உம்மை வாழ்த்தி வணங்குகின்றோம்.

4

பள்ள மார்சடை யிற்புடை யேயடை யப்புனல்வெள்ளம் ஆதரித் தான்விடை யேறிய வேதியன்வள்ளல் மாமழ பாடியுள் மேயம ருந்தினைஉள்ளம் ஆதரி மின்வினை யாயின ஓயவே.
சொற்பிரிப்பு
பள்ளம் ஆர் சடையில் புடையே அடையப் புனல்வெள்ளம் ஆதரித்தான், விடை ஏறிய வேதியன்,வள்ளல், மாமழபாடியுள் மேய மருந்தினைஉள்ளம் ஆதரிமின் வினை ஆயின ஓயவே!
உரை

மழபாடி வள்ளலே! நீவிர் விடையின்மீது அமர்ந்து அருளுவீர். சடையில் கங்கையைத் தாங்கி அதற்கும் சிறப்பு அருளுவீர்! திருமழபாடியுள் அமர்ந்த அண்ணலாகிய உமது திருவடிகளை  நாங்கள் வணங்கி எங்கள் வினை நீங்கப் பெறுவோமாக!

5

தேனு லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள்பால்நெய் அஞ்சுடன் ஆட்டமுன் ஆடிய பால்வணன்வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெம்கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே.
சொற்பிரிப்பு
தேன்உலா மலர் கொண்டு, மெய்த் தேவர்கள், சித்தர்கள்,பால்நெய்அஞ்சு உடன்ஆட்ட, முன் ஆடிய பால்வணன்வானநாடர்கள் கைதொழு மா மழபாடி எம்கோனை நாள்தொறும் கும்பிடவே, குறி கூடுமே.
உரை

மழபாடி அண்ணலே! தேன்நிறைந்த மலர் கொண்டு உம்மைத் தேவர்களும் சித்தர்களும் வணங்குகிறார்கள். பால், நெய் முதலிய பஞ்சகவ்வியம் கொண்டு அபிஷேகம் செய்து, போற்றி வழிபடுகிறார்கள். நாங்களும் அவர்களைப் போன்று, உம்மைப் போற்றி வணங்கி உம் திருவடிப் பேற்றை அடைவோமாக!

6

தெரிந்த வன்புரம் மூன்றுடன் மாட்டிய சேவகன்பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான்வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப்புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே.
சொற்பிரிப்பு
தெரிந்தவன்,புரம்மூன்று உடன் மாட்டிய சேவகன்,பரிந்து கைதொழுவார் அவர் தம் மனம் பாவினான்,வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான், மழபாடியைப்புரிந்து கைதொழுமின்! வினை ஆயின போகுமே.
உரை

மழபாடி அண்ணலே! நீவிர் முப்புரங்கள் மூன்றையும் ஒன்றாக அழித்தவர். அன்பு கொண்ட அடியவர்களின் உள்ளங்களில் பொருந்தியவர். மேரு மலையை வில்லாக வளைத்த பேராற்றலை உடையவர். மழபாடியுள் பொருந்தியுள்ள உம்மைத் தொழுது நாங்கள் எங்களுடைய வினைகள் நீங்கப் பெறுவோமாக!

7

சந்த வார்குழ லாளுமை தன்னொரு கூறுடைஎந்தை யான்இமை யாதமுக் கண்ணினன் எம்பிரான்மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச்சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே.
சொற்பிரிப்பு
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு உடைஎந்தையான், இமையாத முக்கண்ணினன், எம்பிரான்,மைந்தன், வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினைசிந்தியா எழுவார் வினை ஆயின தேயுமே.
உரை

மழபாடி அண்ணலே! நீவிர் மணமிக்க கூந்தலைக் கொண்ட உமையாளை உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவர் ஆவீர்! எங்களுக்குத் தந்தை ஆவீர்! மூன்று திருக்கண்களைக் கொண்டவர் ஆவீர்! சோலைகள் நிறைந்த திருமழபாடித் தலத்துள் பொருந்தி இருப்பவர் ஆவீர்! வைத்திய நாதராகிய  உம்மை,மனமொழி மெய்கள் பொருந்தத் தொழுது எங்களது வினைகள் நீங்கப் பெறுவோமாக.

8

இரக்கம் ஒன்றுமி லான் இறையான்திரு மாமலைஉரக்கை யாலெடுத் தான்தன தொண்முடி பத்திறவிரல்த லைந்நிறு வியுமை யாளொடு மேயவன்வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே.
சொற்பிரிப்பு
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலைஉரக்கையால் எடுத்தான் தனது ஒண் முடிபத்து இறவிரல்-தலை(ந்) நிறுவி, உமையாளொடு மேயவன் வரத்தையே கொடுக்கும் மழபாடியுள் வள்ளலே.
உரை

மழபாடி வள்ளலே! இரக்கமற்ற இராவணன் உமது கயிலை மலையைத் தனது ஆற்றலால் எடுக்க முயன்றான். அவனது பத்துத் தலைகளும் துன்பம் அடைய நீவிர் உமது திருவிரலை ஊன்றினீர்! இறுதியில் அருளும் புரிந்து உமையாளோடு பொருந்தி விளங்கினீர். அருளும் உம்மை நாங்கள் வணங்கி மகிழ்வோமாக.

9

ஆலம் உண்டமு தம்மம ரர்க்கருள் அண்ணலார்காலன் ஆருயிர் வீட்டிய மாமணி கண்டனார்சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விடம்மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே.
சொற்பிரிப்பு
ஆலம் உண்டு அமுதம்(ம்) அமரர்க்கு அருள் அண்ணலார்,காலன் ஆர்உயிர் வீட்டிய மா மணிகண்டனார் -சால நல் அடியார் தவத்தார்களும் சார்வுஇடம்மால் அயன் வணங்கும், மழபாடி எம் மைந்தனே.
உரை

மழபாடி மாமணியே! நீவிர் ஆலத்தை உண்டு அமுதத்தை வழங்கியவர்!.  காலனைக் காலால் உதைத்து அருளியவர்! விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டர்!. அன்புடை அடியார்களாலும் தவத்தோர்களாலும் வணங்கப் பெற்றவர். திருமாலும் பிரமனும் தேவர்களும் போற்றும் உம்மை நாங்களும் போற்றி வணங்குவோமாக.

10

கலியின் வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும்நலியும் நாள்கெடுத் தாண்டஎன் நாதனார் வாழ்பதிபலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும்மலியும் மாமழ பாடியை வாழ்த்திவ ணங்குமே.
சொற்பிரிப்பு
கலியின் வல்அமணும், கருஞ் சாக்கியப்பேய்களும்,நலியும் நாள் கெடுத்து ஆண்ட என் நாதனார் வாழ்பதிபலியும் பாட்டொடு பண் முழவும், பலஓசையும்,மலியும் மழபாடியை வாழ்த்தி வணங்குமே.
உரை

மழபாடி அண்ணலே! நீவிர் வலிமை பொருந்திய சமணர்களும் சாக்கியர்களும் அடியவர்களுக்குக் கொடுமை புரிந்த காலத்தில் அருள்புரிந்து காத்தீர்! பண்ணும் பாட்டும் பொருந்திட உம் புகழை நாங்கள் பாடி எங்களையே அர்ப்பணிப்போம். அருள்புரிவீராக!

11 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

மலியு மாளிகை சூழ்மழ பாடியுள் வள்ளலைக்கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன்ஒலிசெய் பாடல்கள் பத்து இவை வல்லார்...........................................................உலகத்திலே.இப்பதிகத்தின் 11-ம் செய்யுளின் பின்னடிகள் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்கலிசெய் மா மதில் சூழ் கடல் காழிக் கவுணியன்,ஒலிசெய் பாடல்கள் பத்து இவை வல்லார் ...........................................................உலகத்திலே
உரை

மழபாடி அண்ணலே! நீவிர் மாடங்கள் நிறைந்த மழபாடியுள் கோயில் கொண்டுள்ளீர். உம்மை மதில் சூழ்ந்த சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடியுள்ளார். அவரது திருப்பாடல்களை நாங்கள் மகிழ்ந்து பாடுவோம். எங்களது வினைகள் திண்ணமாக நீங்கும் என்க.