திருமுறை 2 · 2.006 · 12

திருவையாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்ஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடும் ஒருவனார்பாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவேஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை, குலாய சீர்ஓடு கங்கை, ஒளிவெண் பிறை, சூடும் ஒருவனார்பாடல் வீணை, முழவம், குழல், மொந்தை, பண்ஆகவே ஆடும்ஆறு வல்லானும் ஐயாறு உடை ஐயனே.
உரை

இந்தப் பதிகத்தில் முதல் இரண்டடிகளில் சிவபெருமான் சூடுவனவற்றுள் ஐந்தும்பின் இரண்டடியில் அவனது திருக்கூத்து வன்மையும் இசைக்கருவிகளும் கூறப்பட்டுள்ளன.சிவபெருமான் திருவையாற்றில் வீற்றிருந்து அருளாட்சி செய்து வருகிறார். அவருடைய திருமுடியில் வெண்மையான காந்தள் மலரும், கோங்கு மரத்தின் தளிர்களும், வில்வத்தின் மூன்று இலைகளைக் கொண்ட தளிர்களும், பாய்ந்து ஓடுகின்ற கங்கை நதியும் , ஒளி பொருந்திய வெண்மையான தோயாத பிறைச் சந்திரன் ஆகியன கண்டு வணங்கி வாழ்த்தி அவனுடைய பெருமைகளை அடியார்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.   சிவபெருமான் வீற்றிருக்கின்ற எல்லாத் திருக்கோயில்களிலும் அவனது நடனம் வணங்கப் பெறும் உண்மை சாத்திரம் உணர்ந்தோர்க்கே விளங்கும். திருநாவுக்கரசர் அருளிச் செய்தபடி 'ஆடல் அமர்ந்துறைகின்ற ஐயாறு' - இங்குள்ள திருக்கோவில் ஐயாறப்பர் நீடு பெருந்திருக்கூத்தை ஆடிக்கொண்டுள்ளார். அடியார்கள் இசைப்பாட்டும் பண்ணோடு பாடிக் கொண்டிருக்கிறார்கள். பாடுகின்ற பாட்டுக்களுக்கு இணையாக வீணை, மத்தளம் குடமுழா, வேய்ங்குழல், மொந்தை முதலியனவும் பண்ணோடு இசைத்து ஒலியைக் கிளப்பி உள்ளத்தைப் பரவசமாக்கிக் கொண்டிருக்கின்றன.

2

தன்மை யாரும் அறிவாரில்லை தாம்பிறர் எள்கவேபின்னு முன்னுஞ் சிலபேய்க் கணஞ்சூழத் திரிதர்வர்துன்ன ஆடை யுடுப்பர் சுடலைப்பொடிப் பூசுவர்அன்னம் ஆலுந் துறையானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
தன்மை யாரும் அறிவார் இலை; தாம் பிறர் எள்கவே,பின்னும் முன்னும் சிலபேய்க்கணம் சூழத் திரிதர்வர்;துன்னஆடை உடுப்பர்; சுடலைப்பொடி(ப்) பூசுவர்;அன்னம் ஆலும் துறையானும் - ஐயாறு உடை ஐயனே.
உரை

அன்னங்கள் ஒலிக்கும் ஐயாறுடைய ஐயனின் தன்மையை அறிபவர் எவரும் இல்லை. அத்தகைய இறைவர் பிறர் எள்ளுமாறு சில பேய்க்கணங்கள் பின்னும் முன்னும் சூழத் திரிவார். கந்தலான ஆடையை இடையிலே கட்டியிருப்பார். இடுகாட்டின் சாம்பலை மேனிமேல் பூசுவார்.

3

கூறு பெண்ணுடை கோவணம் உண்பதும் வெண்டலைமாறி லாருங்கொள் வாரிலை மார்பி லணிகலம்ஏறும் ஏறித் திரிவரிமை யோர்தொழு தேத்தவேஆறும் நான்குஞ்சொன் னானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
கூறு பெண்; உடை கோவணம்; உண்பது வெண்தலை;மாறில், ஆரும் கொள்வார் இலை, மார்பில் அணிகலம்;ஏறும் ஏறித் திரிவர்; இமையோர் தொழுது ஏத்தவேஆறும் நான்கும் சொன்னானும் ஐயாறு உடை ஐயனே.
உரை

ஐயாறுடைய ஐயன், ஒரு கூறாக உமையம்மையைக் கொண்டவர். கோவண ஆடை உடுத்தவர். வெள்ளிய தலையோட்டில் பிச்சையேற்று உண்பவர். மார்பில் அணிந்துள்ள அணிகலன்களோ பண்டமாற்றாகப் பிறர் கொள்பவர் இல்லாத ஆமையோடு பன்றிக்கொம்பு, பாம்பு முதலானவை. இடபத்தில் ஏறித்திரிபவர். தேவர் பலரும் வணங்க நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் அருளியவர்.

4

பண்ணின் நல்ல மொழியார் பவளத்துவர் வாயினார்எண்ணின் நல்ல குணத்தாரிணை வேல்வென்ற கண்ணினார்வண்ணம் பாடிவலி பாடித்தம் வாய்மொழி பாடவேஅண்ணல் கேட்டுகந் தானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
பண்ணின் நல்ல மொழியார், பவளத் துவர் வாயினார்,எண் இல் நல்ல குணத்தார், இணைவேல் வென்ற கண்ணினார்,வண்ணம் பாடி வலிபாடி, தம் வாய்மொழி பாடவே,அண்ணல் கேட்டு உகந்தானும்- ஐயாறு உடை ஐயனே.
உரை

திருவையாற்றில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வரும் ஐயாறப்பர் அத்தலத்தில் பண்ணிசையிலும் இனிய பாடல்களை அவர்திருமுன்பு சேயிழையார்கள் பாடுவதனைக் கேட்டு உவந்தார். அவர்களை ஆசீர்வதிக்கிறார். அந்தச் சேயிழையார்கள் பவளம் போன்ற செந்நிற வாயை உடையவர்கள். அவர்கள் பண் கலந்து பாடும் தமிழிசையில் வல்லவர்களாகவும் நற்குணத்தவராகவும் விளங்குகிறார்கள். அவர்கள் வேலினை வென்ற கூர்மையான கண்களை உடையவர்களாக உள்ளனர். அவன் அருளைத் தங்கள் கண்களால் காணும் தன்மை உடையவர்கள். மந்திரமும், தந்திரமும் மருந்துமாகித்தீரா நோய் தீர்த்தருள்வானாகிய அவனது வலியையும் பாடுகிறார்கள். அவர்கள் வாய்மொழி எப்பொழுதும் சிவநாமத்தையே பாடும் தோத்திரங்களாக அமைகின்றன. இவ்வாறு காரிகையர்கள் பண்பாடலைக் கேட்டு ஐயாறப்பர் மிகவும் உகந்து அவர்களை ஆசீர்வதித்து ஆட்சி புரிந்து வருகிறார்.

5

வேன லானை வெருவவுரி போர்த்துமை யஞ்சவேவானை யூடறுக் கும்மதி சூடிய மைந்தனார்தேன்நெய் பால்தயிர் தெங்கிள நீர்கரும் பின்தெளிஆனஞ் சாடும் முடியானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
வேனல் ஆனை வெருவ உரி போர்த்து உமை அஞ்சவே,வானை ஊடுஅறுக்கும் மதி சூடிய மைந்தனார்தேன், நெய், பால், தயிர், தெங்குஇளநீர், கரும்பின் தெளிஆன்அஞ்சு,ஆடு முடியானும் - ஐயாறு உடை ஐயனே.
உரை

திருவையாற்றில் உள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வரும் ஐயாறப்பர் விண்ணை அறுத்துச் செல்லும் பிறை மதியைத் தன் சடையில் சூடியுள்ளார். இவருக்கு அபிடேகம் செய்வதற்கு ஏழுவிதமான தேன், நெய், பால், தயிர், இளநீர், கரும்பின் தெளிந்த சாறு முதலியன உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. நெய், பால், தயிர், பசுவின் கோமியம், கோசலம் ஆகியவைகளை ஆனைந்து என்றும் வழங்கும் பெயராலும் அபிடேகம் செய்வர். அவனுடைய சக்தியாகிய உமாதேவியாரும் அவனை விட்டுப் பிரியாது அவன் அருகிலேயே இருப்பவள். ஒரு சமயம் கெடிலக்கரை நதிப் பக்கம் இருந்து ஒரு மதம் பிடித்த வெம்மையோடு விளங்கும் யானை ஒன்று இவர்கள் இருவரையும் நோக்கி வேகமாகச் சீற்றத்துடன் வந்தது. அதனைக் கண்டவுடன் உமையம்மை சிறிது அஞ்சினாள். மறுகணத்தில் ஐயாறப்பராகிய சிவபிரான் அந்த யானையை நோக்கிச் சென்று, அதனைக் கொன்று அதன் தோலை உரித்துத் தனது உடலில் போர்த்துக் கொண்டார். அம்மையின் அச்சம் அகன்றது.

6

எங்கு மாகிநின் றானும் இயல்பறி யப்படாமங்கை பாகங்கொண் டானும் மதிசூடு மைந்தனும்பங்க மில்பதி னெட்டொடு நான்குக் குணர்வுமாய்அங்கம் ஆறுஞ்சொன் னானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
எங்கும்ஆகி நின்றானும், இயல்பு அறியப்படாமங்கை பாகம் கொண்டானும், மதி சூடும் மைந்தனும்,பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வும்ஆய்அங்கம் ஆறும் சொன்னானும் - ஐயாறு உடை ஐயனே.
உரை

திருவையாற்றில் வீற்றிருக்கும் ஐயாறப்பராகிய சிவபிரான் அண்டசராசரங்கள் யாவற்றிலும் வியாபித்து விளங்குபவன். இந்தப் பேரியல்பை ஆன்மாக்களால் அறியப்படாதவனாயும் விளங்குகிறான். உமாதேவியைச் சிவபிரான்தன் உடம்பின் இடப்பக்கத்தில் ஒரு பாகமாக வைத்துக் காட்சி அளிக்கிறான். அவன் தன் சடாமுடியில் வெண்நிறமுள்ள பிறைச் சந்திரனைச் சூடியுள்ளான். இந்தச் சிவபிரானால் சொல்லப்பட்டது பதினெட்டுப் புராணங்கள். அவை மச்சபுராணம், கூர்மபுராணம்,வராக புராணம், வாமனபுராணம், சிவமகாபுராணம், இலிங்கபுராணம், பவிடிய புராணம், காந்தபுராணம், மார்க்கண்டேய புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், கருடபுராணம், நாரதீய புராணம், பிரமபுராணம், பதுமபுராணம், ஆக்கினேய புராணம், பிரமவைவர்த்த புராணம் ஆகியனவாகும். ருக், யசூர், சாம மற்றும் அதர்வண வேதம் என வேதங்கள் நான்காகும். மலம் அகற்றற் பொருட்டு உயிரினிடத்து நிலைபெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத் தெளிய ஓதுகின்ற அபரஞானமாகிய சிவாகமங்களும். சிட்சை, வியாகரணம்,சந்தம், நிருத்தம், சோதிடம்,கற்பம் என வேதாங்கங்கள் ஆறும் ஆக இந்த 30 கலைகளையும் சொன்னவர் சிவபிரானாகிய திருவையாற்றில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஐயாறப்பர் ஆவார்.

7

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம்சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்வேதியாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்ஆதி யாகி நின்றானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
ஓதி யாரும் அறிவார் இலை; ஓதி உலகுஎலாம்சோதிஆய் நிறைந்தான்; சுடர்ச்சோதியுள் சோதியான்;வேதிஆகி, விண்ஆகி, மண்ணோடு எரி காற்றும்ஆய்,ஆதிஆகி,நின்றானும் ஐயாறு உடை ஐயனே.
உரை

திருவையாற்றிலுள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்ற சிவபிரான் ஆகிய ஐயாறப்பரை நூல்கள் ஓதுவதனால் அறிபவர் ஒருவரும் இலர். எல்லா உயிர்களுக்கும் ஓதி அறிவிப்பவர் அவரே. எல்லா உயிர்களையும் தானாகவே அறிபவர் அவரேயாவார். எல்லா உலகங்களிலும் அவர் சோதியாய் நிறைந்துள்ளார். சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய சுடர்களுக்கெல்லாம் ஒளி தருபவர் அவரே. நான்கு வேதங்களையும் உலகுக்கு அளித்தவர் அவரே. அவர்தான் விண்ணாகவும், மண்ணோடு நெருப்பும் காற்றுமாகவும், யாவற்றுக்கும் ஆதியாக நின்றவரும் திருவையாற்றில் உள்ள ஐயாறப்பரே ஆவார்.

8

குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி பாடுசெய்விரவி நீறணி வார்சில தொண்டர் வியப்பவே.பரவி நாடொறும் பாடநம் பாவம் பறைதலால்அரவ மார்த்துகந் தானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
குரவநாள்மலர் கொண்டு அடியார் வழிபாடுசெய்,விரவி நீறு அணிவார் சிலதொண்டர் வியப்பவே,பரவி நாள்தொறும் பாட, நம் பாவம் பறைதலால்,அரவம் ஆர்த்து உகந்தானும் - ஐயாறு உடை ஐயனே.
உரை

திருவையாற்றுத் திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஐயாரப்பரை அடியார்கள் பலரும் பலவிதமாக வழிபாடு செய்து வருகிறார்கள். அடியார்களில் ஒருசிலர் குரா மரத்தின் அன்றலர்ந்த பூக்களைப் பறித்து ஐயாரப்பரின் திருவடிகளில் சொரிந்து வழிபாடு செய்கிறார்கள். இவர் உடம்பு முழுவதும் நீறணிந்து இறைவன் திருமுன்பு நின்று வழிபாடு செய்கிறார்கள். மற்றும் சிலர் அவன்திரு முன்பு நின்று அவன் புகழைப் பாடுவதையே கடமையாகக் கொண்டு நீண்ட நேரம் நாள்தோறும் பாடிக் கொண்டே இருப்பார்கள். இந்த அடியார்களுடைய பாவத்தை எல்லாம் அறவே நீக்கி அருள்பாலித்து வருகிறார் ஐயாறப்பர். அவர் பாம்பை அணிந்து உயர்ந்தவர்.

9

உரைசெய் தொல்வழி செய்தறி யாஇலங் கைக்குமன்வரைசெய் தோளடர்த் தும்மதி சூடிய மைந்தனார்கரைசெய் காவிரி யின்வட பாலது காதலான்அரைசெய் மேகலை யானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
உரைசெய் தொல் வழி செய்து அறியா இலங்கைக்கு மன்வரை செய் தோள் அடர்த்து(ம்) மதி சூடிய மைந்தனார்;கரைசெய் காவிரியின் வடபாலது காதலான்;அரை செய் மேகலையானும் - ஐயாறு உடை ஐயனே.
உரை

இலங்காபுரியின் முடிஅரசனாகிய தசக்கிரீவன், மிக்க சிவபக்தனாகிப் பூமி, அந்தரம், சுவர்க்கம் ஆகிய மூன்று உலகங்களுக்கும் அதிபதி (திரிலோகாதிபதி). அதற்குரிய தொன்மையான வேத ஆகம வழிகளையெல்லாம் அறிந்து அதன்வழி நின்று நடந்தவன். அவனுக்கு இந்த வழிகள் எல்லாம் புது வழியன்று. மிகத் தொன்மையான பழைய வழிகளே ஆகும். இத்தனை சிறந்த அறிவுகளை உடைய தசக்கிரீவனுக்கு அறியாமை மேலிட்டது. மேலிட்ட காலத்தில் இந்தத் தொன்மையான வழிகளையெல்லாம் மறந்து விட்டான். ஒரு சமயம் விண்வழியே அவன் தன் ஊர்தியில் செல்லும்போது, சிவபிரானும் அம்மையும் தங்கியிருக்கும் திருக்கயிலை மலைவழியே அவன் ஊர்தி பறக்க முடியவில்லை.   அவன் உடனே கீழே இறங்கி கயிலை மலையைத் தூக்கி நகர்த்தி வைக்க முயற்சி செய்தான்.முயற்சியில் தோற்றான். தனது இருபது தோள்களுடன் கயிலை மலையின்கீழ் அகப்பட்டு நசுங்கிப் போனான். அழுதான்; அறியாமை நீங்கிற்று. சிவபிரான்மீது சாமகீதம் பாடினான். மன்னிப்புக் கிடைத்தது. இராவணன் என்ற திருநாமத்தையும் மேலும் பலவரங்களையும் பெற்றான். இந்த உதவிகளைச் செய்த வீரனாகிய சிவபிரானாகிய ஐயாறப்பர், தனது இடுப்பில் பொன்னாலாகிய மேகலை என்ற ஆபரணத்தை அணிந்து கொண்டு காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் வீற்றிருந்து அடியார்களுக்கெல்லாம் அருள்புரிந்து வருகின்றார்.

10

மாலுஞ் சோதி மலரானும் அறிகிலா வாய்மையான்காலங் காம்பு வயிரங் கடிகையன் பொற்கழல்கோல மாய்க்கொழுந் தீன்று பவளந் திரண்டதோர்ஆல நீழ லுளானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
மாலும், சோதி மலரானும், அறிகிலா வாய்மையான்;காலம் காம்பு வயிரம் கடிகையன் பொன்கழல்;கோலம்ஆய்க் கொழுந்து ஈன்று பவளம் திரண்டது ஓர்ஆலநீழல் உளானும் ஐயாறு உடை ஐயனே.
உரை

திருவையாற்றின் திருக்கோவில் வீற்றிருக்கும் சிவபிரானாகிய ஐயாறப்பர் திருமாலும், பிரமனும் அடிமுடி தேடியும் அறிய முடியாத பெருமை உடையவர். சிறப்பான ஆடையை அணிந்தவன். அவனுடைய திருவடிகளில் பொன்னால் ஆய அணிகலன்களை அணிந்தவன். பவள நிறத்தை ஒத்த சிவந்த ஒளியை வீசிக் கொண்டிருக்கின்றான். கல்லால மரத்தின் நிழலில் இருந்து நான்கு முனிவர்களுக்கு அவர்கள் கேட்ட சந்தேகங்களை மௌனமாக இருந்து கைமுத்திரைகளினால் பதில் அளித்து அவர்களுக்குத் திருப்தி அளித்தவன். இத்தகைய பெருமான்தான் திருவையாற்றுத் திருக்கோவிலை இடமாகக் கொண்டு அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றான்.

11

கையி லுண்டுழல் வாருங் கமழ்துவ ராடையால்மெய்யைப் போர்த்துழல் வாரும் உரைப்பன மெய்யலமைகொள் கண்டத் தெண்டோள் முக்கணான் கழல் வாழ்த்தவேஐயந் தேர்ந்தளிப் பானும் ஐயாறுடை ஐயனே.
சொற்பிரிப்பு
கையில் உண்டு உழல்வாரும், கமழ் துவர் ஆடையால்மெய்யைப் போர்த்து உழல்வாரும், உரைப்பன மெய் அல;மை கொள் கண்டத்து எண்தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே,ஐயம் தேர்ந்து அளிப்பானும் - ஐயாறு உடை ஐயனே.
உரை

சமணர்கள் தங்கள் கைகளில் உணவை ஏந்தி உண்ணும் தன்மை உடையவர்கள். புத்தர்கள் பவளம் போன்ற நாற்றம் வீசும் பழுப்பேறிய ஆடையால் உடல் முழுவதையும் போர்த்திக் கொண்டுள்ளவர்கள். இவர்கள் வேற்று நெறியினர். இவர்கள் உரைப்பன எல்லாம் பொய்யென்று கருதிச் சிவனடியார்கள் அவர்களைப் பின்பற்ற மாட்டார்கள். சிவபிரான் மைபோன்ற கரிய கண்டத்தைக் கொண்டவன். அவனே திருநீலகண்டனாக விளங்குகின்றான். அவன் எட்டுத் தோள்களை உடையவன். மூன்று கண்களைக் கொண்டுள்ளவன். அவனுடைய திருவடிகளைப் போற்றி வழிபாடு செய்யும் அடியார்களின் ஐயங்களைத் தீர்த்துத் தெளிவு செய்பவன் அவனே. அத்தகைய சிறப்புடைய சிவபெருமான் திருவையாறு என்று கூறப்படும் ஊரைத் தனது இடமாகக் கொண்டுள்ள தலைவனாவான்.

12

பலிதி ரிந்துழல் பண்டங்கன் மேயஐ யாற்றினைக்கலிக டிந்தகை யான்கடற் காழியர் காவலன்ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ் பத்தும்வல் லார்கள்போய்மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு வார்களே.
சொற்பிரிப்பு
பலி திரிந்து உழல் பண்டங்கன் மேய ஐயாற்றினை,கலி கடந்த கையான் - கடல்காழியர் காவலன்,ஒலி கொள் சம்பந்தன் - ஒண்தமிழ்பத்தும் வல்லார்கள், போய்மலி கொள் விண்இடை மன்னிய சீர் பெறுவார்களே.சுவாமி : ஐயாறப்பர்;அம்பாள் : அறம்வளர்த்த நாயகி.
உரை

திருவையாற்றில் உள்ள திருக்கோவிலில் இருந்து அருளாட்சி செய்துவரும் சிவபிரான் ஆகிய திருவையாறப்பர் பண்டரங்கம் என்று சொல்லப்படும் திருக்கூத்தை ஆடிக் கொண்டு அண்டசராசரங்களில் எல்லாம் சென்று பலி ஏற்று வருகிறார். சீகாழிப்பதியில் வாழும் அந்தணர்கள் தங்கள் இன்னல்கள் யாவும் நீங்குவதற்காக வேதம் ஓதிக் கொண்டும், யாகம் வளர்த்துக் கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வூரின்கண் தோன்றிய ஞானசம்பந்தன் இப்பதியின் அறக்காவலனாகிய சிவபிரான் நாமத்தைச் சந்தம் மல்க ஒலிக்கப் பாடுகின்றான். அவன் இந்த ஒளி மிக்க சிவஞானத் தமிழ்த் திருப்பதிகத்தை ஐயாறப்பர்மீது வாழ்த்திப் பாடியுள்ளான். இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வளம் மிக்க விண்ணவர் உலகத்தில் சிறப்பான புகழைப் பெறுவார்கள்.