திருமுறை 2 · 2.004 · 11

திருவான்மியூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
வான்மியூர்
நாடு
தொண்டைநாடு

1

கரையு லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன்திரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர்உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர்வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே.
சொற்பிரிப்பு
கரை உலாம் கடலில் பொலி சங்கம் வெள் இப்பி வன்திரை உலாம் கழி மீன் உகளும் திரு வான்மியூர்உரை உலாம் பொருள்ஆய் உலகு ஆள் உடையீர்! சொலீர்வரை உலாம் மட மாது உடன்ஆகிய மாண்புஅதே?
உரை

கடலின் கண் விளங்குவது சங்குகளும், வெண்ணிறமான சிப்பிகளும் ஆகும். அவை கரையில் வந்து உலாவுமாறு அலைகள் வீசுகின்றன. அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்களும் பிறழ்கின்றன. அத்தகைய தலம் திருவான்மியூர். அங்கே எல்லோராலும் புகழப்படும் பொருளாய் விளங்கும் இறைவரே! உலகம் அனைத்தையும் ஆட்சி புரிபவரே! மலைமாது எனப்படுபவள் பார்வதி தேவி. அவளை ஓர் உடலில் உடனாகக் கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

2

சந்து யர்ந்தெழு காரகில் தண்புனல் கொண்டுதம்சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச்சுந்த ரக்கழல் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர்அந்தி யின்னொளி யின்நிற மாக்கிய வண்ணமே.
சொற்பிரிப்பு
சந்து உயர்ந்து எழு கார் அகில் தண்புனல் கொண்டு, தம்சிந்தை செய்த அடியார் பரவும் திருவான்மியூர்,சுந்தரக்கழல்மேல் சிலம்பு ஆர்க்க வல்லீர்! சொலீர்அந்தியின்(ன்) ஒளியின் நிறம் ஆக்கிய வண்ணமே?
உரை

திருவான்மியூரில் அடியார்கள் சந்தனமும் உயர்ந்து வளர்ந்த கரிய அகிலும், குளிர்ந்த அபிடேகத் தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்டு வந்து தியானம் புரிந்து ஆட்டுவர். தமது சிந்தையில் இறைவரை நினைந்து பரவுவர். அத்தகைய தலம் திருவான்மியூர். அங்கே வலது திருவடியில் அழகிய கழல் அணிந்துள்ளீர். இடது திருவடியில் சிலம்பு விளங்குகிறது. இவை ஆரவாரிக்கும் திருவடிகளை உடையவரே! மாலை அந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம் யாதோ? சொல்வீராக.

3

கான யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம்தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த்தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர்ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே.
சொற்பிரிப்பு
கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின் புறம்தேன் அயங்கிய பைம்பொழில் சூழ் திரு வான்மியூர்,தோல் நயங்கு அமர் ஆடை யினீர்! அடிகேள்! சொலீர்ஆனை அங்க(வ்) உரி போர்த்து, அனல் ஆட உகந்ததே?
உரை

திருவான்மியூரின் கடற்கரைகளில் சோலையும் உப்பங்கழிகளும் சூழ்ந்து விளங்குகின்றன. அதன் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்களும் சூழ்ந்து விளங்கும். அங்கு புலித்தோலை ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே. நீர் யானையின் தோலை உரித்துப் போர்த்தியும் கையில் நெருப்பை வைத்துக் கொண்டும் ஆடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.

4

மஞ்சு லாவிய மாட மதிற்பொலி மாளிகைச்செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த்துஞ்சு வஞ்சிரு ளாடலு கக்கவல் லீர்சொலீர்வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே.
சொற்பிரிப்பு
மஞ்சு உலாவிய மாட மதில் பொலி மாளிகைச்செஞ்சொலாளர்கள் தாம் பயிலும் திரு வான்மியூர்,துஞ்சு அஞ்சு இருள் ஆடல் உகக்க வல்லீர்! சொலீர் - வஞ்ச நஞ்சு உண்டு, வானவர்க்கு இன்அருள் வைத்ததே?
உரை

திருவான்மியூரில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வு மேகங்கள் தங்கும் அளவினதாயிருந்தது. மதில்களையும், அழகிய மாளிகைகளையும் கொண்டது. இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாய் விளங்குவது. எல்லாரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி மேற்கொள்ளுபவரே! வன்மையை உடையவராய் இலங்கும் இறைவனே! கரிய விடத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர்.

5

மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.
சொற்பிரிப்பு
மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்திண்ணெனப் புரிசைத் தொழில் ஆர்திரு வான்மியூர்,துண்ணெனத் திரியும் சரிதைத் தொழிலீர்! சொலீர் - விண்ணினில் பிறை செஞ்சடை வைத்த வியப்புஅதே?
உரை

திருவான்மியூர் மங்கையர் கற்பு முதலியவற்றாலும் சிவபத்தியாலும் உலகம் புகழப் பெற்றிருந்தனர். அவ்வூர் மதில் உறுதியும் வேலைப்பாடும் நிறைந்தது. எல்லாரும் வியப்படையும் வண்ணம் பலியேற்கச் செல்லும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே! நீர் வானத்தில் விளங்கும் வெண்பிறையை உம் செஞ்சடைமேல் வைத்துள்ளீர். அவ்வியப்புடைய செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக.

6

போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறந்தீதில் அந்தணர் ஓத்தொழி யாத்திரு வான்மியூர்ச்சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.
சொற்பிரிப்பு
போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப் புறம்தீதுஇல் அந்தணர் ஓத்து ஒழியாத் திரு வான்மியூர்,சூது உலாவிய கொங்கை ஒர் பங்கு உடையீர்! சொலீர் - மூதெயில்(ல்) ஒருமூன்று எரியூட்டிய மொய்ம்பு அதே?
உரை

மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்தது. மதில்களைப் புறத்தே உடையது. வேதபாடசாலை, வீடு, சத்திரம் முதலியவற்றில், மாசற்ற அந்தணர்கள் வேதங்களை நிறுத்தாமல் அத்தியாயனம் செய்து வரும் சிறப்புடையது திருவான்மியூர். அத்தகைய திருவான்மியூரில், சூதாடு கருவி போல வடிவத்தை உடைய தனங்களைக் கொண்ட பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளி இருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச் செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

7

வண்டி ரைத்த தடம்பொழி லின்நிழற் கானல்வாய்த்தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே.
சொற்பிரிப்பு
வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல் கானல்வாய்த்தெண்திரைக் கடல் ஓதம் மல்கும் திரு வான்மியூர்,தொண்டு இரைத்து எழுந்து ஏத்திய தொல்கழலீர்! சொலீர்பண்டு இருக்கு ஒருநால்வர்க்கு நீர் உரைசெய்ததே?
உரை

திருவான்மியூரைச் சுற்றி வண்டுகள் ஒலிக்கின்ற பெரிய சோலைகள் உள்ளன.  அதன் நிழலிலும், கானலிலும் தெளிந்த அலைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. அங்கே அடியவர்கள் சிவநாமங்களைச் சொல்லித் துதிப்பர். பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே நீர் சனகாதியர் நால்வருக்கு (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) மட்டும் சிவஞானத்தை உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.

8

தக்கில் வந்த தசக்கிரி வன்தலை பத்திறத்திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.
சொற்பிரிப்பு
தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்திக்கில் வந்து அலற(வ்) அடர்த்தீர்! திரு வான்மியூர்த்தொக்க மாதொடும் வீற்றிருந்தீர்! அருள் என்? சொலீர்பக்கமே பலபாரிடம் பேய்கள் பயின்றதே?
உரை

இலங்கை மன்னனாகிய இராவணன் தகுதியற்ற நெறியில் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டான். அவன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டன. தலைகள் கயிலையின்கீழ் நசுக்கப்பட்டபோது அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு இணைந்த உமையம்மையாரோடும் வீற்றிருந்து அருளியவரே! பல பூதகணங்களும், பேய்க் கணங்களும் உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.

9

பொருது வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்சுருதி யாரிரு வர்க்கும் அறிவரி யீர்சொலீர்எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே.
சொற்பிரிப்பு
பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்திரிதரும் புகழ் செல்வம் மல்கும் திரு வான்மியூர்,சுருதியார் இருவர்க்கும் அறிவு அரியீர்! சொலீர்எருதுமேற்கொடு உழன்று, உகந்து இல் பலி ஏற்றதே?
உரை

பெரிய கடல் எட்டுத் திசைகளில் இருந்தும் முத்து, பவளங்களைக் கொண்டு வந்து தரும். அவ்வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்தது திருவான்மியூர். அங்கே வேதங்களை ஓதி திருமாலும் பிரமனும் மகிழ்வர். அந்த இருவர்க்கும் அறிதற்கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல் ஏறி உழன்று பல இடங்கட்கும் செல்வீர். மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.

10

மைத ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே.
சொற்பிரிப்பு
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டுஇனம்செய் தவத்தொழிலார் இசை சேர் திரு வான்மியூர்மெய் தவப் பொடி பூசிய மேனியினீர்! சொலீர் - கைதவச் சமண்சாக்கியர் கட்டுரைக்கின்றதே?
உரை

திருவான்மியூரில் கரிய மேகங்களால் சூழப்பட்ட சோலைகள் உள்ளன. மாலை நேரத்தில் இச்சோலைகளை நோக்கி வண்டுகள் கூட்டம் கூட்டமாக ரீங்காரம் செய்து கொண்டு சோலைப்பூக்களில் உள்ள தேனைக் குடிக்க வருகின்றன. இந்த வண்டுகளின் ரீங்காரம் அந்தணர்கள் இராகத்தோடு வேதங்களை ஓதிக்கொண்டிருக்கும் ஓசையுடன் கலந்து அவைகளும் இசைபாடுவது போல் தோன்றுகிறது. மேனிமீது மிகுதியாக வெண்பொடி அணிந்த திருமேனியை உடைய சிவபெருமானே! வஞ்சனையை உடைய சமணர், சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப் பழித்துரைக்கக் காரணம் யாதோ? கூறுவீர்.

11

மாதொர் கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரைஓதி யன்றெழு காழியுள் ஞானசம் பந்தன்சொல்நீதி யால்நினை வார்நெடு வானுல காள்வரே.
சொற்பிரிப்பு
மாது ஓர் கூறுஉடை நல்-தவனைத் திரு வான்மியூர்ஆதிஎம்பெருமான் அருள்செய்ய, வினாஉரைஓதி, அன்று எழு காழியுள் ஞானசம்பந்தன் சொல்நீதியால் நினைவார் நெடுவான் உலகு ஆள்வரே.சுவாமி : மருந்தீசுவரர்;அம்பாள் : சொக்கநாயகி.
உரை

திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய சிவபிரான் உமையம்மையைத் தமது உடம்பில் ஒரு கூறாக உடையவர். நல்ல தவத்தின் வடிவானவர். அவர் அருளிச் செய்தற் பொருட்டு வினாவி இதனை ஓதினார் ஞான சம்பந்தர். ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்தது காழிப்பதி. அதனுள் தோன்றியவன் ஞான சம்பந்தன். அவன் சொல்லால் எழுந்தது இப்பதிகம். இதனை முறையோடு ஓதி நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.