திருமுறை 2 · 2.003 · 11

திருத்தெளிச்சேரி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
தெளிச்சேரி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பூவ லர்ந்தன கொண்டுமுப் போதுமும் பொற்கழல்தேவர் வந்து வணங்கு மிகுதெளிச் சேரியீர்மேவ ருந்தொழி லாளொடு கேழற்பின் வேடனாம்பாவ கங்கொடு நின்றது போலுநும் பான்மையே.
சொற்பிரிப்பு
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம் பொன்கழல்தேவர் வந்து வணங்கும் மிகு தெளிச்சேரியீர்!மேவரும் தொழிலாளொடு கேழல்பின் வேடன்ஆம்பாவகம்கொடு நின்றதுபோலும், நும் பான்மையே?
உரை

அலர்ந்தனவான பூக்கள்! அவற்றைக் கொண்டு மூன்று வேளைகளிலும் அருச்சித்துத் தேவர்கள் வந்து வழிபடுவர். அத்தகு புகழ்மிக்க திருத்தெளிச்சேரியில் விளங்கும் இறைவரே! யாவராலும் செய்தற்கரிய செயல்களைப் புரிபவள் உமையம்மை. நீர் பொய்வேடந் தரித்து அம்மையையும் வேடச்சியாக வேடந்தரிக்கச் செய்து பன்றியின் பின் வேடர்களாகச் சென்றது உம் பெருமைக்கு ஏற்ற செயலாகுமா?

2

விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவ ரேத்தவேதிளைக்குந் தீர்த்த மறாத திகழ்தெளிச் சேரியீர்வளைக்குந் திண்சிலை மேலைந்து பாணமுந் தானெய்துகளிக்குங் காமனை யெங்ஙனம் நீர்கண்ணிற் காய்ந்ததே.
சொற்பிரிப்பு
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே,திளைக்கும் தீர்த்தம் அறாத திகழ் தெளிச்சேரியீர்!வளைக்கும் திண் சிலைமேல் ஐந்துபாணமும் தான் எய்து,களிக்கும் காமனை எங்ஙனம் நீர் கண்ணின் காய்ந்ததே?
உரை

பக்தியை விளைத்தீர்! விண்ணவரும் மண்ணவரும் உம்மை வழிபட வருவர். அவர் திளைத்து மூழ்கும் தீர்த்தம் விளங்கும் திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே !  வளைந்த வரிய வில்லில் ஐந்து மலர்களைப் பாணமாக உம்மீது எய்து களிப்புற்றான் மன்மதன். நீர் அவனை நெற்றிக்கண்ணினால் எரித்தது ஏன்?

3

வம்ப டுத்தமலர்ப் பொழில் சூழமதி தவழ்செம்ப டுத்தசெழும் புரிசைத் தெளிச் சேரியீர்கொம்ப டுத்ததொர் கோல விடைமிசை கூர்மையோடம்ப டுத்தகண் ணாளொடு மேவல் அழகிதே.
சொற்பிரிப்பு
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி தவழ்செம்பு அடுத்த செழும் புரிசைத் தெளிச்சேரியீர்!கொம்பு அடுத்தது ஒர் கோல விடைமிசை, கூர்மையோடுஅம்பு அடுத்த கண்ணாளொடு மேவல் அழகிதே?
உரை

மணம் பொருந்திய மலர்களை உடையன பொழில்கள். அவற்றால் சூழப்பெற்றது திருத்தெளிச்சேரி. மேலும் செம்பினை உருக்கி வார்த்துச் செய்த மதில்கள் சூழ்ந்தும் விளங்குகிறது. அங்கு எழுந்து அருளிய இறைவரே! கூரிய அம்புகளைப் போன்ற கண்களை உடையவள் பார்வதிதேவியார். அவளோடு, கொம்புகளை உடைய அழகிய விடைமீது மேவி வருவது அழகு தரும் செயலாகுமா?

4

காரு லாங்கட லிப்பிகள் முத்தங் கரைப்பெயும்தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியேவாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே.
சொற்பிரிப்பு
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம் கரைப் பெயும்தேர் உலாம் நெடுவீதிஅது ஆர் தெளிச்சேரியீர்!ஏர் உலாம் பலிக்கு ஏகிட, வைப்புஇடம் இன்றியேவார் உலாம் முலையாளை ஒர் பாகத்து வைத்ததே?
உரை

நீர் முகந்து செல்லும் மேகங்கள் உலவுவது கடலுக்கு மேல் உள்ள வெளி. முத்துச் சிப்பிகளையும், முத்துக்களையும் கடல் அலைகள் கரையில் கொண்டு வந்து சேர்க்கின்றன.தேர் உலாவும் நீண்ட வீதிகளையும் உடையது திருத்தெளிச்சேரி. அங்கு விளங்கும் இறைவரே! எழுச்சி மிக்கவராய்ப் பலியேற்கச் செல்கின்றீர் நீர். கச்சணிந்த தனபாரங்களை உடையவள் உமையம்மை. அவளைப் பாதுகாப்பாக வைத்துச் செல்லுதற்கு வேறு இடமில்லையோ? உமது திருமேனியில் ஒருபாகமாக வைத்துக் கொண்டு அர்த்தநாரீச்சுவரராகக் காட்சியளிப்பது அழகாகுமோ?

5

பக்க நுந்தமைப் பார்ப்பதி யேத்திமுன் பாவிக்கும்செக்கர் மாமதி சேர்மதில் சூழ்தெளிச் சேரியீர்மைக்கொள் கண்ணியர் கைவளை மால்செய்து வௌவவேநக்க ராயுல கெங்கும் பலிக்கு நடப்பதே.
சொற்பிரிப்பு
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன் பாவிக்கும்செக்கர் மா மதி சேர் மதில் சூழ் தெளிச்சேரியீர்!மைக் கொள் கண்ணியர் கைவளை மால் செய்து வெளவவே,நக்கராய் உலகு எங்கும்பலிக்கு நடப்பதே?
உரை

உம்மை ஒரு பாகமாக உள்ளவள் பார்வதி தேவி. அவள் எக்காலத்திலும் உம்மைத் துதித்து, தன் உள்ளத்தே பாவித்து வழிபடுகின்றாள். செவ்வானத்தில் தோன்றும் பூரணச் சந்திர ஒளி மதில்மேல்படும் தலமாகிய இத்திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! ஆடையின்றிப் பல இடங்களுக்கும் நடந்து சென்று பலி ஏற்றதற்குக் காரணம், தாருகாவனத்தில் வசிக்கும் மைபூசப்பெற்ற இளம்பெண்களை மயக்கி அவர்களின் கைவளையல்களைக் கவர்வதற்குத் தானோ? சொல்லுவீராக.

6

தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழநல்திவள மாமணி மாடந் திகழ்தெளிச் சேரியீர்குவளை போற்கண்ணி துண்ணென வந்து குறுகியகவள மால்கரி யெங்ஙனம் நீர்கையிற் காய்ந்ததே.
சொற்பிரிப்பு
தவள-வெண்பிறை தோய்தரு தாழ் பொழில் சூழ,நல்திவள மா மணி மாடம் திகழ் தெளிச்சேரியீர்!குவளை போல் கண்ணி துண்ணென, வந்து குறுகியகவள மால்கரி எங்ஙனம் நீர் கையில் காய்ந்ததே?
உரை

திருத்தெளிச்சேரி என்ற ஒரு சிறந்த ஊரில் அருள் செய்து வரும் சிவபெருமானே!  உமது ஊரில் விண்ணில் வெண்மையான பவள நிறத்தை ஒத்த அழகிய சந்திரன் உலவிக் கொண்டிருக்கிறான். மிக உயரமான மரங்களைக் கொண்ட தோட்டங்களின் உச்சியிலும் அழகிய ஒளியினை வீசுகின்ற மணிகளால் இழைக்கப்பட்ட மாட மாளிகைகளின் உச்சியிலும் சந்திரன் தவழ்ந்து செல்லுகின்ற காட்சி மிகவும் அற்புதமானது. இத்துணை சிறந்த நகரில் இருந்து நீர் அடியார்களுக்கு அருள்புரிந்து வருகின்றீர். குவளை மலர் போன்ற கண்களை உடைய உம்முடைய தேவியாகிய உமையம்மையும் நீரும் ஒன்றாக வீற்றிருக்கும் சமயம் கவளம் சாப்பிடுகின்ற ஓர் ஆண் யானை மதமயக்கம் கொண்டு உங்கள் இருவரையும் நோக்கி விரைவாக வந்தது. அந்த யானையைக் கண்டவுடன் அம்மை நடுக்கலுற்றாள். உடனே நீர் யானையின் எதிரே சென்று உமது கைகளால் அழித்து அதன் தோலை உரித்து உமது உடலில்போர்வையாகக் போட்டுக் கொண்டீர். நீர் எவ்வாறு உமது கைகளால் இந்தக் கொடிய வேலையைச் செய்தீர்? சொல்லுவீராக.

7

கோட டுத்த பொழிலின் மிசைக்குயில் கூவிடும்சேட டுத்த தொழிலின் மிகுதெளிச் சேரியீர்மாட டுத்த மலர்க்கண்ணி னாள்கங்கை நங்கையைத்தோட டுத்த மலர்ச்சடை யென்கொல்நீர் சூடிற்றே.
சொற்பிரிப்பு
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்சேடு அடுத்த தொழிலின்மிகு தெளிச்சேரியீர்!மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கைநங்கையைத்தோடு அடுத்த மலர்ச் சடை என்கொல் நீர் சூடிற்றே?
உரை

மரக்கொம்புகள் நிறைந்துள்ள பொழிலின்கண் இசைபாடும் குயில்கள் இருந்து கூவுகின்றன. பெருமையான தொழிலின்கண் ஈடுபட்டோர் மிகுதியாக வாழ்கின்றனர். அத்தகைய திருத்தெளிச்சேரியில் எழுந்தருளிய இறைவரே! செல்வம் நிறைந்தவளும், மலர் போன்று கண்ணினளும் ஆகியவள் கங்கை நங்கை. இதழ்கள் பொருந்திய கொன்றை மலர்கள் அணிந்த சடையின்கண் அவளைச் சூடியது ஏனோ? கூறுவீர்.

8

கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச் சேரியீர்வித்த கப்படை வல்ல அரக்கன் விறல்தலைபத்தி ரட்டிக் கரம்நெரித் திட்டதும் பாதமே.
சொற்பிரிப்பு
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம் சேர்சித்திரக் கொடி மாளிகை சூழ் தெளிச்சேரியீர்!வித்தகப் படை வல்ல அரக்கன் விறல்-தலை,பத்து,- இரட்டிக் கரம், நெரித்திட்டது, உம் பாதமே?
உரை

வண்டுகள் விரிந்த மலர்க் கொத்துக்களைச் சூடிய கூந்தலினள் பார்வதி தேவி. குயில் வடிவம் கொண்டு அவள் வழிபட்ட தலம் திருத்தெளிச்சேரி. ஓவியம் எழுதப்பட்டகொடிகள் கட்டப்பட்ட மாளிகைகள் சூழ்ந்தது அத்தலம். அங்கு வாழும் இறைவரே! தவத்தால் பெற்ற வாள்போரில் வல்லவன் இராவணன். தலைகள் பத்தும் கைகள் இருபதும் கொண்டவன். அவனைக் கால் விரலால் நெரித்தது உம்பாதம் அன்றோ? சொல்லுவீராக.

9

காலெ டுத்த திரைக்கை கரைக்கெறி கானல்சூழ்சேல டுத்த வயற்பழ னத்தெளிச் சேரியீர்மால டித்தல மாமல ரான்முடி தேடியேஓல மிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே.
சொற்பிரிப்பு
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி கானல் சூழ்சேல் அடுத்த வயல் பழனத் தெளிச்சேரியீர்!மால் அடித்தலம், மா மலரான் முடி, தேடியேஓலம் இட்டிட எங்ஙனம் ஓர் உருக் கொண்டதே?
உரை

காற்றால் எடுத்துக் கொணரப் பெறுவது கடலின் திரைகளாகிய கைகள். அவை கரையின்கண் வீசப்பெறும். கடற்கரையில் சோலைகள் சூழ்ந்து விளங்கும். சேல்மீன்கள் தவழும் வயல்களை உடைய மருதநிலம் பொருந்தியுள்ளது. அத்தகைய திருத்தெளிச்சேரியில் உறையும் இறைவனே! திருமால் அடியையும், தாமரை மலரில் உறையும் நான்முகன் முடியையும் தேட முற்பட்டனர். காணாது ஓலம் இட்டனர். நீர் எவ்வாறு ஒப்பற்ற பேருருக் கொண்டீர்? உரைப்பீராக.

10

மந்தி ரந்தரு மாமறை யோர்கள் தவத்தவர்செந்தி லங்கு மொழியவர் சேர்தெளிச் சேரியீர்வெந்த லாகிய சாக்கிய ரோடு சமணர்கள்தந்தி றத்தன நீக்குவித் தீரோர் சதிரரே.
சொற்பிரிப்பு
மந்திரம் தரு மா மறையோர்கள், தவத்தவர்,செந்து இலங்கு மொழியவர், சேர் தெளிச்சேரியீர்வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள்தம் திறத்தன நீக்குவித்தீர்; ஓர் சதிரரே?
உரை

வேத மந்திரங்கள் ஓதுபவர் மறையோர்கள். பெரும் தவத்தை உடையவர்கள். செந்து என்ற பண் போன்ற இனிய மொழி பேசுபவர் மகளிர். அத்தகையோர் வாழும் திருத்தெளிச்சேரியில் உறையும் ஒப்பற்ற சதுரரே! கருநிறங் கொண்ட சாக்கியர்களும் சமணர்களும் பேசும் சமய சிந்தனைகளை எவ்வாறு நீக்குவித்தீர்? அந்தச் சாமர்த்தியம் எவ்வாறு உமக்கு வந்தது? சொல்லுவீராக.

11

திக்கு லாம்பொழில் சூழ்தெளிச் சேரியெஞ் செல்வனைமிக்க காழியுள் ஞானசம் பந்தன் விளம்பியதக்க பாடல்கள் பத்தும்வல் லார்கள் தடமுடித்தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே.
சொற்பிரிப்பு
திக்கு உலாம், பொழில் சூழ், தெளிச்சேரி எம் செல்வனை,மிக்க காழியுள் ஞான சம்பந்தன் விளம்பியதக்க பாடல்கள்பத்தும் வல்லார்கள், தட முடித்தொக்க வானவர் சூழ இருப்பவர், சொல்லிலே.சுவாமி : பார்வதீசுவரர்;அம்பாள் : சத்தியம்மை.
உரை

எட்டுத் திசைகளிலும் பொழில் சூழ்ந்து இலங்கும் திருத்தெளிச்சேரியில் உறையும் எம் செல்வரே! உம்மீது புகழ்மிக்க காழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பதிகம் இதுவே. பத்துப் பாடல்களையும் ஓதவல்லவர்கள் அடையும் பயன் என்ன? பெரிய முடிகளைச் சூடிய வானவர்கள் சூழ்ந்து இருப்பவர்களைச் சுற்றி ஓதவல்லவர்கள் பாடிக்கொண்டே இருப்பார் ஆவர்.