திருமுறை 2 · 2.002 · 11

திருவலஞ்சுழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
வலஞ்சுழி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

விண்டெ லாமலரவ் விரை நாறுதண் டேன்விம்மிவண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
சொற்பிரிப்பு
விண்டு எலாம் மலர(வ்)விரை நாறு தண் தேன் விம்மி,வண்டுஎலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி,தொண்டுஎலாம் பரவும் சுடர் போல் ஒளியீர்! சொலீர்பண்டு எலாம் பலி தேர்ந்து ஒலி பாடல் பயின்றதே?
உரை

திருவலஞ்சுழியில் செழிப்பான சோலைகள் எங்கும் சூழ்ந்து விளங்குகின்றன. அச்சோலைகளில் மலர்கள் மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. அம்மலர்களில் குளிர்ச்சியான தேன் உள்ளன. அத்தேனை உண்ணும் விருப்பினால் வண்டுகள் இசை பாடிக் கொண்டு பூக்களிடம் வந்து சேருகின்றன. இத்துணை செழிப்பான திருவலஞ்சுழியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே! செஞ்சுடர் போன்ற ஒளி உமது திருமேனியில் திகழ்கின்றது. தொண்டர்கள் பலர் உம்மைப் பாடிப் பரவுகின்றனர். முன்பெல்லாம் நீர் இசையோடு பாடல்களைப் பாடியும் உலகெலாம் சுற்றிக் கொண்டு அங்கு வாழும் பெண்களிடமிருந்து பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

2

பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழிமூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.
சொற்பிரிப்பு
பாரல் வெண்குருகும் பகுவாயன நாரையும்வாரல் வெண்திரைவாய் இரை தேரும் வலஞ்சுழிமூரல் வெண்முறுவல் நகு மொய் ஒளியீர்! சொலீர் -ஊரல் வெண்தலை கொண்டு உலகு ஒக்க உழன்றதே?
உரை

திருவலஞ்சுழியில் உள்ள காவிரி நதியில் தண்ணீர் வெண்மையான அலைகளோடு எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. நீளமான கழுத்தினை உடைய கொக்குகளும் பிளவுண்ட வாயை உடைய நாரைகளும், தங்களுடைய இரையை அத்தண்ணீரில் தேடிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவு செழிப்பான திருவலஞ்சுழியில் எழுந்தருளியிருக்கின்ற சிவபெருமானே! புன்னகை புரியும் வெண்மையான பற்களோடு ஒளிச்சுடராய் எழுந்தருளியிருக்கிறீர். இத்தகைய சிறப்பான தோற்றத்தை உடைய நீர், மண்டை ஓட்டை மாலையாக அணிந்து கொண்டு கையில் ஒரு கபாலத்தையும் ஏந்திக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி அங்குள்ள மாதர்களிடமிருந்து பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக!

3

கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.
சொற்பிரிப்பு
கிண்ண வண்ணம் மல்கும் கிளர் தாமரைத் தாது அளாய்வண்ண நுண்மணல்மேல் அனம் வைகும் வலஞ்சுழி,சுண்ணவெண் பொடிக்கொண்டு மெய் பூச வலீர்! சொலீர் -விண்ணவர் தொழ வெண்தலையில் பலி கொண்டதே?
உரை

காவேரி நதியின் கரையில் உள்ள பொடி மணலில் அன்னம் (தாமரைப் பூந்தாதுக்கள் பொருந்திய) தங்கி விளையாடுகின்றன. இவ்வளவு வளமுடைய திருவலஞ்சுழியில் உடம்பெல்லாம் திருநீற்றைப் பூசியவனாய் ஒளி மிகுந்து விளங்குகின்ற சிவபெருமானே! தேவர்கள் அனைவரும் உம்மை வந்து வணங்குகிறார்கள். அவர்களுக்கெல்லாம் தலைமைத் தன்மை கொண்ட சிவபெருமானே! வெள்ளிய தலை ஓட்டை கையில் எடுத்துக்கொண்டு நீர் பலி ஏற்பதற்காக உலகம் முழுவதும் திரிவதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக!

4

கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழிமாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்நாடெ லாம்அறி யத்தலை யின்னற வேற்றதே.
சொற்பிரிப்பு
கோடுஎலாம் நிறையக் குவளை(ம்) மலரும் குழிமாடுஎலாம் மலிநீர் மணம் நாறும் வலஞ்சுழி,சேடுஎலாம் உடையீர்! சிறு மான்மறியீர்! சொலீர்நாடுஎலாம் அறியத் தலையில் நறவு ஏற்றதே?
உரை

திருவலஞ்சுழியில் கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் விளங்கும் தாமரை மலர்கள் நிறைந்த தடாகங்கள் உள்ளன. அந்தப் பூக்கள் பொழிகின்ற தேனைக் குடிப்பதற்கு அன்னங்கள் இத்தடாகத்திற்கு வந்து தாமரை மலர்களைச் சுற்றிச் சுற்றி வந்து தேனைக் குடிக்கின்றன. இவ்வாறு பறந்து சுற்றும் பொழுது அதன் இறகுகள் பூக்களின் உட்பக்கம் உள்ள தாதுக்களில் உராயப்பட்டு இறகுகள் முழுமையும் தாதுக்களால் அணியப்பட்டுள்ளன. இந்த அன்னங்கள் நடமாடும் திருவலஞ்சுழியில் உள்ள குழிகளிலும், குழிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் குவளை மலர்கள் நிறைந்துள்ள சிறுசிறு குட்டைகளில் உள்ள தண்ணீரில் வசிக்கின்றன. அதனால் குவளை மலரின் மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இத்துணை வளமிக்கது திருவலஞ்சுழி. இங்கு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீவீர் சிறிய அழகான மான்குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு யாவரும் வியக்க காட்சி கொடுத்து அருள்வழங்கிக் கொண்டிருக்கிறீர். அவ்வாறு இருந்தும் தலையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு உலகெலாம் சுற்றிவந்து பலிகொள்வது எதற்காக? சொல்லுவீராக.

5

கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிமுல்லை வெண்முறு வல்நகையா ளொளி யீர்சொலீர்சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.
சொற்பிரிப்பு
கொல்லை வென்ற புனத்தின் குரு மா மணி கொண்டு போய்,வல்லை நுண்மணல்மேல் அன்னம் வைகும் வலஞ்சுழி,முல்லை வெண்முறுவல் நகையாள் ஒளியீர்! சொலீர்சில்லை வெண்தலையில் பலி கொண்டு உழல் செல்வமே?
உரை

முல்லை நிலக்காடுகளில் மணிகள் கிடக்கின்றன. அம்மணிகளை எடுத்து வந்த அன்னங்கள் திருவலஞ்சுழியிலுள்ள மணல் பரப்பில் வாழுகின்றன. இவ்வளவு வளமுடையது திருவலஞ்சுழி. முல்லைப் பூப்போன்ற பற்களையும் புன்முறுவலையும் உடைய பார்வதியின் சிவபெருமானே! நீவிர்! ஒளிபோன்று வெண்மை மயமாக விளங்குகின்ற தலையோட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு உலகெலாம் சுற்றி வந்து பலிகொண்டு திரிவதை, இந்தச்சிறுமையான செயலைச் செல்வமாக எண்ணுவது ஏனோ? சொல்லுவீராக

6

பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்ஏச வெண்டலை யிற்பலி கொள்வதி லாமையே.
சொற்பிரிப்பு
பூசம் நீர் பொழியும் புனல் பொன்னியில் பல்மலர்வாசம் நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,தேசம் நீர்; திரு நீர்; சிறு மான்மறியீர்! சொலீர் -ஏச,வெண்தலையில் பலி கொள்வது இலாமையே?
உரை

தை முதல் பன்னிரு மாதங்களின் பூச நன்னாளில் மலரோடு நீர் உருகி வரும் மணம் கமழும் காவிரி நீரில் மூழ்கி நீராடுபவர்களின் துயர்களைத் துடைத்து அருள்பவர் திருவலஞ்சுழியில் உறையும் சிவபெருமானே! நீவீர் சிறிய மான்குட்டியைக் கையில் ஏந்தியுள்ளீர். சிறப்புடைய தோடும் திருவும் உடைய சிவபெருமானே! இறந்தவர்களின் தலையோட்டைக் கையில் ஏந்திக்கொண்டு பலிகொள்வது உமக்கு செல்வமில்லை என்ற வறுமையா என்பதைச் சொல்லுவீராக.

7

கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தழீஇவந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழிஅந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.
சொற்பிரிப்பு
கந்தமாமலர்ச் சந்தொடு கார்அகிலும் தழீஇ,வந்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,அந்தம் நீர், முதல் நீர், நடு ஆம் அடிகேள்! சொலீர்பந்தம் நீர் கருதாது, உலகில் பலி கொள்வதே?
உரை

மணமுள்ள மலர்கள், சந்தன, அகில் மரங்களைத் தாங்கி வருவது காவிரி ஆறு.காவிரியாற்றில் குளிப்பவர்களின் துன்பங்களைத் துடைப்பவர் திருவலஞ்சுழியில் உறையும்சிவபெருமானே! முதலும் நடுவும் முடிவுமாய் விளங்கும் சிவபெருமானே! பலிகொள்வது பற்றை விளைவிப்பது என்று மக்களைப் போல் எண்ணாமல், இறைவரே நீவிர் பலிகொள்வது ஏனோ? சொல்லுவீராக.

8

தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்ஊனுற் றதலை கொண்டுல கொக்கவு ழன்றதே.
சொற்பிரிப்பு
தேன் உற்ற நறுமாமலர்ச் சோலையில் வண்டுஇனம்வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி,கான் உற்ற களிற்றின்(ன்) உரி போர்க்க வல்லீர்! சொலீர்ஊன் உற்ற தலை கொண்டு, உலகு ஒக்க உழன்றதே?
உரை

திருவலஞ்சுழிப்பதி முழுவதும் பெரிய மலர்ச்சோலைகள் செழிப்பாக உள்ளன. அங்கு தேன் நிறைந்துள்ள மலர்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மலர்களில் உள்ள தேனை உண்ண வேண்டும் என்ற ஆசையால் வண்டுகள் கூட்டம் கூட்டமாக உயரிய இசையைப் பாடிக் கொண்டே, மலர்ச்சோலைகளில் புகுந்து பறந்து கொண்டும் பாடிக்கொண்டும் அங்குள்ள மலர்களில் உள்ள தேனைக் குடித்து இசை பாடுவதால் திருவலஞ்சுழியில் இந்த ஓசை ஊரெங்கும் நிலவுகின்றது. இத்துணை சிறந்த திருவலஞ்சுழியில் எழுந்தருளி யிருக்கின்ற சிவபெருமானே! உம்மைக் கொல்ல வந்த காட்டு யானையை எதிர்த்து நின்று அதன் தோலை உரித்து உமது உடலில் போர்த்திக் கொள்ளக் கூடிய அளவிற்கு ஈடுஇணையற்ற மிகுந்த வலிமை உடைய சிவபெருமானே! இத்தனை வலிமை உடையவராக இருந்தும், நீர் ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்திக் கொண்டு உலகெங்கும் சென்று வருவது ஏனோ? சொல்லுவீராக.

9

தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழிஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.
சொற்பிரிப்பு
தீர்த்தநீர் வந்து இழி புனல் பொன்னியில் பல்மலர்வார்த்த நீர் குடைவார் இடர் தீர்க்கும் வலஞ்சுழி,ஆர்த்து வந்த அரக்கனை அன்று அடர்த்தீர்! சொலீர்சீர்த்த வெண்தலையில் பலி கொள்வதும் சீர்மையே?
உரை

திருவலஞ்சுழியில் புனிதமான நீர் ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பலவிதமான மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்கி அங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை உள்ளன்போடு வணங்குகிறார்கள். அவர்களுடைய இடர்களைச் சிவபெருமான் போக்கி அருள்பாலித்து வருகிறார். அக்காலத்தில் இராவணன் தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்துக் கொண்டு நீவிர் வீற்றிருக்கும் கயிலையங்கிரியை அசைத்து அகற்றுவதற்கு முற்பட்டான். அப்பொழுது அவனை அடர்த்திய பெருமைமிகக் கொண்டவரே. இத்துணை பெருமை உடையவராய் இருந்தும் நீர் உமது திருக்கரத்தில் சிறுமை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்று உண்பது உம்பெருமைக்கு அழகோ? சொல்லுவீராக.

10

உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.
சொற்பிரிப்பு
உரம் மனும் சடையீர்! விடையீர்! உமது இன்அருள்வரம் மனும் பெறல்ஆவதும்; எந்தை! வலஞ்சுழிப்பிரமனும் திருமாலும் அளப்ப(அ)ரியீர்! சொலீர்சிரம் எனும் கலனில் பலி வேண்டிய செல்வமே?
உரை

பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே ! நிலையான வரம் பெறுவதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே ! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே,நீர் தலையோடாகிய உண்கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்லுவீராக.

11

வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழிநாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசைபாடும் ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.
சொற்பிரிப்பு
வீடு ஞானமும் வேண்டுதிரேல், விரதங்களால்வாடின் ஞானம் என் ஆவதும்? எந்தை வலஞ்சுழிநாடி,ஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசைபாடும் ஞானம் வல்லார், அடிசேர்வது ஞானமே.சுவாமி : கற்பகநாதேஸ்வரர்; அம்பாள் : பெரிய நாயகி.
உரை

வீடு பெறுதற்கும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெற விரும்புவர்கள், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்து விடாது என்பதை உணருங்கள். எந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளும் திருவலஞ்சுழியை அடைந்து அல்லது மனத்தால் நாடி, வாக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் ஓதி அருளிய செந்தமிழ் பாக்களை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவது ஒன்றே ஞானத்தைத் தருவதாகும் என்று உணர்க.