திருமுறை 12 · 12.071 · 18

பூசலார் நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணிஒன்றும் அங்கு உதவாது ஆக உணர்வினால் எடுக்கும் தன்மைநன்று என மனத்தினாலே நல்ல ஆலயம் தான் செய்தநின்ற ஊர்ப் பூசலார்தம் நினைவினை உரைக்கல் உற்றார்.
சொற்பிரிப்பு
அன்றினார் புரம் எரித்தார்க்கு ஆலயம் எடுக்க எண்ணிஒன்றும் அங்கு உதவாதாக உணர்வினால் எடுக்கும் தன்மைநன்று என மனத்தினாலே நல்ல ஆலயம்தான் செய்தநின்ற ஊர்ப் பூசலார் தம் நினைவினை உரைக்கல் உற்றாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உலகினில் ஒழுக்கம் என்றும் உயர் பெருந் தொண்டை நாட்டுநலமிகு சிறப்பின் மிக்க நான் மறை விளங்கும் மூதூர்குல முதல் சீலம் என்றும் குறைவிலா மறையோர் கொள்கைநிலவிய செல்வம் மல்கி நிகழ் திருநின்ற ஊராம்.
சொற்பிரிப்பு
உலகினில் ஒழுக்கம் என்றும் உயர்பெரும் தொண்டை நாட்டுநலமிகு சிறப்பின் மிக்க நான்மறை விளக்கு மூதூர்குல முதல் சீலம் என்றும் குறைவு இலா மறையோர் கொள்கைநிலவிய செல்வம் மல்கி நிகழ் திரு நின்ற ஊராம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அருமறை மரபு வாழ அப்பதி வந்து சிந்தைதரும் உணர்வான எல்லாம் தம்பிரான் கழல்மேல் சாரவருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ வளர்ந்து வாய்மைப்பொருள் பெறு வேதநீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்.
சொற்பிரிப்பு
அருமறை மரபு வாழ, அப்பதி வந்து சிந்தைதரும் உணர்வு ஆன எல்லாம் தம்பிரான் கழல் மேல் சாரவருநெறி மாறா அன்பு வளர்ந்து எழ, வளர்ந்து, வாய்மைப்பொருள் பெறு வேத நீதிக் கலை உணர் பொலிவின் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றேகொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்துக் கங்கைமடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்எடுப்பது மனத்துக் கொண்டார் இரு நிதி இன்மை எண்ணார்.
சொற்பிரிப்பு
“அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல்” என்றேகொடுப்பது எவ்வகையும் தேடி, அவர் கொளக் கொடுத்தும், கங்கைமடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்எடுப்பது மனத்துக் கொண்டார் இருநிதி இன்மை எண்ணார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடிஎனைத்தும் ஓர் பொருட் பேறு இன்றி என் செய்கேன் என்று நைவார்நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
சொற்பிரிப்பு
மனத்தினால் கருதி எங்கும் மாநிதி வருந்தித் தேடி“எனைத்தும் ஓர் பொருள் பேறு இன்றி என் செய்கேன்” என்று நைவார்நினைப்பினால் எடுக்க நேர்ந்து நிகழ்வுறு நிதியம் எல்லாம்தினைத்துணை முதலாத் தேடிச் சிந்தையால் திரட்டிக் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சாதனத் தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடிநாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நல் நாள் கொண்டேஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து அன்பால்காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்.
சொற்பிரிப்பு
சாதனத்தோடு தச்சர் தம்மையும் மனத்தால் தேடிநாதனுக்கு ஆலயம் செய் நலம் பெறு நன்நாள் கொண்டேஆதரித்து ஆகமத்தால் அடி நிலை பாரித்து அன்பால்காதலில் கங்குல் போதும் கண்படாது எடுக்கல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அடிமுதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மானமுடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டுநெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.
சொற்பிரிப்பு
அடி முதல் உபானம் ஆதி ஆகிய படைகள் எல்லாம்வடிவுறும் தொழில்கள் முற்ற மனத்தினால் வகுத்து மானம்முடிவுறு சிகரம் தானும் முன்னிய முழத்தில் கொண்டுநெடிது நாள் கூடக் கோயில் நிரம்பிட நினைவால் செய்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தூபியும் நட்டு மிக்க சுதையும் நல்வினையும் செய்துகூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கிவாவியும் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து மன்னும்தாபரம் சிவனுக்கு ஏற்க விதித்த நாள் சாரு நாளில்.
சொற்பிரிப்பு
தூபியும் நட்டு மிக்க சுதையு நல் வினையும் செய்துகூவலும் அமைத்து மாடு கோயில் சூழ் மதிலும் போக்கிவாவியும் தொட்டு மற்றும் வேண்டு வகுத்து மன்னும்தாபரம் சிவனுக்கு ஏற்ப விதித்த நாள் சாரும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்றமாடெலாம் சிவனுக்கு ஆகப் பெருஞ் செல்வம் வகுத்தல் செய்வான்நாடமால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன்னாள்ஏடலர் கொன்றை வேய்ந்தார் இரவிடைக் கனவில் எய்தி.
சொற்பிரிப்பு
காடவர் கோமான் கச்சிக் கற்றளி எடுத்து முற்றமாடு எலாம் சிவனுக்கு ஆகப் பெரும் செல்வம் வகுத்தல் செய்வான்நாட மால் அறியாதாரைத் தாபிக்கும் அந்நாள் முன் நாள்ஏடு அலர் கொன்றை வேய்ந்தார் இரவு இடைக் கனவில் எய்தி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நின்றவூர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் நினைந்து செய்தநன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்குஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்றுகொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டருளப் போந்தார்.
சொற்பிரிப்பு
“நின்ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்தநன்று நீடு ஆலயத்து நாளை நாம் புகுவோம் நீ இங்குஒன்றிய செயலை நாளை ஒழிந்து பின் கொள்வாய்” என்றுகொன்றைவார் சடையார் தொண்டர் கோயில் கொண்டு அருளப் போந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத் துயிலை நீங்கித்திண்திறல் மன்னன் அந்தத் திருப்பணி செய்தார் தம்மைகண்டு நான் வணங்க வேண்டும் என்று எழும் காதலோடும்தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான்.
சொற்பிரிப்பு
தொண்டரை விளக்கத் தூயோன் அருள் செயத், துயிலை நீங்கித்திண் திறல் மன்னன் “அந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்கண்டு நான் வணங்க வேண்டும்” என்று எழும் காதலோடும்தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

அப்பதி அணைந்து பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்எப்புடையது என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை என்றார்மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக என்று உரைத்தான் வேந்தன்.
சொற்பிரிப்பு
அப்பதி அணைந்து “பூசல் அன்பர் இங்கு அமைத்த கோயில்எப்புடையது?” என்று அங்கண் எய்தினார் தம்மைக் கேட்கச்“செப்பிய பூசல் கோயில் செய்தது ஒன்று இல்லை” என்றார்மெய்ப் பெரு மறையோர் எல்லாம் வருக” என்று உரைத்தான் வேந்தன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காணமாசிலாப் பூசலார் தாம் யார் என மறையோர் எல்லாம்ஆசில் வேதியன் இவ்வூரான் என்று அவர் அழைக்க ஒட்டான்ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்.
சொற்பிரிப்பு
பூசுரர் எல்லாம் வந்து புரவலன் தன்னைக் காண“மாசு இலாப் பூசலார் தாம் யார்?” என, மறையோர் எல்லாம்“ஆசில் வேதியன் இவ்ஊரான்” என்று அவர் அழைக்க ஒட்டான்ஈசனார் அன்பர் தம்பால் எய்தினான் வெய்ய வேலான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது நீர் இங்குஎண் திசை யோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்குஅண்டர் நாயகரைத் தாபித்து அருளும் நாள் இன்று என்று உம்மைக்கண்டடி பணிய வந்தேன் கண்ணுதல் அருள் பெற்று என்றான்.
சொற்பிரிப்பு
தொண்டரைச் சென்று கண்ட மன்னவன் தொழுது, “நீர் இங்குஎண்டிசையோரும் ஏத்த எடுத்த ஆலயம் தான் யாது இங்கு?அண்டர் நாயகரைத் தாபித்து அருளு நாள் இன்று என்று உம்மைக்கண்டு அடி பணிய வந்தேன் கண் நுதல் அருள் பெற்று” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

மன்னவன் உரைப்பக் கேட்ட அன்பர் தாம் மருண்டு நோக்கிஎன்னையோர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்முன்வரு நிதி இலாமை மனத்தினால் முயன்ற கோயில்இன்னதாம் என்று சிந்தித்து எடுத்தா வாறு எடுத்துச் சொன்னார்.
சொற்பிரிப்பு
மன்னவன் உரைப்பக் கேட்ட, அன்பர் தாம் மருண்டு நோக்கி,“என்னை ஓர் பொருளாக் கொண்டே எம்பிரான் அருள் செய்தாரேல்முன் வரு நிதியிலாமை மனத்தினால் முயன்ற கோயில்இன்னதாம்” என்று சிந்தித்து எடுத்தவாறு எடுத்துச் சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி என்னேபுரையறு சிந்தை அன்பர் பெருமை என்று அவரைப் போற்றிவிரை செறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்துமுரசெறி தானை யோடு மீண்டு தன் மூதூர் புக்கான்.
சொற்பிரிப்பு
அரசனும் அதனைக் கேட்டு அங்கு அதிசயம் எய்தி “என்னே!புரை அறு சிந்தை அன்பர் பெருமை!” என்று அவரைப் போற்றிவிரைசெறி மாலை தாழ நிலமிசை வீழ்ந்து தாழ்ந்துமுரசு எறி தானையோடு மீண்டு தன் மூதூர்ப் புக்கான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மைநன் பெரும் பொழுது சாரத் தாபித்து நலத்தினோடும்பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பல நாள் பேணிப்பொன் புனை மன்றுளாடும் பொற்கழல் நீழல் புக்கார்.
சொற்பிரிப்பு
அன்பரும் அமைத்த சிந்தை ஆலயத்து அரனார் தம்மைநன்பெரும் பொழுது சாரத் தாபித்து, நலத்தினோடும்பின்பு பூசனைகள் எல்லாம் பெருமையில் பலநாள் பேணிப்பொன்புனை மன்றுள் ஆடும் பொன்கழல் நீழல் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

நீண்ட செஞ் சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கிபூண்ட அன்பிடையறாத பூசலார் பொற்றாள் போற்றிஆண்டகை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்.
சொற்பிரிப்பு
நீண்ட செஞ்சடையினார்க்கு நினைப்பினால் கோயில் ஆக்கிப்பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொன்தாள் போற்றிஆண்டகை வளவர் கோமான் உலகு உய்ய அளித்த செல்வப்பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.