திருமுறை 12 · 12.059 · 13

கழற்சிங்க நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்கடிமதில் மூன்றும் செற்ற கங்கைவார் சடையார் செய்யஅடிமலர் அன்றி வேறு ஒன்று அறிவினில் குறியா நீர்மைக்கொடி நெடுந் தானை மன்னர் கோக் கழற்சிங்கர் என்பார்.
சொற்பிரிப்பு
படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்கடிமதில் மூன்றும் செற்ற கங்கை வார் சடையார் செய்யஅடிமலர் அன்றி வேறு ஒன்றும் அறிவினில் குறியா நீர்மைக்கொடிநெடும் தானை மன்னர் கோக் கழற் சிங்கர் என்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கடவார் குரிசி லாராங் கழல் பெருஞ் சிங்கனார் தாம்ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்றுகூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டுநாடற நெறியில் வைக நன்னெறி வளர்க்கும் நாளில்.
சொற்பிரிப்பு
காடவர் குரிசிலாராம் கழற்பெரும்சிங்கனார் தாம்ஆடக மேரு வில்லார் அருளினால் அமரில் சென்றுகூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்து கொண்டுநாடு அறநெறியில் வைக நன்நெறி வளர்க்கும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்றுதவலரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார்சிவபுரி என்ன மன்னும் தென் திருவாரூர் எய்திப்பவம் அறுத்தாட் கொள் வார்தம் கோயிலுள் பணியப் புக்கார்.
சொற்பிரிப்பு
குவலயத்து அரனார் மேவும் கோயில்கள் பலவும் சென்றுதவல் அரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த் தொண்டு செய்வார்சிவபுரி என்ன மன்னும்தென்திரு ஆரூர் எய்திப்பவம் அறுத்து ஆட்கொள்வார் தம் கோயில் உள் பணியப் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

அரசியல் ஆயத் தோடும் அங்கணர் கோயில் உள்ளால்முரசுடைத்தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்விரை செறிமலர் மென் கூந்தல் உரிமை மெல்லியலார் தம்முள்உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒருதனித் தேவி மேவி.
சொற்பிரிப்பு
அரசியல் ஆயத்தோடும் அங்கணர் கோயில் உள்ளால்முரசுடைத் தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்விரை செறி மலர் மென் கூந்தல் உரிமை மெல்லியலார் தம்முள்உரை சிறந்து உயர்ந்த பட்டத்து ஒரு தனித் தேவி மேவி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்சாயல் மா மயிலே போல்வாள் தனித் தனி கண்டு வந்துதூய மென் பள்ளித் தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்மேயதோர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள்.
சொற்பிரிப்பு
கோயிலை வலம் கொண்டு அங்கண் குலவிய பெருமை எல்லாம்சாயல் மா மயிலே போல்வாள்தனித்தனி கண்டு வந்துதூய மென் பள்ளித் தாமம் தொடுக்கு மண்டபத்தின் பாங்கர்மேயது ஓர் புதுப்பூ அங்கு விழுந்தது ஒன்று எடுத்து மோந்தாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்இதுமலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனளாம் என்றுகதும் என ஓடிச்சென்று கருவி கைக் கொண்டு பற்றிமதுமலர் திருவொப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
சொற்பிரிப்பு
புதுமலர் மோந்த போதில் செருத்துணைப் புனிதத் தொண்டர்“இது மலர் திருமுற்றத்துள் எடுத்து மோந்தனளாம்” என்றுகதும் என ஓடிச் சென்று கருவி கைக் கொண்டு பற்றிமதுமலர்த் திரு ஒப்பாள் தன் மூக்கினைப் பிடித்து வார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வார்ந்து இழி குருதி சோர மலர்க் கருங்குழலும் சோரச்சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச் செம்பொன் புற்றுள்ஆர்ந்த பேர் ஒளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார்.
சொற்பிரிப்பு
வார்ந்து இழி குருதி சோர மலர்க் கரும்குழலும் சோரச்சோர்ந்து வீழ்ந்து அரற்றும் தோகை மயில் எனத் துளங்கி மண்ணில்சேர்ந்து அயர்ந்து உரிமைத் தேவி புலம்பிடச், செம்பொன் புற்றுள்ஆர்ந்த பேரொளியைக் கும்பிட்டு அரசரும் அணைய வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்னநொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி இவ்வண்டத்து உள்ளோர்இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார் என்னும் எல்லை.
சொற்பிரிப்பு
வந்து அணைவுற்ற மன்னர் மலர்ந்த கற்பகத்தின் வாசப்பைந்தளிர்ப் பூங்கொம்பு ஒன்று பார்மிசை வீழ்ந்தது என்னநொந்து அழிந்து அரற்றுவாளை நோக்கி ”இவ் அண்டத்து உள்ளோர்இந்த வெவ்வினை அஞ்சாதே யார் செய்தார்?” என்னும் எல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அந்நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர்முன்னுறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்தபோதுமன்னரும் அவரை நோக்கி மற்று இதற்குத் தண்டம்தன்னை அவ்வடைவே அன்றோ தடிந்திடத் தகுவது என்று.
சொற்பிரிப்பு
அந்நிலை அணைய வந்து செருத்துணையாராம் அன்பர்முன் உறு நிலைமை அங்குப் புகுந்தது மொழிந்த போதுமன்னரும் அவரை நோக்கி“மற்று இதற்கு உற்ற தண்டம்தன்னை அவ் அடைவே அன்றோ தடிந்திடத் தகுவது” என்று.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கட்டிய உடைவாள் தன்னை உருவி அக்கமழ் வாசப்பூத்தொட்டு முன் எடுத்த கையாம் முன்படத் துணிப்பது என்றுபட்டமும் அணிந்து காதல் பயில் பெரும் தேவியானமட்டவிழ் குழலாள் செங்கை வளையொடும் துணித்தாரன்றே.
சொற்பிரிப்பு
கட்டிய உடைவாள் தன்னை உருவி” அக்கமழ் வாசப் பூத்தொட்டு முன் எடுத்த கையாம் முற்படத் துணிப்பது” என்றுபட்டமும் அணிந்து காதல் பயில் பெரும் தேவி ஆனமட்டு அவிழ் குழலாள் செங்கை வளையொடும் துணித்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போதுபெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்குஒலி புவிமேல் பொங்கஇரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மிமருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்ததன்றே.
சொற்பிரிப்பு
ஒரு தனித் தேவி செங்கை உடைவாளால் துணித்த போதுபெருகிய தொண்டர் ஆர்ப்பின் பிறங்கு ஒலி புவி மேல் பொங்கஇரு விசும்பு அடைய ஓங்கும் இமையவர் ஆர்ப்பும் விம்மிமருவிய தெய்வ வாச மலர் மழை பொழிந்தது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

அரிய அத் திருத் தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்மருவிய உரிமை தாங்கி மால் அயற்கு அரியார் மன்னும்திருவருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல்பெருகிய உரிமை ஆகும் பேரருள் எய்தினாரே.
சொற்பிரிப்பு
அரிய அத்திருத்தொண்டு ஆற்றும் அரசனார் அளவில் காலம்மருவிய உரிமை தாங்கி மால் அயற்கு அரியார் மன்னும்திருஅருள் சிறப்பினாலே செய்ய சேவடியின் நீழல்பெருகிய உரிமை ஆகும் பேரருள் எய்தினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

வையகம் நிகழக் காதல் மாதேவி தனது செய்யகையினைத் தடிந்த சிங்கர் கழலிணை தொழுது போற்றிஎய்திய பெருமை அன்பர் இடங்கழியார் என்று ஏத்தும்மெய்யருள் உடைய தொண்டர் செய்வினை விளம்பல் உற்றாம்.
சொற்பிரிப்பு
வையகம் நிகழக் காதல் மாதேவி தனது செய்யகையினைத் தடிந்த சிங்கர் கழல் இணை தொழுது போற்றிஎய்திய பெருமை அன்பர் இடங்கழியார் என்று ஏத்தும்மெய் அருள் உடைய தொண்டர் செய்வினை விளம்பல் உற்றாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.