திருமுறை 12 · 12.047 · 41

புகழ்ச்சோழ நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

குலகிரியின் கொடுமுடிமேல் கொடி வேங்கைக் குறி எழுதிநிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்மலர் புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்உலகில் வளர் அணிக்கெல்லாம் உள் உறையூராம் உறையூர்.
சொற்பிரிப்பு
குலகிரியின் கொடுமுடி மேல் கொடி வேங்கைக் குறி எழுதிநிலவு தரு மதிக்குடைக் கீழ் நெடு நிலம் காத்து இனிது அளிக்கும்மலர்புகழ் வண் தமிழ்ச் சோழர் வளநாட்டு மாமூதூர்உலகில் வளர் அணிக்கு எல்லாம் உள்ளுறை ஊராம் உறையூர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணிமணி விளக்கும்இள வெயிலின் சுடர்படலை இரவு ஒழிய எறிப்பனவாய்க்கிளர் ஒளி சேர் நெடு வானப் பேர்யாற்றுக் கொடு கெழுவும்வளர் ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்.
சொற்பிரிப்பு
அளவில் பெரும் புகழ் நகரம் அதனில் அணி மணி விளக்கும்இள வெயிலின் சுடர்ப்ப டலை இரவு ஒழிய எறிப்பனவாய்க்கிளர் ஒளிசேர் நெடுவானப் பேர் ஆற்றுக் கொடி கெழுவும்வளர்ஒளி மாளிகை நிரைகள் மருங்கு உடைய மறுகு எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்தபோகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொருவிறந்த வளத்தினவாய்மாக நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும்ஆகரம் ஒத்து உள அளவில் ஆவண வீதிகள் எல்லாம்.
சொற்பிரிப்பு
நாக தலத்தும் பிலத்தும் நானிலத்தும் நலம் சிறந்தபோகம் அனைத்தினுக்கும் உறுப்பாம் பொரு இறந்த வளத்தினவாய்மாகம் நிறைந்திட மலிந்த வரம்பில் பல பொருள் பிறங்கும்ஆகரம் ஒத்து உள அளவில் ஆவண வீதிகள் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பார் நனைய மதம் பொழிந்து பனி விசும்பு கொள முழங்கும்போர் முக வெம் கறை அடியும் புடையினம் என்று அடையவரும்சோர் மழையின் விடு மதத்துச் சுடரு நெடுமின் ஓடைக்கார் முகிலும் பல தெரியா களிற்று நிரைக் களம் எல்லாம்.
சொற்பிரிப்பு
பார் நனைய மதம் பொழிந்துபனி விசும்பு கொள முழங்கும்போர் முக வெங்கறை அடியும்புடைஇனம் என்று அடைய வரும்சோர் மழையின் விடு மதத்துச்சுடரும் நெடு மின் ஓடைக்கார் முகிலும் பல தெரியாகளிற்று நிரைக் களம் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

படுமணியும் பரிச் செருக்கும் ஒலி கிளரப் பயில் புரவிநெடு நிரை முன் புல்லுண் வாய் நீர்த் தரங்க நுரை நிவப்பவிடு சுடர் மெய் உறை அடுக்கல் முகில் படிய விளங்குதலால்தொடு கடல்கள் அனைய பல துரங்க சாலைகள் எல்லாம்.
சொற்பிரிப்பு
படுமணியும் பரிச்செருக்கும் ஒலிகிளரப் பயில் புரவிநெடுநிரை முன் புல் உண்வாய்நீர்த் தரங்க நுரை நிவப்பவிடுசுடர் மெய் உறை,அடுக்கல் முகில் படிய விளங்குதலால்தொடுகடல்கள் அனைய பலதுரங்க சாலைகள் எல்லாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

துளைக்கை ஐராவதக் களிறும் துரங்க அரசும் திருவும்விளைத்த அமுதும் தருவும் விழுமணியும் கொடுபோதஉளைத்த கடல் இவற்று ஒன்று பெற வேண்டி உம்பரூர்வளைத்தது போன்று உளது அங்கண் மதில் சூழ்ந்த மலர்க் கிடங்கு.
சொற்பிரிப்பு
துளைக்கை ஐராவதக் களிறும்துரங்க அரசும் திருவும்விளைத்த அமுதும் தருவும்விழுமணியும் கொடு போதஉளைத்த கடல் இவற்று ஒன்றுபெற வேண்டி உம்பர் ஊர்வளைத்தது போன்று உளது அங்கண்மதில் சூழ்ந்த மலர்க்கிடங்கு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கார் ஏறும் கோபுரங்கள் கதிர் ஏறும் மலர்ச் சோலைதேர் ஏறும் அணி வீதி திசை ஏறும் வசையில் அணிவார் ஏறு முலை மடவார் மருங்கு ஏறும் மலர்க்கணை ஒண்பார் ஏறும் புகழ் உறந்தைப் பதியின் வளம் பகர்வரிதால்.
சொற்பிரிப்பு
கார் ஏறும் கோபுரங்கள்; கதிர்ஏறும் மலர்ச் சோலை;தேர் ஏறும் அணி வீதி;திசை ஏறும் வசையில் அணி;வார் ஏறும் முலை மடவார்மருங்கு ஏறும் மலர்க்கணை; ஒண்பார் ஏறும் புகழ் உறந்தைப்பதியின் வளம் பகர்வு அரிதால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

அந் நகரில் பார் அளிக்கும் அடல் அரசர் ஆகின்றார்மன்னும் திருத் தில்லை நகர் மணி வீதி அணி விளக்கும்சென்னி நீடு அனபாயன் திருக்குலத்து வழி முதலோர்பொன்னி நதிப் புரவலனார் புகழ்ச் சோழர் எனப் பொலிவார்.
சொற்பிரிப்பு
அந்நகரில் பார் அளிக்கும்அடல் அரசர் ஆகின்றார்மன்னு திருத்தில்லை நகர்மணிவீதி அணி விளக்கும்சென்னி நீடு அனபாயன்திருக்குலத்து வழி முதலோர்பொன்னி நதிப் புரவலனார் புகழ்ச்சோழர் எனப் பொலிவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

ஒரு குடைக் கீழ் மண்மகளை உரிமையினில் மணம் புணர்ந்துபருவரைத் தோள் வென்றியினால் பார் மன்னர் பணி கேட்பத்திருமலர்த்தும் பேருலகும் செங்கோலின் முறை நிற்பஅருமறைச் சைவம் தழைப்ப அரசு அளிக்கும் அந்நாளில்.
சொற்பிரிப்பு
ஒருகுடைக் கீழ் மண்மகளைஉரிமையினில் மணம் புணர்ந்துபருவரைத் தோள் வென்றியினால் பார்மன்னர் பணி கேட்பத்திருமலர்த்தும் பேர் உலகும்செங்கோலின் முறை நிற்பஅருமறைச் சைவம் தழைப்பஅரசு அளிக்கும் அந்நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பிறை வளரும் செஞ் சடையார் பேணும் சிவாலயம் எல்லாம்நிறை பெரும் பூசனை விளங்க நீடு திருத்தொண்டர் தமைக்குறை இரந்து வேண்டுவன குறிப்பின் வழி கொடுத்தருளிமுறை புரிந்து திருநீற்று முதல் நெறியே பாலிப் பார்.
சொற்பிரிப்பு
பிறை வளரும் செஞ்சடையார்பேணு சிவாலயம் எல்லாம்நிறைபெரும் பூசனை விளங்க,நீடு திருத்தொண்டர் தமைக்குறை இரந்து, வேண்டுவனகுறிப்பின் வழி கொடுத்தருளி,முறை புரிந்து திருநீற்று முதல்நெறியே பாலிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

அங்கண் இனிது உறையும் நாள் அரசு இறைஞ்ச வீற்றிருந்துகொங்கரொடு குட புலத்துக் கோ மன்னர் திறை கொணரத்தங்கள் குல மரபின் முதல் தனி நகராம் கருவூரில்மங்கல நாள் அரசு உரிமைச் சுற்றமுடன் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அங்கண் இனிது உறையும் நாள்அரசு இறைஞ்ச வீற்றிருந்துகொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர்திறை கொணரத்தங்கள் குல மரபின் முதல்தனி நகராம் கருவூரில்மங்கல நாள் அரசு உரிமைச்சுற்றம் உடன் வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வந்து மணி மதில் கருவூர் மருங்கு அணைவார் வானவர் சூழ்இந்திரன் வந்து அமரர் புரி எய்துவான் என எய்திசிந்தை களி கூர்ந்து அரனார் மகிழ் திரு ஆநிலைக் கோயில்முந்துற வந்து அணைந்து இறைஞ்சி மொய்ஒளி மாளிகை புகுந்தார்.
சொற்பிரிப்பு
வந்து மணி மதில் கருவூர்மருங்கு அணைவார் வானவர் சூழ்இந்திரன் வந்து அமரர் புரிஎய்துவான் என எய்திச்சிந்தை களி கூர்ந்து, அரனார்மகிழ் திருஆனிலைக் கோயில்முந்துற வந்து அணைந்து இறைஞ்சிமொய்ஒளி மாளிகை புகுந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

மாளிகை முன் அத்தாணி மண்டபத்தின் மணிபுனை பொன்கோளரி ஆசனத்து இருந்து குட புல மன்னவர் கொணர்ந்தஒளி நெடும் களிற்றின் அணி உலப்பில் பரி துலைக் கனகம்நீளிடைவில் விலகு மணி முதல் நிறையும் திறை கண்டார்.
சொற்பிரிப்பு
மாளிகை முன் அத்தாணிமண்டபத்தின் மணிபுனை பொன்கோள்அரி ஆசனத்து இருந்து குடபுல மன்னவர் கொணர்ந்தஒளி நெடும் களிற்றின் அணி உலப்பு இல்பரி துலைக் கனகம்நீள் இடைவில் இலகு மணி முதல்நிறையும் திறை கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல் உரிமைத் தொழில் அருளிமுறை புரியும் தனித் திகிரி முறைநில்லா முரண் அரசர்உறை அரணம் உளவாகில் தெரிந்து உரைப்பீர் என உணர்வுநிறை மதி நீடு அமைச்சர்க்கு மொழிந்தருளி நிகழும் நாள்.
சொற்பிரிப்பு
திறை கொணர்ந்த அரசர்க்குச் செயல்உரிமைத் தொழில் அருளி“முறை புரியும் தனித்தி கிரிமுறைநி ல்லா முரண் அரசர்உறை அரணம் உள ஆகில் தெரிந்துஉரைப்பீர்” என உணர்வுநிறைமதி நீடு அமைச்சர்க்குமொழிந்தருளி நிகழும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

சென்று சிவகாமியார் கொணர் திருப்பள்ளித் தாமம்அன்று சிதறும் களிற்றை அற எறிந்து பாகரையும்கொன்ற எறி பத்தர் எதிர் எனையும் கொன்று அருளும் எனவென்றி வடிவாள் கொடுத்துத் திருத்தொண்டில் மிகச் சிறந்தார்.
சொற்பிரிப்பு
சென்று சிவகாமியார் கொணர்திருப்பள்ளித் தாமம்அன்று சிதறும் களிற்றைஅற எறிந்து பாகரையும்கொன்ற எறிபத்தர் எதிர்“என்னையும் கொன்று அருளும்” எனவென்றி வடிவாள் கொடுத்துத்திருத்தொண்டில் மிகச் சிறந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

விளங்கு திரு மதிக் குடைக்கீழ் வீற்றிருந்து பார் அளிக்கும்துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன் முறைமை நெறி அமைச்சர்அளந்த திறை முறை கொணரா அரசன் உளன் ஒருவன் எனஉளம் கொள்ளும் வகை உரைப்ப உறுவியப் பால் முறுவலிப்பார்.
சொற்பிரிப்பு
விளங்கு திருமதிக் குடைக் கீழ்வீற்றிருந்து பார் அளிக்கும்துளங்கொளி நீள் முடியார்க்குத் தொன்முறைமை நெறி அமைச்சர்“அளந்த திறை முறை கொணராஅரசன் உளன் ஒருவன்” எனஉளங்கொள்ளும் வகை உரைப்பஉறு வியப்பால் முறுவலிப்பார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

ஆங்கவன் யார் என்று அருள அதிகன் அவன் அணித்தாகஓங்கு எயில் சூழ் மலை அரணத்துள் உறைவான் என உரைப்பஈங்கு நுமக்கு எதிர் நிற்கும் அரண் உளதோ படை எழுந்தபாங்கரணம் துகளாகப் பற்று அறுப்பீர் எனப் பகர்ந்தார்.
சொற்பிரிப்பு
“ஆங்கு அவன் யார்?” என்று அருள “அதிகன் அவன்; அணித்து ஆகஓங்கு எயில் சூழ் மலை அரணத்து உள் உறைவான்” என உரைப்ப“ஈங்கு நுமக்கு எதிர் நிற்கும்அரண் உளதோ? படை எழுந்துபாங்கு அரணம் துகள் ஆகப் பற்று அறுப்பீர்” எனப் பகர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்துகடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல் செல்வார்படர் வனமும் நெடும் கிரியும் பயில் அரணும் பொடி ஆகமிடல் உடை நால் கருவியுற வெஞ்சமரம் மிக விளைத்தார்.
சொற்பிரிப்பு
அடல் வளவர் ஆணையினால் அமைச்சர்களும் புறம் போந்துகடல் அனைய நெடும் படையைக் கைவகுத்து மேல்செல்வார்படர்வனமும் நெடும்கிரியும் பயில் அரணும் பொடி ஆகமிடல் உடை நால் கருவி உற வெஞ்சமரம் மிக விளைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏறஅளவில் அரண் அக்குறும்பில் அதிகர் கோன் அடல் படையும்உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக்கிளர் கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால்.
சொற்பிரிப்பு
வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏறஅளவில் அரணக் குறும்பில் அதிகர் கோன் அடல்படையும்உளம் நிறை வெம் சினம் திருகி உயர் காஞ்சி மிலைந்து ஏறக்கிளர்கடல்கள் இரண்டு என்ன இருபடையும் கிடைத்தனவால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

கயமொடு கயம் எதிர் குத்தினஅயமுடன் அயமுனை முட்டினவயவரும் வயவரும் உற்றனர்வியனமர் வியல் இடம் மிக்கதே.
சொற்பிரிப்பு
கயமொடு கயம்எதிர் குத்தினஅயம் உடன் அயமுனை முட்டினவயவரும் வயவரும் உற்றனர்வியன் அமர் வியல் இடம் மிக்கதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

மலையொடு மலைகள் மலைந்தெனஅலை மத அருவி கொழிப்பொடுசிலையினர் விசையின் மிசைத் தெருங்கொலை மத கரிகொலை உற்றவே.
சொற்பிரிப்பு
மலையொடு மலைகள் மலைந்து எனஅலைமத அருவி கொழிப்பொடுசிலையினர் விசையின் மிசைத் தெறுகொலை மத கரி கொலை உற்றவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

சூறை மாருதம் ஒத்து எதிர்ஏறு பாய் பரி வித்தகர்வேறு வேறு தலைப் பெய்துசீறி ஆவி செகுத்தனர்.
சொற்பிரிப்பு
சூறை மாருதம் ஒத்து எதிர்ஏறு பாய் பரி வித்தகர்வேறு வேறு தலைப்பெய்துசீறி ஆவி செகுத்தனர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

மண்டு போரின் மலைப்பவர்துண்டம் ஆயிட உற்று எதிர்கண்டர் ஆவி கழித்தனர்உண்ட சோறு கழிக்கவே.
சொற்பிரிப்பு
மண்டு போரின் மலைப்பவர்துண்டம் ஆயிட உற்று எதிர்கண்டர் ஆவி கழித்தனர்;உண்ட சோறு கழிக்கவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

வீடினார் உடலில் பொழிநீடுவார் குருதிப் புனல்ஓடும் யாறென ஒத்ததுகோடு போல்வ பிணக் குவை.
சொற்பிரிப்பு
வீடினார் உடலில் பொழிநீடு வார் குருதிப்புனல்ஓடும் ஆறு என ஒத்ததுகோடு போல்வ பிணக் குவை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

வானிலாவு கருங்கொடிமேனிலாவு பருந்து இனம்ஏனை நீள் கழுகின் குலம்ஆன ஊணொடு எழுந்தவே.
சொற்பிரிப்பு
வான் நிலாவு கருங்கொடிமேல் நிலாவு பருந்து இனம்ஏனை நீள் கழுகின் குலம்ஆன ஊணொடு எழுந்தவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

வரிவில் கதை சக்கர(ம்)முற்கரம் வாள்சுரிகைப் படை சத்திகழுக் கடைவேல்எரி முத்தலை கப்பணமெற் பயில் கோல்முரி உற்றன உற்றன மொய்க் களமே.
சொற்பிரிப்பு
வரிவில் கதை சக்கரம் முற்கரம் வாள்சுரிகைப் படை சத்தி கழுக்கடை வேல்எரி முத்தலை கப்பணம் எல் பயில் கோல்முரிவு உற்றன துற்றன மொய்க் களமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

வடிவேல் அதிகன் படைமாள வரைக்கடிசூழ் அரணக் கணவாய் நிரவிக்கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்முடி நேரியனார் படை முற்றியதே.
சொற்பிரிப்பு
வடிவேல் அதிகன் படை மாள, வரைக்கடி சூழ் அரணக் கணவாய் நிரவிக்கொடி மா மதில் நீடு குறும் பொறையூர்முடி நேரியனார் படை முற்றியதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

முற்றும் பொரு சேனை முனைத் தலையில்கற்றிண் புரிசைப் பதி கட்டழியப்பற்றும் துறை நொச்சி பரிந்து உடையச்சுற்றும் படை வீரர் துணித்தனரே.
சொற்பிரிப்பு
முற்றும் பொரு சேனை முனைத் தலையில்கற்றிண் புரிசைப் பதி கட்டு அழியப்பற்றும் துறை நொச்சி பரிந்து உடையச்சுற்றும் படைவீரர் துணித்தனரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

மாறுற்ற விறல் படை வாள் அதிகன்நூறுற்ற பெரும்படை நூழில் படப்பாறுற்ற எயில் பதி பற்றற விட்டுஏறுற்றனன் ஓடி இருஞ் சுரமே.
சொற்பிரிப்பு
மாறு உற்ற விறல் படைவாள் அதிகன்நூறு உற்ற பெரும் படை நூழில் படப்பாறு உற்ற எயில் பதி பற்று அற விட்டுஏறு உற்றனன் ஓடி இரும் சுரமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

அதிகன் படை போர் பொருதற்றதலைப்பொதியின் குவை எண்ணில போயின பின்நிதியின் குவை மங்கையர் நீள் பரிமாஎதிரும் கரி பற்றினர் எண்ணிலரே.
சொற்பிரிப்பு
அதிகன் படைபோர் பொருது அற்ற தலைப்பொதியின் குவை எண்ணில போயின பின்நிதியின் குவை, மங்கையர் ,நீள் பரிமாஎதிரும் கரி பற்றினர் எண்ணிலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்இரணத் தொழில் விட்டு எயில் சூழ் கருவூர்முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்தரணித் தலைவன் கழல் சார்வுறவே.
சொற்பிரிப்பு
அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம்இரணத் தொழில்விட்டு எயில் சூழ் கருவூர்முரண் உற்ற சிறப்பொடு முன்னினர் நீள்தரணித் தலைவன் கழல் சார்வு உறவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்முன் வந்த கரும் தலை மொய் குவைதான்மின்னும் சுடர் மா முடிவேல் வளவன்தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர்.
சொற்பிரிப்பு
மன்னும் கருவூர் நகர் வாயிலின் வாய்முன் வந்த கரும் தலை மொய் குவை தான்மின்னும் சுடர்மா முடிவேல் வளவன்தன் முன்பு கொணர்ந்தனர் தானை உளோர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்எண்ணில் பெருகும் தலை யாவையினும்நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் நடுக்கண்ணுற்றது ஓர் புன் சடை கண்டனரே.
சொற்பிரிப்பு
மண்ணுக்கு உயிராம் எனும் மன்னவனார்எண்ணில் பெருகும் தலை யாவையினும்நண்ணிக் கொணரும் தலை ஒன்றின் நடுக்கண் உற்றதொர் புன்சடை கண்டனரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

கண்ட பொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுதுகொண்ட பெரும் பயத்துடனும் குறித்து எதிர் சென்று அது கொணர்ந்ததிண்டிறலோன் கைத் தலையில் சடை தெரியப் பார்த்தருளிப்புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்.
சொற்பிரிப்பு
கண்ட பொழுதே நடுங்கி, மனம் கலங்கிக், கை தொழுதுகொண்ட பெரும் பயத்தினுடன் குறித்து எதிர்சென்று அது கொணர்ந்ததிண் திறலோன் கைத்தலையில் சடை தெரியப் பார்த்தருளிப்புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்து இழியப் புரவலனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

முரசுடைத்திண் படை கொடு போய் முதல் அமைச்சர் முனை முருக்கிஉரை சிறக்கும் புகழ்வென்றி ஒன்று ஒழிய ஒன்றாமல்திரை சரிந்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்துயான்அரசு அளித்தபடி சால அழகிதென அழிந்து அயர்வார்.
சொற்பிரிப்பு
“முரசு உடைத் திண் படை கொடுபோய் முதல் அமைச்சர் முனை முருக்கிஉரை சிறக்கும் புகழ் வென்றி ஒன்று ஒழிய, ஒன்றாமல்திரை சரித்த கடல் உலகில் திருநீற்றின் நெறி புரந்து, யான்அரசு அளித்த படி சால அழகிது!” என அழிந்து அயர்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

தார் தாங்கிக் கடன் முடித்த சடைதாங்கும் சடை முடையார்நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவரானார்சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்பார் தாங்க இருந்தேனோ பழிதாங்குவேன் என்றார்.
சொற்பிரிப்பு
“தார் தாங்கிக் கடன் முடித்த சடை தாங்கும் திருமுடியார்நீர் தாங்கும் சடைப் பெருமான் நெறிதாம் கண்டவர் ஆனார்சீர் தாங்கும் இவர் வேணிச் சிரம் தாங்கி வரக் கண்டும்பார் தாங்க இருந்தேனோ பழி தாங்குவேன்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

என்று அருளிச் செய்து அருளி இதற்கு இசையும் படி துணிவார்நின்ற நெறி அமைச்சர்க்கு நீள் நிலம் காத்து அரசு அளித்துமன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழி நிற்பவென்றி முடி என் குமரன்தனைப் புனைவீர் என விதித்தார்.
சொற்பிரிப்பு
என்று அருளிச் செய்தருளி இதற்கு இசையும் படி துணிவார்நின்ற நெறி அமைச்சர்க்கு “நீள் நிலம் காத்து அரசு அளித்துமன்றில் நடம் புரிவார் தம் வழித் தொண்டின் வழிநிற்பவென்றி முடி என் குமரன் தனைப் புனைவீர்” என விதித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

அம்மாற்றம் கேட்டழியும் அமைச்சரையும் இடர் அகற்றிக்கை மாற்றும் செயல்தாமே கடனாற்றும் கருத்து உடையார்செம்மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப்பொய்ம்மாற்றும் திருநீற்றுப் புனை கோலத்தினில் பொலிந்தார்.
சொற்பிரிப்பு
அம்மாற்றம் கேட்டு அழியும் அமைச்சரையும் இடர் அகற்றிக்கைம்மாற்றும் செயல் தாமே கடன் ஆற்றும் கருத்து உடையார்செம் மார்க்கம் தலை நின்று செந்தீ முன் வளர்ப்பித்துப்பொய்ம் மாற்றும் திருநீற்றுப் புனைக் கோலத்தினில் பொலிந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

கண்ட சடைச் சிரத்தினையோர் கனகமணி கலத்து ஏந்திகொண்டு திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார்அண்டர் பிரான் திரு நாமத்து அஞ்சு எழுத்தும் எடுத்து ஓதிமண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்தருளி உள் புக்கார்.
சொற்பிரிப்பு
கண்ட சடைச் சிரத்தினை ஓர் கனக மணிக் கலத்து ஏந்திக்கொண்டு திருமுடி தாங்கிக் குலவும் எரி வலம் கொள்வார்அண்டர் பிரான் திருநாமத்து அஞ்செழுத்தும் எடுத்து ஓதிமண்டு தழல் பிழம்பின் இடை மகிழ்ந்தருளி உள் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழியமிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்பச்செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பலம்பு சேவடியின்அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்திருந்தார்.
சொற்பிரிப்பு
புக்க பொழுது அலர் மாரி புவி நிறையப் பொழிந்து இழியமிக்க பெரு மங்கல தூரியம் விசும்பின் முழக்கு எடுப்பச்செக்கர் நெடும் சடை முடியார் சிலம்பு அலம்பு சேவடியின்அக்கருணைத் திருநிழல் கீழ் ஆராமை அமர்ந்து இருந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

முரசங் கொள் கடல் தானை மூவேந்தர் தங்களின் முன்பிரசம் கொள் நறுந்தொடையல் புகழ்ச் சோழர் பெருமையினைப்பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்திநரசிங்க முனையர் திறம் நாம் அறிந்தபடி உரைப்பாம்.
சொற்பிரிப்பு
முரசங் கொள் கடல்தானை மூவேந்தர் தங்களின் முன்பிரசங் கொள் நறுந்தொடையல் புகழ்ச்சோழர் பெருமையினைப்பரசும் குற்றேவலினால் அவர் பாதம் பணிந்து ஏத்திநரசிங்க முனையர் திறம் நாம் அறிந்த படி உரைப்பாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.