1
உரு நாட்டுஞ் செயல் காமன் ஒழிய விழிபொழி செந்தீவரும் நாட்டத் திருநுதலார் மகிழ்ந்து அருளும் பதிவயலில்கருநாட்டக் கடைசியர் தம் களி காட்டும் காவேரித்திரு நாட்டு வளம் காட்டும் செங்காட்டங் குடி ஆகும்.
சொற்பிரிப்பு
உருநாட்டும் செயல் காமன் ஒழிய விழி பொழி செந்தீவருநாட்டத் திருநுதலார் மகிழ்ந்து அருளும் பதி வயலில்கருநாட்டக் கடைசியர் தம் களி காட்டும் காவேரித்திருநாட்டு வளம் காட்டும் செங்காட்டங் குடி ஆகும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
2
நிலவிய அத் திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டுமலர் புகழ் மா மாத்திரர் தம் குலம் பெருக வந்து உள்ளார்பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்.
சொற்பிரிப்பு
நிலவிய அத்திருப்பதியில் நெடும் சடையார் நீற்று அடைவால்உலகில் வளர் உயிர்க்கு எல்லாம் உயர் காவல் தொழில் பூண்டுமலர்புகழ் மாமாத்திரர் தம் குலம் பெருக வந்துள்ளார்பலர் புகழும் திருநாமம் பரஞ்சோதியார் என்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
3
ஆயுள் வேதக் கலையும் அலகில் வடநூல் கலையும்தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்றுள்ளார்பாயும் மதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்புமேய தொழில் விஞ்சையிலும் மேதினியில் மேல் ஆனார்.
சொற்பிரிப்பு
ஆயுள் வேதக்கலையும் அலகில் வடநூல் கலையும்தூய படைக்கலத் தொழிலும் துறை நிரம்பப் பயின்றவற்றால்பாயுமதக் குஞ்சரமும் பரியும் உகைக்கும் பண்புமேய தொழில் விஞ்சையினும் மேதினியில் மேல் ஆனார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
4
உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றிப் பயின்று அவற்றால்தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு என்றேகொள்ளும் உணர்வினில் முன்னே கூற்று உதைத்த கழற்கு அன்புபள்ளமடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார்.
சொற்பிரிப்பு
உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவு இன்றிப் பயின்றவற்றால்“தெள்ளி வடித்து அறிந்த பொருள் சிவன் கழலில் செறிவு” என்றேகொள்ளும் உணர்வினில் முன்னே கூற்றுதைத்த கழற்கு அன்புபள்ள மடையாய் என்றும் பயின்று வரும் பண்புடையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
5
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணி செய்தேஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப்பூசல் முனைக் களிறு உகைத்துப் போர் வென்று பொரும் அரசர்தேசங்கள் பல கொண்டு தேர்வேந்தன் பால் சிறந்தார்.
சொற்பிரிப்பு
ஈசன் அடியார்க்கு என்றும் இயல்பான பணிசெய்தேஆசில் புகழ் மன்னவன்பால் அணுக்கராய் அவற்கு ஆகப்பூசல் முனைக் களிறு உகைத்துப் போர்வென்று, பொரும் அரசர்தேசங்கள் பல கொண்டு தேர் வேந்தன்பால் சிறந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
6
மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்தொன் நகரம் துகள் ஆகத் துளைநெடுங்கை வரை உகைத்துப்பல் மணியும் நிதிக் குவையும் பகட்டு இனமும் பரித் தொகையும்இன்னன எண்ணிலகவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்.
சொற்பிரிப்பு
மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வாதாவித்தொல் நகரம் துகள் ஆகத் துளை நெடுங்கை வரை உகைத்துப்பன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்இன்னன எண் இல கவர்ந்தே இகல் அரசன் முன் கொணர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
7
கதிர் முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினைஅதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப அறிந்த அமைச்சர்கள் உரைப்பார்மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்தவலி உடைமையினால்எதிர் இவருக்கு இவ்வுலகில் இல்லை என எடுத்து உரைத்தார்.
சொற்பிரிப்பு
கதிர்முடி மன்னனும் இவர் தம் களிற்று உரிமை ஆண்மையினைஅதிசயித்துப் புகழ்ந்து உரைப்ப, அறிந்த அமைச்சர்கள் உரைப்பார்“மதி அணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி உடைமையினால்எதிர் இவருக்கு இவ்உலகில் இல்லை” என எடுத்துரைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
8
தம் பெருமான் திருத்தொண்டர் எனக் கேட்ட தார் வேந்தன்உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன் எனவெருவுற்றுஎம் பெருமான் இது பொறுக்க வேண்டும் என இறைஞ்சினான்.
சொற்பிரிப்பு
“தம் பெருமான் திருத்தொண்டர்” எனக் கேட்ட தார் வேந்தன்“உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டு ஒழிந்தேன்!வெம்பு கொடும் போர் முனையில் விட்டு இருந்தேன்” என வெருவுற்று“எம்பெருமான்! இது பொறுக்க வேண்டும்” என இறைஞ்சினான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
9
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி என் உரிமைத் தொழிற்கு அடுத்ததிறம் புரிவேன் அதற்கு என்னோ தீங்கு என்ன ஆங்கு அவர்க்குநிறைந்த நிதிக்குவைகளுடன் நீடு விருத்திகள் அளித்தேஅறம் புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்.
சொற்பிரிப்பு
இறைஞ்சுதலும் முன் இறைஞ்சி “என் உரிமைத் தொழிற்கு அடுத்ததிறம் புரிவேன்; அதற்கு என்னோ? தீங்கு என்ன”, ஆங்கு அவர்க்குநிறைந்த நிதிக் குவைகள் உடன் நீடு விருத்திகள் அளித்தேஅறம்புரி செங்கோல் அரசன் அஞ்சலி செய்து உரைக்கின்றான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
10
உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்எம்முடைய மனக் கருத்துக்கு இனிதாக இசைந்து உமதுமெய்ம்மைபுரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்செம்மை நெறித் திருத்தொண்டு செய்யும் என விடை கொடுத்தான்.
சொற்பிரிப்பு
“உம்முடைய நிலைமையினை அறியாமை கொண்டு உய்த்தீர்;எம்முடைய மனக்கருத்துக்கு இனிது ஆக இசைந்து உமதுமெய்ம்மை புரி செயல் விளங்க வேண்டியவாறே சரித்துச்செம்மை நெறித் திருத்தொண்டு செய்யும்” என விடைகொடுத்தான்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
11
மன்னவனை விடை கொண்டு தம்பதியில் வந்து அடைந்துபன்னு புகழ் பரஞ் சோதியார் தாமும் பனி மதி வாழ்சென்னியரைக் கணபதி ஈச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டுமுன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்.
சொற்பிரிப்பு
மன்னவனை விடைகொண்டு தம் பதியில் வந்தடைந்துபன்னு புகழ்ப் பரஞ்சோதியார் தாமும் பனிமதி வாழ்சென்னியரைக் கணபதீச்சரத்து இறைஞ்சித் திருத்தொண்டுமுன்னை நிலைமையில் வழுவா முறை அன்பில் செய்கின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
12
வேத காரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணி செய்யத்தீதில் குடிப் பிறந்தார் திருவெண்காட்டு நங்கை எனும்காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமைநீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்.
சொற்பிரிப்பு
வேதகாரணர் அடியார் வேண்டிய மெய்ப் பணிசெய்யத்தீதில் குடிப் பிறந்த திரு வெண்காட்டு நங்கை எனும்காதல் மனைக் கிழத்தியார் கருத்து ஒன்ற வரும் பெருமைநீதி மனை அறம் புரியும் நீர்மையினை நிலை நிற்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
13
நறை இதழித் திரு முடியார் அடியாரை நாள் தோறும்முறைமையினில் திரு அமுது முன் ஊட்டிப் பின் உண்ணும்நிறையுடைய பெருவிருப்பால் நியதியாகக் கொள்ளும்துறைவழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலை நின்றார்.
சொற்பிரிப்பு
நறை இதழித் திருமுடியார் அடியாரை நாள்தோறும்முறைமையினில் திருஅமுது முன் ஊட்டிப் பின் உண்ணும்நிறை உடைய பெருவிருப்பால் நியதியாகக் கொள்ளும்துறை வழுவா வகை ஒழுகும் தூய தொழில் தலைநின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
14
தூய திரு அமுது கனி கன்னல் அறுசுவைக் கறிநெய்பாய தயிர் பால் இனிய பண்ணியம் உண் நீர் அமுதம்மேய படியால் அமுது செய்விக்க மிசைந்து அடியார்மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர் பால் மனம் மகிழ்ந்தார்.
சொற்பிரிப்பு
தூய திரு அமுது, கனி, கன்னல், அறுசுவைக் கறி, நெய்,பாயதயிர், பால், இனிய பண்ணியம், உண் நீர்அமுதம்மேயபடியால் அமுது செய்விக்க மிசைந்து அடியார்மாயிரு ஞாலம் போற்ற வரும் இவர்பால் மனம் மகிழ்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
15
சீதமதி அரவினுடன் செஞ்சடைமேல் செறிவித்தநாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழி பாட்டால்மே தகையார் அவர் முன்புமிகச் சிறியராய் அடைந்தார்ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்.
சொற்பிரிப்பு
சீதமதி அரவின் உடன் செஞ்சடைமேல் செறிவித்தநாதன் அடியார் தம்மை நயப்பாட்டு வழிபாட்டால்மேதகையார் அவர் முன்பு மிகச் சிறியராய் அடைந்தார்ஆதலினால் சிறுத்தொண்டர் என நிகழ்ந்தார் அவனியின் மேல்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
16
கண் நுதலார் கணபதீச்சரத்தின் கண் கருத்து அமரஉண்ணிறை அன்பினில் பணி செய்து ஒழுகுவார் வழுவின்றிஎண்ணில் பெரும் சீர் அடியார் இடை விடாது அமுதுசெயநண்ணிய பேர் உவகையுடன் நயந்து உறையும் நாளின் கண்.
சொற்பிரிப்பு
கண்நுதலார் கணபதீச்சரத்தின்கண் கருத்து அமரஉள் நிறை அன்பினில் பணிசெய்து ஒழுகுவார் வழுவின்றிஎண்ணில் பெரும் சீர் அடியார் இடைவிடாது அமுது செயநண்ணிய பேர் உவகை உடன் நயந்து உறையும் நாளின்கண்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
17
நீராரும் சடை முடியார் அருளினால் நிறை தவத்துப்பேராளர் அவர் தமக்குப் பெருகுதிரு மனை அறத்தின்வேராகி விளங்கும் திரு வெண்காட்டு நங்கைபால்சீராளத் தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்.
சொற்பிரிப்பு
நீராருஞ் சடைமுடியார் அருளினால் நிறை தவத்துப்பேராளர் அவர் தமக்குப், பெருகு திருமனை அறத்தின்வேராகி விளங்கு திருவெண்காட்டு நங்கைபால்சீராள தேவர் எனும் திருமைந்தர் அவதரித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
18
அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்தபெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்றுவரும் மகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்காவகை வளரத்திருமலி நெய்யாடல் விழாச் செங்காட்டங்குடி எடுப்ப.
சொற்பிரிப்பு
அருமையினில் தனிப் புதல்வர் பிறந்த பொழுது அலங்கரித்தபெருமையினில் கிளை களிப்பப் பெறற்கு அரிய மணிபெற்றுவருமகிழ்ச்சி தாதையார் மனத்து அடங்கா வகை வளரத்திருமலி நெய் ஆடல் விழாச் செங்காட்டங் குடி எடுப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
19
மங்கல நல்லியம் முழக்க(ம்) மறை முழக்கம் வான் அளப்பஅங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவிறந்த நிதி அளித்துத்தங்கள் மரபினில் உரிமைச் சடங்கு தச தினத்தினிலும்பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணிபுனைந்தார்.
சொற்பிரிப்பு
மங்கல நல் இய முழக்கம் மறைமுழக்கம் வான் அளப்பஅங்கணர் தம் சீர் அடியார்க்கு அளவு இறந்த நிதி அளித்துத்தங்கள் மரபினில் உரிமைச் சடங்கு தச தினத்தினிலும்பொங்கு பெரு மகிழ்ச்சியுடன் புரிந்து காப்பு அணி புனைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
20
ஆர்வ(ம்) நிறை பெருஞ் சுற்றம் அகமலர அளித்தவர் தாம்பார் பெருகு(ம்) மகிழ்ச்சியுடன் பருவ முறைப் பாராட்டுச்சீர் பெருகச் செய்ய வளர் திருமகனார் சீறடியில்தார் வளர் கிண்கிணி அசையத் தளர் நடையின் பதம் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
ஆர்வ நிறை பெரும்சுற்றம் அகமலர அளித்தவர் தாம்பார் பெருகு மகிழ்ச்சியுடன் பருவ முறைப் பாராட்டுச்சீர் பெருகச் செய்ய வளர் திருமகனார் சீறடியில்தார்வளர் கிண்கிணி அசையத் தளர்நடையின் பதம் சார்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
21
சுருளும் மயிர் நுதல் சுட்டி துணைக் காதின் மணிக் குதம்பைமருவு திருக்கண்ட நாண் மார்பினில் ஐம்படைக் கையில்பொருவில் வயிரச் சரிகள் பொன் அரைஞாண் புனை சதங்கைதெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்.
சொற்பிரிப்பு
சுருளு மயிர் நுதல் சுட்டி; துணைக்காதின் மணிக் குதம்பை;மருவு திருக் கண்ட நாண்; மார்பினில் ஐம்படை; கையில்பொருஇல் வயிரச்சரிகள்;பொன் அரைஞாண்; புனை சதங்கைதெருவில் ஒளி விளங்க வளர் திருவிளையாட்டினில் அமர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
22
வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்துதந்தையாரும் பயந்த தாயாரும் தனிச்சிறுவர்சிந்தை மலர் சொல் தெளிவில் செழுங் கலைகள் பயிலத்தம்பந்தமற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினார்.
சொற்பிரிப்பு
வந்து வளர் மூவாண்டில் மயிர் வினை மங்கலம் செய்துதந்தையாரும் பயந்த தாயாரும் தனிச் சிறுவர்சிந்தை மலர் சொல் தெளிவில் செழும் கலைகள் பயிலத் தம்பந்தம் அற வந்தவரைப் பள்ளியினில் இருத்தினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
23
அந் நாளில் சண்பை நகர் ஆண்டகையார் எழுந்தருளமுன்னாக எதிர்கொண்டு கொடு புகுந்து முந்நூல் சேர்பொன் மார்பில் சிறுத் தொண்டர் புகலிகாவனார்தம்நன்னாமச் சேவடிகள் போற்றி இசைத்து நலம் சிறந்தார்.
சொற்பிரிப்பு
அந்நாளில் சண்பை நகர் ஆண்டகையார் எழுந்தருளமுன் ஆக எதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல் சேர்பொன்மார்பில் சிறுத்தொண்டர் புகலிகாவலனார் தம்நன்நாமச் சேவடிகள் போற்றிசைத்து நலம் சிறந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
24
சண்பையர் தம் பெருமானும் தாங்கரிய பெருங்காதல்பண்புடைய சிறுத்தொண்டருடன் பயின்று மற்று அவரைமண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்துநண்பருளி எழுந்து அருளத் தாம் இனிது நயப்பு உற்றார்.
சொற்பிரிப்பு
சண்பையர் தம் பெருமானும் தாங்கு அரிய பெரும்காதல்பண்புடைய சிறுத்தொண்டருடன் பயின்று, மற்றவரைமண் பரவும் திருப்பதிகத்தினில் வைத்துச் சிறப்பித்துநண்பு அருளி எழுந்தருளத் தாம் இனிது நயப்புற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
25
இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இருங்கயிலைஅத்தர் திருவடி இணைக் கீழ்ச் சென்று அணைய அவருடையமெய்த் தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு விடையவர் தாம்சித்தம் மகிழ் வைரவராய்த் திருமலைநின் றணைகின்றார்.
சொற்பிரிப்பு
இத்தன்மை நிகழும் நாள் இவர் திருத்தொண்டு இருங்கயிலைஅத்தர் திருவடி இணைக்கீழ்ச் சென்றணைய, அவருடையமெய்த்தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு, விடையவர் தாம்சித்த மகிழ் வயிரவராய்த் திருமலை நின்று அணைகின்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
26
மடல் கொண்ட மலர் இதழி நெடுஞ்சடையை வனப்பு எய்தக்கடல் மண்டி முகந்து எழுந்த காளமேகச் சுருள் போல்தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறிபடர் துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி.
சொற்பிரிப்பு
மடல்கொண்ட மலர் இதழி நெடும்சடையை வனப்பு எய்தக்கடல் மண்டி முகந்து எழுந்த காளமேகச் சுருள்போல்தொடர் பங்கி சுருண்டு இருண்டு தூறி நெறித்து அசைந்து செறிபடர் துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளம் ஆகப் பரப்பி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
27
அஞ்சன(ம்) மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பைமஞ்சினிடைஎழுந்த வான மீன் பரப்பு என்னப்புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை படர்ந்து ஆர்ப்பத்துஞ்சின் நுனித் தனிப் பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற.
சொற்பிரிப்பு
அஞ்சன மஞ்சனம் செய்தது அனைய அணி கிளர் பம்பைமஞ்சினிடை இடை எழுந்த வான மீன் பரப்பு என்னப்புஞ்ச நிரை வண்டு தேன் சுரும்பு புடை பரந்து ஆர்ப்பத்துஞ்சின் நுனி தனிப்பரப்பும் தும்பை நறுமலர் தோன்ற.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
28
அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம் பிறை தன்னைப்பெருகு சிறுமதியாக்கிப் பெயர்த்துச் சாத்தியது என்னவிரிசுடர்ச் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த்திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப் பொட்டும் திகழ்ந்து இலங்க.
சொற்பிரிப்பு
அருகு திருமுடிச் செருகும் அந்தி இளம்பிறை தன்னைப்பெருகு சிறு மதி ஆக்கிப் பெயர்த்துச் சாத்தியது என்னவிரிசுடர்ச் செம்பவள ஒளி வெயில் விரிக்கும் விளங்கு சுடர்த்திருநுதல் மேல் திருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்து இலங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
29
வெவ்வருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்அவ்வனல் செம்மண்டலமும் உடன் அணைந்தது என அழகைவவ்வும் திருக்காதின் மணிக் குழைச் சங்கு வளைத்து அதனுள்செவ்வரத்த மலர் செறித்த திருத்தோடு புடை சிறக்க.
சொற்பிரிப்பு
வெவ் அருக்கன் மண்டலமும் விளங்கு மதி மண்டலமும்அவ்அனல் செம் மண்டலமும் உடன் அணைந்தது என, அழகைவவ்வு திருக்காதில் மணிக்குழைச் சங்கு வளைத்து அதன் உள்செவ்அரத்த மலர் செறித்த திருத்தோடு புடைசிறக்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
30
களம் கொள் விடம் மறைத்தருளக் கடல் அமுத குமிழிநிரைத்துளங்கொளி வெண் திரட் கோவைத் தூய வடம் அணிந்தது எனஉளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருகவிளங்கும் திருக் கழுத்தினிடை வெண்பளிங்கின் வடம் திகழ.
சொற்பிரிப்பு
களங்கொள் விடம் மறைத்து அருளக் கடல் அமுதக் குமிழி நிரைத்துளங்கொளி வெண் திரள் கோவைத் தூய வடம் அணிந்தது எனஉளங்கொள்பவர் கரைந்து உடலும் உயிரும் உருகப் பெருகவிளங்கு திருக்கழுத்தினிடை வெண்பளிங்கின் வடம் திகழ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
31
செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்பம்பும் இருள் செறி பொழுது படர்ந்து அணைந்து சூழ்வது எனதம்பழைய கரியுரிவை கொண்டுசமைத்தது சாத்தும்அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணிவிளங்க.
சொற்பிரிப்பு
செம்பரிதி கடல் அளித்த செக்கர் ஒளியினை அந்திப்பம்பும் இருள் செறிபொழுது படர்ந்து அணைந்து சூழ்வது எனத்தம் பழைய கரி உரிவை கொண்டு சமைத்து அது சாத்தும்அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தின் அணி விளங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
32
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது எனஅக்குமணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்கைக்கு அணி தோள் வளைச்சரியும் அரைக் கடி சூத்திரச் சரியும்தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க.
சொற்பிரிப்பு
மிக்கு எழும் அன்பர்கள் அன்பு திருமேனி விளைந்தது எனஅக்கு மணியால் சன்ன வீரமும் ஆரமும் வடமும்கைக்கு அணிகொள் வளைச்சரியும் அரைக்கடி சூத்திரச் சரியும்தக்க திருக்கால் சரியும் சாத்திய ஒண் சுடர் தயங்க.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
33
பொருவில் திருத் தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்பெருகருளின் திறம் கண்டு பிரான் அருளே பேணுவீர்வரும் அன்பின் வழிநிற்பீர் என மறைபூண்டு அறைவனபோல்திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப.
சொற்பிரிப்பு
பொருவில் திருத்தொண்டர்க்குப் புவிமேல் வந்து அருள் புரியும்பெருகு அருளின் திறம் கண்டு “பிரான் அருளே பேணுவீர்!வரும் அன்பின் வழி நிற்பீர்” என மறை பூண்டு அறைவன போல்திருவடிமேல் திருச்சிலம்பு திசை முழுதும் செல ஒலிப்ப.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
34
அயன் கபாலம் தரித்த இடத்திருக்கையால் அணைத்தவயங்கு ஒலி மூவிலைச்சூல மணித்திருத் தோள்மிசைப் பொலியத்தயங்கு சுடர் வலத்திருக்கை தமருகத்தின் ஒலிதழைப்பப்பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட.
சொற்பிரிப்பு
அயன் கபாலம் தரித்த இடத் திருக்கையால் அணைத்தவயங்கொளி மூ இலைச் சூலம் மணித் திருத்தோள் மிசைப் பொலியத்தயங்கு சுடர் வலத் திருக்கைத் தமருகத்தின் ஒலி தழைப்பப்பயன் தவத்தால் பெறும் புவியும் பாத தாமரை சூட.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
35
அருள்பொழியும் திருமுகத்தில் அணி முறுவல் நிலவு எறிப்பமருள் பொழியும் மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப்பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப்புவி ஏத்தத்தெருள் பொழிவண் தமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிச்சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
அருள் பொழியும் திருமுகத்தின் அணி முறுவல் நிலவு எறிப்பமருள்பொழி மும்மலம் சிதைக்கும் வடிச்சூலம் வெயில் எறிப்பப்பொருள் பொழியும் பெருகு அன்பு தழைத்து ஓங்கிப் புவி ஏத்தத்தெருள் பொழி வண் தமிழ்நாட்டுச் செங்காட்டங் குடி சேர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
36
தண்டாத தொருவேட்கைப் பசிஉடையார் தமைப்போலக்கண்டாரைச் சிறுத் தொண்டர்மனை வினவிக் கடிது அணைந்துதொண்டனார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்வண்டார் பூந்தாரார் இம்மனைக்கு உள்ளாரோ என்ன.
சொற்பிரிப்பு
தண்டாதது ஒரு வேட்கைப் பசி உடையார் தமைப் போலக்கண்டாரைச் சிறுத்தொண்டர் மனை வினவிக் கடிது அணைந்து“தொண்டானார்க்கு எந்நாளும் சோறு அளிக்கும் திருத்தொண்டர்வண்டார் பூந்தாரார் இம் மனைக்கு உள்ளாரோ?” என்ன.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
37
வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம் என்றுசந்தனமாம் தையலார் முன்வந்து தாள் வணங்கிஅந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்எந்தமை ஆள் உடையவரே அகத்துள் எழுந்தருளும் என.
சொற்பிரிப்பு
“வந்து அணைந்து வினவுவார் மாதவரேயாம்” என்றுசந்தனமாம் தையலார் முன் வந்து தாள் வணங்கி“அந்தம் இல் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்து அணைந்தார்;எந்தமை ஆள் உடையவரே! அகத்து உள் எழுந்து அருளும்” என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
38
மடவரலை முகம் நோக்கி மாதரார் தாம் இருந்தஇடவகையில் தனிபுகுதோம் என்று அருள அதுகேட்டுவிட அகல்வார் போல் இருந்தார் என வெருவி விரைந்து மனைக்கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி.
சொற்பிரிப்பு
மடவரலை முகநோக்கி “மாதரார் தாம் இருந்தஇடவகையில் தனி புகுதோம்” என்று அருள அது கேட்டு“விட அகல்வார் போல் இருந்தார்” என வெருவி, விரைந்து, மனைக்கடன் உடைய திருவெண்காட்டு அம்மை கடைத்தலை எய்தி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
39
அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார் இற்றைக்குஎம் பெருமான் யாவரையும் கண்டிலர் தேடிப் போனார்வம்பென நீர் எழுந்தருளி வரும் திருவேடம் கண்டால்தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார் இனித்தாழார்.
சொற்பிரிப்பு
“அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பார்; இற்றைக்குஎம்பெருமான் யாவரையும் கண்டிலர், தேடிப் போனார்;வம்பு என நீர் எழுந்தருளி வரும் திருவேடம் கண்டால்தம் பெரிய பேறு என்றே மிக மகிழ்வார்; இனித் தாழார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
40
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்து அருளி இரும் என்னஒப்பில் மனை அறம் புரப்பீர் உத்தரா பதி உள்ளோம்செப்பரும் சீர் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம் என்று அருளி.
சொற்பிரிப்பு
இப்பொழுதே வந்து அணைவர் எழுந்தருளி இரும்” என்ன“ஒப்பில் மனை அறம் புரப்பீர்! உத்தராபதி உள்ளோம்செப்பு அரும் சீர்ச் சிறுத்தொண்டர் தமைக் காணச் சேர்ந்தனம் யாம்எப்பரிசும் அவர் ஒழிய இங்கு இரோம்” என்று அருளி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
41
கண்ணுதலில் காட்டாதார் கணபதீச் சரத்தின் கண்வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம் மற்று அவர்தாம்நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர் என்று அருளிஅண்ணலார் திருவாத்தி அணைந்தருளி அமர்ந்திருந்தார்.
சொற்பிரிப்பு
கண்நுதலில் காட்டாதார் “கணபதீச் சரத்தின்கண்வண்ணமலர் ஆத்தியின் கீழ் இருக்கின்றோம்; மற்றவர் தாம்நண்ணினால் நாம் இருந்த பரிசு உரைப்பீர்” என்று அருளிஅண்ணலார் திரு ஆத்தி அணைந்தருளி அமர்ந்து இருந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
42
நீரார் சடையான் அடியாரை நேடி எங்கும் காணாதுசீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வமனை எய்திஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட அவரும்பாரா தரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்.
சொற்பிரிப்பு
நீரார் சடையார் அடியாரை நேடி எங்கும் காணாதுசீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டும் செல்வ மனை எய்திஆரா இன்ப மனைவியார்க்கு இயம்பி அழிவு எய்திட, அவரும்பார் ஆதரிக்கும் திருவேடத்து ஒருவர் வந்தபடி பகர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
43
அடியேன் உய்ந்தேன் எங்கு உற்றார் உரையாய் என்ன அவர் மொழிவார்வடி சேர் சூல கபாலத்தர் வட தேசத்தோம் என்றார் வண்துடிசேர் கரத்துப் பயிரவர் யாம் சொல்ல இங்கும் இராதே போய்க்கடிசேர் திரு ஆத்தியின் நிழல்கீழ் இருந்தார் கணபதீச் சரத்து.
சொற்பிரிப்பு
“அடியேன் உய்ந்தேன்; எங்கு உற்றார்? உரையாய்” என்ன அவர் மொழிவார்;“வடிசேர் சூல கபாலத்தார்; ‘வட தேசத்தோம்’ என்றார்; வண்துடிசேர் கரத்துப் பயிரவர்: யாம் சொல்ல இங்கும் இராதே, போய்க்கடிசேர் திருஆத்தியின் நிழல் கீழ் இருந்தார் கணபதீச்சரத்து.”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
44
என்று மனைவியார் இயம்ப எழுந்த விருப்பால் விரைந்து எய்திச்சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்நின்ற தொண்டர் தமை நோக்கி நீரோ பெரிய சிறுத்தொண்டர்என்று திருவாய் மலர்ந்தருள இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார்.
சொற்பிரிப்பு
என்று மனைவியார் இயம்ப, எழுந்த விருப்பால் விரைந்து எய்திச்சென்று, கண்டு, திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்;நின்ற தொண்டர் தமை நோக்கி “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?”என்று திருவாய் மலர்ந்தருள, இறைவர் தம்மைத் தொழுது உரைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
45
பூதி அணி சாதனத்தவர் முன் போற்றப் போதேன் ஆயிடினும்நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வர் நான் என்றுகோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்.
சொற்பிரிப்பு
“பூதி அணி சாதனத்து அவர்முன் போற்றப் போதேன் ஆயிடினும்நாதன் அடியார் கருணையினால் அருளிச் செய்வர் நான் என்று;கோதில் அன்பர் தமை அமுது செய்விப்பதற்குக் குலப்பதியில்காதலாலே தேடியும் முன் காணேன் தவத்தால் உமைக் கண்டேன்”
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
46
அடியேன் மனையில் எழுந்து அருளி அமுது செய்ய வேண்டும் எனநெடியோன் அறியா அடியார்தாம் நிகழும் தவத்தீர் உமைக் காணும்படியால் வந்தோம் உத்தரா பதியோம் எம்மைப் பரிந்து ஊட்டமுடியா துமக்குச் செய்கை அரிது ஒண்ணாது என்று மொழிந்து அருள.
சொற்பிரிப்பு
“அடியேன் மனையில் எழுந்தருளி அமுது செய்ய வேண்டும்” எனநெடியோன் அறியா அடியார் தாம் “நிகழும் தவத்தீர்! உமைக்காணும்படியால் வந்தோம்; உத்தரா பதியோம்; எம்மைப் பரிந்து ஊட்டமுடியாது உமக்குச் செய்கை அரிது ஒண்ணாது” என்று மொழிந்தருள.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
47
எண்ணாது அடியேன் மொழியேன் நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்கண்ணார் வேடம் நிறை தவத்தீர் அருளிச் செய்யும் கடிது அமைக்கதண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால் தேடஒண்ணாதனவும் உளவாகும் அருமை இல்லை என உரைத்தார்.
சொற்பிரிப்பு
எண்ணாது அடியேன் மொழியேன்; நீர் அமுது செய்யும் இயல்பு அதனைக்கண்ணார் வேடம் நிறை தவத்தீர்! அருளிச் செய்யும் கடிது அமைக்கத்,தண்ணார் இதழி முடியார் தம் அடியார் தலைப்பட்டால்,தேடஒண்ணாதனவும் உள ஆகும்; அருமை இல்லை” என உரைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
48
அரியது இல்லை எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்றபெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார் யாம்பரியுந் தொண்டீர் மூவிருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பதுஉரிய நாளும் அதற்கு இன்றால் ஊட்ட அரிதாம் உமக்கு என்றார்.
சொற்பிரிப்பு
“அரியது இல்லை” எனக் கேட்ட பொழுதில் அழகு பொழிகின்றபெரிய பயிரவக் கோலப் பெருமான் அருளிச் செய்வார், ”யாம்பரியும் தொண்டீர்! மூ இருது கழித்தால் பசு வீழ்த்திட உண்பதுஉரிய நாளும் அதற்கு இன்றால்; ஊட்ட அரிதாம் உமக்கு” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
49
சால நன்று முந் நிரையும் உடையேன் தாழ்வு இங்கு எனக்கு இல்லைஆலம் உண்டார் அன்பர் உமக்கு அமுதாம் பசுத்தான் இன்னது எனஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக்காலம் தப்பாமே வருவேன் என்று மொழிந்து கை தொழுதார்.
சொற்பிரிப்பு
“சால நன்று! முந்நிரையும் உடையேன்; தாழ்வு இங்கு எனக்கு இல்லைஆலம் உண்டார் அன்பர்! உமக்கு அமுதாம் பசுத் தான் இன்னது எனஏல அருளிச் செயப் பெற்றால் யான் போய் அமுது கடிது அமைத்துக்காலம் தப்பாமே வருவேன்” என்று மொழிந்து கை தொழுதார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
50
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்நண்பு மிக்கீர் நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப்பசுவாம்உண்பதஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல் இன்னம்புண் செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று என்றார்.
சொற்பிரிப்பு
பண்பு மிக்க சிறுத்தொண்டர் பரிவு கண்டு பயிரவரும்“நண்பு மிக்கீர்! நாம் உண்ணப் படுக்கும் பசுவும் நரப் பசுவாம்உண்பது அஞ்சு பிராயத்துள் உறுப்பில் மறுவு இன்றேல் இன்னம்புண்செய் நோவில் வேல் எறிந்தால் போலும் புகல்வது ஒன்று” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
51
யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும் எனநாதன் தானும் ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தேஏதம் இன்றி அமைத்தகறி யாம் இட்டு உண்பது என மொழிந்தார்.
சொற்பிரிப்பு
“யாதும் அரியது இல்லை இனி ஈண்ட அருளிச் செய்யும்” எனநாதன் தானும் “ஒரு குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தேஏதம் இன்றி அமைத்த கறியாம் இட்டு உண்பது” என மொழிந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
52
அதுவும் முனைவர் மொழிந்தருளக் கேட்ட தொண்டர் அடியேனுக்குஇதுவும் அரிது அன்று எம்பெருமான் அமுது செய்யப் பெறில் என்றுகதுமென் விரைவில் அவர் இசையப் பெற்ற களிப்பால் காதலொடுமதுமென் கமல மலர்ப் பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அதுவும் முனைவர் மொழிந்தருளக் கேட்ட தொண்டர் “அடியேனுக்குஇதுவும் அரிது அன்று எம்பெருமான்! அமுது செய்யப் பெறில்” என்றுகதுமென் விரைவில் அவர் இசையப் பெற்றுக் களிப்பால் காதலொடுமதுமென் கமல மலர்ப்பாதம் பணிந்து மனையில் வந்து அணைந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
53
அன்பு மிக்க பெருங் கற்பின் அணங்கு திரு வெண் காட்டு அம்மைமுன்பு வந்து சிறுத் தொண்டர் வரவு நோக்கி முன் நின்றேஇன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதமிசை இறைஞ்சிப்பின்பு கணவர் முகம் நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ.
சொற்பிரிப்பு
அன்பு மிக்க பெருங்கற்பின் அணங்கு திருவெண்காட்டு அம்மைமுன்பு வந்து, சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன் நின்றேஇன்பம் பெருக மலர்ந்த முகம் கண்டு பாதம் மிசை இறைஞ்சிப்பின்பு கணவர் முக நோக்கிப் பெருகும் தவத்தோர் செயல் வினவ.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
54
வள்ளலாரும் மனையாரை நோக்கி வந்த மாதவர் தாம்உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார் குடிக்கோர் சிறுவனுமாய்க்கொள்ளும் பிராயம் ஐந்துளனாய் உறுப்பில் குறைபாடு இன்றித்தாய்பிள்ளை பிடிக்க உவந்து பிதா அரிந்து சமைக்கப் பெறின் என்றார்.
சொற்பிரிப்பு
வள்ளலாரும் மனையாரை நோக்கி “வந்த மாதவர் தாம்உள்ளம் மகிழ அமுது செய இசைந்தார்; குடிக்கு ஓர் சிறுவனுமாய்க்,கொள்ளும் பிராயம் ஐந்துளனாய், உறுப்பில் குறைபாடு இன்றித், தாய்பிள்ளை பிடிக்க, உவந்து, பிதா அரிந்து சமைக்கப் பெறின்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
55
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்குஉரிய வகையால் அமுது அமைப்போம் ஒருவன் ஆகி ஒரு குடிக்குவரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு என்று வணங்குதலும்.
சொற்பிரிப்பு
அரிய கற்பின் மனைவியார் அவரை நோக்கி உரை செய்வார்“பெரிய பயிரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்குஉரிய வகையால் அமுது அமைப்போம்; ஒருவன் ஆகி ஒரு குடிக்குவரும் அச்சிறுவன் தனைப் பெறுமாறு எவ்வாறு?” என்று வணங்குதலும்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
56
மனைவியார் தம் முகம் நோக்கி மற்று இத் திறத்து மைந்தர் தமைநினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே நேர் நின்றுதனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதேஎனை இங்கு உய்ய நீ பயந்தான் தன்னை அழைப்போம் யாம் என்றார்.
சொற்பிரிப்பு
மனைவியார் தம் முகம் நோக்கி, “மற்று இத்திறத்து மைந்தர் தமைநினைவு நிரம்ப நிதி கொடுத்தால் தருவார் உளரே! நேர் நின்றுதனையன் தன்னைத் தந்தை தாய் அரிவார் இல்லைத் தாழாதேஎனை இங்கு உய்ய, நீ பயந்தான் தன்னை, அழைப்போம் யாம்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
57
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து எம்பிரான் தொண்டர்இன்று தாழாது அமுது செய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம்நன்று காண்பது என நயந்து நம்மைக் காக்க வரும் மணியைசென்று பள்ளியினில் கொண்டு வாரும் என்றார் திரு அனையார்.
சொற்பிரிப்பு
என்று கணவர் கூறுதலும் அதனுக்கு இசைந்து” எம் பிரான்தொண்டர்இன்று தாழாது அமுதுசெய்யப் பெற்று இங்கு அவர் தம் மலர்ந்த முகம்நன்று காண்பது” என நயந்து “நம்மைக் காக்க வருமணியைச்சென்று பள்ளியினில் கொண்டு வாரும்” என்றார் திரு அனையார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
58
காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனைஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினார் போலநாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறும் மென் குதலை மொழிப் புதல்வன்ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார்.
சொற்பிரிப்பு
காதல் மனையார் தாம் கூறக் கணவனாரும் காதலனைஏதம் அகலப் பெற்ற பேறு எல்லாம் எய்தினார் போலநாதர் தமக்கு அங்கு அமுது ஆக்க நறுமென் குதலை மொழிப் புதல்வன்ஓத அணைந்த பள்ளியினில் உடன் கொண்டு எய்தக் கடிது அகன்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
59
பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்பப்பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்துப் பியலின் மேல்கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக் குலமாதர்வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி.
சொற்பிரிப்பு
பள்ளியினில் சென்று எய்துதலும் பாதச் சதங்கை மணி ஒலிப்பப்பிள்ளை ஓடி வந்து எதிரே தழுவ எடுத்துப் பியலின் மேல்கொள்ள அணைத்துக் கொண்டு மீண்டு இல்லம் புகுதக், குலமாதர்வள்ளலார் தம் முன் சென்று மைந்தன் தன்னை எதிர் வாங்கி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
60
குஞ்சி திருத்தி முகம் துடைத்துக் கொட்டை அரை ஞாண் துகன் நீக்கிமஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப்பஞ்சி அஞ்சும் மெல் அடியார் பரிந்து திருமஞ்சனம் ஆட்டிஎஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக் கொடுத்தார்.
சொற்பிரிப்பு
குஞ்சி திருத்தி, முகம் துடைத்துக், கொட்டை அரைநாண் துகள் நீக்கிமஞ்சள் அழிந்த அதற்கு இரங்கி மையும் கண்ணின் மருங்கு ஒதுக்கிப்பஞ்சி அஞ்சும் மெல்அடியார் பரிந்து திருமஞ்சனம்ஆட்டிஎஞ்சல் இல்லாக் கோலம் செய்து எடுத்துக் கணவர் கைக்கொடுத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
61
அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும் புதல்வன்உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாமுண்ணார்பொச்சம் இல்லாத் திருத் தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்கமெச்சும் மனத்தால் அடுக்களையின் மேவார் வேறு கொண்டு அணைவார்.
சொற்பிரிப்பு
அச்சம் எய்திக் கறி அமுதாம் என்னும் அதனால் அரும்புதல்வன்உச்சி மோவார் மார்பின் கண் அணைத்தே முத்தம் தாம் உண்ணார்;பொச்சம் இல்லாத் திருத்தொண்டர் புனிதர் தமக்குக் கறி அமைக்கமெச்சு மனத்தால் அடுக்களையின் மேவார், வேறு கொண்டு அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
62
ஒன்று(ம்) மனத்தார் இருவர்களும் உலகர் அறியார் என மறைவில்சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள்நன்று கழுவிக் கொடு செல்ல நல்ல மகனை எடுத்து உலகைவென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார்.
சொற்பிரிப்பு
ஒன்றும் மனத்தார் இருவர்களும் ‘உலகர் அறியார்’ என மறைவில்சென்று புக்குப் பிள்ளை தனைப் பெற்ற தாயார் செழும் கலங்கள்நன்று கழுவிக் கொடுசெல்ல நல்ல மகனை எடுத்து, உலகைவென்ற தாதையார் தலையைப் பிடிக்க விரைந்து மெய்த் தாயர்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
63
இனிய மழலைக் கிண்கிணிக் கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்கனிவாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்நனி நீடு உவகை உறுகின்றார் என்று மகிழ்ந்து நகை செய்யத்தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்.
சொற்பிரிப்பு
இனிய மழலைக் கிண்கிணிக்கால் இரண்டும் மடியின் புடை இடுக்கிக்கனி வாய் மைந்தன் கை இரண்டும் கையால் பிடிக்கக் காதலனும்‘நனி நீடு உவகை உறுகின்றார்’ என்று மகிழ்ந்து நகை செய்யத்தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலை அரிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
64
பொருவில் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான் எனப் பொலிந்துமருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் கணவனார்அருமை உயிரை எனக்கு அளித்தான் என்று மிகவும் அகம் மலரஇருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்.
சொற்பிரிப்பு
‘பொரு இல் பெருமைப் புத்திரன் மெய்த் தன்மை அளித்தான்’ எனப் பொலிந்துமருவு மகிழ்ச்சி எய்த அவர் மனைவியாரும் “கணவனார்அருமை உயிரை எனக்கு அளித்தான்” என்று மிகவும் அகம் மலரஇருவர் மனமும் பேர் உவகை எய்தி அரிய வினை செய்தார்
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
65
அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது எனக் கழித்துமறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்புஇறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்து இட்டுகறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார்.
சொற்பிரிப்பு
“அறுத்த தலையின் இறைச்சி திரு அமுதுக்கு ஆகாது” எனக் கழித்துமறைத்து நீக்கச் சந்தனத்தார் கையில் கொடுத்து மற்றை உறுப்புஇறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்திட்டுக்கறிக்கு வேண்டும் பல காயம் அரைத்துக் கூட்டிக் கடிது அமைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
66
மட்டு விரிபூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தேஅட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறோர் அருங்கலத்துப்பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச்சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார்.
சொற்பிரிப்பு
மட்டு விரி பூங்குழல் மடவார் அடுப்பில் ஏற்றி மனம் மகிழ்ந்தேஅட்ட கறியின் பதம் அறிந்து அங்கு இழிச்சி வேறு ஓர் அரும்கலத்துப்பட்ட நறையால் தாளித்துப் பலவும் மற்றும் கறி சமைத்துச்சட்ட விரைந்து போனகமும் சமைத்துக் கணவர் தமக்கு உரைத்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
67
உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைத்த அதற்குஅடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூரவிடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மெல் மலரின்புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்.
சொற்பிரிப்பு
உடைய நாதர் அமுது செய உரைத்த படியே அமைத்த அதற்குஅடையும் இன்பம் முன்னையிலும் ஆர்வம் பெருகிக் களி கூரவிடையில் வருவார் தொண்டர் தாம் விரைந்து சென்று மென்மலரின்புடைவண்டு அறையும் ஆத்தியின் கீழ் இருந்த புனிதர் முன் சென்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
68
அண்ணல் திரு முன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் அடியேன்பால்நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவுபண்ணினேனாய்ப் பசித்தருளத் தாழ்த்தது எனினும் பணி சமைத்தேன்எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும் என்று அங்கு எடுத்துரைப்பார்.
சொற்பிரிப்பு
அண்ணல் திருமுன்பு அணைந்து இறைஞ்சி அன்பர் மொழிவார் “அடியேன் பால்நண்ணி நீர் இங்கு அமுது செய வேண்டும் என்று நான் பரிவுபண்ணினேனாய்ப் பசித்து அருளத் தாழ்த்தது எனினும், பணி சமைத்தேன்;”எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்” என்றங்கு எடுத்துரைப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
69
இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும் என்று இறைஞ்சக்கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார்நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர் போதும் என்ன நிதி இரண்டும்குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார்.
சொற்பிரிப்பு
“இறையும் தாழாது எழுந்தருளி அமுது செய்யும்” என்று இறைஞ்சக்கறையும் கண்டத்தினில் மறைத்துக் கண்ணும் நுதலில் காட்டாதார்“நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்! போதும்” என்ன, நிதி இரண்டும்குறைவன் ஒருவன் பெற்று உவந்தால் போலக் கொண்டு மனை புகுந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
70
வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரைமுந்த எதிர் சென்று அடி வணங்கி முழுதும் அழகு செய்த மனைச்சந்த மலர் மாலைகள் முத்தின் தாமம் நாற்றித் தவிசு அடுத்தகந்த மலர் ஆசனம் காட்டிக் கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த.
சொற்பிரிப்பு
வந்து புகுந்து திருமனையில் மனைவியார் தாம் மாதவரைமுந்த எதிர் சென்று அடி வணங்கி, முழுதும் அழகு செய்த மனைச்சந்த மலர் மாலைகள், முத்தின் தாமம் நாற்றித். தவிசு அடுத்தகந்த மலர் ஆசனம் காட்டிக், கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
71
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கிஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து இன்பம்மேய இல்லம் எம்மருங்கும் வீசி விரை மென்மலர்ச் சாந்தம்ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்.
சொற்பிரிப்பு
தூய நீரால் சிறுத்தொண்டர் சோதியார் தம் கழல் விளக்கிஆய புனிதப் புனல் தங்கள் தலைமேல் ஆரத் தெளித்து, இன்பம்மேய இல்லம் எம்மருங்கும் வீசி, விரைமென் மலர் சாந்தம்ஏயும் தூப தீபங்கள் முதல் பூசனை செய்து இறைஞ்சுவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
72
பனி வெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சிப் பயிரவராம்புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும்படி பொற்பின்வனிதை யாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப மற்று அவர்தாம்இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க என.
சொற்பிரிப்பு
பனிவெண் திங்கள் சடை விரித்த பயில் பூங்குஞ்சிப் பயிரவராம்புனிதர் தம்மைப் போனகமும் கறியும் படைக்கும் படி, பொற்பின்வனிதையாரும் கணவரும் முன் வணங்கிக் கேட்ப, மற்றவர் தாம்“இனிய அன்னம் உடன் கறிகள் எல்லாம் ஒக்கப் படைக்க” என.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
73
பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப் பாவாடையில் ஏற்றித்தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும்வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக் கான் மேல்விரி வெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள் செய்வார்.
சொற்பிரிப்பு
பரிசு விளங்கப் பரிகலமும் திருத்திப், பாவாடையில் ஏற்றித்,தெரியும் வண்ணம் செஞ்சாலிச் செழும் போனகமும் கறி அமுதும்வரிசையினில் முன் படைத்து எடுத்து மன்னும் பரிகலக்கால் மேல்விரிவெண் துகிலின் மிசை வைக்க விமலர் பார்த்து அங்கு அருள்செய்வார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
74
சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பெல்லாம் கொண்டுமன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே என்னஅன்னம் அனையார் தலை இறைச்சி அமுதுக்காகாது எனக் கழித்தோம்என்ன அதுவும் கூட நாம் உண்பது என்றார் இடர் தீர்ப்பார்.
சொற்பிரிப்பு
“சொன்ன முறையில் படுத்த பசுத் தொடர்ந்த உறுப்பு எல்லாம் கொண்டுமன்னு சுவையில் கறி ஆக்கி மாண அமைத்தீரே?” என்னஅன்னம் அனையார்,”தலை இறைச்சி அமுதுக்கு ஆகாது எனக் கழித்தோம்”என்ன, “அதுவும் கூட நாம் உண்பது” என்றார் இடர் தீர்ப்பார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
75
சிந்தை கலங்கிச் சிறுத் தொண்டர் மனையாரோடும் திகைத்து அயரச்சந்தனத்தார் எனும் தாதியார்தாம் அந்தத் தலை இறைச்சிவந்த தொண்டர் அமுது செயும் பொழுது நினைக்க வரும் என்றேமுந்த அமைத்தேன் கறி அமுது என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார்.
சொற்பிரிப்பு
சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர் மனையாரோடும் திகைத்து அயரச்சந்தனத்தார் எனும் தாதியார் தாம் “அந்தத் தலைஇறைச்சிவந்த தொண்டர் அமுதுசெயும் பொழுது நினைக்க வரும் என்றேமுந்த அமைத்தேன் கறி அமுது” என்று எடுத்துக் கொடுக்க முகம் மலர்ந்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
76
வாங்கி மகிழ்ந்து படைத்து அதன் பின் வணங்கும் சிறுத் தொண்டரை நோக்கிஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது ஈசன் அடியார் இப்பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர் என்று பரமர் பணித்து அருளஏங்கிக் கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ என நினைவார்.
சொற்பிரிப்பு
வாங்கி, மகிழ்ந்து படைத்ததன் பின் வணங்கும் சிறுத்தொண்டரை நோக்கி“ஈங்கு நமக்குத் தனி உண்ண ஒண்ணாது; ஈசன் அடியார் இப்பாங்கு நின்றார் தமைக் கொணர்வீர்” என்று பரமர் பணித்து அருளஏங்கிக் “கெட்டேன் அமுது செய்ய இடையூறு இதுவோ?” என நினைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
77
அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார் அழிந்து அணைந்துமுகத்தில் வாட்டம் மிகப் பெருகப் பணிந்து முதல்வர்க்கு உரை செய்வார்இகத்தும் பரத்தும் இனி யாரைக் காணேன் யானும் திருநீறுசகத்தில் இடுவார் தமைக் கண்டே இடுவேன் என்று தாழ்ந்து இறைஞ்ச.
சொற்பிரிப்பு
அகத்தின் புறத்துப் போய் அருளால் எங்கும் காணார், அழிந்தணைந்துமுகத்தில் வாட்டம் மிகப் பெருகப், பணிந்து, முதல்வர்க்கு உரை செய்வார்“இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன்; யானும் திருநீறுசகத்தில் இடுவார் தமைக்கண்டே இடுவேன்” என்று தாழ்ந்து இறைஞ்ச.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
78
உம்மைப் போல் நீறு இட்டார் உளரோ உண்பீர் நீர் என்றுசெம்மைக் கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் கலம் திருத்திவெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும் எனப் படைத்தார்தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்து அருளி.
சொற்பிரிப்பு
“உம்மைப் போல நீறு இட்டார் உளரோ? உண்பீர் நீர்” என்றுசெம்மைக் கற்பில் திருவெண்காட்டு அம்மை தம்மைக் “கலம் திருத்திவெம்மை இறைச்சி சோறு இதனில் மீட்டுப் படையும்” எனப் படைத்தார்தம்மை ஊட்ட வேண்டி அவர் உண்ணப் புகலும் தடுத்தருளி.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
79
ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தரியாதுசோறு நாளும் உண்பீர் முன் உண்பது என் நம்முடன் துய்ப்பமாறின் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும் எனஈறும் முதலும் இல்லாதாருக்கு இப்போது உதவான் அவன் என்றார்.
சொற்பிரிப்பு
“ஆறு திங்கள் ஒழிந்து உண்போம் உண்ணும் அளவும் தாழாதுசோறு நாளும் உண்பீர் முன் உண்பது என்? நம் உடன் துய்ப்பமாறில் மகவு பெற்றீரேல் மைந்தன் தன்னை அழையும்” எனஈறும் முதலும் இல்லாதார்க்கு ”இப்போது உதவான் அவன்” என்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
80
நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும் என நம்பர்தாம் அங்கு அருளிச் செய்யத் தரியார் தலைவர் அமுது செய்தருளயாம் இங்கு என் செய்தால் ஆகும் என்பார் விரைவுற்று எழுந்து அருளால்பூ மென் குழலார் தம்மோடும் புறம் போய் அழைக்கப் புகும்பொழுது.
சொற்பிரிப்பு
“நாம் இங்கு உண்பது அவன் வந்தால் நாடி அழையும்” என நம்பர்தாம் அங்கு அருளிச் செயத் தரியார், “தலைவர் அமுது செய்து அருளயாம் இங்கு என் செய்தால் ஆகும்?” என்பார், விரைவுற்று எழுந்தருளால்பூமென் குழலார் தம்மோடும் புறம்போய் அழைக்கப் புகும் பொழுது.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
81
வையம் நிகழும் சிறுத் தொண்டர் மைந்தா வருவாய் என அழைத்தார்தையலாரும் தலைவர் பணி தலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்செய்ய மணியே சீராளா வாராய் சிவனார் அடியார் யாம்உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலம் இட.
சொற்பிரிப்பு
வையம் நிகழும் சிறுதொண்டர் “மைந்தா! வருவாய்” என அழைத்தார்;தையலாரும் தலைவர் பணி நிலை நிற்பாராய்த் தாம் அழைப்பார்;“செய்ய மணியே! சீராளா! வாராய் சிவனார் அடியார் யாம்உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார்” என்று ஓலம் இட.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
82
பரமர் அருளால் பள்ளியினின்று ஓடிவருவான் போல் வந்ததரமில் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்துத் தழுவித் தம்கரம் முன் அணைத்துக் கணவனார் கையில் கொடுப்பக் களி கூர்ந்தார்புரமூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம் எனும் பொலிவால்.
சொற்பிரிப்பு
பரமர் அருளால் பள்ளியின் நின்று ஓடி வருவான் போல் வந்ததரம் இல் வனப்பின் தனிப் புதல்வன் தன்னை எடுத்துத் தழுவித் தம்கர முன் அணைத்துக் கணவனார் கையில் கொடுப்பக் களி கூர்ந்தார்“புரம் மூன்று எரித்தார் திருத்தொண்டர் உண்ணப் பெற்றோம்” எனும் பொலிவால்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
83
வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்முந்தவே அப் பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்து அருளச்சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார் வீழ்ந்தார் தெருமந்தார்வெந்த இறைச்சிக் கறி அமுதும் கலத்தில் காணார் வெருவுற்றார்.
சொற்பிரிப்பு
வந்த மகனைக் கடிதில் கொண்டு அமுது செய்விப்பான் வந்தார்;முந்தவே அப்பயிரவராம் முதல்வர் அங்கண் மறைந்தருளச்சிந்தை கலங்கிக் காணாது திகைத்தார், வீழ்ந்தார், தெருமந்தார்;வெந்த இறைச்சிக் கறிஅமுதும் கலத்தில் காணார்; வெருவுற்றார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
84
செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழும் கஞ்சுகத்துப் பயிரவர் யாம்உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே எனத் தேடிமையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்ததைய லோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்.
சொற்பிரிப்பு
“செய்ய மேனிக் கருங்குஞ்சிச் செழுங் கஞ்சுகத்துப் பயிரவர் யாம்உய்ய அமுது செய்யாதே ஒளித்தது எங்கே?” எனத் தேடிமையல் கொண்டு புறத்து அணைய மறைந்த அவர் தாம் மலை பயந்ததையலோடும் சரவணத்துத் தனயரோடும் தாம் அணைவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
85
தனி வெள் விடை மேல் நெடும் விசும்பில் தலைவர் பூத கண நாதர்முனிவர் அமரர் விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றி இசைப்பஇனிய கறியும் திரு அமுதும் அமைத்தார் காண எழுந்து அருளிப்பனி வெண் திங்கள் முடி துளங்கப் பரந்த கருணை நோக்கு அளித்தார்.
சொற்பிரிப்பு
தனி வெள்விடை மேல், நெடு விசும்பில், தலைவர், பூத கணநாதர்,முனிவர், அமரர், விஞ்சையர்கள் முதலாய் உள்ளோர் போற்றிசைப்பஇனிய கறியும் திருஅமுதும் அமைத்தார் காண எழுந்தருளிப்பனிவெண் திங்கள் முடி துளங்கப் பரந்த கருணை நோக்கு அளித்தார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
86
அன்பின் வென்ற தொண்டர் அவர்க்கு அமைந்த மனைவியார் மைந்தர்முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார் எழுந்தார் ஏத்தினார்பின்பு பரமர் தகுதியினால் பெரியோர் அவருக்கு அருள் புரிவார்.
சொற்பிரிப்பு
அன்பின் வென்ற தொண்டர், அவர்க்கு அமைந்த மனைவியார், மைந்தர்முன்பு தோன்றும் பெருவாழ்வை முழுதும் கண்டு பரவசமாய்என்பும் மனமும் கரைந்து உருக விழுந்தார்; எழுந்தார்; ஏத்தினார்;பின்பு பரமர், தகுதியினால், பெரியோர் அவருக்கு அருள்புரிவார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
87
கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக் கொடியும்வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப்பூங்கமலச் சேவடிக் கீழ்நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார்என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்.
சொற்பிரிப்பு
கொன்றை வேணியார் தாமும் பாகம் கொண்ட குலக்கொடியும்வென்றி நெடுவேல் மைந்தரும் தம் விரைப் பூங்கமலச் சேவடிக் கீழ்நின்ற தொண்டர், மனைவியார், நீடு மகனார், தாதியார்என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க, உடன் கொண்டு ஏகினார்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.
88
ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதாஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப்பேறு பெற்றார் சேவடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்வேறு கழறிற்று அறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்.
சொற்பிரிப்பு
ஆறு முடிமேல் அணிந்தவருக்கு அடியார் என்று கறி அமுதாஊறு இலாத தனிப் புதல்வன் தன்னை அரிந்து அங்கு அமுது ஊட்டப்பேறு பெற்றார் சேவடிகள் தலைமேல் கொண்டு பிற உயிர்கள்வேறு கழறிற்று அறிவார் தம் பெருமை தொழுது விளம்புவாம்.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.