திருமுறை 12 · 12.038 · 12

மூர்க்க நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

மன்னிப் பெருகும் பெருந் தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும்நல் நித்திலம் வெண் திரைப்பாலி நதியின் வடபால் நலம் கொள் பதிஅன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்காட அரங்கினிடைமின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவிற் காடு வேற்காடு.
சொற்பிரிப்பு
மன்னிப் பெருகும் பெருந்தொண்டை வளநாடு அதனில் வயல் பரப்பும்நன் நித்தில வெண் திரைப் பாலி நதியின் வடபால் நலங்கொள்பதிஅன்னப் பெடைகள் குடை வாவி அலர் புக்கு ஆட அரங்கின் இடைமின்னுக் கொடிகள் துகில் கொடிகள் விழவிற்கு ஆடு வேற்காடு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

செம் பொற் புரிசை திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக் கற்றைநம்பர்க்கு உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்குஇம்பர்த் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்தம் பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்து உள்ளார்.
சொற்பிரிப்பு
செம்பொன் புரிசைத் திருவேற்காடு அமர்ந்த செய்ய சடைக்கற்றைநம்பர்க்கு, உம்பர்க்கு அமுது அளித்து நஞ்சை அமுது செய்தவருக்கு,இம்பர்த் தலத்தில் வழி அடிமை என்றும் குன்றா இயல்பில் வரும்தம்பற்று உடைய நிலை வேளாண் குலத்தில் தலைமை சார்ந்துள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கோதில் மரபில் பிறந்துவளர்ந்து அறிவு கொண்ட நாள்தொடங்கிஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அரனார்காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக்கண்டு உண்ணும்நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்.
சொற்பிரிப்பு
கோதில் மரபில் பிறந்து வளர்ந்து அறிவு கொண்ட நாள் தொடங்கிஆதி முதல்வர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து, அரனார்காதல் அடியார்க்கு அமுது ஆக்கி அமுது செய்யக் கண்டு, உண்ணும்நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தூய அடிசில் நெய் கன்னல் சுவையின் கறிகள் அவைஅமைத்துமேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தேஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி அன்பு மிகஏயுமாறு நாள் தோறும் இனைய பணி செய்து இன்புற்றார்.
சொற்பிரிப்பு
தூய அடிசில், நெய், கன்னல் சுவையின் கறிகள் அவை அமைத்துமேய அடியார் தமைப் போற்றி விருப்பால் அமுது செய்வித்தேஆய பொருளும் அவர் வேண்டும் படியால் உதவி, அன்பு மிகஏயும் ஆறு நாள்தோறும் இனைய பணிசெய்து இன்புற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்தருளமுன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள அடிமை உடன்மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றேஅன்னம் அளித்து மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார்.
சொற்பிரிப்பு
இன்ன செயலின் ஒழுகுநாள் அடியார் மிகவும் எழுந்தருளமுன்னம் உடைமை ஆன பொருள் முழுதும் மாள, அடிமையுடன்மன்னும் காணி ஆன நிலம் மற்றும் உள்ள திறம் விற்றேஅன்னம் அளித்தே மேன்மேலும் ஆரா மனத்தார் ஆயினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அங்கண் அவ்வூர் தமக்கு ஒருபற்று அடியார் தங்கட்கு அமுத ஆக்கஎங்கும் காணா வகை தோன்ற இலம்பாடு எய்தி இருந்துஅயர்வார்தங்கும் வகையால் தான் முன்பு கற்ற தன்மை நற்சூதால்பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மை இனில் போவார்.
சொற்பிரிப்பு
அங்கண் அவ்ஊர் தமக்கு ஒரு பற்று அடியார் தங்கட்கு அமுதாக்கஎங்கும் காணா வகை தோன்ற இலம்பாடு எய்தி இருந்து அயர்வார்தங்கும் வகையால் தாம் முன்பு கற்ற தன்மை நற்சூதால்பொங்கும் பொருள் ஆக்கவும் அங்குப் பொருவார் இன்மையினில் போவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பெற்றம் ஏறிப் பலிக்கு வரும் பெருமான் அமரும் தானங்கள்உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்துகற்ற சூதால் நியதியாம் கடனும் முடித்தே கருதாரூர்செற்ற சிலையார் திருக் குடந்தை அடைந்தார் வந்து சில நாளில்.
சொற்பிரிப்பு
பெற்றம் ஏறிப் பலிக்குவரும் பெருமான் அமரும் தானங்கள்உற்ற அன்பால் சென்று எய்தி உருகும் உள்ளத்தொடும் பணிந்துகற்ற சூதால் நியதியாம் கருமம் முடித்தே கருதார் ஊர்செற்ற சிலையார் திருக்குடந்தை அடைந்தார் வந்து சில நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இருளாரும் மணிகண்டர் அடியார்க்கு இன் அமுது அளிக்கப்பொருளாயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தேஉருளாயச் சூது ஆடி உறுபொருள் வென்றன நம்பர்அருளாகவே கொண்டு அங்கு அமுது செய்வித்து இன்புறுவார்.
சொற்பிரிப்பு
இருள்ஆரும் மணிகண்டர் அடியார்க்கு இன்அமுது அளிக்கப்பொருள் ஆயம் எய்துதற்குப் புகழ்க் குடந்தை அம்பலத்தேஉருள் ஆயச் சூது ஆடி உறுபொருள் வென்றன, நம்பர்அருள் ஆகவே கொண்டு அங்கு அமுது செய்வித்து இன்புறுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

முதல் சூது தாம் தோற்று முதல் பணயம் அவர் கொள்ளப்பின் சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்சொற் சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்திநற் சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நானிலத்தில்.
சொற்பிரிப்பு
முற்சூது தாம் தோற்று முதல் பணையம் அவர் கொள்ளப்பிற்சூது பல முறையும் வென்று பெரும் பொருள் ஆக்கிச்சொற்சூதால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்திநற்சூதர் மூர்க்கர் எனும் பெயர் பெற்றார் நானிலத்தில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சூதினில் வென்று எய்தும் பொருள் துரிசு அற்ற நல் உணர்வில்தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்காதலுடன் அடியார்கள் அமுது செயக் கடைப் பந்திஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்.
சொற்பிரிப்பு
சூதினில் வென்று எய்து பொருள் துரிசு அற்ற நல்உணர்வில்தீது அகல அமுது ஆக்குவார் கொள்ளத் தாம் தீண்டார்காதலுடன் அடியார்கள் அமுது செயக் கடைப்பந்திஏதம் இலா வகை தாமும் அமுது செய்து அங்கு இருக்கும் நாள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

நாதன் தன் அடியார்க்கு நல் அடிசில் நாள்தோறும்ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலேஏதங்கள் போய் அகல இவ் உலகை விட்டதற்பின்பூதங்கள் இசைபாட ஆடுவார் புரம் புக்கார்.
சொற்பிரிப்பு
நாதன் தன் அடியார்க்கு நல்அடிசில் நாள்தோறும்ஆதரவினால் அமுது செய்வித்து அங்கு அருளாலேஏதங்கள் போய் அகல இவ்உலகை விட்டதன் பின்பூதங்கள் இசை பாட ஆடுவார் புரம் புக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

வல்லார்கள் தமைவென்று சூதினால் வந்த பொருள்அல்லாரும் கறைக் கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்நல்லார் நற் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்.
சொற்பிரிப்பு
வல்லார்கள் தமை வென்று சூதினால் வந்த பொருள்அல்லாரும் கறைக்கண்டர் அடியவர்கள் தமக்கு ஆக்கும்நல்லார் நல் சூதராம் மூர்க்கர் கழல் நாம் வணங்கிச்சொல்லார் சீர்ச் சோமாசி மாறர் திறம் சொல்லுவாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.