திருமுறை 12 · 12.031 · 45

அப்பூதி அடிகள் நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்தவர் அறியா முன்னேகாண் தகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார்.
சொற்பிரிப்பு
தாண்டவம் புரிய வல்ல தம்பிரானாருக்கு அன்பர்ஈண்டிய புகழின் பாலார் எல்லையில் தவத்தின் மிக்கார்;ஆண்ட சீர் அரசின் பாதம் அடைந்து அவர் அறியா முன்னேகாண்டகு காதல் கூரக் கலந்த அன்பினராய் உள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்வளம் மிகு மனையின் வாழ்க்கை நிலையினார் மனைப் பால் உள்ளஅளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு மேதி மற்றும்உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ்வொழுகல் ஆற்றார்.
சொற்பிரிப்பு
களவு பொய் காமம் கோபம் முதலிய குற்றம் காய்ந்தார்;வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார்; மனைப்பால் உள்ளஅளவைகள், நிறைகோல், மக்கள் ஆவொடு, மேதி மற்றும்உள எலாம் அரசின் நாமம் சாற்றும் அவ் ஒழுகல் ஆற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வடிவு தாம் காணார் ஆயும் மன்னுசீர் வாக்கின் வேந்தர்அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டவர் நாமத்தால்படி நிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ளமுடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்.
சொற்பிரிப்பு
வடிவு தாம் காணார் ஆயும் மன்னு சீர் வாக்கின் வேந்தர்அடிமையும் தம்பிரானார் அருளும் கேட்டு அவர் நாமத்தால்படிநிகழ் மடங்கள் தண்ணீர்ப் பந்தர்கள் முதலாய் உள்ளமுடிவு இலா அறங்கள் செய்து முறைமையால் வாழும் நாளில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொருப்பரையன் மடப் பிடியின் உடன் புணரும் சிவக்களிற்றின்திருப் பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர்ஒருப் படு காதலில் பிறவும் உடையவர் தம்பதி வணங்கும்விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார்.
சொற்பிரிப்பு
பொருப்பு அரையன் மடப்பிடியின உடன் புணரும் சிவக்களிற்றின்திருப்பழனம் பணிந்து பணி செய் திருநாவுக்கரசர்ஒருப்படு காதலில் பிறவும் உடையவர் தம் பதி வணங்கும்விருப்பினொடும் திங்களூர் மருங்கு வழி மேவுவார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள் உடையார்உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக்குளம் நிறைந்த நீர்த் தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்வளம் மருவும் நிழல் தரு தண்ணீர்ப் பந்தர் வந்து அணைந்தார்.
சொற்பிரிப்பு
அளவில் சனம் செலவு ஒழியா வழிக்கரையில் அருள்உடையார்உளம் அனைய தண் அளித்தாய் உறுவேனில் பரிவு அகற்றிக்குளம் நிறைந்த நீர்த்தடம் போல் குளிர் தூங்கும் பரப்பினதாய்வளம் மருவும் நிழல்தரு தண் நீர்ப்பந்தர் வந்து அணைந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீதப்பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்து அருளிச்சிந்தை வியப்புற வருவார் திருநாவுக்கரசெனும் பேர்சந்தம் உற வரைந்து அதனை எம் மருங்கும் தாம் கண்டார்.
சொற்பிரிப்பு
வந்து அணைந்த வாகீசர் மந்த மாருத சீதப்பந்தர் உடன் அமுதமாம் தண்ணீரும் பார்த்தருளிச்சிந்தை வியப்பு உற வருவார் திருநாவுக்கரசு எனும் பேர்சந்தம் உற வரைந்ததனை எம்மருங்கும் தாம்கண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

இப் பந்தர் இப் பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்குஅப் பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்செப்பருஞ் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்தப்பின்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார்.
சொற்பிரிப்பு
இப்பந்தர் இப்பெயர் இட்டு இங்கு அமைத்தார் யார் என்றார்க்குஅப்பந்தர் அறிந்தார்கள் ஆண்ட அரசு எனும் பெயரால்செப்பரும் சீர் அப்பூதி அடிகளார் செய்து அமைத்தார்;தப்பின்றி எங்கும் உள சாலை குளம் கா என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து என்றுநின்ற வரை நோக்கி அவர் எவ்விடத்தார் என வினவத்துன்றிய நூல் மார்பரும் இத் தொல் பதியார் மனையின் கண்சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.
சொற்பிரிப்பு
என்று உரைக்க அரசு கேட்டு இதற்கு என்னோ கருத்து” என்றுநின்றவரை நோக்கி அவர் எவ்இடத்தார் என வினவத்துன்றிய நூல் மார்பரும் இத் தொல்பதியார்; மனையின்கண்சென்றனர் இப்பொழுது அதுவும் சேய்த்து அன்று நணித்து என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்தங்கும் மனைக் கடைத்தலை முன் சார்வாக உள் இருந்ததிங்களூர் மறைத் தலைவர் செழும் கடையில் வந்து அடைந்தார்நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார்.
சொற்பிரிப்பு
அங்கு அகன்று முனிவரும் போய் அப்பூதி அடிகளார்தங்கு மனைக் கடைத்தலைமுன் சார்வு ஆக, உள் இருந்ததிங்களூர் மறைத்தலைவர் செழுங் கடையில் வந்து அடைந்தார்நங்கள் பிரான் தமர் ஒருவர் எனக் கேட்டு நண்ணினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்று அவர் தம்அடி பணியா முன் பணியும் அரசின் எதிர் அந்தணனார்முடிவில் தவம் செய்தேன்கொல் முன்பொழியும் கருணை புரிவடிவுடையீர் என் மனையில் வந்து அருளிற்று என் என்றார்.
சொற்பிரிப்பு
கடிது அணைந்து வாகீசர் கழல் பணிய மற்றவர்தம்அடிபணியா முன் பணியும்அரசின் எதிர் அந்தணனார்முடிவில் தவம் செய்தேன்கொல்! முன் பொழியும் கருணை புரிவடிவு உடையீர் என் மனையில் வந்த ருளிற்று என்? என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஒரு குன்ற வில்லாரைத் திருப் பழனத்துள் இறைஞ்சிவருகின்றோம் வழிக் கரையில் நீர் வைத்த வாய்ந்த வளம்தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்டத் தகைமைபுரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார்.
சொற்பிரிப்பு
ஒருகுன்ற வில்லாரைத் திருப்பழனத்து உள் இறைஞ்சிவருகின்றோம்; வழிக்கரையில் நீர் வைத்த வாய்ந்தவளம்தருகின்ற நிழல் தண்ணீர்ப் பந்தரும் கண்டு அத்தகைமைபுரிகின்ற அறம் பிறவும் கேட்டு அணைந்தோம் எனப் புகல்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

ஆறணியும் சடை முடியார் அடியார்க்கு நீர் வைத்தஈறில்பெருந் தண்ணீர்ப் பந்தரில் நும் பேர் எழுதாதேவேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என் கொல்கூறும் என எதிர் மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.
சொற்பிரிப்பு
ஆறு அணியும் சடைமுடியார் அடியார்க்கு நீர் வைத்தஈறுஇல் பெரும் தண்ணீர்ப் பந்தரில் நும்பேர் எழுதாதேவேறு ஒரு பேர் முன் எழுத வேண்டிய காரணம் என்கொல்?கூறும் என எதிர்மொழிந்தார் கோதில் மொழிக் கொற்றவனார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்நன்று அருளிச் செய்திலீர் நாணில் அமண் பதகர் உடன்ஒன்றிய மன்னவன் சூட்சி திருத் தொண்டின் உறைப் பாலேவென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒரு பேர் என வெகுள்வார்.
சொற்பிரிப்பு
நின்ற மறையோர் கேளா நிலை அழிந்த சிந்தையராய்நன்று அருளிச் செய்திலீர்! நாணில்அமண் பதகர் உடன்ஒன்றிய மன்னவன் சூழ்ச்சி திருத் தொண்டின் உறைப்பாலேவென்றவர் தம் திருப்பேரோ வேறு ஒருபேர்? என வெகுள்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத் தொண்டாலேஇம்மையிலும் பிழைப்பது என என் போல்வாரும் தெளியச்செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுதவெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி.
சொற்பிரிப்பு
நம்மை உடையவர் கழல் கீழ் நயந்த திருத்தொண்டாலேஇம்மையிலும் பிழைப்பது என என்போல்வாரும் தெளியச்செம்மை புரி திருநாவுக்கரசர் திருப் பெயர் எழுதவெம்மை மொழி யான் கேட்க விளம்பினீர் என விளம்பி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமைஅங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரேமங்கலம் ஆம் திரு வேடத்துடன் இன்று இவ்வகை மொழிந்தீர்எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார்.
சொற்பிரிப்பு
பொங்கு கடல் கல் மிதப்பில் போந்து ஏறும் அவர் பெருமைஅங்கணர் தம் புவனத்தில் அறியாதார் யார் உளரே!மங்கலமாம் திருவேடத்து உடன் நின்று இவ்வகை மொழிந்தீர்;எங்கு உறைவீர் நீர் தாம் யார் இயம்பும் என இயம்பினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

திரு மறையோர் அது மொழியத் திரு நாவுக்கரசர் அவர்பெருமை அறிந்து உரை செய்வார் பிற துறையின் நின்றேறஅருளும் பெரும் சூலையினால் ஆட் கொள்ள அடைந்து உய்ந்ததெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார்.
சொற்பிரிப்பு
திருமறையோர் அது மொழியத் திருநாவுக்கரசர் அவர்பெருமை அறிந்து உரை செய்வார்பிற துறையின் நின்று ஏறஅருளுபெரும் சூலையினால் ஆட்கொள்ள அடைந்து உய்ந்ததெருளும் உணர்வு இல்லாத சிறுமையேன் யான் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள் தாம்கர கமலம் மிசை குவியக் கண் அருவி பொழிந்து இழியஉரை குழறி உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத்தரையின் மிசை வீழ்ந்து அவர் தம் சரண கமலம் பூண்டார்.
சொற்பிரிப்பு
அரசு அறிய உரை செய்ய அப்பூதி அடிகள்தாம்கர கமலம் மிசைகுவியக் கண்அருவி பொழிந்து இழிய,உரைகுழறி, உடம்பு எல்லாம் உரோம புளகம் பொலியத்,தரையின்மிசை வீழ்ந்து, அவர் தம் சரண கமலம் பூண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

மற்றவரை எதிர் வணங்கி வாகீசர் எடுத்து அருளஅற்றவர்கள் அரு நிதியம் பெற்றார் போல் அரு மறையோர்முற்றவுளம் களி கூர முன் நின்று கூத்தாடிஉற்ற விருப்புடன் சூழ ஓடினார் பாடினார்.
சொற்பிரிப்பு
மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தருளஅற்றவர்கள் அருநிதியம் பெற்றார் போல் அருமறையோர்முற்ற உளம் களிகூர முன் நின்று கூத்து ஆடி,உற்ற விருப்பு உடன் சூழஓடினார் பாடினார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

மூண்ட பெரு மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதேஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்ஆண்ட அரசு எழுந்து அருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப்பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார்.
சொற்பிரிப்பு
மூண்ட பெரும் மகிழ்ச்சியினால் முன் செய்வது அறியாதேஈண்ட மனை அகத்து எய்தி இல்லவர்க்கும் மக்களுக்கும்ஆண்டஅரசு எழுந்தருளும் ஓகை உரைத்து ஆர்வம் உறப்பூண்ட பெரும் சுற்றம் எலாம் கொடு மீளப் புறப்பட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்அனைவரையும் கொண்டு இறைஞ்சி ஆராத காதலுடன்முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்புனை மலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்.
சொற்பிரிப்பு
மனைவியார் உடன் மக்கள் மற்றும் உள்ள சுற்றத்தோர்அனைவரையும் கொண்டு இறைஞ்சிஆராத காதல்உடன்முனைவரை உள் எழுந்து அருளுவித்து அவர் தாள் முன் விளக்கும்புனைமலர் நீர் தங்கள் மேல் தெளித்து உள்ளும் பூரித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பினுடன்வாசம் நிறை திருநீற்றுக் காப்பு ஏந்தி மனம் தழைப்பத்தேசம் உய்ய வந்த வரைத் திரு அமுது செய்விக்கும்நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்.
சொற்பிரிப்பு
ஆசனத்தில் பூசனைகள் அமர்வித்து விருப்பின் உடன்வாசம் நிறை திருநீற்றுக் காப்பு ஏந்தி, மனம் தழைப்பத்தேசம் உய்ய வந்தவரைத் திருஅமுது செய்விக்கும்நேசம் உற விண்ணப்பம் செய அவரும் அது நேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

செய்தவர் இசைந்த போது திரு மனையாரை நோக்கிஎய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்றுமைதிகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றேஉய்தும் என்று உவந்து கொண்டு திரு அமுது ஆக்கல் உற்றார்.
சொற்பிரிப்பு
செய்தவர் இசைந்த போது திருமனையாரை நோக்கிஎய்திய பேறு நம்பால் இருந்தவாறு என்னே என்றுமைதிகழ் மிடற்றினான் தன் அருளினால் வந்தது என்றேஉய்தும் என்று உவந்து கொண்டு திருஅமுது ஆக்கல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

தூய நற் கறிகள் ஆன அறுவகைச் சுவையால் ஆக்கிஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள்சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கு அரசை வாழைமேய பொற் குருத்துக் கொண்டுவா என விரைந்து விட்டார்.
சொற்பிரிப்பு
தூய நல் கறிகள் ஆனஅறுவகைச் சுவையால் ஆக்கி,ஆய இன் அமுதும் ஆக்கி அமுது செய்து அருளத் தங்கள்சேயவர் தம்மில் மூத்த திருநாவுக்கரசை வாழைமேய பொன் குருத்துக் கொண்டு வா என விரைந்து விட்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப் பெற்றேன் என்றுஒல்லையில் விரைந்து தோட்டத்துள் புக்குப் பெரிய வாழைமல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்றுஅல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே.
சொற்பிரிப்பு
நல்ல தாய் தந்தை ஏவ நான் இது செயப்பெற்றேன் என்றுஒல்லையில் விரைந்து தோட்டத்து உள் புக்குப் பெரிய வாழைமல்லல் அம் குருத்தை ஈரும் பொழுதினில் வாள் அரா ஒன்றுஅல்லல் உற்று அழுங்கிச் சோர அங்கையில் தீண்டிற்று அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்றபை அரா உதறி வீழ்த்துப் பதைப்பு உடன் பாந்தள் பற்றும்வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன் என்று ஓடி வந்தான்.
சொற்பிரிப்பு
கையினில் கவர்ந்து சுற்றிக் கண் எரி காந்துகின்றபை அரா உதறி வீழ்த்துப் பதைப்புடன் பாந்தள் பற்றும்வெய்ய வேகத்தால் வீழா முன்னம் வேகத்தால் எய்திக்கொய்த இக் குருத்தைச் சென்று கொடுப்பன்” என்று ஓடி வந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் உந்தவருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்அருந்தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்றுதிருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான்.
சொற்பிரிப்பு
பொருந்திய விட வேகத்தில் போதுவான் வேகம் முந்தவருந்தியே அணையும் போழ்து மாசுணம் கவர்ந்தது யார்க்கும்அருந்தவர் அமுது செய்யத் தாழ்க்க யான் அறையேன் என்றுதிருந்திய கருத்தினோடும் செழுமனை சென்று புக்கான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம்தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்துவிரியுரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்பரி கலக் குருத்தைத் தாயார் பால் வைத்துப் படி மேல் வீழ்ந்தான்.
சொற்பிரிப்பு
எரிவிடம் முறையே ஏறித் தலைக் கொண்ட ஏழாம் வேகம்தெரிவுற எயிறும் கண்ணும் மேனியும் கருகித் தீந்துவிரி உரை குழறி ஆவி விடக் கொண்டு மயங்கி வீழ்வான்பரிகலக் குருத்தைத் தாயார்பால் வைத்துப் படிமேல் வீழ்ந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தை யாரும்உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவு(ம்)மேனிவிளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீழ்ந்தான் என்றுதுளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்.
சொற்பிரிப்பு
தளர்ந்து வீழ் மகனைக் கண்டு தாயரும் தந்தையாரும்உளம் பதைத்து உற்று நோக்கி உதிரம் சோர் வடிவும் மேனிவிளங்கிய குறியும் கண்டு விடத்தினால் வீந்தான் என்றுதுளங்குதல் இன்றித் தொண்டர் அமுது செய்வதற்குச் சூழ்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயினுள் பெய்து மூடிப்புற மனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தேஅற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம் என்றுவிறல் உடைத் தொண்டனார் பால் விருப்பொடு விரைந்து வந்தார்.
சொற்பிரிப்பு
பெறல் அரும் புதல்வன் தன்னைப் பாயின் உள் பெய்து மூடிப்புறமனை முன்றில் பாங்கு ஓர் புடையினில் மறைத்து வைத்தேஅற இது தெரியா வண்ணம் அமுது செய்விப்போம்” என்றுவிறல்உடைத் தொண்டனார்பால் விருப்பொடு விரைந்து வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்கின்றது என்றேஅடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்துப்படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுது செய்து எம்குடி முழுதும் உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு.
சொற்பிரிப்பு
கடிது வந்து அமுது செய்யக் காலம் தாழ்க்கின்றது என்றேஅடிசிலும் கறியும் எல்லாம் அழகுற அணைய வைத்துப்படியில் சீர்த் தொண்டனார் முன் பணிந்து எழுந்து அமுதுசெய்து எம்குடிமுழுது உய்யக் கொள்வீர் என்று அவர் கூறக் கேட்டு.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

அருந்தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி வேறு ஓர்திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்தும் முன்னர்இருந்து வெண் நீறு சாத்தி இயல்புடை இருவருக்கும்பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
சொற்பிரிப்பு
அருந்தவர் எழுந்து செய்ய அடி இணை விளக்கி, வேறு ஓர்திருந்தும் ஆசனத்தில் ஏறிப் பரிகலம் திருத்து முன்னர்இருந்து வெண் நீறு சாத்தி, இயல்புடை இருவருக்கும்பொருந்திய நீறு நல்கிப் புதல்வர்க்கும் அளிக்கும் போழ்தில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக்காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னேமேதகு பூதி சாத்த என்றலும் விளைந்த தன்மையாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார்.
சொற்பிரிப்பு
ஆதி நான்மறை நூல் வாய்மை அப்பூதியாரை நோக்கிக்காதலர் இவர்க்கு மூத்த சேயையும் காட்டும் முன்னே,மேதகு பூதி சாத்த என்றலும், விளைந்த தன்மையாதும் ஒன்று உரையார் இப்போது இங்கு அவன் உதவான் என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

அவ்வுரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்செவ்விய திரு உள்ளத்து ஓர் தடு மாற்றம் சேர நோக்கிஇவ்வுரை பொறாது என் உள்ளம் என் செய்தான் இதற்கு ஒன்று உண்டால்மெய் விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்பு உற்று அஞ்சி.
சொற்பிரிப்பு
அவ் உரை கேட்ட போதே அங்கணர் அருளால் அன்பர்செவ்விய திரு உள்ளத்தோர் தடுமாற்றம் சேர நோக்கிஇவ்உரை பொறாது என் உள்ளம் என் செய்தான், இதற்கு ஒன்று உண்டால்மெய்விரித்து உரையும் என்ன விளம்புவார் விதிர்ப்புற்று அஞ்சி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோவருவது என்று உரையார் ஏனும் மாதவர் வினவ வாய்மைதெரிவுற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்துபரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே.
சொற்பிரிப்பு
பெரியவர் அமுது செய்யும் பேறு இது பிழைக்க என்னோவருவது என்று உரையாரேனும் மாதவர் வினவ, வாய்மைதெரிவு உற உரைக்க வேண்டும் சீலத்தால் சிந்தை நொந்துபரிவொடு வணங்கி மைந்தர்க்கு உற்றது பகர்ந்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

நாவினுக்கரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றேஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்பாவிசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்று வித்தார்.
சொற்பிரிப்பு
நாவினுக்கு அரசர் கேளா நன்று நீர் புரிந்த வண்ணம்!யாவர் இத் தன்மை செய்தார் என்று முன் எழுந்து சென்றே,ஆவி தீர் சவத்தை நோக்கி அண்ணலார் அருளும் வண்ணம்பா இசைப் பதிகம் பாடிப் பணி விடம் பாற்றுவித்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

தீ விடம் நீங்க உய்ந்த திரு மறையவர் தம் சேயும்மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்றுசேவுகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்யபூவடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே.
சொற்பிரிப்பு
தீ விடம் நீங்க உய்ந்த திருமறையவர் தம் சேயும்,மேவிய உறக்கம் நீங்கி விரைந்து எழுவானைப் போன்று,சே உகைத்தவர் ஆட் கொண்ட திருநாவுக்கரசர் செய்யபூ அடி வணங்கக் கண்டு புனித நீறு அளித்தார் அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

பிரிவுறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள்அறிவரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச்சிறிது இடையூறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார்.
சொற்பிரிப்பு
பிரிவு உறும் ஆவி பெற்ற பிள்ளையைக் காண்பார் தொண்டின்நெறியினைப் போற்றி வாழ்ந்தார் நின்ற அப் பயந்தார் தாங்கள்அறிவு அரும் பெருமை அன்பர் அமுது செய்து அருளுதற்குச்சிறிது இடை ஊறு செய்தான் இவன் என்று சிந்தை நொந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

ஆங்கவர் வாட்டம் தன்னை அறிந்து சொல்அரசர் கூடஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்றபாங்கினில் இருப்ப முந்நூல் பயில் மணி மார்பர் தாமும்தாங்கிய மகிழ்ச்சி யோடும் தகுவன சமைத்துச் சார்வார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அவர் வாட்டம் தன்னை அறிந்து சொல் அரசர் கூடஓங்கிய மனையில் எய்தி அமுது செய்து அருள உற்றபாங்கினில் இருப்ப முந்நூல் பயில்மணி மார்பர் தாமும்தாங்கிய மகிழ்ச்சியோடும் தகுவன சமைத்துச் சார்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்புடைத் தீபம் ஏற்றிநிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து நீரால்மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார்**( ** மன்னுவித்தார் என்றும் பாடம் ).
சொற்பிரிப்பு
புகழ்ந்த கோமயத்து நீரால் பூமியைப் பொலிய நீவித்,திகழ்ந்த வான் சுதையும் போக்கிச் சிறப்பு உடைத் தீபம் ஏற்றி,நிகழ்ந்த அக் கதலி நீண்ட குருத்தினை விரித்து, நீரால்மகிழ்ந்துடன் விளக்கி ஈர்வாய் வலம் பெற மரபின் வைத்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

திருந்திய வாச நன்னீர் அளித்திட திருக்கை நீவும்பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகளுடனே நோக்கிஅரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்னவிரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்.
சொற்பிரிப்பு
திருந்திய வாச நன்னீர் அளித்திடத் திருக்கை நீவும்பெருந்தவர் மறையோர் தம்மைப் பிள்ளைகள் உடனே நோக்கிஅரும் புதல்வர்களும் நீரும் அமுது செய்வீர் இங்கு என்னவிரும்பிய உள்ளத்தோடு மேலவர் ஏவல் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச்சிந்தை மிக்கு இல்ல மாதர் திரு அமுது எடுத்து நல்கக்கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும்அந் தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்தருளினாரே.
சொற்பிரிப்பு
மைந்தரும் மறையோர் தாமும் மருங்கு இருந்து அமுது செய்யச்சிந்தை மிக்கு இல்ல மாதர் திருஅமுது எடுத்து நல்கக்கொந்து அவிழ் கொன்றை வேணிக் கூத்தனார் அடியாரோடும்அந்தமிழ் ஆளியார் அங்கு அமுது செய்து அருளினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

மாதவ மறையோர் செல்வ மனையிடை அமுது செய்துகாதல் நண்பு அளித்துப் பன்னாள் கலந்து உடன் இருந்த பின்றைமேதகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்நாதர் தம் பாதம் சேர்ந்து நற்றமிழ்ப் பதிகம் செய்வார்.
சொற்பிரிப்பு
மாதவ மறையோர் செல்வ மனை இடை அமுது செய்துகாதல் நண்பு அளித்துப் பல்நாள் கலந்து உடன் இருந்த பின்றைமேதகு நாவின் மன்னர் விளங்கிய பழன மூதூர்நாதர் தம் பாதம் சேர்ந்து நற்றமிழ்ப் பதிகம் செய்வார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்றமெய்ப் பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொல் மாலை வேய்ந்தஇப்பூதி பெற்ற நல்லோர் எல்லையில் அன்பால் என்றும்செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்.
சொற்பிரிப்பு
அப்பூதி அடிகளார் தம் அடிமையைச் சிறப்பித்து ஆன்றமெய்ப்பூதி அணிந்தார் தம்மை விரும்பு சொன்மாலை வேய்ந்தஇப்பூதி பெற்ற நல்லோர் எல்லையில் அன்பால் என்றும்செப்பு ஊதியம் கைக் கொண்டார் திருநாவுக்கரசர் பாதம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

இவ் வகை அரசின் நாமம் ஏத்தி எப் பொருளும் நாளும்அவ் அருந்தவர் பொற்றாளே என உணர்ந்து அடைவார் செல்லும்செவ்விய நெறியது ஆகத் திருத் தில்லை மன்றுள் ஆடும்நவ்வியம் கண்ணாள் பங்கர் நற்கழல் நண்ணினாரே.
சொற்பிரிப்பு
இவ்வகை அரசின் நாமம் ஏத்தி எப்பொருளும் நாளும்அவ்அருந்தவர் பொன் தாளே என உணர்ந்து அடைவார் செல்லும்செவ்விய நெறியது ஆகத் திருத்தில்லை மன்றுள் ஆடும்நவ்வி அம் கண்ணாள் பங்கர் நற்கழல் நண்ணினாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

மான் மறிக் கையர் பொற்றாள் வாகீசர் அடைவால் பெற்றமேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிப்கான் மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கைநான் மறை நீல நக்கர் திருத் தொழில் நவிலல் உற்றேன்.
சொற்பிரிப்பு
மான் மறிக் கையர் பொற்றாள் வாகீசர் அடைவால் பெற்றமேன்மை அப்பூதியாராம் வேதியர் பாதம் போற்றிக்கான்மலர்க் கமல வாவிக் கழனி சூழ் சாத்த மங்கைநான்மறை நீல நக்கர் திருத்தொழில் நவிலல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.