திருமுறை 12 · 12.017 · 35

குங்குலியக் கலய நாயனார் புராணம்

அருளியவர்
சேக்கிழார்

1

வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டின்ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயிற் பதி எறி நீர்க் கங்கைதோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றைக்காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும்.
சொற்பிரிப்பு
வாய்ந்த நீர் வளத்தால் ஓங்கி மன்னிய பொன்னி நாட்டில்ஏய்ந்த சீர் மறையோர் வாழும் எயில் பதி எறி நீர்க் கங்கைதோய்ந்த நீள் சடையார் பண்டு தொண்டர் மேல் வந்த கூற்றைக்காய்ந்த சேவடியார் நீடி இருப்பது கடவூர் ஆகும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வயல் எலாம் விளை செஞ் சாலி வரம்பு எலாம் வளையின் முத்தம்அயல் எலாம் வேள்விச் சாலை அணை எலாம் கழுநீர்க் கற்றைபுயல் எலாம் கமுகின் காடு அப்புறமெலாம் அதன் சீர் போற்றல்செயல் எலாம் தொழில்கள் ஆறே செழுந் திருக் கடவூர் என்றும்.
சொற்பிரிப்பு
வயல் எலாம் விளை செஞ்சாலி; வரம்பு எலாம் வளையின் முத்தம்;அயல் எலாம் வேள்விச் சாலை; அணை எலாம் கழுநீர்க் கற்றை;புயல் எலாம் கமுகின் காடு; அப் புறம் எலாம் அதன் சீர் போற்றல்;செயல் எலாம் தொழில்கள் ஆறே செழுந்திருக் கடவூர் என்றும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

குடங் கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும்இடம் படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்வடம் புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச்சடங்குடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.
சொற்பிரிப்பு
குடங்கையின் அகன்ற உண் கண் கடைசியர் குழுமி ஆடும்இடம்படு பண்ணை தோறும் எழுவன மருதம் பாடல்;வடம்புரி முந்நூல் மார்பின் வைதிக மறையோர் செய்கைச்சடங்கு உடை இடங்கள் தோறும் எழுவன சாமம் பாடல்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவிச்செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம் பால் நாறும்மங்குல் தோய் மாடச் சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்அங்கவை பொழிந்த நீரும் ஆகுதி புகைப்பால் நாறும்.
சொற்பிரிப்பு
துங்க நீள் மருப்பின் மேதி படிந்து பால் சொரிந்த வாவிச்செங்கயல் பாய்ந்து வாசக் கமலமும் தீம்பால் நாறும்;மங்குல் தோய் மாடச் சாலை மருங்கு இறை ஒதுங்கும் மஞ்சும்அங்கு அவை பொழிந்த நீரும் ஆகுதிப் புகைப்பால் நாறும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார்அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்பெருநதி அணியும் வேணிப் பிரான் கழல் பேணி நாளும்உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார்.
சொற்பிரிப்பு
மருவிய திருவின் மிக்க வளம்பதி அதனில் வாழ்வார்அருமறை முந்நூல் மார்பின் அந்தணர் கலயர் என்பார்பெருநதி அணியும் வேணிப் பிரான் கழல் பேணி நாளும்உருகிய அன்பு கூர்ந்த சிந்தையார் ஒழுக்கம் மிக்கார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பாலனாம் மறையோன் பற்றப் பயங்கெடுத்து அருளும் ஆற்றால்மாலும் நான் முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்துகாலனார் உயிர் செற்றார்க்குக் கமழ்ந்த குங்குலியத் தூபம்சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலை நின்றுள்ளார்.
சொற்பிரிப்பு
பாலனாம் மறையோன் பற்றப் பயம் கெடுத்து அருளும் ஆற்றால்மாலும் நான்முகனும் காணா வடிவு கொண்டு எதிரே வந்துகாலன் ஆர் உயிர் செற்றார்க்குக் கமழ்ந்த குங்குலியத் தூபம்சாலவே நிறைந்து விம்ம இடும் பணி தலைநின்று உள்ளார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண்ணுதல் எம்பிராற்குப்பொங்கு குங்குலியத் தூபம் பொலிவுறப் போற்றிச் செல்லஅங்கவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்தங்கள் நாயகர்க்குத் தாம் முன்செய் பணி தவாமை உய்த்தார்.
சொற்பிரிப்பு
கங்கை நீர் கலிக்கும் சென்னிக் கண்நுதல் எம்பிராற்குப்பொங்கு குங்குலியத் தூபம் பொலிவு உறப் போற்றிச் செல்லஅங்கு அவர் அருளினாலே வறுமை வந்து அடைந்த பின்னும்தங்கள் நாயகர்க்குத் தாம் முன் செய்பணி தவாமை உய்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

இந்நெறி ஒழுகு நாளில் இலம்பாடு நீடு செல்லநன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்பன்னெடுந் தனங்கள் மாளப் பயில் மனை வாழ்க்கை தன்னில்மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்.
சொற்பிரிப்பு
இந்நெறி ஒழுகும் நாளில் இலம்பாடு நீடு செல்லநன்னிலம் முற்றும் விற்றும் நாடிய அடிமை விற்றும்பன் நெடும் தனங்கள் மாளப் பயில் மனை வாழ்க்கை தன்னின்மன்னிய சுற்றத்தோடு மக்களும் வருந்தினார்கள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

யாதொன்றும் இல்லையாகி இரு பகல் உணவு மாறிப்பேதுறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கிகாதல்செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக்கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெல் கொள்ளும் என்றார்.
சொற்பிரிப்பு
யாது ஒன்றும் இல்லை ஆகி இருபகல் உணவு மாறிப்பேது உறு மைந்தரோடும் பெருகு சுற்றத்தை நோக்கிக்காதல் செய் மனைவியார் தம் கணவனார் கலயனார் கைக்கோதில் மங்கலநூல் தாலி கொடுத்து ”நெல் கொள்ளும்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அப்பொழுது அதனைக் கொண்டு நெல் கொள்வான் அவரும் போகஒப்பில் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்இப்பொதி என் கொல் என்றார் (க்கு) உள்ளவாறு இயம்பக் கேட்டுமுப்புரி வெண்நூல் மார்பர் முகம் மலர்ந்து இதனைச் சொன்னார்.
சொற்பிரிப்பு
அப்பொழுது அதனைக் கொண்டு நெல்கொள்வான் அவரும் போகஒப்பில் குங்குலியம் கொண்டு ஓர் வணிகனும் எதிர் வந்து உற்றான்;“இப்பொதி என்கொல்?” என்றார்க்கு உள்ளவாறு இயம்பக் கேட்டுமுப்புரி வெண்நூல் மார்பர் முகமலர்ந்து இதனைச் சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஆறு செஞ் சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கானநாறுகுங்குலியம் ஈதேல் நான் இன்று பெற்றேன் நல்லபேறு மற்றிதன் மேல் உண்டோ பெறாப்பேறு பெற்று வைத்துவேறினிக் கொள்வது என் என்று உரைத்தெழும் விருப்பின் மிக்கார்.
சொற்பிரிப்பு
“ஆறு செஞ்சடைமேல் வைத்த அங்கணர் பூசைக்கு ஆனநாறு குங்குலியம் ஈதேல் நான் இன்று பெற்றேன்; நல்லபேறு மற்று இதன்மேல் உண்டோ? பெறாப்பேறு பெற்று வைத்துவேறு இனிக் கொள்வது என்?” என்று உரைத்து எழும் விருப்பின் மிக்கார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

பொன் தரத் தாரும் என்று புகன்றிட வணிகன் தானும்என் தர இசைந்தது என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்அன்றவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டுநின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழுகளிப்பினோடும்.
சொற்பிரிப்பு
“பொன் தரத் தாரும்” என்று புகன்றிட வணிகன் தானும்“என் தர இசைந்தது?” என்னத் தாலியைக் கலயர் ஈந்தார்;அன்று அவன் அதனை வாங்கி அப்பொதி கொடுப்பக் கொண்டுநின்றிலர் விரைந்து சென்றார் நிறைந்து எழு களிப்பினோடும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

விடையவர் வீரட் டானம் விரைந்து சென்று எய்தி என்னைஉடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்அடைவுற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்கச்சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு இல்லார்.
சொற்பிரிப்பு
விடையவர் வீரட்டானம் விரைந்து சென்று எய்தி என்னைஉடையவர் எம்மை ஆளும் ஒருவர் தம் பண்டாரத்தில்அடைவு உற ஒடுக்கி எல்லாம் அயர்த்து எழும் அன்பு பொங்கச்சடையவர் மலர்த்தாள் போற்றி இருந்தனர் தமக்கு ஒப்பு இல்லார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்தன் பெரு நிதியந் தூர்த்துத் தரணி மேல் நெருங்க எங்கும்பொன்பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்கமல்பெருஞ் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட.
சொற்பிரிப்பு
அன்பர் அங்கு இருப்ப நம்பர் அருளினால் அளகை வேந்தன்தன்பெரு நிதியம் தூர்த்துத் தரணிமேல் நெருங்க எங்கும்பொன் பயில் குவையும் நெல்லும் பொருவில் பல் வளனும் பொங்கமன் பெருஞ் செல்வம் ஆக்கி வைத்தனன் மனையில் நீட,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடிஅற்றை நாள் இரவு தன்னில் அயர்வுறத் துயிலும் போதில்நல்தவக் கொடியனார்க்கு கனவிடை நாதன் நல்கத்தெற்றென உணர்ந்து செல்வம் கண்ட பின் சிந்தை செய்வார்.
சொற்பிரிப்பு
மற்றவர் மனைவியாரும் மக்களும் பசியால் வாடிஅற்றை நாள் இரவு தன்னில் அயர்வு உறத் துயிலும் போதில்நற்றவக் கொடியனார்க்குக் கனவு இடை நாதன் நல்கத்தெற்றென உணர்ந்து செல்வம் கண்டபின் சிந்தை செய்வார்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்அம் பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ளஎம்பிரான் அருளாம் என்றே இருகரங் குவித்துப் போற்றித்தம் பெரும் கணவனார்க்குத் திரு அமுது அமைக்கச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
கொம்பனார் இல்லம் எங்கும் குறைவு இலா நிறைவில் காணும்அம்பொனின் குவையும் நெல்லும் அரிசியும் முதலாய் உள்ளஎம்பிரான் அருளாம் என்றே இருகரம் குவித்துப் போற்றித்தம்பெரும் கணவனார்க்குத் திருஅமுது அமைக்கச் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்ஆலும் அன்புடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்சாலநீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப்பாலின் அடிசில் உண்டு பருவரல் ஒழிக என்றார்.
சொற்பிரிப்பு
காலனைக் காய்ந்த செய்ய காலனார் கலயனாராம்ஆலும் அன்பு உடைய சிந்தை அடியவர் அறியும் ஆற்றால்“சால நீ பசித்தாய் உன் தன் தட நெடு மனையில் நண்ணிப்பாலின் இன் அடிசில் உண்டு பருவரல் ஒழிக” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

கலையனார் அதனைக் கேளாக் கை தொழுது இறைஞ்சிக் கங்கைஅலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித்தலை மிசைப் பணிமேற் கொண்டு சங்கரன் கோயில் நின்றுமலை நிகர் மாட வீதி மருங்கு தம் மனையைச் சார்ந்தார்.
சொற்பிரிப்பு
கலயனார் அதனைக் கேளாக், கைதொழுது இறைஞ்சிக், கங்கைஅலைபுனல் சென்னியார் தம் அருள் மறுத்து இருக்க அஞ்சித்,தலைமிசைப் பணிமேல் கொண்டு சங்கரன் கோயில் நின்றுமலைநிகர் மாட வீதி மருங்கு தம் மனையைச் சார்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்தசெல்வத்தைக் கண்டு நின்று திரு மனையாரை நோக்கிவில்லொத்த நுதலாய் இந்த விளைவு எல்லாம் என்கொல் என்னஅல்லொத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது என்றார்.
சொற்பிரிப்பு
இல்லத்தில் சென்று புக்கார் இருநிதிக் குவைகள் ஆர்ந்தசெல்வத்தைக் கண்டு, நின்று, திருமனையாரை நோக்கி,“வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவு எலாம் என்கொல்?” என்ன“அல் ஒத்த கண்டன் எம்மான் அருள் தர வந்தது” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

மின்னிடை மடவார் கூற மிக்க சீர்க் கலயனார் தாம்மன்னிய பெரும் செல்வத்து வளமலி சிறப்பை நோக்கிஎன்னையும் ஆளும் தன்மைத்து எந்தை எம்பெருமான் ஈசன்தன்னருள் இருந்த வண்ணம் என்று கைதலைமேல் கொண்டார்.
சொற்பிரிப்பு
மின் இடை மடவார் கூற மிக்க சீர்க் கலயனார் தாம்மன்னிய பெரும் செல்வத்து வளமலி சிறப்பை நோக்கி“என்னையும் ஆளும் தன்மைக்கு எந்தை எம் பெருமான் ஈசன்தன் அருள் இருந்த வண்ணம்” என்று கை தலைமேல் கொண்டார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

பதும நற்திருவின் மிக்கார் பரிகலந் திருத்திக் கொண்டுகது மெனக் கணவனாரைக் கண்ணுதற்கு அன்பரோடும்விதிமுறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்டஅது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறைக் கலயனார் தாம்.
சொற்பிரிப்பு
பதும நல் திருவின் மிக்கார் பரிகலம் திருத்திக் கொண்டுகதும் எனக் கணவனாரைக் கண் நுதற்கு அன்பரோடும்விதி முறை தீபம் ஏந்தி மேவும் இன் அடிசில் ஊட்டஅது நுகர்ந்து இன்பம் ஆர்ந்தார் அருமறைக் கலயனார் தாம்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

ஊர் தொறும் பலி கொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலேபாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்சீருடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்.
சொற்பிரிப்பு
ஊர்தொறும் பலிகொண்டு உய்க்கும் ஒருவனது அருளினாலேபாரினில் ஆர்ந்த செல்வம் உடையராம் பண்பில் நீடிச்சீர்உடை அடிசில் நல்ல செழுங்கறி தயிர் நெய் பாலால்ஆர்தரு காதல் கூர அடியவர்க்கு உதவும் நாளில்,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

செங்கண் வெள் ஏற்றின் பாகன் திருப் பனந் தாளில் மேவும்அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக்கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல.
சொற்பிரிப்பு
செங்கண் வெள் ஏற்றின் பாகன் திருப்பனந்தாளில் மேவும்அங்கணன் செம்மை கண்டு கும்பிட அரசன் ஆர்வம்பொங்கித் தன் வேழம் எல்லாம் பூட்டவும் நேர் நில்லாமைக்கங்குலும் பகலும் தீராக் கவலை உற்று அழுங்கிச் செல்ல,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்கநன்நெறிக் கலயனார் தாம் நாதனை நேரே காணும்அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும்மின்னெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.
சொற்பிரிப்பு
மன்னவன் வருத்தம் கேட்டு மாசு அறு புகழின் மிக்கநன்னெறிக் கலயனார் தாம் நாதனை நேரே காணும்அந்நெறி தலை நின்றான் என்று அரசனை விரும்பித் தாமும்மின் நெறித்து அனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

மழுவுடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்றுதொழுது போந்து அன்பினோடும் தொன்மறை நெறி வழாமைமுழுதுலகினையும் போற்ற மூன்று எரிபுரப் போர் வாழும்செழு மலர்ச் சோலை வேலித் திருப் பனந் தாளில் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
மழு உடைச் செய்ய கையர் கோயில்கள் மருங்கு சென்றுதொழுது போந்து அன்பினோடும் தொன்மறை நெறி வழாமைமுழுது உலகினையும் போற்ற மூன்று எரி புரப்போர் வாழும்செழுமலர்ச் சோலை வேலித் திருப்பனந்தாளில் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடுதீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர் படாமைமேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கிமாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி.
சொற்பிரிப்பு
காதலால் அரசன் உற்ற வருத்தமும் களிற்றினோடும்தீதிலாச் சேனை செய்யும் திருப்பணி நேர்படாமைமேதினி மிசையே எய்த்து வீழ்ந்து இளைப்பதுவும் நோக்கிமாதவக் கலயர் தாமும் மனத்தினில் வருத்தம் எய்தி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கியானும் இவ்விளைப் புற்று எய்க்கும் இது பெற வேண்டும் என்றுதேனலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச் சேய்ந்தமானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்.
சொற்பிரிப்பு
சேனையும் ஆனை பூண்ட திரளும் எய்த்து எழாமை நோக்கி“யானும் இவ் இளைப்புற்று எய்க்கும் இது பெற வேண்டும்” என்றுதேன்அலர் கொன்றையார் தம் திருமேனிப் பூங்கச்சு ஏய்ந்தமானவன் கயிறு பூண்டு கழுத்தினால் வருந்தல் உற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

நண்ணிய ஒருமை அன்பின் நாருறு பாசத்தாலேதிண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்கஒண்ணுமோ கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதேஅண்ணலார் நேரே நின்றார் அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
சொற்பிரிப்பு
நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு பாசத்தாலேதிண்ணிய தொண்டர் பூட்டி இளைத்த பின் திறம்பி நிற்கஒண்ணுமோ? கலயனார் தம் ஒருப்பாடு கண்ட போதேஅண்ணலார் நேரே நின்றார்; அமரரும் விசும்பில் ஆர்த்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரிதேர்மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்கார்பெறு கானம் போலக் களித்தன கைகள் கூப்பிவார்கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து.
சொற்பிரிப்பு
பார்மிசை நெருங்க எங்கும் பரப்பினர் பயில் பூ மாரி;தேர் மலி தானை மன்னன் சேனையும் களிறும் எல்லாம்கார் பெறு கானம் போலக் களித்தன; கைகள் கூப்பிவார்கழல் வேந்தன் தொண்டர் மலர் அடி தலைமேல் வைத்து;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

விண் பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத்திண்சிலை குனிய நின்றார் செந்நிலைக் காணச் செய்தீர்மண்பகிர்ந்தவனும் காணா மலரடி இரண்டும் யாரேபண்புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்.
சொற்பிரிப்பு
“விண்பயில் புரங்கள் வேவ வைதிகத் தேரில் மேருத்திண்சிலை குனிய நின்றார் செந்நிலை காணச் செய்தீர்;மண் பகிர்ந்தவனும் காணா மலர் அடி இரண்டும் யாரேபண்புடை அடியார் அல்லால் பரிந்து நேர் காண வல்லார்?”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

என்றுமெய்த் தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்குஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்துநின்ற வெண் கவிகை மன்னன் நீங்கவும் நிகரில் அன்பர்மன்றிடை ஆடல் செய்யும் மலர்க் கழல் வாழ்த்தி வைகி.
சொற்பிரிப்பு
என்று மெய்த்தொண்டர் தம்மை ஏத்தி அங்கு எம்பிரானுக்குஒன்றிய பணிகள் மற்றும் உள்ளன பலவும் செய்துநின்றவெண் கவிகை மன்னன் நீங்கவும், நிகர் இல் அன்பர்மன்றிடை ஆடல் செய்யும் மலர்க்கழல் வாழ்த்தி வைகி,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணிநிலவுதம் பணியில் தங்கி நிகழும் நாள் நிகரில் காழித்தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகும்அலர்புகழ் அரசுங்கூட அங்கு எழுந்தருளக் கண்டு.
சொற்பிரிப்பு
சிலபகல் கழிந்த பின்பு திருக்கடவூரில் நண்ணிநிலவு தம் பணியில் தங்கி நிகழு நாள் நிகர் இல் காழித்தலைவராம் பிள்ளையாரும் தாண்டகச் சதுரர் ஆகும்அலர்புகழ் அரசும் கூட அங்கு எழுந்து அருளக் கண்டு,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர் கொண்டு மனையில் எய்திஈறிலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்ஆறு நற்சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றிநாறு பூங்கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார்.
சொற்பிரிப்பு
மாறிலா மகிழ்ச்சி பொங்க எதிர்கொண்டு மனையில் எய்திஈறுஇலா அன்பின் மிக்கார்க்கு இன் அமுது ஏற்கும் ஆற்றால்ஆறு நல் சுவைகள் ஓங்க அமைத்து அவர் அருளே அன்றிநாறுபூங் கொன்றை வேணி நம்பர் தம் அருளும் பெற்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னிவிருப்புறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூரஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்ததிருப்பணி பலவுஞ் செய்து சிவ பத நிழலில் சேர்ந்தார்.
சொற்பிரிப்பு
கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னிவிருப்பு உறும் அன்பு மேன்மேல் மிக்கு எழும் வேட்கை கூரஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்ததிருப்பணி பலவும் செய்து சிவபத நிழலில் சேர்ந்தார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

தேனக்க கோதை மாதர் திருநெடுந் தாலி மாறிக்கூனல்தண் பிறையினார்க்கு குங்குலியம் கொண்டு உய்த்தபான்மைத்திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலேமானக்கஞ் சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்.
சொற்பிரிப்பு
தேன் நக்க கோதை மாதர் திருநெடும் தாலி மாறிக்கூனல் தண் பிறையினார்க்குக் குங்குலியம் கொண்டு உய்த்தபான்மைத் திண் கலயனாரைப் பணிந்து அவர் அருளினாலேமானக் கஞ்சாறர் மிக்க வண்புகழ் வழுத்தல் உற்றேன்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.