திருமுறை 12 · 12.004 · 50

திருநகரச் சிறப்பு

அருளியவர்
சேக்கிழார்

1

சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கதுமன்னு மாமல ராள்வழி பட்டதுவன்னி யாறுமதி பொதிசெஞ் சடைச்சென்னி யார்திரு வாரூர்த் திருநகர்.
சொற்பிரிப்பு
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கதுமன்னு மாமலராள் வழிபட்டதுவன்னி ஆறு மதி பொதி செஞ்சடைச்சென்னியார் திரு ஆரூர்த் திருநகர்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வேத ஓசையும் வீணையின் ஓசையும்சோதி வானவர் தோத்திர ஓசையும்மாதர் ஆடல் மணிமுழ வோசையும்கீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே.
சொற்பிரிப்பு
வேத ஓசையும் வீணையின் ஓசையும்சோதி வானவர் தோத்திர ஓசையும்மாதர் ஆடல் மணிமுழவு ஓசையும்கீத ஓசையுமாய்க் கிளர்வு உற்றவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பல்லி யங்கள் பரந்த ஒலியுடன்செல்வ வீதிச் செழுமணித் தேரொலிமல்லல் யானை ஒலியுடன் மாவொலிஎல்லை இன்றி எழுந்துள எங்கணும்.
சொற்பிரிப்பு
பல்லியங்கள் பரந்த ஒலியுடன்செல்வ வீதிச் செழுமணித் தேர் ஒலிமல்லல் யானை ஒலியுடன் மாஒலிஎல்லை இன்றி எழுந்து உள எங்கணும்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மாட மாளிகை சூளிகை மண்டபம்கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள்நீடு சாளர நீடரங்கு எங்கெணும்ஆடல் மாதர் அணிசிலம் பார்ப்பன.
சொற்பிரிப்பு
மாடம் மாளிகை சூளிகை மண்டபம்கூடம் சாலைகள் கோபுரம் தெற்றிகள்நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும்ஆடல் மாதர் அணிசிலம்பு ஆர்ப்பன
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அங்குரைக் கென்ன அளவப் பதியிலார்தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்பங்கினாள் திருச்சேடி பரவை யாம்மங்கையார் அவதாரஞ் செய் மாளிகை.
சொற்பிரிப்பு
அங்கு உரைக்கு என் அளவு? அப் பதியிலார்தங்கள் மாளிகையின் ஒன்று சம்புவின்பங்கினாள் திருச்சேடி பரவையாம்மங்கையார் அவதாரம் செய் மாளிகை
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

படர்ந்த பேரொளிப் பன்மணி வீதிபார்இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூதுபோய்நடந்த செந்தா மரைஅடி நாறுமால்.
சொற்பிரிப்பு
படர்ந்த பேர்ஒளிப் பன்மணி வீதிதான்இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்தொடர்ந்து கொண்டவன் தொண்டர்க்குத் தூது போய்நடந்த செந்தாமரை அடி நாறுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங்குங்குமத்தின் குழம்பை அவர் குழல்பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன்அங்கண் மேவி அளறு புலர்த்துமால்.
சொற்பிரிப்பு
செங்கண் மாதர் தெருவில் தெளித்த செங்குங்குமத்தின் குழம்பை அவர் குழல்பொங்கு கோதையில் பூந்துகள் வீழ்ந்துடன்அங்கண் மேவி அளறு புலர்த்துமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

உள்ளமார் உருகாதவர் ஊர் விடைவள்ளலார் திருவாரூர் மருங் கெலாம்தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்.
சொற்பிரிப்பு
உள்ளம் ஆர் உருகாதவர்? ஊர்விடைவள்ளலார் திரு ஆரூர் மருங்கெலாம்தெள்ளும் ஓசைத் திருப்பதிகங்கள் பைங்கிள்ளை பாடுவ கேட்பன பூவைகள்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்துளக்கில் பேரொலியால் துன்னு பண்டங்கள்வளத் தொடும் பலவாறு மடுத்தலால்அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
சொற்பிரிப்பு
விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்துளக்கில் பேரொலியால், துன்னு பண்டங்கள்வளத்தொடும் பலவாறு மடுத்தலால்அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆரணங்களே அல்ல மறுகிடைவாரணங்களும் மாறி முழங்குமால்சீரணங்கிய தேவர்களே அலால்தோரணங்களில் தாமமும் சூழுமால்.
சொற்பிரிப்பு
ஆரணங்களே அல்ல மறுகிடைவாரணங்களும் மாறி முழங்குமால்சீரணங்கிய தேவர்களே அலால்தோரணங்களில் தாமமும் சூழுமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்சூழ்ந்த பல்வேறு இடத்ததத் தொல்நகர்.
சொற்பிரிப்பு
தாழ்ந்த வேணியர் சைவர் தபோதனர்வாழ்ந்த சிந்தை முனிவர் மறையவர்வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்சூழ்ந்த பல்வேறு இடத்தது அத்தொல்நகர்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

12

நிலமகட்கு அழகார் திருநீள் நுதல்திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதிமலர்மகட்கு வண்தா மரைபோல் மலர்ந்(து)அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால்.
சொற்பிரிப்பு
நிலமகட்கு அழகார்தரு நீள்நுதல்திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதிமலர்மகட்கு வண் தாமரை போல் மலர்ந்துஅலகில் சீர்த் திரு ஆரூர் விளங்குமால்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

13

அன்ன தொல்நகருக்கு அரசு ஆயினான்துன்னு செங்கதிரோன் வழித் தோன்றினான்மன்னு சீர்அநபாயன் வழி முதல்மின்னும் மாமணிப் பூண்மனு வேந்தனே.
சொற்பிரிப்பு
அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்துன்னு செங்கதிரோன் வழித் தோன்றினான்மன்னு சீர் அநபாயன் வழிமுதல்மின்னு மாமணிப் பூண் மனு வேந்தனே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

14

மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எல்லாம்கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலான்விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்எண்ணிலாதன மாண இயற்றினான்.
சொற்பிரிப்பு
மண்ணில் வாழ்தரு மன் உயிர்கட்கு எலாம்கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான்விண்ணுளார் மகிழ்வு எய்திட வேள்விகள்எண்ணிலாதன மாண இயற்றினான்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

15

கொற்ற ஆழிகு வலயஞ் சூழ்ந்திடச்சுற்று மன்னர் திறைகடை சூழ்ந்திடச்செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்.
சொற்பிரிப்பு
கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திடச்சுற்று மன்னர் திறை கடை சூழ்ந்திடச்செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப்பெற்ற நீதியும் தன்பெயர் ஆக்கினான்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

16

பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர்எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்குஅங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்துளான்துங்க ஆகமம் சொன்ன முறைமையால்.
சொற்பிரிப்பு
பொங்கு மாமறைப் புற்றிடம் கொண்டவர்எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்குஅங்கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான்துங்க ஆகமம் சொன்ன முறைமையால்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

17

அறம்பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமற் புல்லிமறங்கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்சிறந்தநல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்பிறந்தனன் உலகம் போற்றப் பேர்அரிக் குருளை அன்னான்.
சொற்பிரிப்பு
"அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமல் புல்லிமறம் கடிந்து அரசர் போற்ற வையகம் காக்கும் நாளில்சிறந்த நல் தவத்தால் தேவி திருமணி வயிற்றின் மைந்தன்பிறந்தனன் உலகம் போற்றப் பேர்அரிக் குருளை அன்னான்"
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

18

தவமுயன்று அரிதில் பெற்ற தனிஇளங் குமரன் நாளும்சிவமுயன்ற டையுந் தெய்வக் கலைபல திருந்த ஓதிக்கவனவாம் புரவி யானை தேர்ப்படைத் தொழில்கள் கற்றுப்பவமுயன்ற துவும்பேறே என வரும் பண்பின் மிக்கான்.
சொற்பிரிப்பு
தவமுயன்று அரிதில் பெற்ற தனிஇளம் குமரன் நாளும்சிவமுயன்று அடையும் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்கவனவாம் புரவி யானை தேர்படைத் தொழில்கள் கற்றுப்பவம் முயன்ற அதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

19

அளவில் தொல்கலைகள் முற்றி அரும்பெறல் தந்தை மிக்கஉளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடிஇளவரசு என்னும் தன்மை எய்துதற் கணியன் ஆகவளரிளம் பரிதி போன்றுவாழுநாள் ஒருநாள் மைந்தன்.
சொற்பிரிப்பு
அளவில் தொல் கலைகள் முற்றி அரும்பெறல் தந்தை மிக்கஉளமகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடிஇளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகிவளரிளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

20

திங்கள் வெண்கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்றுமங்குல் தோய்மாட வீதி மன்னிளங் குமரர் சூழக்கொங்கலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
சொற்பிரிப்பு
திங்கள் வெண் கவிகை மன்னன் திருவளர் கோயில் நின்றுமங்குல் தோய் மாட வீதி மன் இளம் குமரர் சூழக்கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குலவு தோளான்பொங்கிய தானை சூழத் தேர்மிசைப் பொலிந்து போந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

21

பரசு வந்தியர் முன்சூதர் மாகதர் ஒருபால் பாங்கர்விரைநறுங் குழலார் சிந்தும் வெள்வளை ஒருபால் மிக்கமுரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால் வென்றிஅரசிளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி.
சொற்பிரிப்பு
பரசு வந்தியர் முன் சூதர் மாகதர் ஒருபால்; பாங்கர்விரைநறும் குழலார் சிந்தும் வெள்வளை ஒருபால்; மிக்கமுரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கொலி ஒருபால்; வென்றிஅரசிளம் குமரன் போதும் அணிமணி மாட வீதி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

22

தனிப்பெருந் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்பனிப்பில் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்னமனித்தர் தன்வரவு காணா வண்ணம் ஓர்வண்ணம் நல்ஆன்புனிற்றிளங் கன்று துள்ளிப் போந்ததம் மறுகி னூடே.
சொற்பிரிப்பு
தனிப்பெரும் தருமம் தானோர் தயாஇன்றித் தானை மன்னன்பனிப்பில் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்னமனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல்ஆன்புனிற்று இளம் கன்று துள்ளிப்போந்தது அம் மறுகின் ஊடே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

23

அம்புனிற்றாவின் கன்றோர் அபாயத்தின் ஊடுபோகிச்செம்பொனின் தேர்க்கால்மீது விசையினால் செல்லப்பட்டங்குஉம்பரின் அடையக்கண்டங்குஉருகுதாய் அலமந்தோடிவெம்பிடும் அலறும்சோரும் மெய்ந்நடுக்குற்று வீழும்.
சொற்பிரிப்பு
அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகிச்செம்பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டேஉம்பரின் அடையக் கண்டு அங்கு உருகு தாய் அலமந்து ஓடிவெம்பிடும், அலறும், சோரும், மெய்ந் நடுக்கு உற்று வீழும்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

24

மற்றது கண்டு மைந்தன் "வந்ததிங்கு அபாயம்" என்றுசொற்றடு மாறி நெஞ்சில் துயருழந்து அறிவு அழிந்து"பெற்றமும் கன்றும் இன்றுஎன் உணர்வு எனும்பெருமை மாளச்செற்ற என்செய்கேன்" என்று தேரினினின்று இழிந்து வீழ்ந்தான்.
சொற்பிரிப்பு
மற்றது கண்டு மைந்தன் “வந்தது இங்கு அபாயம்” என்றுசொல்தடு மாறி நெஞ்சில் துயர் உழந்து, அறிவு அழிந்து“பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்செற்ற என் செய்கேன்” என்று தேரினின்று இழிந்து வீழ்ந்தான்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

25

அலறு பேர்ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்நிலமிசைக் கன்றை நோக்கி நெடிதுயிர்த்து இரங்கி நிற்கும்"மலர்தலை உலகங் காக்கும் மனுவெனும் என் கோமானுக்(கு)உலகில் இப்பழி வந்துஎய்தப் பிறந்தவா ஒருவன்" என்பான்.
சொற்பிரிப்பு
அலறு பேர் ஆவை நோக்கி ஆருயிர் பதைத்துச் சோரும்;நிலமிசைக் கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்;“மலர்தலை உலகம் காக்கும் மனு எனும் எம் கோமானுக்குஉலகில் இப்பழி வந்து எய்தப் பிறந்தவா ஒருவன்” என்பான்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

26

வந்த இப்பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மைஅந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்எந்தை ஈதுஅறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்சிந்தை வெந்துயரம் தீர்ப்பான்திரு மறையவர் முன் சென்றான்.
சொற்பிரிப்பு
வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறைநூல் வாய்மைஅந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன் என்று மைந்தன்சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திருமறையவர் முன் சென்றான்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

27

தன்னுயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத்தரி யாதாகிமுன் நெருப்புயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வாரமன்னுயிர் காக்குஞ் செங்கோல் மனுவின் பொற்கோயில் வாயில்பொன்னணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.
சொற்பிரிப்பு
தன் உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகிமுன்நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வாரமன்உயிர் காக்கும் செங்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்பொன்அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

28

பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன்வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத் தன் கடைமுன் கேளாத்தெழித்தெழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
சொற்பிரிப்பு
பழிப்பறை முழக்கோ? ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ? வேந்தன்வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக்கழுத்தணி மணியின் ஆர்ப்போ? என்னத் தன் கடைமுன் கேளாத்தெழித்து எழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

29

ஆங்கது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்துபூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி"ஈங்கிதோர் பசுவந்தெய்தி இறைவ! நின் கொற்ற வாயில்தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது" என்று சொன்னார்.
சொற்பிரிப்பு
ஆங்கு அது கேட்ட வேந்தன் அரியணை இழிந்து போந்துபூங்கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி“ஈங்கிது ஓர் பசு வந்து எய்தி இறைவ! நின் கொற்ற வாயில்தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது” என்று சொன்னார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

30

மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி"என் இதற்குற்றது" என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கமுன்னுற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்தொல்நெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.
சொற்பிரிப்பு
மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கிஎன் இதற்கு உற்றது என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கமுன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வித்தொன்னெறி அமைச்சன் மன்னன் தாளிணை தொழுது சொல்வான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

31

வளவ! நின்புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல்ஏறிஅளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை" என்றான்.
சொற்பிரிப்பு
“வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர் மணிநெடும் தேர் மேல் ஏறிஅளவில் தேர்த் தானை சூழ அரசுலாம் தெருவில் போம்கால்இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்தது இத் தன்மை” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

32

அவ்வுரை கேட்ட வேந்தன் ஆவுறு துயரம் எய்திவெவ்விடந் தலைக் கொண்டாற் போல்வேதனை அகத்து மிக்"கிங்குஇவ்வினை விளைந்தவாறு" என்று இடருறும் இரங்கும் ஏங்கும்"செவ்விது என்செங்கோல்!" என்னும் தெருமரும் தெளியும் தேறான்.
சொற்பிரிப்பு
அவ்வுரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எய்திவெவ்விடம் தலைக்கொண்டால் போல் வேதனை அகத்து மிக்கு இங்குஇவ்வினை விளைந்தவாறு என்று இடர் உறும் இரங்கும் ஏங்கும்“செவ்விது என் செங்கோல்”! என்னும்; தெருமரும்; தெளியும்; தேறான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

33

மன்னுயிர் புரந்து வையம்பொதுக் கடிந்து அறத்தில் நீடும்என்னெறி நன்றால் என்னும் "என்செய்தால் தீரும்" என்னும்தன்னிளங் கன்று காணாத் தாய்முகங் கண்டு சோரும்அந்நிலை அரசன் உற்றதுயரம் ஓர் அளவிற்று அன்றால்.
சொற்பிரிப்பு
“மன் உயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்என்னெறி நன்றால்” என்னும் “என்செய்தால் தீரும்” என்னும்;தன் இளம் கன்று காணாத் தாய்முகம் கண்டு சோரும்;அந்நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்றால்
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

34

மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கிச்"சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்குதீர்வு அன்றால்கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறைஅந்தணர்கள் விதித்த முறைவழி நிறுத்தல் அறம்" என்றார்.
சொற்பிரிப்பு
மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கிச்“சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்குத் தீர்வு அன்றால்கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறைஅந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம்” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

35

வழக்கு என்றுநீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டுக்குழக்கன்றை இழந்த லறும் கோவுறு நோய் மருந்தாமோ?இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீருஞ் சொல்லிய இச்சழக்கு இன்றுநான் இயைந்தால் தருமந் தான் சலியாதோ.
சொற்பிரிப்பு
“வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றது தான் வலிப்பட்டுக்குழக்கன்றை இழந்து அலறும் கோ உறுநோய் மருந்தாமோ?இழக்கின்றேன் மைந்தனை என்று எல்லீரும் சொல்லிய இச்சழக்கின்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ?”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

36

மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்தான தனக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்ஊன மிகுபகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்ஆன பயம்ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ.
சொற்பிரிப்பு
“மாநிலம் காவலன் ஆவான் மன் உயிர் காக்கும் காலைத்தான் அதனுக்கு இடையூறு தன்னால் தன் பரிசனத்தால்ஊன மிகு பகைத் திறத்தால் கள்வரால் உயிர் தம்மால்ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறங்காப்பான் அல்லனோ?”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

37

என்மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தேஅன்னியன் ஓர்உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்தொன்மனு நூல்தொடை மனுவால் துடைப்பு உண்டது எனும்வார்த்தைமன்னுலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு" என்றான்.
சொற்பிரிப்பு
“என் மகன் செய் பாதகத்துக்கு இருந்தவங்கள் செய இசைந்தேஅன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்தொன் மனு நூல் தொடைமனுவால்துடைப்புண்டது எனும் வார்த்தைமன் உலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு” என்றான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

38

என்று அரசன் இகழ்துஉரைப்ப எதிர் நின்றமதி அமைச்சர்"நின்ற நெறிஉலகின் கண்இது போல் முன் நிகழ்ந்ததால்பொன்று வித்தல்மரபு அன்றுமறை மொழிந்த அறம் புரிதல்தொன்று தொடுநெறி யன்றோ? தொல்நிலங் காவல!" என்றார்.
சொற்பிரிப்பு
என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர்நின்ற மதி அமைச்சர்“நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்ததால்பொன்றுவித்தல் மரபன்று; மறைமொழிந்த அறம்புரிதல்தொன்றுதொடு நெறி அன்றோ? தொல் நிலம் காவல!” என்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

39

அவ்வண்ணம் தொழுது ரைத்த அமைச்சர்களை முகம் நோக்கிமெய்வண்ணம் தெரிந்து உணர்ந்த மனுவென்னும் விறல் வேந்தன்இவ்வண்ணம் பழுது உரைத்தீர்என்று எரியின் இடைத் தோய்ந்தசெவ்வண்ணக் கமலம் போல்முகம் புலர்ந்து செயிர்த்து ரைப்பான்.
சொற்பிரிப்பு
அவ்வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கிமெய்வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல்வேந்தன்,“இவ்வண்ணம் பழுது உரைத்தீர்”என்று எரியின் இடைத்தோய்ந்தசெவ்வண்ணக் கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

40

அவ்வுரையில் வருநெறிகள் அவை நிற்க அற நெறியின்செவ்விய உண்மைத் திறம்நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்எவ்உல கில்எப் பெற்றம் இப்பெற்றித் தாம் இடரால்வெவ்வுயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது? விளம்பீர்.
சொற்பிரிப்பு
“அவ்உரையில் வருநெறிகள் அவை நிற்க; அறநெறியின்செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்;எவ்உலகில் எப்பெற்றம் இப்பெற்றித்தாம் இடரால்வெவ்உயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது? விளம்பீர்”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

41

போற்றிசைத்துப் புரந்தரன் மால்அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்சவீற்றிருந்த பெருமானார் மேவி யுறை திருவா ரூர்த்தோற்றமுடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்ஆற்றவுமற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்.
சொற்பிரிப்பு
“போற்றி இசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்சவீற்றிருந்த பெருமானார் மேவி உறை திருஆரூர்த்தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால் துணிபொருள் தான்ஆற்றவும் மற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்”
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

42

எனமொழிந்து மற்று இதனுக்கு இனிஇதுவே செயல் இவ்ஆன்மனமழியுந் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இதுதனதுறு பேர்இடர் யானும் தாங்குவதே கருமம் எனஅனகன் அரும்பொருள் துணிந்தான் அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்.
சொற்பிரிப்பு
எனமொழிந்து “மற்று இதனுக்கு இனி இதுவே செயல் இவ்ஆன்மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இதுதனது உறுபேர் இடர் யானும் தாங்குவதே கருமம்” எனஅனகன் அரும் பொருள் துணிந்தான்; அமைச்சரும் அஞ்சினர் அகன்றார்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

43

மன்னவன் தன்மைந்தனை அங்கு அழைத்தொரு மந்திரி தன்னை"முன்னிவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க" எனஅன்னவனும் அதுசெய்யாது அகன்று தன் ஆருயிர் துறப்பத்தன்னுடைய குலமகனைத் தான் கொண்டு மறுங்க ணைந்தான்.
சொற்பிரிப்பு
மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி தன்னை“முன் இவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க” எனஅன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆர் உயிர் துறப்பத்,தன்னுடைய குலமகனைத் தான்கொண்டு மறுகு அணைந்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

44

ஒருமைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்தருமம் தன்வழிச் செல்கை கடன் என்று தன்மைந்தன்மருமம் தன் தேராழிஉற ஊர்ந்தான் மனு வேந்தன்அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான்.
சொற்பிரிப்பு
ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்‘தருமம் தன் வழிச்செல்கை கடன்’ என்று தன் மைந்தன்மருமம்தன் தேர்ஆழி உற ஊர்ந்தான் மனுவேந்தன்அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ? தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

45

தண்ணளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாதுமண்ணவர் கண்மழை பொழிந்தார் வானவர் பூமழை சொரிந்தார்அண்ணல் அவன் கண்எதிரே அணி வீதிமழ விடைமேல்விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான்.
சொற்பிரிப்பு
தண்ணளி வெண்குடை வேந்தன் செயல் கண்டு தரியாதுமண்ணவர் கண்மழை பொழிந்தார்; வானவர் பூமழை சொரிந்தார்;அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழவிடை மேல்விண்ணவர்கள் தொழநின்றான் வீதி விடங்கப் பெருமான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

46

சடை மருங்கில் இளம்பிறையும் தனி விழிக்குந் திருநுதலும்இட மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூதகணம்புடை நெருங்கும் பெருமையும் முன்கண்டு அரசன் போற்றிஇசைப்பவிடை மருவும் பெருமானும்விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்.
சொற்பிரிப்பு
சடைமருங்கில் இளம்பிறையும் தனிவிழிக்கும் திருநுதலும்இடமருங்கில் உமையாளும் எம்மருங்கும் பூதகணம்புடைநெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்பவிடைமருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

47

அந்நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ்அரசன்மன்னுரிமைத் தனிக் கன்றும் மந்திரியும் உடன் எழலும்இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ.
சொற்பிரிப்பு
அந்நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ்அரசன்மன் உரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும் யார்க்கும்முன்னவனே முன்நின்றால் முடியாத பொருள் உளதோ?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

48

அடி பணிந்த திருமகனை ஆகமுற எடுத்து அணைத்துநெடிது மகிழ்ந்து அருந்துயரம் நீங்கினான் நில வேந்தன்மடி சுரந்து பொழிதீம்பால் வருங் கன்று மகிழ்ந்துண்டுபடி நனைய வரும்பசுவும் பருவரல் நீங்கியது அன்றே.
சொற்பிரிப்பு
அடிபணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்துநெடிது மகிழ்ந்து அரும்துயரம் நீங்கினான் நிலவேந்தன்;மடி சுரந்து பொழி தீம்பால் வரும் கன்று மகிழ்ந்து உண்டுபடிநனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

49

பொன்தயங்கு மதி லாரூர்ப் பூங்கோயில் அமர்ந்த பிரான்வென்றி மனு வேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்துசென்றருளும் பெரும் கருணைத் திறம் கண்டுதன் அடியார்க்குஎன்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்தேத்தும்.
சொற்பிரிப்பு
பொன் தயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்த பிரான்வென்றி மனு வேந்தனுக்கு வீதியிலே அருள்கொடுத்துச்சென்றருளும் பெரும்கருணைத் திறம்கண்டு தன்அடியார்க்குஎன்றும் எளிவரும் பெருமை ஏழ்உலகும் எடுத்து ஏத்தும்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

50

இனைய வகைஅற நெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள் புரிந்துமுனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர் மேல்புனையும் உரை நம்மளவில் புகலலாந் தகைமை யதோ?அனைய தனுக் ககமலராம் அறவ னார்பூங் கோயில்.
சொற்பிரிப்பு
இனையவகை அறநெறியில் எண்ணிறந்தோர்க்கு அருள்புரிந்துமுனைவர் அவர் மகிழ்ந்தருளப் பெற்றுடைய மூதூர்மேல்புனையும் உரை நம் அளவில் புகலலாம் தகைமையதோ?அனைய அதனுக்கு அகமலராம் அறவனார் பூங்கோயில்.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.