திருமுறை 1 · 1.099 · 11

திருக்குற்றாலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
குற்றாலம்
நாடு
பாண்டியநாடு

1

வம்பார் குன்றம் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்அம்பால் நெய்யோ டாட லமர்ந்தான் அலர்கொன்றைநம்பான் மேய நன்னகர்போலுந் நமரங்காள்.
சொற்பிரிப்பு
வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல், வளர் வேங்கைக்கொம்பு ஆர் சோலைக் கோல வண்டு யாழ்செய் குற்றாலம்அம் பால் நெய்யோடு ஆடல் அமர்ந்தான், அலர்கொன்றைநம்பான், மேய நன்நகர்போலும்; நமரங்காள்!
உரை

நம்மவர்களே! திருக்குற்றாலமானது பலமுறை கண்டார்க்கும்‌ காணுந்தோறும்‌ புதுமையைப்‌ பயக்கும்‌ குன்றுகளையும்‌, காலத்தாலும்‌, இடத்தாலும்‌ நீண்டு உயர்ந்த மலைச்‌ சாரலையும்‌, உயர்ந்த வேங்கை மரங்களின்‌ கிளைகள்‌ நிறைந்த சோலைகளையும்‌ உடைய நன்னகரமாகும்‌. இங்கு அழகிய வண்டுகள்‌ யாழ்போல்‌ ஒலிக்கின்றன. இந்நகரத்தில்‌, இனிய பால்‌ நெய்‌ ஆகியவற்றோடு நீராடுவதை விரும்புகின்றவராய்‌, விரிந்த கொன்றை மலர்களைச்‌ சூடி, யாவராலும்‌ விரும்பப்படுகின்ற சிவபெருமானார்‌ எழுந்தருளி உள்ளார்‌.

2

பொடிகள் பூசித் தொண்டர்பின் செல்லப் புகழ்விம்மக்கொடிக ளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்கடிகொள் கொன்றை கூவிள மாலை காதல்செய்அடிகள் மேய நன்னகர் போலும் மடியீர்காள்.
சொற்பிரிப்பு
பொடிகள் பூசித் தொண்டர் பின் செல்ல, புகழ் விம்ம,கொடிகளோடும் நாள்விழ மல்கு குற்றாலம்கடி கொள் கொன்றை, கூவிள மாலை, காதல் செய்அடிகள் மேய நன்நகர் போலும்; அடியீர்காள்!
உரை

அடியவர்களே! திருக்குற்றாலமானது, திருநீறு பூசிய தொண்டர்கள்‌ பின்னே வரவும்‌, புகழ்‌ சிறக்கவும்‌, கொடிகளை ஏந்திய அன்பர்கள்‌ முன்னால்‌ செல்லவும்‌, நாள்தோறும்‌ விழாக்கள்‌ நிகழும்‌ நகரம்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில்‌ மணம்‌ கமழும்‌ கொன்றை, வில்வ மாலை ஆகியவற்றை விரும்பும்‌ அடிகளாக சிவபெருமானார்‌ எழுந்தருளி உள்ளார்‌.

3

செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்கொல்லை முல்லை மெல்லரும்பீனுங் குற்றாலம்வில்லின் ஒல்க மும்மதி லெய்து வினைபோகநல்கு நம்பான் நன்னகர் போலுந் நமரங்காள்.
சொற்பிரிப்பு
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்று ஏறி,கொல்லை முல்லை மெல் அரும்பு ஈனும் குற்றாலம்வில்லின் ஒல்க மும்மதில் எய்து, வினை போகநல்கும் நம்பான் நன்நகர்போலும்; நமரங்காள்!
உரை

நம்மவர்களே! திருக்குற்றாலமானது செல்வம்‌ நிறைந்ததும்‌, செண்பகம்‌, வேங்கை ஆகிய மரங்களில்‌ முல்லைக்‌ கொடிகள்‌ தாவிப்‌ படர்ந்து தனது அரும்புகளை ஈனுகின்ற நகரம்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில்‌ வில்லின்‌ நாண்‌ அசைய அம்பு எய்து மும்மதில்களையும்‌ அழித்த சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌. யாவராலும்‌ விரும்பப்படுகின்ற இப்பெருமான்‌ தன்னை வழிபடும்‌ அன்பர்களின்‌ தீயவினைகள்‌ அழியுமாறு அருள்புரிகின்றார்‌.

4

பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்றேன்கொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்குங் குற்றாலம்அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டோர் அனலேந்தும்நக்கன் மேய நன்னகர் போலுந் நமரங்காள்.
சொற்பிரிப்பு
பக்கம் வாழைப் பாய் கனியோடு பலவின் தேன்,கொக்கின் கோட்டுப் பைங்கனி, தூங்கும் குற்றாலம்அக்கும் பாம்பும் ஆமையும் பூண்டு ஓர் அனல் ஏந்தும்நக்கன் மேய நன்நகர்போலும்; நமரங்காள்!
உரை

நம்மவர்களே! திருக்குற்றாலமானது, மலையின்‌ எல்லாப்‌ பக்கங்களிலும்‌ முளைத்த வாழைமரத்தின் கனிகளோடு, தேன்‌ ஒழுகும்‌ பலாவின்‌ பழங்களும்‌ மாமரக்‌ கிளைகளில்‌ பழுத்த புத்தம்‌ புதிய கனிகளுமான முக்கனிகள்‌ தொங்கும்‌ நகரம்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில் சிவபெருமான், உருத்திராக்க மாலை (அக்குமணி மாலை) பாம்பு, ஆமை ஆகியவற்றை மாலையாக அணிந்து கொண்டு கையில்‌ அனலை ஏந்தி விளங்குகின்றார்‌. இங்கு சென்று அவனை வணங்குவீர்களாக.

5

மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்திகுலையார் வாழைத் தீங்கனி மாந்துங் குற்றாலம்இலையார் சூலம் ஏந்திய கையான் எயிலெய்தசிலையான் மேய நன்னகர் போலுஞ் சிறுதொண்டீர்.
சொற்பிரிப்பு
மலை ஆர் சாரல் மகஉடன் வந்த மடமந்திகுலை ஆர் வாழைத் தீம்கனி மாந்தும் குற்றாலம்இலை ஆர் சூலம் ஏந்திய கையான், எயில் எய்தசிலையான், மேய நன்நகர்போலும்; சிறு தொண்டீர்!
உரை

இறைவனுக்கு கைத்தொண்டுூ புரிபவர்களே! தருக்குற்றாலமானது தாய்க்குரங்கு தன்குட்டிகளோடு மலையின்‌ சாரலுக்கு வந்து வாழைக்‌ குலைகளின்‌ பழுத்த இனிய கனிகளை வயறு புடைக்கத்‌ தின்னுகின்ற நகரம்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில்‌ சிவபெருமான்‌, இலை வடிவமான சூலத்தை கையில்‌ ஏந்தியுள்ளார்‌. மும்மதில்களையும்‌ எய்து அழித்த வில்லானனும்‌ ஆகிய சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ள நகரமும்‌ இதுவே ஆகும்‌.

6

மைம்மா நீலக்1 கண்ணியர் சாரல் மணிவாரிக்கொய்ம்மா ஏனல் உண்கிளி யோப்புங் குற்றாலம்கைம்மா வேழத் தீருரி போர்த்த கடவுள்ளெம்பெம்மான் மேய நன்னகர் போலும் பெரியீர்காள்.பாடம் : 1மைம்மானீலக்
சொற்பிரிப்பு
மைம்மா நீலக் கண்ணியர் சாரல் மணி வாரி,கொய்ம் மா ஏனல் உண் கிளி ஓப்பும் குற்றாலம்கைம்மா வேழத்து ஈர் உரி போர்த்த கடவுள், எம்பெம்மான், மேய நன் நகர்போலும்; பெரியீர்காள்!
உரை

பெரியோர்களே! திருக்குற்றாலமானது மிகக்‌ கரிய நீலமலர்‌ போன்ற கண்களை உடைய குறமகளிர்‌, கொய்யும்‌ பருவத்தில்‌ உள்ள விளைந்த தினைக்‌ கதிர்களை உண்ணவரும்‌ கிளிகளை அங்குள்ள மாணிக்க மணிகளை வாரிவீசி விரட்டுகின்ற நகரம்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில்‌ பெரிய துதிக்கை உடைய யானையின்‌ தோலைப்‌ போர்த்த கடவுளும்‌ எம்‌ தலைவனுமாகிய சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌.

7

நீல நெய்தல் தண்சுனை சூழ்ந்த நீள்சோலைக்கோல மஞ்ஞை பேடையொ டாடுங் குற்றாலம்காலன்தன்னைக் காலாற் காய்ந்த கடவுள்ளெம்சூல பாணி நன்னகர் போலுந் தொழுவீர்காள்.
சொற்பிரிப்பு
நீலம், நெய்தல், தண்சுனை சூழ்ந்த நீள் சோலை,கோல மஞ்ஞை பேடையொடு ஆடும் குற்றாலம்காலன் தன்னைக் காலால் காய்ந்த கடவுள் எம்சூலபாணி, நன்நகர் போலும்; தொழுவீர்காள்!
உரை

தொழுது வணங்கும்‌ அடியவர்களே! திருக்குற்றாலமானது, நீலமலரும்‌ நெய்தல்‌ மலரும்‌ பூத்த குளிர்ச்சியான சுனைகள்‌ சூழ்ந்ததும்‌, நீண்டு வளர்ந்துள்ள மரங்களை உடைய சோலைகளில்‌ அழகிய ஆண்‌ மயில்கள்‌ தத்தம்‌ பெண்‌ மயில்களோடு களித்தாடும்‌ நகரமும்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில்‌ காலனைக்‌ காலால்‌ கடிந்த எம்‌ கடவுளாகிய சிவபெருமான்‌ சூலத்தைக்‌ கையில்‌ ஏந்தியவராக எழுந்தருளி உள்ளார்‌.

8

போதும் பொன்னும் உந்தி யருவி புடைசூழக்கூதன் மாரி நுண்துளி தூங்குங் குற்றாலம்மூதூரி லங்கை முட்டிய கோனை முறைசெய்தநாதன் மேய நன்னகர் போலுந் நமரங்காள்.
சொற்பிரிப்பு
போதும் பொன்னும் உந்தி அருவி புடை சூழ,கூதல் மாரி நுண்துளி தூங்கும் குற்றாலம்மூதூர் இலங்கை முட்டிய கோனை முறை செய்தநாதன் மேய நன்நகர் போலும்; நமரங்காள்!
உரை

திருக்குற்றாலத்தில்‌ விழும்‌ குளிர்ச்சியான அருவிகள்‌ பொன்னையும்‌ பூக்களையும்‌ உந்தி வருகின்றன. இந்த அருவி நீரின்‌ நுண்துளிகள்‌ நாற்புறமும்‌ சிதறி விழுகின்றன. இத்தனை சிறப்பு வாய்ந்த நகரம்‌ திருக்குற்றாலமாகும்‌. இந்நன்னகரத்தில்‌, தன்‌ தகுதிக்கு மேல்‌ செயல்பட்ட பழமையான இலங்கை நகரின்‌ புகழ்பெற்ற அரசனான இராவணனைத்‌ தண்டித்த சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌.

9

அரவின் வாயின் முள்ளெயி றேய்ப்ப அரும்பீன்றுகுரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்பிரமன் னோடு மாலறி யாத பெருமையெம்பரமன் மேய நன்னகர் போலும் பணிவீர்காள்.
சொற்பிரிப்பு
அரவின் வாயின் முள் எயிறு எய்ப்ப அரும்பு ஈன்று,குரவம்பாவை முருகு அமர் சோலைக் குற்றாலம்பிரமனோடு மால் அறியாத பெருமை எம்பரமன் மேய நன் நகர்போலும்; பணிவீர்காள்!
உரை

பணியும்‌ தொண்டர்கனே! திருக்குற்றாலமானது, பாம்பின்‌ வாயில்‌ அமைந்த கூரிய பற்களை ஒப்ப, குரவ மரங்கள்‌ அரும்புகளை ஈனுகின்றன. இம்மரங்களில்‌ பூத்துள்ள பாவை போன்ற மலர்கள்‌ நிறைந்த சோலைகள்‌, இந்நகரைச்‌ சுற்றிலும்‌ உள்ளன. இந்நன்னகரத்தில்‌ பிரமனும்‌, திருமாலும்‌ அறிய முடியாத பெருமை பெற்ற பெரியோனாகிய எம்பிரானான சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌.

10

பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்குருந்தம் மேறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்இருந்துண் தேரும் நின்றுண் சமணும் எடுத்தார்ப்பஅருந்தண் மேய நன்னகர் போலும் அடியீர்காள்.
சொற்பிரிப்பு
பெருந் தண்சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி,குருந்தம் ஏறிச் செவ்வழி பாடும் குற்றாலம்இருந்து உண் தேரும் நின்று உண் சமணும் எடுத்து ஆர்ப்ப,அருந் தண் மேய நன்நகர்போலும்; அடியீர்காள்!
உரை

அடியவர்களே! திருக்குற்றாலமானது பெரிய குளிர்ச்சியான மலைச்‌ சாரலில்‌ வாழ்கின்ற சிறகுகளை உடைய வண்டு தன்‌ பெண்‌ வண்டை விரும்பிக்‌ கூடி, குருந்த மரத்தில்‌ ஏறிச்‌ செவ்வழிப்‌ பண்‌ இசை பாடும்‌ நகரம்‌ ஆகும்‌. இந்நன்னகரத்தில்‌ உட்கார்ந்து உண்ணும்‌ புத்தர்களும்‌, நின்று உண்ணும்‌ சமணர்களும்‌ மகிழ்ச்சியாக எடுத்து நுகர்தற்கு இயலாத தண்ணிய இறைவனாகிய சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌.

11

மாடவீதி வருபுனற் காழி யார்மன்னன்கோட லீன்று கொழுமுனை கூம்புங் குற்றாலம்நாட வல்ல நற்றமிழ் ஞான சம்பந்தன்பாடல் பத்தும் பாடநம் பாவம் பறையுமே.
சொற்பிரிப்பு
மாட வீதி வருபுனல் காழியார் மன்னன்,கோடல் ஈன்று கொழு முனை கூம்பும் குற்றாலம்நாட வல்ல, நல்—தமிழ் ஞானசம்பந்தன்,பாடல்பத்தும் பாட, நம் பாவம் பறையுமே.
உரை

நற்றமிழ்‌ வல்ல ஞானசம்பந்தன்‌ பலராலும்‌ நாடவல்லவன்‌. மாடவீதிகளும்‌, ஆற்று நீர்‌ வளமும்‌ மிகுந்த சீகாழிப்‌ பதிக்கு மன்னன்‌. இரு கைகளைக்‌ குவித்து மூடி இறைவனை வணங்குவது போன்று செங்காந்தள்‌ மலர்கள்‌ பூத்து தன்‌ கொழுவிய முனையான பூ இதழ்களை மூடி இறைவனை வணங்கும்‌ நகரம்‌ திருக்குற்றாலம்‌ ஆகும்‌. இத்திருக்‌ குற்றாலத்து இறைவரான சிவபெருமான்‌ மீது ஞானசம்பந்தன்‌ இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இப்பாடல்கள்‌ பத்தையும்‌ பாட வல்லவர்கள்‌ பாவங்கள்‌ நீங்கும்‌.