திருமுறை 1 · 1.091 · 11

திருஆரூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சித்தந் தெளிவீர்காள், அத்தன் ஆரூரைப்பத்தி மலர்தூவ, முத்தி யாகுமே.
சொற்பிரிப்பு
சித்தம் தெளிவீர்காள்! அத்தன் ஆரூரைப்பத்தி மலர் தூவ, முத்தி ஆகுமே.
உரை

சித்தம்‌ மாசு நீங்கித்‌ தெளிவடைய விரும்புகின்றவர்களே; அனைவர்க்கும்‌ தலைவனாய்‌ ஆரூரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ பெருமானைப்‌ பக்தியோடு மலர்‌ தூவி வாழ்த்துங்கள்‌. சித்தத்‌ தெளிவோடு முக்கி கிடைக்கும்‌.

2

பிறவி யறுப்பீர்காள், அறவன் ஆரூரைமறவா தேத்துமின், துறவி யாகுமே.
சொற்பிரிப்பு
பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரைமறவாது ஏத்துமின்! துறவி ஆகுமே.
உரை

பிறப்பினை அறுத்துக்‌ கொள்ள விரும்புபவர்களே, திருவாரூரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவனை மறவாது ஏத்துங்கள்‌. பிறப்பிற்குக்‌ காரணமான ஆசைகள்‌ நீங்கித்‌ துறவு நிலை எய்தலாம்‌.

3

துன்பந் துடைப்பீர்காள், அன்பன் அணியாரூர்நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே.
சொற்பிரிப்பு
துன்பம் துடைப்பீர்காள்! அன்பன் அணி ஆரூர்நன்பொன்மலர் தூவ, இன்பம் ஆகுமே.
உரை

துன்பங்களைத்‌ துடைத்துக்‌ கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில்‌ எழுந்தருளியுள்ள அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத்‌ தாவி வழிபடுங்கள்‌. துன்பம்‌ நீங்குவதோடு இன்பம்‌ உளதாம்‌.

4

உய்ய லுறுவீர்காள், ஐயன் ஆரூரைக்கையி னால்தொழ, நையும் வினைதானே.
சொற்பிரிப்பு
உய்யல் உறுவீர்காள்! ஐயன் ஆரூரைக்கையினால் தொழ, நையும், வினைதானே.
உரை

உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில்‌ எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக்‌ கைகளைக்‌ கூப்பி வணங்குங்கள்‌. உங்கள்‌ வினைகள்‌ மெலிவடையும்‌. உய்தி பெறலாம்‌

5

பிண்டம் அறுப்பீர்காள், அண்டன் ஆரூரைக்கண்டு மலர் தூவ, விண்டு வினைபோமே.
சொற்பிரிப்பு
பிண்டம் அறுப்பீர்காள்! அண்டன் ஆரூரைக்கண்டு மலர் தூவ, விண்டு வினை போமே.
உரை

மீண்டும்‌ பிறவா நிலையைப்‌ பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில்‌ எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச்‌ சென்று கண்டு மலர்‌ தூவி வழிபடுங்கள்‌ பிறப்புக்குக்‌ காரணமான வினைகள்‌ விண்டுபோம்‌. பிறவா நிலை எய்தலாம்‌.

6

பாசம் அறுப்பீர்காள், ஈசன் அணியாரூர்வாச மலர்தூவ, நேச மாகுமே.
சொற்பிரிப்பு
பாசம் அறுப்பீர்காள்! ஈசன் அணி ஆரூர்வாசமலர் தூவ, நேசம் ஆகுமே.
உரை

உயிரோடு பிணைந்துள்ள பாசம்‌ அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில்‌ எழுந்தருளியுள்ள ஈசனை மணம்‌ பொருந்திய மலர்களைத்‌ தூவி வழிபடுங்கள்‌. உம்பால்‌ அவனது நேசம்‌ உளதாகும்‌. பாசம்‌ அகலும்‌.

7

வெய்ய வினைதீர, ஐயன் அணியாரூர்செய்ய மலர்தூவ, வையம் உமதாமே.
சொற்பிரிப்பு
வெய்ய வினை தீர, ஐயன் அணி ஆரூர்செய்யமலர் தூவ, வையம் உமது ஆமே.
உரை

கொடிய வினைகள்‌ தீர வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில்‌ அனைத்துயிர்க்கும்‌ தலைவனாகிய இறைவனைச்‌ செம்மையான மலர்களைத்‌ தூவி வழிபடுங்கள்‌. உலகம்‌ உம்முடையதாகும்‌.

8

அரக்கன் ஆண்மையை, நெருக்கி னான்ஆரூர்கரத்தி னால்தொழத், திருத்த மாகுமே.
சொற்பிரிப்பு
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்கரத்தினால் தொழ, திருத்தம் ஆகுமே.
உரை

அரக்கர்‌ தலைவனாகிய இராவணனின்‌ ஆற்றலைக்‌ கால்விரல்‌ ஒன்றால்‌ நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில்‌ எழுந்தருளிய இறைவனைக்‌ கைகளால்‌ தொழுவீர்களாக. உமது மனக்‌ கோணல்‌ நீங்கும்‌. திருத்தம்‌ பெறலாம்‌.

9

துள்ளும் இருவர்க்கும், வள்ளல் ஆரூரைஉள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே.
சொற்பிரிப்பு
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரைஉள்ளுமவர் தம்மேல் விள்ளும், வினைதானே.
உரை

செருக்குற்றுத்‌ துள்ளிய திருமால்‌ மற்றும்‌ பிரமரின்‌ செருக்கு அடக்கி அருள்‌ செய்த, ஆரூரில்‌ எழுந்தருளிய வள்ளற்‌ பெருமானை மனத்தால்‌ நினைத்து வழிபட வல்லவர்களின்‌ வினைகள்‌ நீங்கும்‌.

10

கடுக்கொள் சீவரை, அடக்கி னான்ஆரூர்எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே.
சொற்பிரிப்பு
கடுக் கொள் சீவரை அடக்கினான் ஆரூர்எடுத்து வாழ்த்துவார் விடுப்பர், வேட்கையே.
உரை

கடுக்காயைத்‌ தின்று துவர்‌ ஆடை போர்த்துத்‌ திரியும்‌ சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர்‌ இறைவனே பரம்பொருள்‌ எனச்‌ சிறப்பித்து வாழ்த்துவார்‌, வேட்கை என்னும்‌ ஆசையை விடுப்பர்‌.

11

சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்னபாரூர் பாடலார், பேரா ரின்பமே.
சொற்பிரிப்பு
சீர் ஊர் சம்பந்தன் ஆரூரைச் சொன்னபார் ஊர் பாடலார் பேரார், இன்பமே.
உரை

சிறப்புப்‌ பொருந்திய ஞானசம்பந்தன்‌ ஆரூர்‌ இறைவன்மீது பாடிய உலகம்‌ முழுதும்‌ பரவிய பாடல்களைப்‌ பாடி வழிபட வல்லவர்‌ இன்பத்தினின்று நீங்கார்‌.