திருமுறை 1 · 1.089 · 11

திருஎருக்கத்தம்புலியூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
எருக்கத்தம்புலியூர்
நாடு
நடுநாடு

1

படையார் தருபூதப் பகடார் உரிபோர்வைஉடையான் உமையோடும் உடனா யிடுகங்கைச்சடையான் எருக்கத்தம் புலியூர்த் தகுகோயில்விடையான் அடியேத்த மேவா வினைதானே.
சொற்பிரிப்பு
படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வைஉடையான், உமையோடும் உடன் ஆய் இடு கங்கைச்சடையான் எருக்கத்தம்புலியூர்த் தகு கோயில்விடையான்; அடி ஏத்த, மேவா, வினைதானே.
உரை

சிவபெருமான்‌, பூதகணங்களைத்‌ தமது படையாகக்‌ கொண்டவன்‌. யானையின்‌ தோலைப்‌ போர்வையாகக்‌ கொண்டவன்‌. உமையம்மையோடு உடனாய்‌ விளங்குபவன்‌. வந்து பொருந்திய கங்கையை ஏற்ற சடையை உடையவன்‌. எருக்கத்தம்புலியூரில்‌ விளங்கும்‌ தகுதி வாய்ந்த கோயிலில்‌ எழுந்தருளி இருப்பவன்‌. விடை ஏற்றை உடைய இப்பெருமான்‌ திருவடிகளைத்‌ துதிப்பவர்களை வினைகளின்‌ வலிமை வந்து சேராது.

2

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்தசிலையான் எருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்கலையான் அடியேத்தக் கருதா வினைதானே.
சொற்பிரிப்பு
இலை ஆர் தரு சூலப்படை எம்பெருமானாய்,நிலையார் மதில் மூன்றும் நீறு ஆய் விழ எய்தசிலையான் எருக்கத்தம்புலியூர்த் திகழ் கோயில்கலையான்; அடி ஏத்த, கருதா, வினைதானே.
உரை

சிவபெருமானார்‌, இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவர்‌. நிலைபெற்ற முப்புரங்களும்‌ நீறாய்ப்‌ பொடிபடுமாறு கணையை எய்த வில்லை உடையவர்‌. எருக்கத்தம்புலியூரில்‌ விளங்கும்‌ கோயிலில்‌ எம்பெருமானார்‌ எழுந்தருளியுள்ளார்‌. சகல கலைகளின்‌ வடிவான இப்பெருமானாருடைய திருவடிகளைத்‌ துதித்து வாழ்த்துபவர்களை எண்ணங்களால்‌ வருத்தும்‌ வினைகள்‌ வந்து சேரா.

3

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீபெண்ணாண் அலியாகும் பித்தா பிறைசூடீஎண்ணார் எருக்கத்தம் புலியூ ருறைகின்றஅண்ணா எனவல்லார்க் கடையா வினைதானே.
சொற்பிரிப்பு
“விண்ணோர் பெருமானே! விகிர்தா! விடை ஊர்தீ!பெண், ஆண், அலி, ஆகும் பித்தா! பிறைசூடி!எண் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைகின்றஅண்ணா!” என வல்லார்க்கு அடையா, வினைதானே.
உரை

சிவபெருமானாரே! விண்ணவர்களின்‌ தலைவரே! வேறுபட்ட வடிவும்‌ பண்பும்‌ உடையவரே! விடைமீது ஏறி வருபவரே! பெண்‌, ஆண்‌, அலி என்னும்‌ பாகுபாடுகளைக்‌ கடந்தவரே! பேரின்பமானவரே! பித்தரே பிறைசூடியிருப்பவரே! எல்லாராலும்‌ எண்ணப்படுபவரே! எருக்கத்தம்புலியூரில்‌ உறைகின்ற தலைவரே! என்று உரைத்துப்‌ போற்ற வல்லவரை வினைகள்‌ வந்து அடையா.

4

அரையார் தருநாகம் அணிவான் அலர்மாலைவிரையார் தருகொன்றை யுடையான் விடையேறிவரையான் எருக்கத்தம் புலியூர் மகிழ்கின்றதிரையார் சடையானைச் சேரத்திரு வாமே.
சொற்பிரிப்பு
அரை ஆர்தரு நாகம் அணிவான், அலர்மாலைவிரை ஆர்தரு கொன்றை உடையான், விடை ஏறி,வரையான், எருக்கத்தம்புலியூர் மகிழ்கின்றதிரை ஆர் சடையானைச் சேர, திரு ஆமே.
உரை

சிவபெருமானார்‌, பாம்பை இடையில்‌ பொருந்துமாறு அணிந்துள்ளவர்‌ மணம் கமழும்‌ கொன்றை மலர்‌ மாலையை அணிந்துள்ளவர்‌. விடைமீது ஏறிவருபவர்‌. கயிலை மலையைத்‌ தனக்குரிய இடமாகக்‌ கொண்டவர்‌.அலைகள்‌ வீசும்‌ கங்கைநதியை சடைமிசைத்‌ தரித்திருப்பவர்‌. எருக்கத்தம்புலியூரில்‌ மகிழ்ந்திருப்பவராக எழுந்தருளி- யிருக்கும்‌ இப்பெருமானாரைச்‌ சேர்வோர்க்கு செல்வங்கள்‌ வந்து சேரும்‌.

5

வீறார் முலையாளைப் பாகம் மிகவைத்துச்சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்ஏறான் எருக்கத்தம் புலியூ ரிறையானைவேறா நினைவாரை விரும்பா வினைதானே.
சொற்பிரிப்பு
வீறு ஆர் முலையாளைப் பாகம் மிக வைத்து,சீறா வரு காலன் சினத்தை அழிவித்தான்,ஏறான், எருக்கத்தம்புலியூர் இறையானைவேறா நினைவாரை விரும்பா, வினைதானே.
உரை

சிவபெருமானார்‌, அழகிய தனங்களை உடைய உமையம்மையை, இடப்பாகத்தில்‌ சிறப்புடன்‌ வைத்திருப்பவர்‌. சீறிவந்த காலனின்‌ சினத்தை அடக்கி அழித்தவர்‌. இடப ஊர்தியை உடையவர்‌. எருக்கத்தம்புலியூரில்‌ எழுந்தருளியுள்ள இப்பெருமானாராகிய சிவபெருமானை தனித்திருந்து தியானிப்பவர்களை வினைகள்‌ விரும்பாது.

6

நகுவெண் டலையேந்தி நானா விதம்பாடிப்புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்தகுவான் எருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கேதொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே.
சொற்பிரிப்பு
நகுவெண்தலை ஏந்தி நானாவிதம் பாடிப்புகுவான் அயம் பெய்ய, புலித்தோல் பியற்கு இட்டுத்தகுவான் எருக்கத்தம்புலியூர்த் தகைந்து அங்கேதொகுவான்; கழல் ஏத்த, தொடரா, வினைதானே.
உரை

சிரிப்பது போல விளங்கும்‌ வெண்மையான தலையோட்டைச்‌ சிவபெருமானார்‌ கையில்‌ ஏந்தி இருப்பவர்‌. பலவிதமாகப்‌ பாடிக்கொண்டு மகளிர்‌ இடும்‌ பிச்சையை ஏற்கப்‌ புகுபவர்‌.புலித்தோலைப்‌ பிடரியில்‌ இட்டுக்‌ கொண்டு இருப்பவர்‌. தகுதி வாய்ந்தவராக எருக்கத்தம்புலியூரில்‌ தங்கி அங்கேயே நிலைத்திருப்பவர்‌. இப்பெருமானார்‌ திருவடிகளைத்‌ துதிக்க வினைகள்‌ நம்மைத்‌ தொடராது.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

ஆவா வெனஅரக்கன் அலற அடர்த்திட்டுத்தேவா எனஅருளார் செல்வங் கொடுத்திட்டகோவே எருக்கத்தம் புலியூர் மிகுகோயில்தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே.
சொற்பிரிப்பு
“ஆவா!” என அரக்கன் அலற அடர்த்திட்டு,“தேவா!” என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்டகோவே! எருக்கத்தம்புலியூர் மிகு கோயில்தேவே!’ என, அல்லல் தீர்தல் திடம் ஆமே.
உரை

சிவபெருமானார்‌, இராவணன்‌ ‘ஆ, ஆ’ என்று அலறுமாறு அவனை அடர்த்தவர்‌. அதன்பின்‌ அவன்‌ ‘தேவா’ என வேண்டுதல்‌ செய்ய, அருள்நிறைந்த செல்வங்கள்‌ பலவற்றை வழங்கியருளிய தலைவரும்‌ இவரே ஆவார்‌. எருக்கத்தம்புலியூரில்‌ விளங்கும்‌ சிறப்புமிக்க கோயிலில்‌ எழுந்தருளியுள்ள இப்பெருமானாரைத்‌ ‘தேவனே’ என்று போற்றும்போது நம்‌ அல்லல்கள்‌ தீர்வது உறுதியாகும்‌.

9

மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்திநிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தேஇறையான் எருக்கத்தம் புலியூ ரிடங்கொண்டகறையார்மிடற்றானைக் கருதக் கெடும்வினையே.
சொற்பிரிப்பு
“மறையான், நெடுமால், காண்பு அரியான்! மழு ஏந்தி!நிறையா மதி சூடி! நிகழ் முத்தின் தொத்து ஏய்இறையான்!”எருக்கத்தம்புலியூர் இடம் கொண்டகறை ஆர் மிடற்றானைக் கருத, கெடும், வினையே.
உரை

சிவபெருமானார்‌, வேதங்கள்‌ ஓதும்‌ நான்முகனாலும்‌, நெடுமாலாலும்‌ காண முடியாத அரியவர்‌. மழுவைக்‌ கையில்‌ ஏந்தியிருப்பவர்‌. கலை நிறையாத பிறைமததியைச்‌ சூடியிருப்பவர்‌. ‘முத்துக்களின்‌ கொத்துப்‌ போன்ற இறையோனே!’ எனப்‌ போற்றுங்கள்‌. எருக்கத்தம்புலியூரை இடமாகக்‌ கொண்ட கறை மிடற்றுப்‌ பெருமானை நினைத்தாலே நம்‌ வினைகள்‌ கெடும்‌.

10

புத்தர் அருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும்நித்தன் எருக்கத்தம் புலியூர் நிகழ்வாயஅத்தன் அறவன்தன் அடியே அடைவோமே.
சொற்பிரிப்பு
புத்தர் அருகர்தம் பொய்கள் புறம் போக்கி,சுத்தி தரித்து உறையும் சோதி, உமையோடும்நித்தன் எருக்கத்தம்புலியூர் நிகழ்வு ஆயஅத்தன்; அறவன்தன் அடியே அடைவோமே.
உரை

புத்தர்களும்‌ சமணர்களும்‌ கூறும்‌ பொய்யுரைகளை விலக்கி விடுங்கள்‌. சிவபெருமானார்‌ பரிசுத்தமாக விளங்கும்‌ ஒளிவடி வினராய்‌ உமையம்மையாருடன்‌ நித்தமும்‌ மணாளனாக விளங்குபவர்‌. எருக்கத்தம்புலியூரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ அறவடி வினராகிய இப்பெருமானாரின்‌ அடிகளை நாம்‌ அடைவோம்‌.

11

ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன்ஆரா அருந்தமிழ் மாலை யிவைவல்லார்பாரா ரவரேத்தப் பதிவான் உறைவாரே.
சொற்பிரிப்பு
ஏர் ஆர் எருக்கத்தம்புலியூர் உறைவானை,சீர் ஆர் திகழ் காழித் திரு ஆர் சம்பந்தன்ஆரா அருந்தமிழ் மாலை இவை வல்லார்பாரார் அவர் ஏத்த, பதிவான் உறைவாரே.
உரை

அழகிய எருக்கத்தம்புலியூரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ சிவபெருமானாரைச்‌ சீர்மிகு காழிப்பதியில்‌ தோன்றிய திருஞான சம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. கலை குன்றாத அருந்தமிழ்‌ மாலையாகிய இத்திருப்பதிகப்‌ பாடல்களை ஓதுபவர்கள்‌, உலகத்தவர்‌ போற்ற வானகம்‌ எய்துவர்‌.