திருமுறை 1 · 1.087 · 11

திருவடுகூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
வடுகூர்
நாடு
நடுநாடு

1

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
சொற்பிரிப்பு
சுடு கூர் எரிமாலை அணிவர்; சுடர் வேலர்;கொடுகு ஊர் மழுவாள் ஒன்று உடையார்; விடை ஊர்வர்;கடுகு ஊர் பசி, காமம், கவலை, பிணி, இல்லார்வடு கூர் புனல் சூழ்ந்த வடுகூர் அடிகளே.
உரை

சிவபெருமானார்‌ சுடுகின்ற தன்மையுள்ள தீபமாலையை அணிந்திருப்பவர்‌. ஒளி பொருந்திய சூலத்தை வைத்திருப்பவர்‌. கொடியதும்‌ கூர்மையானதுமான மழுவாயுதம்‌ ஒன்றை கையில்‌ உடையவர்‌. விடைமேல்‌ ஊர்ந்து வருபவர்‌. மிக்க பசி, காமம்‌, கவலை, பிணி இவைகள்‌ இல்லாதவர்‌. இப்பெருமானார்‌ நீர்வளம்‌ மிக்க வடுகூரில்‌ எழுந்தருளியிருக்கும்‌ இறைவர்‌ ஆவார்‌.

2

பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடிஏலுஞ் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்கோலம் பொழிற்சோலைக் கூடி மடஅன்னம்ஆலும் வடுகூரில் ஆடும் மடிகளே.
சொற்பிரிப்பு
பாலும் நறு நெய்யும் தயிரும் பயின்று ஆடி,ஏலும் சுடு நீறும் என்பும் ஒளி மல்க,கோலம் பொழில் சோலைக் கூடி மட அன்னம்ஆலும் வடுகூரில் ஆடும், அடிகளே.
உரை

சிவபெருமானார்‌ பாலையும்‌, நறுமணமுள்ள நெய்யையும்‌, தயிரையும்‌ விரும்பி ஆடுபவர்‌. பொருந்துவதான திருவெண்ணீறு, என்புமாலை ஆகியவற்றை ஒளி மல்க தன்‌ மார்பில்‌ அணிந்துள்ளவர்‌. இப்பெருமானார்‌ அழகிய பொழில்களிலும்‌ சோலைகளிலும்‌ கூடியிருக்கும்‌ பெண்‌ அன்னங்கள்‌ ஒலித்து ஆர்ப்பரிக்கின்ற வடுகூரில்‌ மகிழ்வோடு திருநடனம்‌ ஆடுகின்றார்‌.

3

சூடும் இளந்திங்கள் சுடர்பொற் சடைதன்மேல்ஓடுங் களியானை உரிபோர்த் துமையஞ்சஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டுபாடும் வடுகூரில் ஆடும் மடிகளே.
சொற்பிரிப்பு
சூடும், இளந்திங்கள் சுடர் பொன்சடை தன்மேல்ஓடும் களியானை உரி போர்த்து, உமை அஞ்ச,ஏடு மலர் மோந்து அங்கு எழில் ஆர் வரிவண்டுபாடும் வடு கூரில் ஆடும் அடிகளே.
உரை

சிவபெருமானார்‌, ஓளி பொருந்திய பொன்‌ போன்ற இளந்திங்களைச்‌ சூடியிருப்பவர்‌. மதம்‌ கொண்டு தன்னிடம்‌ ஓடி வந்த யானையைக்‌ கண்டு, உமையம்மை அஞ்ச, அதனைக்‌ கொன்று, அதன்‌ தோலைப்‌ போர்த்தியிருப்பவர்‌. அழகு பொருந்திய வரிவண்டுகள்‌ இதழ்களோடு கூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு பாடுகின்ற வடுகூரில்‌ இப்பெருமானார்‌ திருநடனம்‌ ஆடுகின்றார்‌.

4

துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்கவர வெரியோட்டிக்1 கடிய மதிலெய்தார்கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்பவரும் வடுகூரில் ஆடும் மடிகளே.பாடம் : 1வெரியூட்டி
சொற்பிரிப்பு
துவரும் புரிசையும் துதைந்த மணி மாடம்கவர எரியூட்டி, கடிய மதில் எய்தார்கவரும் அணி கொல்லைக் கடிய முலை நல்லார்பவரும் வடுகூரில் ஆடும் அடிகளே.
உரை

செந்நிறமுடைய மதில்கள்‌ நிறைந்த அழகிய மாடங்களைக்‌ கொண்டதும்‌ காவலோடு கூடியதுமான முப்புரங்கள்‌ அழியுமாறு, தீயுடன்‌ சேர்ந்த அம்பை எய்தவர்‌ சிவபெருமானார்‌. திருவடுகூரில்‌ மிக அழகான பெண்கள்‌ தங்கள்‌ தனங்களை நன்றாக மூடிக்‌ கொண்டு கூட்டம்‌ கூட்டமாக முல்லைக்‌ காட்டுப்பக்கம்‌ சென்று நவரத்தினங்களை பொறுக்கி எடுத்து வந்து மகிழ்வெய்தி வாழ்கிறார்கள்‌. இந்தத்‌ திருவடுகூரில்‌ சிவபெருமானார்‌ நடனம்‌ புரிகின்றார்‌.

5

துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல்தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார்பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்தஅணியார் வடுகூரில் ஆடும் மடிகளே.
சொற்பிரிப்பு
துணி ஆர் உடை ஆடை துன்னி, அரைதன்மேல்தணியா அழல் நாகம் தரியா வகை வைத்தார்பணி ஆர் அடியார்கள் பலரும் பயின்று ஏத்த,அணி ஆர் வடுகூரில் ஆடும் அடிகளே.
உரை

சிவபெருமானார்‌, கிழிக்கப்‌ பெற்ற கோவண ஆடையைத் தரித்திருப்பவர்‌.‌ அதன்மேல்‌ தீப்போன்ற, கோபத்தோடு கூடிய நாகத்தை அழகாகத்‌ தரித்திருப்பவர்‌. இப்பெருமானார்‌, அடியவர்‌ பலரும்‌ பணிந்து துதிக்க, அழகிய வடுகூரில்‌ திருநடனம்‌ ஆடி அருள்புரிகின்றார்‌.

6

தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்கிளரும் அரவார்த்துக்2 கிளரு முடிமேலோர்வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாடஒளிரும் வடுகூரில் ஆடும் மடிகளே.பாடம் : 2அரவாட்டிக்
சொற்பிரிப்பு
தளரும் கொடி அன்னாள் தன்னோடு உடன் ஆகி,கிளரும் அரவு ஆர்த்து, கிளரும் முடிமேல் ஓர்வளரும் பிறை சூடி, வரிவண்டு இசை பாடஒளிரும் வடுகூரில் ஆடும், அடிகளே.
உரை

சிவபெருமானார்‌, சுமை பொறுக்காது தன்ளாடும்‌ கொடியை ஒத்த உமையம்மையோடு கூடியிருப்பவர்‌. விளங்கும்‌ பாம்பை இடையில்‌ கட்டிக்‌ கொண்டிருப்பவர்‌. விளங்கும்‌ முடிமேல்‌ வளரும்‌ பிறைமதியைச்‌ சூடியிருப்பவர்‌. அடிகளாகிய வரிகள்‌ பொருந்திய வண்டுகள்‌ இசை பாடப்‌ பலராலும்‌ நன்கறியப்பெற்ற வடுகூரில்‌ இப்பெருமானார்‌ திருநடனம்‌ ஆடி அருள்புரிகின்றார்‌.

7

நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்முடியர் விடையூர்வர் கொடியர் மொழி கொள்ளார்3கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்டஅடியர் வடுகூரில் ஆடும் மடிகளே.பாடம் : 3உள்ளார்
சொற்பிரிப்பு
நெடியர்; சிறிது ஆய நிரம்பா மதி சூடும்முடியர்; விடை ஊர்வர்; கொடியர் மொழி கொள்ளார்;கடிய தொழில் காலன் மடிய, உதை கொண்டஅடியர் வடுகூரில் ஆடும் அடிகளே.
உரை

சிவபெருமானார்‌ பேருருவம்‌ கொள்பவர்‌. சிறிதான கலை நிரம்பாத பிறைமதியைச்‌ சூடும்‌ முடியை உடையவர்‌. விடைமேல்‌ ஊர்ந்து வருபவர்‌. கொடியவர்‌ மொழிகளை ஏற்றுக்‌ கொள்ளாதவர்‌. கொல்லுந்‌ தொழில்‌ புரியும்‌ எமன்‌ மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்‌. இப்பெருமானார்‌ வடுகூரில்‌ திருநடனம்‌ ஆடி அருள்புரிகின்றார்‌.

8

பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்மறையும் பலபாடி மயானத் துறைவாரும்பறையும் அதிர்குழலும் போலப் பலவண்டாங்கறையும் வடுகூரில் ஆடும் மடிகளே.
சொற்பிரிப்பு
பிறையும் நெடுநீரும் பிரியா முடியினார்,மறையும் பல பாடி மயானத்து உறைவாரும்பறையும் அதிர் குழலும் போலப் பலவண்டு ஆங்குஅறையும் வடுகூரில் ஆடும் அடிகளே.
உரை

சிவபெருமானார்‌ இளம்‌ பிறையையும்‌ பெருகி வரும்‌ கங்கை நீரையும்‌ பிரியாத திருமுடியை உடையவர்‌. வேதங்களில்‌ உள்ள சந்தங்கள்‌ பலவற்றையும்‌ பாடிக்‌ கொண்டு மயானத்தில்‌ உறைபவர்‌. இப்பெருமானார்‌, அதிர்கின்ற பறையும்‌, வேய்ங்குழலும்‌ போலப்‌ பல வண்டுகள்‌ ஒலிக்கும்‌ சோலைகளை உடைய வடுகூரில்‌ திருநடனம்‌ ஆடி அருள்புரிகின்றார்‌.

9

சந்தம் மலர்வேய்ந்த சடையின் இடைவிம்முகந்தம் மிகுதிங்கள் சிந்து கதிர்மாலைவந்து நயந்தெம்மை நன்றும் அருள்செய்வார்அந்தண் வடுகூரில் ஆடும் மடிகளே.
சொற்பிரிப்பு
சந்தம் மலர் வேய்ந்த சடையின் இடை விம்முகந்தம் மிகு திங்கள் சிந்து கதிர்மாலைவந்து நயந்து, எம்மை நன்றும் மருள் செய்வார்அம் தண் வடு கூரில் ஆடும் அடிகளே.
உரை

கண்ணைக்‌ கவரும்‌ மலர்கள்‌ வேய்ந்த சடையை உடைய சிவபெருமானார்‌, அதன்கண்‌ பொங்கி எழும்‌ மணம்‌ மிகுந்த பிறைமதி கரணங்களை வெளியிடும்‌ மாலை நேரத்தில்‌. அழகும்‌ குளிர்ச்சியும்‌ பொருந்திய வடுகூரில்‌ திருநடனம்‌ புரிகின்றார்‌. அந்நேரத்தில்‌ இப்பெருமானார்‌ இனியவை பலகூறி விரும்பி வந்து எமக்கு நன்றாக அருள்புரிவார்‌.

10

திருமா லடிவீழத் திசைநான் முகனாயபெருமான் உணர்கில்லாப்4 பெருமான் நெடுமுடிசேர்செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லாஅருமா வடுகூரில் ஆடும் மடிகளே.பாடம் : 4உணர்கில்லான்
சொற்பிரிப்பு
திருமால் அடி வீழ, திசை நான்முகன் ஆயபெருமான் உணர்கில்லாப் பெருமான், நெடு முடி சேர்செரு மால் விடை ஊரும் செம்மான் திசைவு இல்லாஅரு மா வடுகூரில் ஆடும் அடிகளே.
உரை

திருமால்‌ சிவபெருமானாருடைய அடிகளைத்‌ தேடிப்‌ பூமியைத்‌ தோண்டிச்‌ சென்றும்‌ தோற்றவர்‌. இசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுடிகளைக்‌ கொண்ட நான்முகனும்‌ சிவனது முடியினை காணாது திகைத்தவர்‌. போர்‌ செய்யத்‌ தக்க விடைமீது எழுந்தருளி வரும்‌ சிவந்த நிறத்தினர்‌. எல்லாத்‌ திசைகளிலும்‌ ஒளியை வீசுகின்ற அரிய பெரிய வடுகூரில்‌ இப்பெருமானார்‌ திருநடனம்‌ ஆடி அருள்புரிகின்றார்‌.

11

படிநோன் பவையாவர் பழியில் புகழானகடிநாண் நிகழ்சோலை கமழும் வடுகூரைப்படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.
சொற்பிரிப்பு
படி நோன்பு அவை ஆவர், பழி இல் புகழ் ஆன,கடிநாள் நிகழ் சோலை கமழும் வடுகூரை,படி ஆன சிந்தை மொழி ஆர் சம்பந்தன்அடிஞானம் வல்லார் அடி சேர்வார்களே.
உரை

சிவபெருமானார்‌, இவ்வுலகில்‌ கூறப்படும்‌ பற்பல நோன்புகளுக்கு உரியவர்‌. குற்றமற்ற புகழோடும்‌, மணம்‌ கமழும்‌ சோலைகளால்‌ மணம்‌ பெறும்‌ வடுகூரில்‌ எழுந்தருளி இருப்பவர்‌. இப்பெருமானாரை அமைதியான மனமுடைய ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இப்பதிகத்தை ஓதும்‌ சிவஞானம்‌ உடைய சான்றோர்கள்‌ முத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவார்கள்‌.