திருமுறை 1 · 1.082 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில்திரிந்த புரமூன்றுஞ் செற்றான் உறைகோயில்தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,-திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில்தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும்விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌ பெரிய பொன்மயமான‌ மேரு மலையை வில்லாக வளைத்து, அனலை அம்பாக அந்த வில்லின்‌ நாணில்‌ பூட்டி, வானில்‌ திரிந்து கொண்டிருந்த முப்புரங்களையும்‌ எரித்தவர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு, கலைகள்‌ பலவற்றைக்‌ கற்று உணர்ந்த அடியவர்கள்‌ செல்லும்‌ திசைகளில்‌ எல்லாம்‌ அவர்களை விரும்பி எதிர்கொண்டு அழைக்கும்‌ மக்கள்‌ வாழ்கின்றனர்‌.

2

வாதைப் படுகின்ற வானோர் துயர்தீரஓதக் கடல்நஞ்சை உண்டான் உறைகோயில்கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும்வேதத் தொலியோவா வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர,ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில்கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும்வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌, துயரப்படுகின்ற தேவர்களின்‌ துன்பம்‌ நீங்குமாறு வெண்மையான நீரோடு கூடிய கடலில்‌ இருந்து எழுந்த நஞ்சினை தொண்டையில்‌ நிறுத்தியவர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு இசையமைப்போடு கூடியதும்‌ சுருதிக்கு ஏற்ப, ஒருவர்‌ ஓதக்‌ கேட்டு ஓதப்பட்டு வருவதுமாகிய வேத பாராயணத்தை ஓதும்‌ வேத ஒலி நீங்காமல்‌ ஒலிக்கின்றது.

3

பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டுதுயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில்மயிலும் மடமானும் மதியும் மிளவேயும்வெயிலும் பொலிமாதர்1 வீழி மிழலையே.பாடம் : 1போன்மாதர்
சொற்பிரிப்பு
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு,துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில்மயிலும் மடமானும் மதியும் இள வேயும்வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌, வேதங்களை ஓதும்‌ பிரமனின்‌ தலையோட்டில்‌ பலி ஏற்பவர்‌. அனைவரும்‌ துயிலும்‌ நள்ளிரவில்‌ நட்டமாடும்‌ ஒளி வடிவினர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. மயிலைப்‌ போன்ற சாயலும்‌, மருளுகின்ற மான்‌ போன்ற கண்களும்‌, மதி போன்ற முகமும்‌, இள மூங்கில்‌ போன்ற தோள்களும்‌ இளங்கதிர்‌ போன்ற அழகொளி மிக்க மகளிர்‌ பலர்‌ இங்கு வாழ்கின்றனர்‌.

4

இரவன் பகலோனும் எச்சத் திமையோரைநிரவிட் டருள்செய்த நிமலன் உறைகோயில்குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கைவிரவும் பொழிலந்தண் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரைநிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில்குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை,விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌, தக்கன்‌ செய்த யாகத்தில்‌ சூரியன்‌ சந்திரன்‌ முதலான தேவர்களைத்‌ தண்டம்‌ செய்து அருள்‌ செய்த நிமலன்‌ ஆவார்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு, குரா, சுரபுன்னை, குளிர்ச்சி தரும்‌ கோங்கு, இளவேங்கை ஆகிய மரங்கள்‌ கலந்துள்ள குளிர்ந்த பொழில்கள்‌ பல உள்ளன.

5

கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்பெண்ணுக் கருள்செய்த பெருமான் உறைகோயில்மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும்விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக,பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில்மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும்விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌, தனது நெற்றிக்‌ கண்ணில்‌ தோன்ற கனலால்‌ மன்மதனைப்‌ பொடி செய்தவர்‌. பின்னர்‌ அவனது மனைவியான இரதி தேவி வேண்டுதல்‌ செய்த போது, அவளுடைய கண்களுக்கு மட்டும்‌ புலனாகுமாறு அருள்செய்த நிமலன்‌ இவர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு, நாள்தோறும்‌ மண்ணில்‌ செய்யும்‌ பெரிய வேள்விகளில்‌ வளரும்‌ தீப்புகையானது வானத்தில்‌ மழை மேகங்களை உருவாக்குகின்றது.

6

மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழிஏலா வலயத்தோ டீந்தான் உறைகோயில்சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள்மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழிஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில்சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள்மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.
உரை

ஆயிரம்‌ தாமரைப்‌ பூக்களைக்‌ கொண்டு திருமால்‌ அருச்சனை செய்தபோது, ஒன்று குறைந்ததைக்‌ கண்டு, தனது மலர்‌ போன்ற கண்களில்‌ ஒன்றைப்‌ பெயர்த்து சாத்திய அளவில்‌ அவனுக்கு பிறர்‌ சுமக்க முடியாத சக்கராயுதத்தை ஈந்தவர்‌ சிவபெருமான்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு, சேல்‌ மீன்கள்‌ வாழ்கின்ற செழிப்பான பொய்கைகளில்‌ முளைத்த தாமரை மலர்கள்‌ தீப்பிழம்பு போல்‌ காணப்படுகின்றன.

7

மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்கொதியா வருகூற்றைக் குமைத்தான் உறைகோயில்நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள்விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான்,கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில்நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள்விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌ தன்னை மெய்யறிவால்‌ வழிபட்ட மார்க்கண்டேயனின்‌ உயிரை எடுத்துச்‌ செல்லச்‌ சினந்து வந்த கூற்றுவனை அழித்தவர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவிழிமிழலை ஆகும்‌. இங்கு நிதியாலும்‌, தியானத்தாலும்‌ மிக்க செல்வர்கள்‌ நாள்தோறும்‌ செய்யும்‌ நியமங்களை விதிப்படி செய்து வாழ்கின்றனர்‌.

8

எடுத்தான் தருக்கினை இழித்தான் விரலூன்றிக்கொடுத்தான் வாள்ஆளாக் கொண்டான் உறைகோயில்படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தைவிடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி;கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில்படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தைவிடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.
உரை

சிவபெருமான்‌, கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின்‌ செருக்கினை தன்கால்‌ விரலை ஊன்றி அழித்தவர்‌. பின்பு, அவன்‌ தன்‌ பிழையை உணர்ந்து வேண்ட, வாள்‌ கொடுத்து அவனை ஆளாகக்‌ கொண்டவர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு, வேதத்தைப்‌ படித்து, உணர்ந்தவர்களும்‌, வேள்விகளை இடைவிடாது செய்து, பாவத்தினின்று விடுபட்ட அந்தணர்களும்‌ மிகுதியாக வாழ்கின்றனர்‌.

9

கிடந்தான் இருந்தானுங் கீழ்மேல் காணாதுதொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில்படந்தாங் கரவல்குல் பவளத் துவர்வாய்மேல்விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது,தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில்படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல்விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.
உரை

பாம்பணையில்‌ துயிலும்‌ திருமாலாலும்‌, தாமரை மலரில்‌ உறையும்‌ நான்முகனாலும்‌ சிவபெருமானின்‌ அடிமுடிகளைக்‌ காண முடியவில்லை. அவர்கள்‌ திரும்பித்‌ தொடர்ந்து போற்றியபோது, அழலுருவாய்‌ நின்றவர்‌ இப்பெருமான்‌. இவர்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. இங்கு அரவின்‌ படம்‌ போன்ற அல்குலையும்‌, பவளம்‌ போன்ற வாயினையும்‌, விடம்‌ பொருந்திய கண்களையும்‌ உடைய மகளிர்‌ மிகுதியாக வாழ்கின்றனர்‌.

10

சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும்நக்காங் கலர்தூற்றும் நம்பான் உறைகோயில்தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்குமிக்கார் அவர்வாழும் வீழி மிழலையே.
சொற்பிரிப்பு
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும்நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில்தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்குமிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.
உரை

சிக்குப்‌ பிடித்த காவி உடையையும்‌ சிறிய ஓலைத்‌ தடுக்குகளையும்‌ உடைய புத்தரும்‌ சமணர்களும்‌ சிவபெருமானை ஏளனம்‌ செய்து சிரிக்கின்றனர்‌. இப்பெருமான்‌ உறையும்‌ கோயில்‌ திருவீழிமிழலை ஆகும்‌. மெச்சத்‌ தக்கவராகவும்‌, வேத வேள்விகள்‌ செய்வதில்‌ தலையாயவராகவும்‌, உலகிற்கே மிகவும்‌ மேம்பட்டவராகவும்‌ உள்ள மறையவர்கள்‌ இங்கு பலர்‌ வாழ்கின்றனர்‌.

11

மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள்ஏனத் தெயிற்றானை யெழிலார் பொழில்காழிஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன்வாய்மைத் திவை2 சொல்ல வல்லோர் நல்லோரே.பாடம் : 2வாய்மெய்த்திவை.
சொற்பிரிப்பு
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள்ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழிஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன்வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.
உரை

விண்ணிலிருந்து இழிந்து வந்துள்ள வீழிமிழலைக்‌ கோயிலில்‌, பன்றிப்பல்‌ சூடியவனாய்‌ எழுந்தருளி விளங்கும்‌ சிவபிரானை அழகிய பொழில்கள்‌ சூழ்ந்த காழிப்பதியில்‌ தோன்றிய ஞானத்தால்‌ மேம்பட்ட அழகிய ஞானசம்பந்தன்‌, உண்மையை உடையவனாய்‌ ஓதிய இப்பதிகத்தைச்‌ சொல்ல வல்லவர்‌ நல்லவர்‌ ஆவர்‌.