திருமுறை 1 · 1.081 · 11

சீர்காழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

*நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்தவில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.1
சொற்பிரிப்பு
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-சொல்லார், கேண்மையார், சுடர் பொன்கழல் ஏத்த,வில்லால் புரம் செற்றான் மேவும் பதிபோலும்கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே.
உரை

சிவபெருமான்‌ மேருமலையாலான வில்லால்‌ முப்புரங்களையும்‌ அழித்தவர்‌. இப்பெருமான்‌ மலைபோன்ற மதில்களால்‌ சூழப்பட்ட தலமான சீகாழி நகரில்‌ எழுந்தருளி உள்ளார்‌. இங்குள்ள சான்றோர்களாகிய நல்லவர்கள்‌, நாள்தோறும்‌ வேள்வியைச்‌ செய்கின்றனர்‌. நான்கு வேதங்களை ஓதுகின்றனர்‌. அன்புடையவர்களாக விளங்குகின்றனர்‌. இவர்கள்‌ ஒளி பொருந்திய அழகிய சிவபெருமானின்‌ திருவடிகளைப்‌ போற்றுகின்றனர்‌.

2

துளிவண் தேன்பாயும் இதழி தூமத்தந்தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னிஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
துளி வண் தேன் பாயும் இதழி, தூ மத்தம்,தெளி வெண் திங்கள், மாசுணம், நீர் திகழ் சென்னி,ஒளி வெண் தலைமாலை உகந்தான் ஊர்போலும்களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே.
உரை

சிவபெருமான்‌ ஒளிபொருந்திய வெள்ளிய தலைமாலையை விரும்பிச்‌ சூடியிருப்பவர்‌. வண்டுகள்‌ தேனை உண்டு களித்து, யாழ்‌ போன்று ரீங்காரம்‌ செய்கின்ற, சீகாழி நகரில்‌ இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. இப்பெருமான்‌ சென்னியில்‌ வளமான தேன்‌ துளிபாயும்‌ கொன்றை மலர்‌, தூய ஊமத்தம்பூ, தெளிந்த வெண்மையான பிறைமதி, பாம்பு, கங்கை ஆகியன விளங்குகின்றன.

3

ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்சாலத் தேவர்க்கு ஈந்து அளித்தான், தன்மையால்பாலற்கு ஆய் நன்றும் பரிந்து பாதத்தால்காலற் காய்ந்தான், ஊர் காழி நகர்தானே.
உரை

சிவபெருமான்‌ மார்க்கண்டேயன்‌ பொருட்டு கருணை கூர்ந்து தன்‌ பாதத்தால்‌ காலனை உதைத்தவர்‌. இப்பெருமானின்‌ ஊர்‌ சீகாழி நகர்‌ ஆகும்‌. இவர்‌, பாற்கடலில்‌ தோன்றிய ஆலகாலம்‌ எனப்படும்‌ நஞ்சினை விழுங்காமல்‌ தொண்டையில்‌ நிறுத்தி, அமுதம்‌ முழுவதையும்‌ தேவர்கட்கு ஈந்தருளிய தன்மையை உடையவர்‌.

4 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 4-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

5 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 5-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

6 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 6-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
இரவில் திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும்நிரவி, கர வாளை நேர்ந்தான் இடம் போலும்பரவித் திரிவோர்க்கும் பால் நீறு அணிவோர்க்கும்கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே.
உரை

சிவபெருமான்‌, இரவில்‌ திரியும்‌ அசுரர்களின்‌ தலைவனான இராவணனின்‌ இருபது தோள்களையும்‌ நெரித்தவர்‌. பின்பு அவன்‌ வருந்திய அளவில்‌ கைகளில்‌ ஏந்தும்‌ வாளை அவனுக்கு வழங்கி அருளிய இடம்‌ சீகாழி நகராகும்‌. இறைவனைப்‌ பரவி வழிபடும்‌ அடியவர்களும்‌, பால்‌ போன்ற திருநீற்றை அணிபவர்களும்‌, ஒளியாமல்‌ வழங்கும்‌ நீண்ட கைகளை உடைய வள்ளன்மை மிக்க அடியார்களும்‌ இச்‌ சீகாழிப்‌ பதியில்‌ வாழ்கின்றனர்‌.

9

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்காலம் பகராதார் காழிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்,ஏலும் பதிபோலும் இரந்தோர்க்கு எந்நாளும்காலம் பகராதார் காழிந் நகர்தானே.
உரை

சிவபெருமானார்‌, திருமால்‌, பிரமன்‌ ஆகியோரால்‌ அறியப்படாத மாட்சிமையை உடையவர்‌. மான்‌ தோலும்‌ முப்புரிநூலும்‌ படிந்த மலை போன்ற மார்பினை உடையவர்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ பதி சீகாழி நகராகும்‌. இந்நகரில்‌ வாழும்‌ செல்வர்கள்‌, தம்மிடம்‌ இரந்து வருகின்றவர்களுக்கு, எந்நேரமும்‌, காலம்‌ தாழ்த்தாது, உடனே கொடுக்கும்‌ தன்மையை உடையவர்களாக இருக்கின்றனர்‌.

10

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
சொற்பிரிப்பு
தம் கை இட உண்பார், தாழ் சீவரத்தார்கள்,பெங்கை உணராதே பேணித் தொழுமின்கள்!மங்கை ஒருபாகம் மகிழ்ந்தான், மலர்ச் சென்னிக்கங்கை தரித்தான், ஊர் காழி நகர்தானே.
உரை

சமணர்கள்‌, உணவளிப்பவர்கள்‌ கொடுக்கும்‌ உணவை, தங்கள்‌ கையில்‌ வாங்கி உண்பவர்கள்‌. புத்தர்கள்‌ சீவரம்‌ என்னும்‌ கல்லாடையை உடுத்தியிருப்பவர்கள்‌. அவர்களின்‌ தீய ஒழுக்கத்தை மனத்தில்‌ கொள்ளாமல்‌, உமையம்மையை ஒரு பாகமாக மகிழ்ந்து ஏற்றிருப்பவரும்‌, மலரணிந்த, சென்னியில்‌ கங்கையைத்‌ தரித்திருப்பவருமாகிய சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ சீகாழி நகரைப்‌ பேணித்‌ தொழுவீர்களாக.

11

வாசம் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்தஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
சொற்பிரிப்பு
வாசம் கமழ் காழி மதி செஞ்சடை வைத்தஈசன் நகர்தன்னை, இணை இல் சம்பந்தன்பேசும் தமிழ் வல்லோர் பெருநீர் உலகத்துப்பாசம்தனை அற்றுப் பழி இல் புகழாரே.
உரை

சிவபெருமான்‌ பிறைமதியைச்‌ செஞ்சடையில்‌ வைத்துள்ளார்‌. இப்பெருமான்‌ எழுந்தருளியுள்ள மணங்கமழ்கின்ற சீகாழிப்‌ பதியை, ஒப்பற்ற ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இப்பதிகத்தைப்‌ பாடும்‌ தமிழில்‌ வல்லவர்கள்‌, கடல்‌ சூழ்ந்த இவ்வுலகில்‌, பாசங்கள்‌ நீங்கப்‌ பெற்றுப்‌, பழியற்ற புகழோடு வாழ்வார்கள்‌.