திருமுறை 1 · 1.080 · 11

கோயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமேசெற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயமுற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமேபற்றா நின்றாரைப் பற்றா பாவமே.
சொற்பிரிப்பு
கற்றாங்கு எரி ஓம்பி, கலியை வாராமேசெற்றார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேயமுற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமேபற்றா நின்றாரைப் பற்றா, பாவமே.
உரை

வேத நூல்களைக்‌ கற்றுணர்ந்து, அவற்றில்‌ கூறப்பட்ட நெறியிலே நின்று, வேள்விகளைச்‌ செய்து, இவ்வுலகில்‌ பாவங்கள்‌ (வறுமையை) வாராது தடுக்கும்‌ சான்றோர்கள்‌ வாழும்‌ தலம்‌ தில்லையாகும்‌. இத்தலத்தில்‌ உள்ள சிற்றம்பலத்தில்‌ எழுந்தருளி இருக்கும்‌ இறைவர்‌ ஆனந்த நடராசர்‌ ஆவார்‌. இவர்‌ இளமையான வெள்ளிய பிறைமதியைச்‌ சூடி உள்ளார்‌. இவர்‌ தேவர்களுக்குத்‌ தலைமையான முதல்வர்‌ ஆவார்‌. இப்பெருமானின்‌ திருவடிகளைப்‌ பற்றுக்‌ கோடாகக்‌ கொண்டு வாழ்பவர்களைப்‌ பாவம்‌ பற்றாது.

2

பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயபிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானைமறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.
சொற்பிரிப்பு
பறப்பைப் படுத்து, எங்கும் பசு வேட்டு, எரி ஓம்பும்சிறப்பர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேயபிறப்பு இல்பெருமானை, பின் தாழ்சடையானை,மறப்பு இலார் கண்டீர், மையல் தீர்வாரே.
உரை

பல இடங்களிலும்‌ வேள்விச்‌ சாலைகளை அமைத்து ஆன்ம போதத்தை அழித்து, சிவாக்கினியை வளர்க்கும்‌ சிறப்பினை உடைய சான்றோர்கள்‌ வாழும்‌ தலம்‌ தில்லை ஆகும்‌. இத்தலத்தில்‌ உள்ள சிற்றம்பலத்தில்‌ எழுந்தருளி இருக்கும்‌ இறைவர்‌ ஆனந்த நடராசர்‌ ஆவார்‌. இவர்‌ தாயின்‌ வயிற்றில்‌ தங்கிப்‌ பிறத்தல்‌ இல்லாதவர்‌. பின்புறம்‌ தாழ்ந்து தொங்கும்‌ சடாபாரம்‌ உடையவர்‌. இப்பெருமானை மறவாதவர்கள்‌ தங்கள்‌ மயக்க உணர்வு நீங்கப்‌ பெறுபவர்கள்‌ ஆவார்கள்‌.

3

மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.
சொற்பிரிப்பு
மை ஆர் ஒண்கண்ணார் மாடம் நெடுவீதிக்கையால் பந்து ஓச்சும் கழி சூழ் தில்லையுள்,பொய்யா மறை பாடல் புரிந்தான், உலகு ஏத்தச்செய்யான், உறை கோயில் சிற்றம்பலம்தானே.
உரை

மை தீட்டப்‌ பெற்ற ஒளி பொருந்திய கண்களை உடைய பெண்கள்‌, நீண்ட வீதிகளில்‌ உள்ள மாடவீதிகளில்‌ தம்‌ கைகளால்‌ பந்து எய்து விளையாடும்‌ அழகுடையதும்‌, உப்பங்கழிகள்‌ சூழ்ந்ததுமான தலம்‌ தில்லையாகும்‌. இத்தலத்தில்‌ உள்ன சிற்றம்பலத்தில்‌ சிவபெருமான்‌ சிவந்த மேனியை உடையவராக எழுந்தருளி உள்ளார்‌. இவர்‌ என்றும்‌ பொய்யாத வேதப்‌ பாடல்களை விரும்பியும்‌ உலக மக்கள்‌ தன்னைத்‌ தோத்தரிக்கவும்‌ இங்கு வீற்றிருக்கின்றார்‌.

4

நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேயஇறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.
சொற்பிரிப்பு
நிறை வெண்கொடி மாட நெற்றி நேர் தீண்டப்பிறை வந்து இறை தாக்கும் பேரம்பலம், தில்லைச்சிறைவண்டு அறை ஓவாச் சிற்றம்பலம், மேயஇறைவன் கழல் ஏத்தும் இன்பம் இன்பமே.
உரை

மாடவீடுகளில்‌ வெண்மையான கொடிகள்‌: நிறைந்துள்ளன. இக்கொடிகள்‌ வானத்தில்‌ உள்ள பிறையின்‌ நெற்றியை நேரே தீண்டுவது போலும்‌, சிறிதே தாக்குவது போலும்‌ உள்ளன. இந்தத்‌ தில்லைப்‌ பதியில்‌ சிறகுகளை உடைய வண்டுகளின்‌ ஒலி எப்போதும்‌ ஒலித்துக்‌ கொண்டிருக்கின்றது. பேரம்பலத்தை அடுத்துள்ள சிற்றம்பலத்தில்‌ சிவபெருமானார்‌ எழுந்தருளியிருக்கின்றார்‌. இந்த இறைவரின்‌ திருவடிகளைப்‌ போற்றிப்‌ புகழ்வதே இன்பமாகும்‌.

5

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்றசெல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயசெல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
சொற்பிரிப்பு
செல்வ நெடுமாடம் சென்று சேண் ஓங்கிச்செல்வ மதி தோய, செல்வம் உயர்கின்ற,செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேயசெல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே.
உரை

செல்வ வளம்‌ மிக்க பெரிய மாடவீதிகள்‌ வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத்‌ தோய்கின்றன. இத்தகைய அழகிய நலன்கள்‌ உயர்ந்து விளங்குகின்றதும்‌ ஞானச்‌ செல்வர்கள்‌ பலர்‌ வாழ்கின்றதுமான தலம்‌ தில்லைப்‌ பதியாகும்‌. இத்தலத்தில்‌ உள்ள சிற்றம்பலத்தில்‌ சிவபெருமானார்‌ எழுந்தருளியுள்ளார்‌. இவர்‌ வீடுபேறாகிய செல்வத்துக்கு உரிய பெருமான்‌ ஆவார்‌. இப்பெருமானின்‌ திருவடிகளை வாழ்த்துதலே ஒருவருக்குச்‌ செல்வம்‌ ஆகும்‌.

6

வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேயகருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.
சொற்பிரிப்பு
வரு மாந்தளிர் மேனி மாது ஓர்பாகம் ஆம்திரு மாந் தில்லையுள், சிற்றம்பலம் மேயகருமான் உரி ஆடைக் கறை சேர் கண்டத்து எம்பெருமான் கழல் அல்லால் பேணாது, உள்ளமே.
உரை

சிவபெருமானார்‌, மாமரத்தில்‌ இருந்து புதிதாக வெளிவரும்‌ மாந்தளிர்‌ போன்ற மேனியை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்‌ கொண்டு இருப்பவர்‌. யானைத்‌ தோலை உரித்து ஆடையாகப்‌ போர்த்தவர்‌. நீலமணி போன்ற கண்டத்தை உடையவர்‌. இப்பெருமான்‌, திருமகள்‌ விளங்கும்‌ தில்லைப்‌ பதியினுள்‌ உள்ள சிற்றம்பலத்தில்‌ எழுந்தருளியுள்ளார்‌. இப்பெருமானின்‌ திருவடிகளைத்‌ தவிர வேறொன்றையும்‌ என்‌ உள்ளம்‌ விரும்பாது.

7

அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்தலையால் வணங்குவார் தலையா னார்களே.
சொற்பிரிப்பு
அலை ஆர் புனல் சூடி, ஆகத்து ஒருபாகம்மலையான் மகளோடும் மகிழ்ந்தான், உலகு ஏத்தச்சிலையால் எயில் எய்தான், சிற்றம்பலம் தன்னைத்தலையால் வணங்குவார் தலை ஆனார்களே.
உரை

சிவபெருமான்‌ அலைகள்‌ வீசும்‌ கங்கை நதியை தன்‌ திருமுடியில்‌ சூடியிருப்பவர்‌. தன்‌ திருமேனியில்‌ ஒருபாகமாக மலை அரசன்‌ மகளாகிய பார்வதி தேவியோடு மகழ்ந்திருப்பவர்‌. உலகம்‌ போற்றும்‌ மேரு மலையை வில்லாக வளைத்து முப்புரங்களை நோக்கி அம்பை எய்து அழித்தவர்‌. தில்லைச்‌ சிற்றம்பலத்தில்‌ எழுந்தருளியுள்ள இப்பெருமானைத்‌ தலைதாழ்த்தி வணங்குபவர்கள்‌ இந்த உலகத்தில்‌ தலையானவர்களாக விளங்குபவர்கள்‌ ஆவார்கள்‌.

8

கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்சீரா லேமல்கு சிற்றம் பலமேயநீரார் சடையானை நித்த லேத்துவார்தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.
சொற்பிரிப்பு
கூர்வாள் அரக்கன் தன் வலியைக் குறைவித்து,சீராலே மல்கு சிற்றம்பலம் மேயநீர் ஆர் சடையானை நித்தல் ஏத்துவார்தீரா நோய் எல்லாம் தீர்தல் திண்ணமே.
உரை

சிவபெருமான்‌, கூரிய வாளை உடைய அரக்கனாகிய இராவணனின்‌ வலிமையை அழித்தவர்‌. சிறந்த புகழ்பெற்ற தில்லைச்‌ சிற்றம்பலத்தில்‌ எழுந்தருளி இருப்பவர்‌. கங்கையைத்‌ தரித்த சடையினை உடையவர்‌. இப்பெருமானை நாள்தோறும்‌ துதிப்பவருக்குத்‌ தீராத நோய்கள்‌ எல்லாம்‌ திண்ணமாகத்‌ தீர்ந்துவிடும்‌.

9

கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்தமாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
சொற்பிரிப்பு
கோள் நாக(அ)ணையானும் குளிர்தாமரையானும்காணார் கழல் ஏத்த, கனல் ஆய் ஓங்கினான்,சேணார் வாழ் தில்லைச் சிற்றம்பலம் ஏத்த,மாணா நோய் எல்லாம் வாளா மாயுமே.
உரை

வளைந்து சுற்றிய நாகத்தை அணையாகக்‌ கொண்ட திருமாலும்‌, குளிர்ந்த தாமரை மேல்‌ விளங்கும்‌ நான்முகனும்‌ சிவபெருமானின்‌ அடிமுடிகளைக்‌ காண இயலாதவர்கள்‌. தனது திருவடிகளைப்‌ பரவ, அழல்வடிவில்‌ ஓங்கி நின்றவர்‌. இவர்‌ தேவர்களும்‌ உயர்ந்தோர்களும்‌ வாழும்‌ தில்லைப்‌ பதியினுள்‌ உள்ள சிற்றம்பலத்தில்‌ எழுந்தருளி உள்ளார்‌. இப்பெருமானைத்‌ துதிக்க கடுமையான பெரிய நோய்கள்‌ யாவும்‌ துன்பத்தைத்‌ தராமல்‌ மாய்ந்து விடும்‌.

10

பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதேசிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேயநட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
சொற்பிரிப்பு
பட்டைத் துவர் ஆடை, படிமம், கொண்டாடும்முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே,சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம்பலம் மேயநட்டப்பெருமானை நாளும் தொழுவோமே.
உரை

புத்தர்கள்‌ மரப்பட்டையில்‌ சாயம்‌ ஏற்றிய ஆடையை அணிபவர்கள்‌. சமணர்கள்‌ நோன்புகளை மேற்கொண்டு திரிபவர்கள்‌. அறியாமையோடு கூடிய இவர்களின்‌ சொற்களைக்‌ கேளாத ஒழுக்கமுடைய தவச்சீலர்கள்‌ தில்லைப்‌ பதியில்‌ வாழ்கின்றனர்‌. இப்பதியினுள்‌ உன்ள சிற்றம்பலத்தில்‌ நடராசப்‌ பெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌. இப்பெருமானை நாள்தோறும்‌ நாம்‌ தொழுவோமாக.

11

ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேயசூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலைகோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
சொற்பிரிப்பு
ஞாலத்து உயர் காழி ஞானசம்பந்தன்சீலத்தார் கொள்கைச் சிற்றம்பலம் மேயசூலப்படையானைச் சொன்ன தமிழ்மாலைகோலத்தால் பாட வல்லார் நல்லாரே.
உரை

ஞானசம்பந்தன்‌, உலகில்‌ உயர்ந்து விளங்கும்‌ சீகாழிப்‌ பதியில்‌ தோன்றியவர்‌. ஒழுக்கம்‌ உடைய தவச்சீலர்களால்‌ போற்றப்படுவது தில்லைத்‌ தலம்‌ ஆகும்‌. இத்தலத்தினுள்‌ உள்ள சிற்றம்பலத்தில்‌, சூலப்படையுடன்‌ எழுந்தருளி உள்ள சிவபெருமானை, இவர்‌ போற்றிப்‌ பாடினார்‌. இத்தமிழ்‌ மாலையாகிய பதிகத்தை அழகுறப்‌ பாட வல்லவர்‌ நல்லவர்‌ ஆவர்‌.