திருமுறை 1 · 1.079 · 11

திருக்கழுமலம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அயிலுறு படையினர் விடையினர் முடிமேல்அரவமும் மதியமும் விரவிய அழகர்மயிலுறு சாயல வனமுலை யொருபால்மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர்பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப்பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர்கயிலையும் பொதியிலும் இடமென வுடையார்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர்;மயில் உறு சாயல் வனமுலை ஒருபால் மகிழ்பவர்; வான் இடை முகில் புல்கும் மிடறர்;பயில்வு உறு சரிதையர்; எருது உகந்து ஏறிப் பாடியும் ஆடியும் பலி கொள்வர்; வலி சேர்கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
உரை

சிவபெருமான்‌ கூர்மை பொருந்திய சூலப்படையை உடையவர்‌. விடை ஊர்தியினர்‌. திருமுடிமேல்‌ அரவையும்‌, பிறைமதியையும்‌ சூடிய அழகினர்‌. மயில்‌ போன்ற சாயலையும்‌ இளமையான தனபாரங்களையும்‌ உடைய உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டு மகிழ்பவர்‌. மேகத்தை யொத்த கண்டத்தினர்‌. எல்லாராலும்‌ போற்றப்படும்‌ புராண வரலாறுகளை உடையவர்‌. இடபத்தில்‌ மகிழ்ந்து ஏறி பாடியும்‌ ஆடியும்‌ சென்று பலியேற்பவர்‌. வலிமை மிகுந்த கயிலை, பொதிகை போன்ற அழகிய மலைகள்‌ இவைகளைத்‌ தம்‌ இடங்களாக உடையவர்‌. இந்தப்‌ பெருமான்‌ எழுந்தருளியுள்ள கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்கினால்‌, நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

2

கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்பண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும்படர்சடை யடிகளார் பதியத னயலேவண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும்மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு முடி உறைபவர்; படுதலைக் கையர்;பண்டு அலர் அயன் சிரம் அரிந்தவர்; பொருந்தும் படர் சடை அடிகளார் பதி அதன் அயலேவண்டலும் வங்கமும் சங்கமும் சுறவும் மறிகடல் திரை கொணர்ந்து எற்றிய கரைமேல்கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
உரை

சிவபெருமான்‌ மேகம்‌ மற்றும்‌ நீலமலர்‌ போன்ற கருநீல நிறத்தை ஒத்த அழகிய கழுத்தினை உடையவர்‌. கயிலை மலையில்‌ உறைபவர்‌. உயிரற்ற தலைஓட்டைக்‌ கையில்‌ ஏந்தியவர்‌. முற்காலத்தில்‌ தாமரை மலர்‌ மேல்‌ உறையும்‌ பிரமனின்‌ தலைகளில்‌ ஒன்றைக்‌ கொய்தவர்‌. அழகுறப்‌ பொருந்தும்‌ சடைமுடியை உடையவர்‌. இந்தச்‌ சிவபிரானது பதி கழுமலம்‌ ஆகும்‌. இந்தப்‌ பதியின்‌ அருகில்‌ கடலின்‌ அலைகள்‌, வண்டல்‌ மண்‌, தோணி, சங்கு, சுறா ஆகியவற்றைக்‌ கொண்டு வந்து கரையில்‌ சேர்க்கும்‌. கடற்கரைமேல்‌ நீர்முள்ளி, தாளை நெய்தல்‌ ஆகியன பூத்து விளங்கும்‌. இந்த அழகிய கழுமலப்‌ பதியை நினைக்க, நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

3

எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்வகுத்தனர் ஏழிசை யெட்டிருங் கலைசேர்பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்டகண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்; எரி இடை மூன்றினர்; நால் மறையாளர்;மண் இடை ஐந்தினர்; ஆறினர் அங்கம்; வகுத்தனர் ஏழ் இசை; எட்டு இருங்கலை சேர்பண் இடை ஒன்பதும் உணர்ந்தவர்; பத்தர் பாடி நின்று அடி தொழ, மதனனை வெகுண்டகண் இடைக் கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
உரை

சிவபெருமானார்‌ எண்ணத்தில்‌ அருவாயிருந்த பொழுது ஒன்றாய்‌ இருப்பவர்‌. சிவம்‌ சக்தி என உருவத்தால்‌ இரண்டாக இருப்பவர்‌. நெருப்பில்‌ மூன்றாக இருப்பவர்‌. நான்மறைகளை அருளியவர்‌. மண்ணிடைச்‌ சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்‌ என்ற ஐந்து தன்மையர்‌. வேதத்தின்‌ ஆறு அங்கங்களாக இருப்பவர்‌. ஏழிசைகளை வகுத்தவர்‌. எண்வகைக்‌ கலைகளில்‌ ஒன்றான இசைத்‌ துறையில்‌ ஒன்பது கலைகளையும்‌ உணர்ந்தவர்‌. பக்தர்கள்‌ பாடிநின்று திருவடிகளை வணங்குமாறு வீற்றிருப்பவர்‌. மன்மதனைக்‌ கண்ணினின்று தோன்றிய கனலால்‌ எரித்தவர்‌. இப்பெருமான்‌ விரும்பி உறையும்‌ கோயில்‌ கழுமலம்‌ ஆகும்‌. இக்கோயிலை நினைத்து, அங்குள்ள இறைவனை வணங்கினால்‌ நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

4

எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்ஏறுகந் தேறுவர் நீறும்மெய் பூசித்திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்தீயெழ விழித்தனர் வேய்புரை தோளிவரிதரு கண்ணிணை மடவர லஞ்சமஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்தகரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்; ஏறு உகந்து ஏறுவர்; நீறு மெய் பூசித்திரிதரும் இயல்பினர்; அயலவர் புரங்கள் தீ எழ விழித்தனர்; வேய் புரை தோளி,வரி தரு கண் இணை மடவரல், அஞ்ச, மஞ்சு உற நிமிர்ந்தது ஓர் வடிவொடும் வந்தகரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
உரை

சிவபெருமானார்‌ தனது ஒரு கரத்தில்‌ எரியை ஏந்தி இருப்பவர்‌. தேவர்களுக்கு தலைவன்‌ ஆனவர்‌. விடைமேல்‌ விரும்பி திருநீற்றை மெய்யில்‌ பூசித்‌ திரியும்‌ இயல்பினர்‌. பகைவரான அசுரர்களின்‌ மூன்று புரங்களும்‌ தீயில்‌ அழியுமாறு விழித்தவர்‌. மூங்கில்‌ போன்ற திரண்ட தோள்களையும்‌ வரிபரந்த கண்களையும்‌ உடைய உமையம்மை அஞ்சுமாறு மேகம்‌ இரண்டு நிமிர்ந்து வந்தாற்போல, கரிய வடிவோடு தம்பால்‌ வந்தது ஓர்‌ யானை. அந்த யானையின்‌ தோலை உரித்து தன்‌ முதுகில்‌ அதனை போர்த்தியவர்‌. அந்தப்‌ பெருமான்‌ வீற்றிருக்கும்‌ இடமாக விளங்குவது கழுமலம்‌ ஆகும்‌. அந்தக்‌ கழுமலத்தை நினைத்து, அங்குள்ள இறைவனை வணங்க நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

5

ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாகஉண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்படஅர வாமைஅக் கணிந்தவர்க் கிடமாம்நீரெதிர்ந் திழிமணி நித்திலம் முத்தம்நிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக்காரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
ஊர் எதிர்ந்து இடு பலி, தலை கலன் ஆக உண்பவர்; விண் பொலிந்து இலங்கிய உருவர்;பார் எதிர்ந்து அடி தொழ, விரை தரும் மார்பில் பட அரவு ஆமை அக்கு அணிந்தவர்க்கு இடம் ஆம்நீர் எதிர்ந்து இழி மணி, நித்தில முத்தம் நிரை சொரி சங்கமொடு, ஒண்மணி வரன்றி,கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
உரை

சிவபெருமானார்‌, ஊர்‌ மக்கள்‌ இடும்‌ பலியைத்‌ தனது உண்ணும்‌ பாத்திரமான தலையோட்டில்‌ ஏற்று உண்பவர்‌. மண்ணுலகத்தினர்‌ தம்‌ திருவடிகளைத்‌ தொழுமாறு, தனது மணம்‌ கமழும்‌ மார்பில்‌, படத்தை உடைய பாம்பு, ஆமை ஓடு, உருத்திராக்கம்‌ முதலியவைகளை அணிந்தவராகவும்‌, திருக்கழுமலத்தைத்‌ தனது இடமாகவும்‌ கொண்டுள்ளார்‌. கருமையான மேகங்கள்‌ தாழ்ந்து கடலில்‌ படிகின்றன. கடலில்‌ வலிமையான அலைகள்‌ தோன்றுகின்றன. அந்தக்‌ கடல்‌ அலைகளில்‌ நீரில்‌ படிந்து, மணிகள்‌, முத்துக்கள்‌, வளைந்த சங்குகள்‌, ஒளி பொருந்திய பவள மணிகள்‌ ஆகியவை இழுத்து வரப்பட்டு கரையில்‌ சேருகின்றன. இத்தகைய அழகுடைய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறவனை வணங்க நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

6

முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகிமுடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப்பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்தபேரரு ளாளனார் பேணிய கோயில்பொன்னியல் நறுமலர் புனலொடு தூபஞ்சாந்தமும் ஏந்திய கையின ராகிக்கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி, முடி உடை அமரர்கள் அடி பணிந்து ஏத்த,பின்னிய சடைமிசைப் பிறை நிறைவித்த பேர் அருளாளனார் பேணிய கோயில்பொன் இயல் நறுமலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி,கன்னியர் நாள்தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
உரை

சிவபெருமானார்‌ முதலில்‌ உயிர்த்‌ தோற்றத்தையும்‌ பின்னர்‌ இறுதியில்‌ முக்தியையும்‌ வழங்குபவர்‌. முடியணிந்த தேவர்‌ கணங்கள்‌ தம்‌ திருவடிகளைப்‌ பணிந்து போற்ற, முறுக்கிய சடையின்மேல்‌ பிறையை நிறைந்து சூடிய பேரருளாராகத்‌ திகழ்கின்றார்‌. இப்பெருமான்‌ விரும்பிப்‌ போற்றிய கோயில்‌ திருக்கழுமலம்‌ ஆகும்‌. பொன்‌ போன்ற மணம்‌ பொருந்திய மலர்களும்‌, புனல்‌, தூபம்‌, சந்தனம்‌ முதலியன ஏந்திய கையினராய்‌ விளங்குகின்றார்‌. கன்னியர்கள்‌ நாள்தோறும்‌ வந்து இறைவர்‌ கொண்டருளிய வடிவங்களைப்‌ போற்றி வழிபடுகின்றனர்‌. அவர்கள்‌ கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்க, அவர்கள்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகின்றன.

7

கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்மலைக்கணித் தாவர வன்றிரை முரலமதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்கலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார், குரை கழல் பணிந்தவர்க்கு அருளிய பொருளின்நிலைக்கு அணித்தா வர நினைய வல்லார் தம் நெடுந் துயர் தவிர்த்த எம் நிமலருக்கு இடம் ஆம்மலைக்கு அணித்தா வர வன் திரை முரல, மது விரி புன்னைகள் முத்து என அரும்ப,கலைக்கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய,நம் வினைகரிசு அறுமே.
உரை

சிவபெருமானார்‌, தனது பக்தனான மார்க்கண்டேயரைக்‌ கொலை செய்ய வந்த கூற்றுவனான யமனை உதைத்தவர்‌. ஒலிக்கின்ற கழல்‌ அணிந்த தமது திருவடியைப்‌ பணிந்தவர்களுக்கு உரியதான, நிலைத்த வீட்டின்பத்தை அருளுபவர்‌. தம்மை நினைய வல்லவர்களுக்கு பிறப்பு இறப்பு என்னும்‌ நெடுந்துயரத்தை தவிர்ப்பவர்‌. இந்த மாசற்ற இறைவர்‌ திருக்கழுமலத்தைத்‌ தம்‌ இடமாகக்‌ கொண்டுள்ளார்‌. மலைகளுக்கு அணிகலனாக விளங்கும்‌ தோணிமலைக்கு அருகில்‌ வலிய அலைகள்‌ ஒலிக்கின்றன. தேன்‌ நிறைந்த புன்னைகள்‌ முத்தென அரும்புகின்றன. கடற்கரைச்‌ சோலைகளின்‌ நிழல்களில்‌ மான்‌ இனங்கள்‌ வாழுகின்றன. இந்த அழகிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்க நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

8

புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்தோள்பயம்பல படஅடர்த் தருளிய பெருமான்பரிவொடு மினிதுறை கோயில தாகும்வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும்வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்கயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை எடுத்தவன், பொன்முடி திண்தோள்பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது உறை கோயில் அது ஆகும்வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில் பெயர் உளது என்ன,இயம்பல படக் கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,நம் வினைகரிசு அறுமே.
உரை

தென்‌ இலங்கை மன்னனான இராவணன்‌ தோள்கள்‌ பலவற்றை உடையவன்‌. கயிலை மலையைப்‌ பெயர்க்கத்‌ துணிந்தவன்‌. அவனது பொன்‌ மயமான கிரீடங்களையும்‌, வலிமையான தோள்களையும்‌ பலவகைகளில்‌ அச்சப்படுமாறு அடர்த்து அருளிய பெருமான்‌ சிவபெருமானாகும்‌. இப்பெருமான்‌ பேரன்போடும்‌ பெரு மகிழ்ச்சியோடும்‌ உறையும்‌ கோயில்‌ திருக்கழுமலம்‌ ஆகும்‌. அகன்ற பல ஆகாயத்திலும்‌, மண்ணுலகு எங்கிலும்‌, வேறு வேறு யுகங்களிலும்‌, இக்கோயில்‌ வேறு வேறு பெயருடையதாக விளங்குகின்றது. நீர்த்துளிகள்‌ பலவாகத்‌ தோன்றவும்‌, கடலின்‌ அலைகள்‌ தொடர்ந்து வந்து மோதுவதுமாக இருக்கின்றன. இந்த அழகிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்க நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

9

விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்பலங்களால் நேடியும் அறிவரி தாயபரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்மலங்கிவன் றிரைவரை யெனப்பரந் தெங்கும்மறிகட லோங்கிவெள் இப்பியுஞ் சுமந்துகலங்கடஞ் சரக்கொடு நிரக்கவந் தேறுங்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ் தாமரையோனும், என்று இவர் தம்பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று இனிது உறைகோயில்மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி, வெள் இப்பியும் சுமந்து,கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய, நம் வினை கரிசு அறுமே.
உரை

திருமால்‌, கோவர்த்தன மலையைக்‌ குடையாகப்‌ பிடித்து மழையைத்‌ தடுத்தவன்‌. பிரமன்‌, மணம்‌ கமழும்‌ தாமரையில்‌ தோன்றியவன்‌. இவர்கள்‌ இருவரும்‌ தமது உடல்‌ பலத்தால்‌ தேடியும்‌ அறிய முடியாத வடிவை உடைய சிறப்பினர்‌ சிவபெருமானார்‌. இப்பெருமானார்‌ விரும்பி வந்து, இன்பம்‌ தருமாறு உறையும்‌ கோயில்‌ திருக்கழுமலம்‌ ஆகும்‌. வலிமையான கடல்‌ அலைகள்‌ ஒன்றோடு ஒன்று மோதிக்‌ கலங்கி மலைகளைப்‌ போல எங்கும்‌ பரவி, கரையில்‌ மோதி மீளுகின்றன. கடலில்‌ மரக்கலங்கள்‌ வெள்ளிய முத்துச்‌ சிப்பிகளைச்‌ சுமந்து, தன்னிடத்தில்‌ ஏற்றப்பட்ட சரக்கோடு, வரிசையாக கரையை நோக்கி வருகின்றன. இந்த அழகிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வழிபட நம்‌ வினைத்‌ தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

10

ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்நோம்பல தவமறி யாதவர் நொடிந்தமூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்காம்பன தோளியொ டினிதுறை கோயில்கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.
சொற்பிரிப்பு
ஆம் பலதவம் முயன்று அற உரை சொல்லும் அறிவு இலாச் சமணரும், தேரரும், கணி சேர்நோம் பலதவம் அறியாதவர் நொடிந்த மூதுரை கொள்கிலா முதல்வர் தம் மேனிச்சாம்பலும் பூசி, வெண்தலை கலன் ஆகத் தையலார் இடு பலி வையகத்து ஏற்று,காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய, நம் வினைகரிசு அறுமே.
உரை

சமணரும்‌ புத்தரும்‌ அவர்களால்‌ இயன்ற அளவு பல தலங்கள்‌ தோறும்‌ சென்று, அறிவற்ற அறவுரைகளை மக்களிடையே பரப்பி வருகின்றனர்‌. அவர்கள்‌, மெய்யான தவம்‌ பலவற்றின்‌ உண்மையான கருத்துக்களைப்‌ புரிந்து கொள்ளாதவர்கள்‌. ஆதலால்‌ அவர்கள்‌ கூறிவரும்‌ நகைப்புக்கிடமான உரைகளை ஏற்று அருளாதவர்‌ நம்‌ சிவபெருமான்‌. நம்‌ முதல்வரான சிவபெருமான்‌ தம்‌ மேனியில்‌ திருநீற்றைப்‌ பூசியிருப்பவர்‌. வெண்டலையை உண்கலனாகக்‌ கொண்டு மகளிர்‌ இடும்‌ பலியை ஏற்பவர்‌. மூங்கில்‌ போன்ற தோள்களை உடைய உமையம்மையோடு மகிழ்ச்சியாக உறையும்‌ கோயில்‌ திருக்கழுமலம்‌ ஆகும்‌. இந்த அழிய கழுமலத்தை நினைத்து அங்குள்ள இறைவனை வணங்கினால்‌ நம்‌ வினைத்தீமைகள்‌ அறுபட்டுப்‌ போகும்‌.

11

கலிகெழு பாரிடை யூரென வுளதாங்கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர்வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும்உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.
சொற்பிரிப்பு
கலி கெழு பார் இடை ஊர் என உளது ஆம் கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர் மேல்,வலி கெழு மனம் மிக வைத்தவன், மறை சேர் வரும் கலைஞானசம்பந்தன் தமிழின்ஒலிகெழுமாலை என்று உரைசெய்த பத்தும் உண்மையினால் நினைந்து ஏத்த வல்லார்மேல்மெலி குழு துயர் அடையா; வினை சிந்தும்; விண்ணவர் ஆற்றலின் மிகப் பெறுவாரே.
உரை

ஆரவாரம்‌ மிக்க இந்த உலகத்தில்‌, ஊர்‌ எனப்‌ போற்றப்‌ பெறும்‌ தலம்‌ திருக்கழுமலம்‌ ஆகும்‌. இந்தக்‌ கழுமலத்தை விரும்பிக்‌ கோயில்‌ கொண்டவர்‌ சிவபெருமான்‌. இப்பெருமான்‌ மேல்‌ உறுதியோடு தன்‌ மனத்தை வைத்திருப்பவர்‌ ஞானசம்பந்தன்‌. இவர்‌ வேதங்களிலும்‌ கலைகளிலும்‌ வல்லவர்‌. தமிழ்‌ மொழியின்‌ இசையோடு இப்பதிகத்தை மாலையாகப்‌ பாடினார்‌. இந்தப்‌ பத்துப்‌ பாடல்களின்‌ உண்மைப்‌ பொருளை உணர்ந்து துதித்துப்‌ பாட வல்லவர்கள்‌, மெலிவைத்‌ தரும்‌ துன்பங்களை அடைய மாட்டார்கள்‌. அவர்களுடைய வினைகளும்‌ நீங்கிவிடும்‌. அவர்கள்‌ விண்ணவரிலும்‌ மேம்பட்ட ஆற்றலைப்‌ பெறுவார்கள்‌.