திருமுறை 1 · 1.077 · 11

திருஅச்சிறுபாக்கம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
அச்சிறுபாக்கம்
நாடு
தொண்டைநாடு

1

பொன்றிரண் டன்ன புரிசடை புரளப்பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக்குன்றிரண் டன்ன தோளுடை யகலங்குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர்மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவைமெல்லிய லாளையோர் பாகமாப் பேணிஅன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
பொன் திரண்டன்ன புரிசடை புரள, பொருகடல் பவளமொடு அழல் நிறம் புரைய,குன்று இரண்டு அன்ன தோள் உடை அகலம் குலாய வெண் நூலொடு கொழும்பொடி அணிவர்;மின் திரண்டன்ன நுண் இடை அரிவை மெல்லியலாளை ஓர்பாகமாப் பேணி,அன்று இரண்டு உருவம் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

சிவபெருமானார்‌ அச்சிறுபாக்கத்தைத்‌ தாம்‌ ஆட்சிபுரியும்‌ இடமாகக்‌ கொண்டுள்ள இறைவராவார்‌. தமது முறுக்கேறிய பொன்‌ திரண்டாற்போன்ற சடையானது, பெருங்கடலின்‌ அலைகளைப்‌ போலவும்‌, பவளக்‌ கொடியையும்‌, தீ வண்ணத்தையும்‌ ஒத்திருந்தாற்‌ போன்று புரளுகிறது. குன்றுகள்‌ போன்ற இரண்டு தோள்களோடு கூடிய மார்பில்‌ வெண்மையான முப்புரிநூல்‌ விளங்குகின்றது. வளமையான திருநீற்றையும்‌ அணிந்துள்ளார்‌. மின்னல்‌ போன்ற நுண்ணிய இடையினை உடைய மென்மைத்‌ தன்மை வாய்ந்த உமையம்மையை ஒருபாகமாக விரும்பி ஏற்றிருப்பவர்‌. ஓருருவில்‌ ஈருருவாய்த்‌ தோன்றும்‌ அடிகள்‌ ஆவார்‌.

2

தேனினும் இனியர் பாலன நீற்றர்தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்ஊன்நயந் துருக உவகைகள் தருவார்உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்வானக மிறந்து வையகம் வணங்கவயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்ஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
தேனினும் இனியர், பால் அன நீற்றர், தீம்கரும்பு அனையர், தம் திருவடி தொழுவார்ஊன் நயந்து உருக உவகைகள் தருவார், உச்சிமேல் உறைபவர், ஒன்று அலாது ஊரார்,வானகம் இறந்து வையகம் வணங்க வயம் கொள நிற்பது ஓர் வடிவினை உடையார்,ஆனையின் உரிவை போர்த்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தை, தான்‌ ஆட்சி புரியும்‌ இடமாகக்‌ கொண்டுள்ள இறைவர்‌, தேனினும்‌ இனியவர்‌. பால்போன்ற நீறணிந்தவர்‌. இனிய கரும்பு போன்றவர்‌. தம்‌ திருவடிகளை மெய்யுருகி வணங்கும்‌ அன்பர்கட்கு உவகைகள்‌ தருபவர்‌. அவர்களின்‌ தலைமேல்‌ விளங்குபவர்‌. இடப வாகனமாகிய ஓர்‌ ஊர்தியிலேயே வருபவர்‌. வானுலகைக்‌ கடந்து மண்ணுலகை அடைந்து, அங்கு தம்மை வழிபடும்‌ அன்பர்கள்‌ நினைக்கும்‌ செயலை வெற்றி பெறச்‌ செய்து நிற்கும்‌ வடிவினை உடையவர்‌. யானையின்‌ தோலைப்‌ போர்த்தியவர்‌. அவர்‌ எம்‌ தலைவர்‌ ஆவார்‌.

3

காரிரு ளுருவம் மால்வரை புரையக்களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடிநீருரு மகளை நிமிர்சடைத் தாங்கிநீறணிந் தேறுகந் தேறிய நிமலர்பேரரு ளாளர் பிறவியிற் சேரார்பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழஆரிருண் மாலை யாடும்எம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
கார் இருள் உருவ மால்வரை புரையக் களிற்றினது உரிவை கொண்டு அரிவை மேல் ஓடி,நீர் உருமகளை நிமிர்சடைத் தாங்கி, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலர்;பேர் அருளாளர்; பிறவியில் சேரார்; பிணி இலர்; கேடு இலர்; பேய்க்கணம் சூழஆர் இருள் மாலை ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தைத்‌ தாம்‌ ஆட்சிபுரியும்‌ இடமாகக்‌ கொண்டுள்ள இறைவர்‌, உமையம்மை பெண்‌ யானை வடிவு கொள்ளத்‌ தாம்‌ காரிருளும்‌, பெரிய மலையும்‌ போன்ற ஆண்‌ யானை வடிவம்‌ தாங்கி அவள்‌ பின்னால்‌ ஓடியவர்‌. நீர்‌ வடிவமான கங்கையை மேல்நோக்கிய சடைமிசைத்‌ தாங்கியவர்‌. நீறு பூசி, விடையேற்றில்‌ மகிழ்ந்து ஏறிவரும்‌ புனிதர்‌. பேரருளாளர்‌. பிறப்பிறப்பிற்‌ சேராதவர்‌. பிணி, கேடு இல்லாதவர்‌. பேய்க்கணங்கள்‌ சூழச்‌ சுடுகாட்டில்‌, இருண்ட மாலை யாமத்தில்‌, எம்‌ அடிகள்‌ நடனம்‌ புரிபவர்‌ ஆவார்‌.

4

மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும்மலைமகள வளொடு மருவின ரெனவும்செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ்சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்தம்மல ரடியொன் றடியவர் பரவத்தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேரஅம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
"மைம்மலர்க்கோதை மார்பினர்" எனவும், " மலைமகள் அவளொடு மருவினர்" எனவும்,"செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர், எம் சென்னிமேல் உறைவார்"தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும் தாள் நிழல் சேர,அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தில்‌ ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமான்‌, குவளை மலர்களால்‌ தொடுக்கப்பட்ட மாலையை மார்பில்‌ சூடியவர்‌. அழகிய கொன்றை மலர்‌ மாலையை அணிந்தவர்‌. மலைமகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாகக்‌ கொண்டுள்ளவர்‌. சிவந்த மலர்‌ போன்ற பிறையையும்‌, தேங்கியுள்ள கங்கை நீரையும்‌ தம்‌ சடைமுடிமேல்‌ உடையவர்‌. எம்‌ தலை உச்சியில்‌ உறைபவர்‌. மலர்‌ போன்ற மென்மையான தம்‌ திருவடிகளை, மனம்‌ ஒன்றி, அடியவர்கள்‌, தமிழ்ச்‌ சொற்களாலும்‌, வடமொழிச்‌ சொற்களாலும்‌ துதிக்கும்‌ தோத்திரங்கள்‌, அவரது திருவடிகளையே சேருகின்றன.

5

விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்பலபுக ழல்லது பழியில ரெனவும்எண்ணலா காத இமையவர் நாளும்ஏத்தர வங்களோ டெழில்பெற நின்றஅண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
"விண் உலாம் மதியம் சூடினர்" எனவும், " விரிசடை உள்ளது, வெள்ளநீர்" எனவும்,"பண் உலாம் மறைகள் பாடினர்" எனவும், " பல புகழ் அல்லது பழி இலர்" எனவும்,எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில் பெற நின்றஅண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தில்‌ ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமான்‌, வானிலே உலவும்‌ திங்களைச்‌ சூடியவர்‌. அவரது விரிந்த சடைமுடியில்‌ கங்கை நீரின்‌ வெள்ளம்‌ தங்கியுள்ளது. இசை அமைதியோடு கூடிய நான்மறைகளைத்‌ தோற்றுவித்தவர்‌. பலவகையான புகழையே உடையவர்‌. பழியே இல்லாதவர்‌. எண்ணற்ற தேவர்களால்‌ நாள்தோறும்‌ தோத்திரிக்கப்படுபவர்‌. அரவு ஆபரணங்களோடு மிக்க அழகுபெற இருப்பவர்‌. எல்லாருக்கும்‌ தலைமையானவர்‌. இடபத்தை வாகனமாகக்‌ கொண்டு அதன்‌ மீது ஏறி வருபவரும்‌ இவரே எம்‌ அடிகள்‌ ஆவார்‌.

6

நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்கநிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்தோடொரு காதினிற் பெய்துவெய் தாயசுடலையி லாடுவர் தோலுடை யாகக்காடரங் காகக் கங்குலும் பகலுங்கழுதொடு பாரிடங் கைதொழு தேத்தஆடர வாட ஆடும்எம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு, நீறு மெய் பூசி,தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்; தோல் உடை ஆக,காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது ஏத்த,ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தில்‌ ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமானின்‌ நீண்ட பெரிய சடைமேல்‌ இளம்பிறை விளங்குகின்றது. ஒளி பொருந்திய மழுவோடும்‌, திருநீற்‌றை மேனியில்‌ பூசியும்‌, ஒருகாதில்‌ தோடணிந்தும்‌, கொடிய சுடலைக்‌ காட்டில்‌ ஆடுபவர்‌ இவர்‌. புலித்தோலை உடையாக அணிந்தவர்‌. இரவும்‌, பகலும்‌ பேய்க்கணங்களும்‌, பூதகணங்களும்‌ தங்களது கைகளால்‌ தொழுதேத்தப்படுபவர்‌. படமெடுத்தாடும்‌ பாம்புகள்‌ தம்மேனிமேல்‌ பொருந்தி ஆடச்‌ சுடுகாட்டைத்‌ தமது அரங்கமாகக்‌ கொண்டு ஆடும்‌ அடிகள்‌ இவர்‌ ஆவர்‌.

7

ஏறுமொன் றேறி நீறுமெய் பூசிஇளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்குளிரிள மதியமுங் கூவிள மலரும்நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும்மகிழிள வன்னியும் இவைநலம் பகரஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
ஏறும் ஒன்று ஏறி, நீறு மெய் பூசி, இளங்கிளை அரிவையொடுஒருங்கு உடன் ஆகிக்கூறும் ஒன்று அருளி, கொன்றை அம்தாரும் குளிர் இளமதியமும் கூவிளமலரும்நாறும் மல்லிகையும் எருக்கொடு முருக்கும் மகிழ் இளவன்னியும் இவை நலம் பகர,ஆறும் ஓர் சடைமேல் அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தில்‌ ஆட்சி கொண்டுள்ள இறைவரான சிவபெருமான்‌ இடபம்‌ ஒன்றில்‌ ஏறி வருபவர்‌. தம்‌ திருமேனியில்‌ நீறுபூசியவர்‌. இளைய கிளி போன்ற அழகிய பார்வதி தேவியாருக்குத்‌ தம்‌ உடலில்‌ ஒருகூறு அருளியவர்‌. இருவரும்‌ ஒருவராய்‌ இணைந்து இருப்பவர்‌. தம்‌ திருமுடிமேல்‌ கொன்றை மாலையையும்‌ இளமதியையும்‌ அணிந்தவர்‌. வில்வப்பூ, மணங்கமழும்‌ மல்லிகை, எருக்கு, முருக்கு, மகிழம்பூ, இள வன்னி இலை ஆயன திருமுடியில்‌ மணம்‌ பரப்புகின்றன. கங்கையாற்றைச்‌ சடைமேல்‌ அணிந்துள்ள எம்‌ அடிகளும்‌ இவரே ஆவார்‌.

8

கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்பிச்சமும் பிறவும் பெண்அணங் காயபிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
கச்சும் ஒள்வாளும் கட்டிய உடையர், கதிர் முடி சுடர்விடக் கவரியும் குடையும்பிச்சமும் பிறவும் பெண் அணங்கு ஆய பிறை நுதலவர், தமைப் பெரியவர் பேண,பச்சமும் வலியும் கருதிய அரக்கன் பருவரை எடுத்ததிண்தோள்களை அடர்வித்து,அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தில்‌ ஆட்சி கொண்டுள்ள இறைவர்‌ ஒளி பொருந்திய வாளைக்‌ கச்சிலே பொருத்தி இடையில்‌ ஆடையாகக்‌ கட்டியுள்ளவர்‌. ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம்‌ முதலியவற்றோடு பெண்களைக்‌ கவரும்‌ பிறைமதியை முடியிற்‌ சூடி விளங்குபவர்‌. பெருமை உடைய அடியவர்‌ தம்மை விரும்பி வழிபடுமாறு, தம்‌ அன்பு, வலிமை ஆகியவற்றைக்‌ கருதித்‌ தன்னைப்‌ பெரியவனாக எண்ணிப்‌ பெரிய கயிலை மலையைப்‌ பெயர்த்தெடுத்த இராவணனின்‌ தோள்களை அடர்த்து அவனுக்குத்‌ தம்பால்‌ அன்பையும்‌ அருளையும்‌ கொடுத்த எம்‌ அடிகள்‌ ஆவார்‌.

9

நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்நுகர்புகர் சாந்தமொ டேந்திய மாலைக்கூற்றலா ரேனும் இன்னவா றென்றும்எய்தலா காததொ ரியல்பினை யுடையார்தோற்றலார் மாலும் நான்முக முடையதோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
நோற்றலாரேனும், வேட்டலாரேனும், நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலைக்கூற்றலாரேனும், இன்ன ஆறு என்றும் எய்தல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்;தோற்றலார் மாலும் நான்முகம் உடைய தோன்றலும், அடியொடு முடி உற, தங்கள்ஆற்றலால் காணார் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

தவம்‌ செய்யாதவர்களாலும்‌ அன்பு செய்யாதவர்களாலும்‌, நுகரத்தக்க நெய்வேத்தியம்‌, சந்தனம்‌ கையில்‌ ஏந்திய மாலை இவற்றின்‌ கூறுகளோடு வழிபாடு செய்யாதவர்களாலும்‌, அடைய முடியாதவராய்‌ அச்சிறுபாக்கத்தில்‌ ஆட்சி கொண்டுள்ள . இறைவரான சிவபெருமான்‌ வீற்றிருக்கின்றார்‌. இத்தகையவர்‌ என்று அறியமுடியாத தன்மையும்‌, அடையமுடியாத அருமையும்‌ உடைய இயல்பினர்‌ என்பதறிந்தும்‌ திருமாலும்‌ நான்முகனும்‌ பன்றியும்‌ அன்னமுமாய்‌ மாறி அடியையும்‌ முடியையும்‌ காண முயற்சித்துத்‌ தோற்றனர்‌. அவர்களால்‌ காண இயலாதவராக உயர்ந்து நின்ற எம்‌ அடிகள்‌ இவர்‌ ஆவார்‌. எனவே, தவம்‌ செய்பவர்களுக்கும்‌, அன்பு செய்பவர்களுக்கும்‌ வழிபடுவோர்களுக்கும்‌ எளியவராய்‌ இருப்பவர்‌ சிவபெருமான்‌.

10

வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்நல்வினை நீக்கிய வல்வினை யாளர்ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார்உள்கலா காததோ ரியல்பினை யுடையார்வேதமும் வேத நெறிகளு மாகிவிமலவே டத்தொடு கமலமா மதிபோல்ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.
சொற்பிரிப்பு
வாது செய் சமணும், சாக்கியப்பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர்,ஓதியும் கேட்டும் உணர்வினை இலாதார் உள்கல் ஆகாதது ஓர் இயல்பினை உடையார்;வேதமும் வேத நெறிகளும் ஆகி, விமல வேடத்தொடு கமல மா மதி போல்ஆதியும் ஈறும் ஆய எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி கொண்டாரே.
உரை

அச்சிறுபாக்கத்தில்‌ எம்‌ அடிகளான சிவபெருமான்‌ ஆட்சி கொண்டுள்ளார்‌. சமணர்களும்‌, சாக்கியப்‌ பேய்களும்‌, நல்வினை செய்யாது வல்வினைகள்‌ புரிபவர்கள்‌. ஓதியும்‌, கேட்டும்‌, திருந்தாத உணர்வு உடையவர்கள்‌. வீணாகத்‌ தர்க்க வாதம்‌ புரிபவர்கள்‌. அவர்கள்‌ நினைத்தும்‌ அறிய முடியாத இயல்பினை உடையவர்‌ சிவபெருமான்‌. வேதமும்‌, வேதநெறிகளும்‌ ஆகியவர்‌ தம்மை வழிபடுவார்‌ மலங்களை நீக்கும்‌ வேடம்‌ உடையவர்‌. தாமரை மலரும்‌, திங்களும்‌ போன்ற அழகும்‌, தன்மையும்‌ உடையவர்‌. பிரபஞ்சத்தின்‌ ஆதியும்‌, அந்தமுமாய்‌ இருப்பவர்‌.

11

மைச்செறி குவளை தவளைவாய் நிறையமதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்அன்புடை யடியவர் அருவினை யிலரே.
சொற்பிரிப்பு
மைச் செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப் பொய்கையில் புதுமலர் கிழியப்பச்சிறவு எறி வயல் வெறி கமழ் காழிப் பதியவர் அதிபதிகவுணியர் பெருமான்,கைச் சிறுமறியவன் கழல் அலால் பேணாக் கருத்து உடை ஞானசம்பந்தன்—தமிழ் கொண்டு,அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்பு உடை அடியவர்அருவினை இலரே.
உரை

அவர்‌ புறச்சமயிகளுடைய நல்வினையைப்‌ போக்கியவர்‌, படித்துங்‌ கேட்டும்‌ உணர்ச்சியற்றவர்களால்‌ தியானிக்கப்படாதவர்‌. வேதமும்‌ அவைகூறும்‌ நெறிகளுமாகி, பரிசுத்த வேடத்தோடு, ஆதியும்‌ ஈறுமாய அடிகள்‌ இவர்‌ என்கின்றது. வாதுசெய்‌ சமண்‌ - விதண்டாவாதமே செய்து பொழுதுபோக்கும்‌ சமணர்‌. அவர்களுக்குத்‌ துணை இருப்பது உலக போகத்திற்குரிய நல்வினை யாதலின்‌ உண்மை உணராது வாதமே செய்து காலம்‌ கழிக்கின்றனர்‌ என்பதாம்‌. ஆதலால்‌ அவர்களுடைய நல்வினையை நீக்க வேண்டியது இவர்‌ அருளித்‌ திறமாயிற்று.