திருமுறை 1 · 1.076 · 11

திருஇலம்பையங்கோட்டூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
குறிஞ்சி
தலம்
இலம்பையங்கோட்டூர்
நாடு
தொண்டைநாடு

1

மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்நிலையினான் எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
மலையினார் பருப்பதம், துருத்தி, மாற்பேறு, மாசு இலாச் சீர் மறைக்காடு, நெய்த் தானம்,நிலையினான், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறு உகந்து ஏறிய நிமலன்-கலையின் ஆர் மடப்பிணை துணையொடும் துயில, கானல் அம் பெடை புல்கிக் கணமயில் ஆலும்இலையின் ஆர் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர்இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமான்‌ கயிலாய மலையைத்‌ தனது இடமாகக்‌ கொண்டு உறையும்‌ இறைவன்‌ ஆவார்‌. சீபருப்பதம்‌, துருத்தி, மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு, நெய்த்தானம்‌ ஆகிய தலங்களிலும்‌ நிலையாக எழுந்தருளி இருப்பவர்‌. தனது உரைகளை எனது உரையாக வெளிப்படுத்தி அருள்புரிபவர்‌. திருநீறு அணிந்து ஆனேற்றில்‌ மகிழ்வோடு ஏறிவரும்‌ நிமலன்‌ இவர்‌. ஆண்‌ மான்கள்‌ தம்‌ இளைய பெண்‌ மான்களோடு துயில்கின்றன. சோலைகளில்‌ கூட்டமாக வாழும்‌ ஆண்‌ மயில்கள்‌ தங்கள்‌ தங்கள்‌ பெடைகளைத்‌ தழுவி களிப்புறுகின்றன. அழகிய இலைகள்‌ நிறைந்த பசுமையான பொழில்கள்‌ சூழ்ந்த, இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமான்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டு உன்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌, என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு :இயல்பாகுமா? (பிரிவினால்‌ வருந்தும்‌ தலைவியின்‌ நிலையை அநுபவித்துக்‌ கூறுகின்றார்கள்‌ திருஞானசம்பந்தப்‌ பிள்ளையவர்கள்‌).

2

திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலைநிருமலன் எனதுரை தனதுரை யாக நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
திரு மலர்க்கொன்றையான், நின்றியூர் மேயான், தேவர்கள்தலைமகன், திருக்கழிப்பாலைநிருமலன், எனது உரை தனது உரை ஆக, நீறு அணிந்து ஏறுஉகந்து ஏறிய நிமலன்-கருமலர்க் கமழ் சுனை நீள் மலர்க்குவளை கதிர் முலைஇளையவர் மதிமுகத்து உலவும்இருமலர்த் தண்பொய்கை இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமானார்‌ அழகிய கொன்றைமலர்‌ மாலையை அணிந்தவர்‌. திருநின்றியூரில்‌ எழுந்தருளி இருப்பவர்‌. தேவர்களுக்குத்‌ தலைவன்‌ ஆவார்‌. திருக்கழிப்பாலையில்‌ குற்றமற்றவனாக உறைபவர்‌. திருஞானசம்பந்தர்‌ தன்னுடைய உரைகளை சிவனது உரைகளாகக்‌ கூறுபவர்‌. திருநீறு அணிந்து ஆனேற்றில்‌ மகிழ்வோடு ஏறிவரும்‌ நிமலன்‌ ஆவார்‌. பெரிய தாமரை மலர்களால்‌, சுனைகளில்‌ மணம்‌ நிரம்பியிருக்கின்றது. நீண்ட குவளை மலர்கள்‌ பூத்திருக்கின்றன. இந்த மலர்கள்‌ இளம்‌ பெண்களின்‌ மதிபோன்ற முகத்தில்‌ உலாவும்‌ குளிர்ச்சியான இரு கண்களுக்கு நிகராக இருக்கின்றன. இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமான்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்க்கு என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

3

பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும்காலனாம் எனதுரை தனதுரை யாகக் கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்1ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.பாடம் : 1விண்டேங்கும்
சொற்பிரிப்பு
பாலன் ஆம், விருத்தன் ஆம், பசுபதிதான் ஆம், பண்டு வெங்கூற்றுஉதைத்து அடியவர்க்கு அருளும்காலன் ஆம், எனது உரை தனது உரை ஆக,கனல் எரி அங்கையில் ஏந்திய கடவுள்நீலமாமலர்ச் சுனை வண்டு பண் செய்ய, நீர் மலர்க்குவளைகள் தாது விண்டு ஓங்கும்ஏலம் நாறும் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமானார்‌ பால வடிவோடும்‌, விருத்த வடிவோடும்‌ வரும்‌ பசுபதி எனப்‌ பெயர்‌ பெறுபவர்‌. முன்னொரு காலத்தில்‌ கொடிய கூற்றுவனை உதைத்து, மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலனார்‌. எனது உரைகளை, தனது உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர்‌. எரிகின்ற தயைத்‌ தனது கையில்‌ ஏந்திய கடவுளாவார்‌. நீலநிறம்‌ கொண்ட சிறந்த மலர்கள்‌ சுனையில்‌ பூத்திருக்கன்றன. அந்த பூக்களின்மேல்‌ சென்று வண்டுகள்‌ பாடுகின்றன. நீரில்‌ பூக்கும்‌ குவளை மலர்களில்‌ மகரந்தம்‌ விண்ணில்‌ பறந்துசென்று மணம்‌ பரப்புகின்றது. பொழில்களில்‌ ஏலக்காயின்‌ மணம்‌ நிறைந்துள்ளது. இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமானார்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

4

உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் ஒற்றியூ ருறையும்அண் ணாமலை யண்ணல்விளம்புவான் எனதுரை தனதுரை யாக வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ளஇளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
உளம் கொள்வார் உச்சி ஆர் கச்சி ஏகம்பன், ஒற்றியூர் உறையும் அண்ணாமலை அண்ணல்,விளம்புவான் எனது உரை தனது உரை ஆக, வெள்ள நீர் விரிசடைத் தாங்கிய விமலன்-குளம்பு உறக் கலை துள, மலைகளும் சிலம்ப, கொழுங்கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள,இளம்பிறை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

கச்சியேகம்பனான சிவபெருமானைத்‌ தனது உள்ளத்தில்‌ தியானிப்பவர்களின்‌ தலைஉச்சியில்‌ சிவபெருமான்‌ வீற்றிருப்பவர்‌. ஒற்றியூர்‌, திருவண்ணாமலை ஆகிய திருத்தலங்களில்‌ விளங்கும்‌ தலைவர்‌ இவர்‌. தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர்‌. கங்கை வெள்ளத்தைத்‌ தனது விரிந்த சடையில்‌ தாங்கிய விமலன்‌ இவர்‌. இவர்‌ இலம்பையங்கோட்டூரைத்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டவர்‌. இவ்வூரில்‌ கலைமான்களின்‌ குளம்புகள்‌ நிலத்தில்‌ பதியுமாறு கால்களை அழுத்தித்‌ துள்ளுகின்றன. மலைகள்‌ அவ்விடங்களில்‌ எழும்பும்‌ ஒலிகளை எதிர்‌ ஒலிக்கின்றன. வளமையான கொடிகள்‌ வில்வ மரங்கள்‌ முழுவதும்‌ படர்ந்து பரவியிருக்கின்றன. இளம்‌ பிறையை பிரதிபலிக்கும்‌ குளங்கள்‌ சூழ்ந்திருக்கின்றன. இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமானார்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

5

தேனுமாய் அமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்வானுமாம் எனதுரை தனதுரை யாக வரிஅரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்கானமான் வெருவுறக் கருவிர லூகங் கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்ஏனமான் உழிதரும் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
தேனும் ஆய் அமுதம் ஆய்த் தெய்வமும் தான் ஆய்த் தீயொடுநீர் உடன் வாயு ஆம் தெரியில்வானும் ஆம், எனது உரை தனது உரை ஆக, வரி அரா அரைக்குஅசைத்து உழிதரு மைந்தன்-கானமான் வெரு உறக் கருவிரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர்கல் கடுஞ்சாரல்ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமானார்‌ தேனைப்‌ போலவும்‌ அமுதைப்‌ போலவும்‌ இனிமையானவர்‌. தெய்வம்‌ தானே ஆனவர்‌. தீ, நீர்‌, வாயு, வான்‌, மண்‌ ஆகிய ஐம்பூத வடிவினர்‌. தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர்‌. வரிகளை உடலில்‌ கொண்ட பாம்பைத்‌ தனது இடையிலே கட்டிக்‌ கொண்டு திரிபவர்‌. காடுகளில்‌ உள்ள மான்கள்‌ அஞ்சும்படி, கரிய விரல்களை உடைய பெண்‌ கருங்குரங்குகள்‌ ஆண்‌ குரங்குகளோடு குதிக்கன்றன. பாறைகளைக்‌ கொண்ட கடுமையான மலைச்சாரலில்‌ பன்றிகளும்‌, காட்டுப்‌ பசுக்களும்‌ திரிகின்றன. இத்தகைய சிறப்புள்ள அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமானார்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

6

மனமுலாம்2 அடியவர்க் கருள்புரி கின்ற வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்தனமிலான் எனதுரை தனதுரை யாகத் தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே.பாடம் : 2மனமுலா
சொற்பிரிப்பு
மனம் உலாம் அடியவர்க்கு அருள் புரிகின்ற வகை அலால் பலிதிரிந்து உண்பு இலான், மற்று ஓர்தனம் இலான், எனது உரை தனது உரை ஆக, தாழ்சடை இளமதிதாங்கிய தலைவன்-புனம் எலாம் அருவிகள் இருவி சேர் முத்தம் பொன்னொடு மணிகொழித்து, ஈண்டி வந்து, எங்கும்இனம் எலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமானைத்‌ தங்கள்‌ மனங்களில்‌ உலாவச்‌ செய்கின்ற அடியவர்களுக்கு அருள்புரிபவர்‌. அடியவர்களுக்கு அருள்புரியும்‌ பொருட்டே பலியேற்றுத்‌ திரிபவர்‌. தான்‌ உண்ணும்‌ பொருட்டு பலி ஏற்காதவர்‌. வீடு பேறாகிய செல்வமன்றி வேறு செல்வம்‌ இல்லாதவர்‌. தள்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர்‌. தாழ்ந்து தொங்கும்‌ சடைமீது இளம்பிறையைத்‌ தாங்கியுள்ள தலைவர்‌. தினைப்புனங்களில்‌ அருவிகள்‌ பாய்ந்து வருகின்றன. அந்த அருவிகளில்‌ அரிந்த தினைத்தாள்களில்‌ முத்துக்களும்‌, பொன்னும்‌, மணியும்‌ ஒதுங்குகின்றன. இவைகள்‌ வயல்களில்‌ கரையெங்கும்‌ சேர்கின்றன. இத்தகைய வளமையான அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமானார்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

7

நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்ஊருளான் எனதுரை தனதுரை யாக ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்பாருளார் பாடலோ டாடல் அறாத பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
நீர் உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான், நினைப்பவர் மனத்துஉளான், நித்தமா ஏத்தும்ஊர் உளான், எனது உரை தனது உரை ஆக, ஒற்றை வெள் ஏறுஉகந்து ஏறிய ஒருவன்-பார் உளார் பாடலோடு ஆடல் அறாத பண் முரன்று அஞ்சிறைவண்டு இனம் பாடும்ஏர் உளார் பைம்பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமான்‌ நீர்‌, தீ, ஆகாயம்‌ ஆகியவற்றுள்‌ இருப்பவர்‌. தன்னை நினைப்பவர்‌ மனத்தில்‌ உறைபவர்‌. நாள்தோறும்‌ அடியவர்கள்‌ வந்து வணங்கும்‌ ஊர்களைத்‌ தனது இடமாகக்‌ கொண்டவர்‌. தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர்‌. தனித்த ஒரு வெள்ளேற்றில்‌ விரும்பி ஏறி வருபவர்‌. அத்தகையோன்‌ மண்ணக மக்களின்‌ பாடல்களும்‌ ஆடல்களும்‌ இடைவிடாது நிகழுகின்ற இலம்பையங்கோட்டூரைத்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளவர்‌. இங்கு அழகிய சிறகுகளை உடைய வண்டுகள்‌ பண்ணிசை போல ஒலிசெய்து பாடுகின்றன. அழகிய பொழில்கள்‌ சூழ்ந்துள்ளன. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

8

வேருலாம் ஆழ்கடல் வருதிரை யிலங்கைவேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்ஆருலாம் எனதுரை தனதுரை யாகஆகமோர் அரவணிந் துழிதரும் அண்ணல்வாருலா நல்லன மாக்களுஞ் சாரவாரணம் உழிதரும் மல்லலங் கானல்ஏருலாம் பொழிலணி3 இலம்பையங் கோட்டூர்இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.பாடம் : 3ஏருலாம் பைம்பொழில்
சொற்பிரிப்பு
வேர் உலாம் ஆழ்கடல் வரு திரை இலங்கை வேந்தன தடக்கைகள்அடர்த்தவன், உலகில்ஆர் உலாம் எனது உரை தனது உரை ஆக, ஆகம் ஓர் அரவுஅணிந்து உழி தரும் அண்ணல்வார் உலாம் நல்லன மாக்களும் சார, வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல்,ஏர் உலாம் பொழில் அணி இலம்பையங்கோட்டூர் இருக்கையாப்பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சிவபெருமான்‌, பூமியின்‌ அடிவரை உலாவுகின்ற ஆழ்ந்த கடலின்‌ அலைகள்‌ தவழ்கின்ற இலங்கை வேந்தனான இராவணனின்‌ இருபது கைகளையும்‌ நெரித்தவன்‌. உலகில்‌ நிறைந்து விளங்கும்‌ தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவன்‌. தன்னுடைய மார்பில்‌ பெரியதொரு பாம்பினை அணிந்து திரியும்‌ தலைவன்‌. இலம்யையங்கோட்டூர்‌ காடுகளில்‌, கழுத்தில்‌ வார்கள்‌ கட்டப்பட்டுள்ள நல்ல வளர்ப்பு விலங்குகளும்‌, யானைகளும்‌ திரிகின்றன. இத்தகைய அழகிய பொழில்கள்‌ சூழ்ந்துள்ள இலம்பையங்‌ கோட்டூரைச்‌ சிவபெருமான்‌ தனது இடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

9

கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன் கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லாஉளமழை யெனதுரை தனதுரை யாக வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்வளமழை யெனக்கழை வளர்துளி சோர மாசுண முழிதரு மணியணி மாலைஇளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
கிளர் மழை தாங்கினான், நான்முகம் உடையோன், கீழ் அடிமேல்முடி தேர்ந்து அளக்கில்லா,உளம் அழை எனது உரை தனது உரை ஆக, ஒள் அழல்அங்கையில் ஏந்திய ஒருவன்-வள மழை எனக் கழை வளர் துளி சோர, மாசுணம் உழிதரு மணி அணி மாலை,இளமழை தவழ் பொழில் இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி, என் எழில் கொள்வது இயல்பே?
உரை

இந்திரன்‌ ஆயர்பாடியை அழிக்க மழையை ஏவினான்‌. திருமால்‌ கோவர்த்தனம்‌ என்னும்‌ மலையைக்‌ குடையாகத்‌ தூக்கி மழையைத்‌ தடுத்தான்‌. இந்தத்‌ திருமாலும்‌ நான்முகனும்‌ தனது அடிமுடியை அளந்து அறியமுடியாதபடி அழல்‌ உருவாக ஓங்கி நின்றவர்‌ சிவபெருமான்‌. மனத்தால்‌ அழைத்தற்கு உரியவராக அமைந்த சிவபெருமான்‌ எனது உரைகளை தனது உரைகளாக வெளிப்படுத்தியவன்‌. அழகிய கையில்‌ ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன்‌. வளமான மூங்கில்‌ இலைமேல்‌ மழையைப்‌ போல பனிநீர்‌ விழுகின்றது. மலைப்‌ பாம்புகள்‌ ஊர்ந்து வருகின்றன. அழகிய மணிகள்‌ மாலைபோல நிறைந்து தோன்றுகின்றன. மேகக்‌ கூட்டங்கள்‌ தவழ்ந்து வருகின்ற பொழில்கள்‌ சூழ்ந்துள்ளன. இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமான்‌ தனது இருப்பிடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

10

உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்பெருஞ்செல்வன் எனதுரை தனதுரை யாகப் பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை களிமுக வண்டொடு தேன்இனம் முரலும்இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர் இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.
சொற்பிரிப்பு
உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கியப்பேய்கள்பெருஞ்செல்வன், எனது உரை தனது உரை ஆக, பெய் பலிக்குஎன்று உழல் பெரியவர் பெருமான்கருஞ்சுனை முல்லை நன்பொன் அடை வேங்கைக் களி முகவண்டொடு தேன் இனம் முரலும்,இருஞ்சுனை மல்கிய இலம்பையங்கோட்டூர் இருக்கையாப் பேணி,என் எழில் கொள்வது இயல்பே?
உரை

சமணர்கள்‌ ஆடைகளை உரிந்துவிட்டது போன்ற அம்மண உடம்பினராகத்‌ திரிகின்றனர்‌. புத்தர்கள்‌ பேய்களைப்‌ போன்றவர்கள்‌. இவர்கள்‌ அறியாத‌ பெரும்‌ செல்வந்தர்‌ சிவபெருமானார்‌. என்னுடைய உரைகளை தன்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருளுபவர்‌. பெரியவர்க்கெல்லாம்‌ தலைவராகிய இப்பெருமானார்‌, ஊரார்‌ இடும்‌ பலியை ஏற்பதற்காகத்‌ திரிபவர்‌. இலம்பையங்கோட்டூர்‌ வளாகத்தில்‌ முல்லை மலர்கள்‌ பெரிதான அரும்புகளை உடையதாக விளங்குகின்றன. வேங்கையின்‌ மலர்கள்‌ பொன்போல விளங்குகின்றது. வண்டுகள்‌ மகழ்ச்சி நிறைந்த முகத்தோடு காணப்படுகின்றன. தேனீக்களும்‌, முரல்‌ மீன்களும்‌ பெரிய சுனைகளும்‌ நிறைந்து இருக்கின்றன. இத்தகைய அழகிய இலம்பையங்கோட்டூரைச்‌ சிவபெருமான்‌ தனது இடமாகக்‌ கொண்டுள்ளார்‌. இந்தத்‌ தகுதிகளை உடையவர்‌ என்னைத்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ செல்லாமல்‌ என்‌ அழகை மட்டும்‌ கவர்ந்து செல்வது இவருக்கு இயல்பாகுமா?

11

கந்தனை மலிகனை கடலொலி யோதங் கானலங் கழிவளர் கழுமலமென்னும்நந்தியா ருறைபதி நால்மறை நாவன் நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர் இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.
சொற்பிரிப்பு
கந்தனை மலி கனைகடல் ஒலி ஓதம் கானல் அம் கழி வளர் கழுமலம் என்னும்நந்தியார் உறை பதி நால்மறை நாவன் நல்தமிழ்க்கு இன்துணை, ஞானசம்பந்தன்-எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடியபத்தும் வல்லார், போய்வெந்துயர் கெடுகிட, விண்ணவரோடும் வீடு பெற்று, இம்மையின் வீடு எளிது ஆமே.
உரை

கழுமலம்‌ என்னும்‌ பதி சிவபெருமான்‌ உறையும்‌ சீகாழியாகும்‌. இங்குள்ள மலர்களால்‌ எங்கும்‌ மணம்‌ நிறைந்துள்ளது. கடலில்‌ இருந்து தோன்றுகின்ற ஒலி வேதம்‌ ஓதுவது போன்று ஒலிக்கின்றது. கடலில்‌ இருந்து வருகின்ற வெள்ளநீர்‌, கடற்கரையில்‌ உள்ள சோலைகளிலும்‌, உப்பங்கழிகளிலும்‌ நிரம்புகின்றது. இந்தச்‌ சீகாழிப்‌ பதியில்‌ தோன்றியவர்‌ ஞானசம்பந்தன்‌. இவர்‌ நான்மறை ஓதும்‌ நாவினர்‌. நற்றமிழுக்கு உற்ற துணையாக இருப்பவர்‌. இவர்‌, வளமான நகரமாகிய இலம்பையங்கோட்டூரில்‌ உறையும்‌ எமது தந்தையாகிய சிவபெருமானார்மீது இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இப்பதிகத்தின்‌ பத்துப்‌ பாடல்களையும்‌ இசையோடு கூடி, பாடவல்லவர்களின்‌ கொடிய துயரங்கள்‌ விரைவாகக்‌ கெட்டு அழிந்து விடும்‌. அவர்கள்‌ விண்ணவரோடு வீற்றிருப்பர்‌. பின்பு, விண்ணிலிருந்து விடுபட்டு வீடுபேற்றையும்‌, இந்தப்‌ பிறவியிலேயே எளிதாகப்‌ பெற்றுவிடுவார்கள்‌.