திருமுறை 1 · 1.069 · 11

திருஅண்ணாமலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கேசி
தலம்
அண்ணாமலை
நாடு
நடுநாடு

1

பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள்மூவார்புரங்கள் எரித்த அன்று மூவர்க்கருள் செய்தார்தூமாமழைநின்ற திரவெருவித்தொறுவின் நிரையோடும்ஆமாம் பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள் செய்தார்தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

நீர்த்துளிகளைத்‌ தூவும்‌ கரிய மேகங்கள்‌ வானத்தில்‌ நின்றவாறு இடி முழக்கம்‌ செய்கின்றன. அதனைக்‌ கேட்டு அஞ்சிய ஆட்டு மந்தைகளும்‌ காட்டுப்‌ பசுக்களும்‌ வரிசையாக வந்து திருவண்ணாமலையின்‌ . அடிவாரத்தில்‌ ஒதுங்குகின்றன. இத்திருவண்ணாமலையின்‌ இறைவரான சிவபெருமானை, அடியவர்கள்‌ பொலிவு மிக்க நறுமலர்களைத்‌ தூவி வழிபடுகின்றனர்‌. வானோர்கள்‌ புகழ்ந்து போற்றுகின்றனர்‌. அழியாவரம்‌ பெற்ற , அசுரர்களின்‌ முப்புரங்களையும்‌ எரித்து அழித்தவர்‌ இவர்‌. அவ்வசுரர்களில்‌ மூவர்க்கு அருளையும்‌ இப்பெருமான்‌ வழங்கியவர்‌.

2

மஞ்சைப் போழ்ந்த மதியஞ்சூடும் வானோர் பெருமானார்நஞ்சைக் கண்டத் தடக்கும் அதுவும் நன்மைப் பொருள் போலும்வெஞ்சொற்பேசும் வேடர் மடவார் இதணம் அதுஏறிஅஞ்சொற்கிளிகள் ஆயோ என்னும் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார்நஞ்சைக் கண்டத்து அடக்குமதுவும் நன்மைப் பொருள் போலும்வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி,அம் சொல் கிளிகள், “ஆயோ!” என்னும் அண்ணாமலையாரே.
உரை

வேடர்கள்‌ கொடிய சொற்களான, “வெட்டு, குத்து, கொல்லு‘ என்பனவற்றையே பேசுவர்‌. அவர்களின்‌ பெண்‌ மகளிர்‌, தினைப்புனங்களில்‌ பரண்மீது ஏறி இருப்பர்‌. அங்கிருந்து தினைகளை உண்பதற்கு வருகின்றதும்‌, அழகிய சொற்களைப்‌ பேசுவதுமாகிய கிளிகளை ’ஆயோ‘ என ஓலி எழுப்பி விரட்டுவர்‌. இப்படிப்பட்ட அழகிய நிலத்தை உடைய திருவண்ணாமலையின்‌ இறைவர்‌ சிவபெருமானார்‌ ஆவார்‌. இவர்‌, மேகங்களைக்‌ கிழித்துச்‌ செல்லும்‌ பிறைமதியைச்‌ சூடியிருப்பவர்‌. வானோர்களின்‌ தலைவரும்‌ இவரே. கடலிடைத்‌ தோன்றிய நஞ்சை உண்டு அதைக்‌ கண்டத்தில்‌ அடக்கியவர்‌. உலகத்தை அழியாது காக்கும்‌ நன்மை கருதிச்‌ செய்தவர்‌ ஆவார்‌.

3

ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்ல அடியார்மேல்ஊனத்திரளை நீக்கும்அதுவும் உண்மைப் பொருள்போலும்ஏனத்திரளோ டினமான்கரடி இழியும் இரவின்கண்ஆனைத்திரள்வந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான் நல்ல அடியார் மேல்ஊனத்திரளை நீக்குமதுவும் உண்மைப் பொருள் போலும்ஏனத்திரளோடு இனமான் கரடி இழியும் இரவின்கண்ஆனைத்திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

இரவில்‌, பன்றிகளின்‌ கூட்டமும்‌, மான்‌ இனங்களும்‌, கரடிகளும்‌, யானைகளின்‌ கூட்டமும்‌, மலைச்சாரலில்‌ ஒருங்கே இறங்கி வருகின்றன. இந்தத்‌ திருவண்ணாமலையின்‌ இறைவர்‌, ஞானப்பிழம்பாய்‌ நிற்கும்‌ சிவபெருமானார்‌ ஆவார்‌. நன்மைகளையே கருதும்‌ அடியவர்களின்‌ ஊனுடலோடு பிறக்கும்‌ பிறவித்‌ தளைகளை நீக்குபவர்‌. இவ்வருட்செயல்‌, வேதாகம நூல்கள்‌ உணர்த்தும்‌ உண்மைப்‌ பொருளாகும்‌.

4

இழைத்த இடையாள் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார்தழைத்தசடையார் விடையொன் றேறித் தரியார் புரமெய்தார்பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம்அழைத்துத்திரிந்தங் குறங்குஞ் சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,தழைத்த சடையார், விடை ஒன்று ஏறித் தரியார் புரம் எய்தார்பிழைத்த பிடியைக் காணாது ஓடிப் பெருங்கை மதவேழம்அழைத்துத் திரிந்து, அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

பெரிய தும்பிக்கையை உடைய மதம்‌ பொருந்திய ஆண்‌ யாணை, தன்னை விட்டுப்‌ பிரிந்த பெண்‌ யானையைக்‌ காணாது, குரல்‌ கொடுத்து அழைக்கிறது. தேடித்‌ திரிந்து, அலுப்படைந்து மலைச்‌ சாரலில்‌ உறங்குகின்றது. இந்தத்‌ திருவண்ணாமலை இறைவர்‌ சிவபெருமானார்‌ ஆவார்‌. இவர்‌, நூல்‌ போன்ற நுண்ணிய இடையினை உடைய “உமையம்மையை ஒரு பாகமாக உடையவர்‌. தேவர்களுக்கு தேவரானவர்‌. தழைத்த சடையினை உடையவர்‌. விடைமீது ஏறிச்‌ சென்று பகைவரின்‌ முப்புரங்களை எரித்தவர்‌.

5

உருவில்திகழும் உமையாள்பங்கர் இமையோர் பெருமானார்செருவில் லொருகால் வளையவூன்றிச் செந்தீ யெழுவித்தார்பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணி முத்தம்அருவித்திரளோ டிழியுஞ்சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
உருவில் திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,செரு வில் ஒரு கால் வளைய ஊன்றிச் செந்தீ எழுவித்தார்பரு வில் குறவர் புனத்தில் குவித்த பருமா மணி முத்தம்அருவித்திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

குறவர்கள்‌ பெரிய வில்லை ஏந்தியிருக்கின்றனர்‌. அவர்களின்‌ விளைநிலங்களின்‌ வரப்புக்களின்மேல்‌ குவித்து வைத்திருக்கும்‌ பெரிய முத்துக்களும்‌ மணிகளும்‌ அருவித்‌ திரளோடு மலைச்சாரலில்‌ இறங்குகின்றன. இந்தத்‌ திருவண்ணாமலையின்‌ இறைவர்‌ சிவபெருமானார்‌ ஆவார்‌. இவர்‌, உருவத்தால்‌ அழகிய உமையவளை ஒருபாகமாகக்‌ கொண்டவர்‌. இமையவர்களுக்குத்‌ தலைவர்‌. பெரிய போர்‌ வில்லை ஒரு காலால்‌ . வளைத்துக்‌ கணை எய்து, முப்புரங்களையும்‌ செந்தீயால்‌ எரித்து அழித்தவர்‌. '

6

எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர் பெருமானார்நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில்கனைத்தமேதி காணாதாயன் கைமேல்குழல்ஊதஅனைத்துஞ் சென்று திரளுஞ்சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
எனைத்து ஓர் ஊழி அடியார் ஏத்த, இமையோர் பெருமானார்,நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிமலர், உறை கோயில்கனைத்த மேதி காணாது ஆயன் கைம்மேல் குழல் ஊத,அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

மலைச்சாரலில்‌ புல்‌ மேயச்‌ சென்ற எருமைகளைக்‌ காணாததால்‌, ஆயன்‌ தன்‌ கையிலிருந்த குழலினை ஊதுகிறான்‌. அந்த ஒலியைக்‌ கேட்டவுடன்‌ அனைத்து எருமைகளும்‌ வீடுதிரும்பும்‌ விருப்பத்துடன்‌ மலையடி வாரத்தில்‌ ஒன்று சேருகிறது. இந்தத்‌ திருவண்ணாமலை இறைவர்‌ சிவபெருமானார்‌ ஆவார்‌. இவர்‌ பல ‘ஊழிக்காலங்களைக்‌ கண்ட பழையோன்‌’ ஆவார்‌. அடியவர்கள்‌ தன்னைத்‌ துதிக்க இமையவர்‌ தலைவனாய்‌ விளங்குகின்றார்‌. தன்னை நினைத்துத்‌ தொழும்‌ அன்பர்களின்‌ பாவங்களைத்‌ தீர்த்தருளுகின்ற நிமலன்‌ இவர்‌. இந்த நிமலர்‌ உறையும்‌ கோயில்‌ திருவண்ணாமலை ஆகும்‌.

7

வந்தித்திருக்கும் அடியார்தங்கள் வருமேல் வினையோடுபந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறை கோயில்முந்தியெழுந்த முழவின் ஓசை முதுகல்வரைகள் மேல்அந்திப்பிறைவந் தணையுஞ்சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல் வினையோடுபந்தித்திருந்த பாவம் தீர்க்கும் பரமன் உறை கோயில்முந்தி எழுந்த முழவின் ஓசை, முது கல் வரைகள் மேல்அந்திப் பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

விழா நிகழ்ச்சிகளை முன்னதாக அறிவித்து எழும்‌ முழவின்‌ ஓசை இடைவிடாமல்‌ கேட்கும்‌ தலம்‌ இது. பழமையான மலைப்‌ பாறைகளுக்கு இடையே, அந்திக்‌ காலத்துப்‌ பிறை வந்து அணையும்‌ மலை இதுவாகும்‌. இத்திருவண்ணாமலை இறைவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. தன்னை வழிபட்டு வேறு எண்ணங்கள்‌ இல்லாமல்‌ இருக்கும்‌ அடியவர்களின்‌ ஆகாமிய வினைகளையும்‌, அவர்களைப்‌ பந்தித்திருக்கும்‌ சஞ்சித வினைகளையும்‌ போக்கி அருளும்‌ பரமனாவார்‌. அவரது கோயில்‌ திருவண்ணாமலை ஆகும்‌.

8

மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்தோள்நிறந்தான்முரிய நெறியவூன்றி நிறையஅருள் செய்தார்திறந்தான்காட்டி யருளாயென்று தேவரவர்வேண்டஅறந்தான்காட்டி அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
மறம் தான் கருதி, வலியை நினைந்து, மாறு ஆய் எடுத்தான் தோள்நிறம் தான் முரிய, நெரிய ஊன்றி, நிறைய அருள் செய்தார்“திறம் தான் காட்டி அருளாய்!” என்று தேவர் அவர் வேண்ட,அறம்தான் காட்டி, அருளிச் செய்தார் அண்ணாமலையாரே.
உரை

திருவண்ணாமலை இறைவர்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. தேவர்கள்‌, இவரைத்‌ தனது வலிமையை வெளிப்படுத்தித்‌ திரிபுர அசுரர்களை அழித்து அருள்புரியுமாறு வேண்டினர்‌. தீயவர்களை ஒறுப்பது அறச்செயல்‌ என்று உணர்த்த, அசுரர்களை அழித்துத்‌ தேவர்களுக்கு அருள்‌ செய்த பெருமான்‌ இவர்‌. இராவணன்‌ தனது வலிமையையும்‌, வெற்றிகளையும்‌ பெரிதாக எண்ணி, சிவன்‌ உறையும்‌ கயிலை மலையைப்‌ பெயர்த்து எடுத்தான்‌. அவனது மார்பு, தோள்‌ ஆகியன நெரியுமாறு தன்‌ காலை ஊன்றினார்‌. பின்பு, இராவணன்‌ பணிந்து வேண்ட, அவனுக்கு அருள்‌ செய்த பெருமானும்‌ இவரே.

9

தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானைமூடியோங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டுகூடிக்குறவர் மடவார் குவித்துக் கொள்ளவம்மினென்றாடிப்பாடி யளக்குஞ்சாரல் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர் பெருமானை;மூடி ஓங்கி முதுவேய் உகுத்த முத்தம்பல கொண்டு,கூடிக் குறவர் மடவார் குவித்து, “கொள்ள வம்மின்!” என்று,ஆடிப் பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே.
உரை

பழமையான மூங்கில்‌ மரங்கள்‌ மலையை மூடி இருக்கும்படியான அளவுக்கு ஓங்கி வளர்ந்துள்ளன. அவைகளில்‌ இருந்து உதிர்ந்த முத்துக்களை குறவர்‌ குலப்பெண்கள்‌ ஓரிடத்தில்‌ குவித்து வைக்கின்றனர்‌. அவற்றை வாங்கிட வருக என மக்களை அழைத்து, ஆடிப்பாடி அவர்களுக்கு அளந்து கொடுக்கின்றனர்‌. இந்தத்‌ திருவண்ணாமலைத்‌ தேவர்‌ பெருமானான, சிவபெருமானைத்‌ திருமால்‌ பிரமன்‌ தேடியும்‌ காணாதவர்‌ ஆயினர்‌.

10

தட்டையி டுக்கித் தலையைப்பறித்துச் சமணே நின்றுண்ணும்பிட்டர் சொல்லுக் கொள்ளவேண்டா பேணித் தொழுமின்கள்வட்டமுலையாள் உமையாள் பங்கர் மன்னியுறைகோயில்அட்டமாளித் திரள்வந் தணையும் அண்ணாமலையாரே.
சொற்பிரிப்பு
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே நின்று உண்ணும்பிட்டர் சொல்லுக் கொள்ள வேண்டா; பேணித் தொழுமின்கள்!வட்ட முலையாள் உமையாள் பங்கர் மன்னி உறை கோயில்,அட்டம் ஆளித்திரள் வந்து அணையும் அண்ணாமலையாரே.
உரை

சமணர்கள்‌, தங்களின்‌ தடுக்குகளை, அக்குளில்‌ இடுக்கிக்‌ கொண்டிருக்கின்றனர்‌. தங்களது தலை மயிரை ஒவ்வொன்றாகப்‌ பறித்து நீக்கிய மொட்டைத்‌ தலையர்கள்‌. ஆடையின்றி இருப்பவர்கள்‌. நின்று கொண்டு உண்ணுபவர்கள்‌. இந்தப்‌ பிரட்டர்களின்‌ சொற்களைப்‌ பொருளெனக்‌ கொள்ள வேண்டாம்‌. மலைச்‌ சாரலில்‌ சிங்கக்‌ கூட்டங்கள்‌ வந்து ஒன்று சேரும்‌ தலம்‌ திருவண்ணாமலை. இத்திருவண்ணாமலையில்‌ சிவபெருமான்‌, வட்டமான தனங்களைக்‌ கொண்ட உமையம்மையை ஒரு பாகத்தில்‌ கொண்டு வீற்றிருந்து அருளுகின்றார்‌. இப்பெருமான்‌ நிலையாக எழுந்தருளி உறையும்‌ கோயில்‌ இதுவே. இக்கோயிலை விரும்பித்‌ தொழுவீராக.

11

அல்லாடரவம் இயங்குஞ்சாரல் அண்ணாமலையாரைநல்லார் பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன்சொல்லால் மலிந்த பாடலான பத்தும் இவைகற்றுவல்லாரெல்லாம் வானோர் வணங்க மன்னிவாழ்வாரே.
சொற்பிரிப்பு
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை,நல்லார் பரவப் படுவான் காழி ஞானசம்பந்தன்சொல்லால் மலிந்த பாடல் ஆன பத்தும் இவை கற்றுவல்லார் எல்லாம் வானோர் வணங்க மன்னி வாழ்வாரே.
உரை

இரவு வேளைகளில்‌ படம்‌ எடுத்தாடும்‌ பாம்புகள்‌ இயங்கும்‌ சாரலை உடையது திருவண்ணாமலை. இத்திருவண்ணாமலையில்‌ சிவபெருமான்‌ உறைகின்றார்‌. இப்பெருமானை நல்லவர்களால்‌ போற்றப்படும்‌ சீகாழிப்பதி ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இப்பதிகப்‌ பாடல்களுள்‌ அருள்சொல்‌ அமைப்புக்கள்‌ நிறைந்துள்ளன. இப்பதிகத்தின்‌ பத்துப்‌ பாடல்களையும்‌ கற்ற, வல்லவர்கள்‌ எல்லாரும்‌, வானோர்‌ வணங்க நிலைபெற்று வாழ்வர்‌.