திருமுறை 1 · 1.068 · 11

திருக்கயிலாயம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கேசி
தலம்
கயிலாயம் (நொடித்தான்மலை)
நாடு
வடநாடு

1

பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்கடிகொள் கொன்றை கலந்த நீற்றர் கறைசேர் கண்டத்தர்இடியகுரலால் இரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
பொடி கொள் உருவர், புலியின் அதளர், புரிநூல் திகழ் மார்பில்கடி கொள் கொன்றை கலந்த நீற்றர், கறை சேர் கண்டத்தர்,இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனைச்சாரல்கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே.
உரை

சிங்கங்கள்‌ மேகங்களின்‌ இடிக்குரல்‌ கேட்டு பயந்து, நிலைகெட்டு ஓடத்‌ தொடங்கும்‌ சாரலை.உடையது கயிலை மலை. இக்கயிலை மலையைத்‌ தன்‌ இருப்பிடமாகக்‌ கொண்டு வாழுகின்றார்‌ இறைவனாகிய சிவபெருமான்‌. இவர்‌ திருநீறு பூசிய திருமேனியை உடையவர்‌. புலியின்‌ தோலை உடுத்தியிருப்பவர்‌. முப்புரி நூல்‌ விளங்கும்‌ மார்பில்‌ மணம்‌ கமழும்‌ கொன்றை மாலையோடு திருநீற்றையும்‌ அணிந்திருப்பவர்‌. விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர்‌. விரைந்து செல்லும்‌ விடைமீது ஏறி, அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம்‌ கொடியாகவும்‌ கொண்டிருப்பவர்‌.

2

புரிகொள்சடையார் அடியர்க் கெளியார் கிளிசேர் மொழிமங்கைதெரியவுருவில் வைத்துகந்த தேவர் பெருமானார்பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்க இருள்1 கூர்ந்தகரியமிடற்றர் செய்யமேனிக் கயிலை மலையாரே.பாடம் : 1மழுங்கியிருள்
சொற்பிரிப்பு
புரி கொள் சடையார்; அடியர்க்கு எளியார்; கிளி சேர் மொழி மங்கைதெரிய உருவில் வைத்து உகந்த தேவர் பெருமானார்;பரிய களிற்றை அரவு விழுங்கி மழுங்க, இருள் கூர்ந்தகரிய மிடற்றர், செய்யமேனி; கயிலைமலையாரே.
உரை

பெரிய யானையை மலைப்பாம்பு விழுங்கி மறைகின்ற இருள்‌ மிகுந்த இடம்‌ கயிலை மலை. இங்கு விடம்‌ உண்ட கரிய கண்டத்தை உடையவராகவும்‌, சிவந்த திருமேனியராயும்‌ சிவபெருமான்‌ விளங்குகின்றார்‌. இவர்‌, வளைத்துக்‌ கட்டிய சடைமுடியை உடையவர்‌. அடியவர்க்கு எளிமையானவர்‌. கிளிபோன்ற மெல்லிய மொழி பேசும்‌ உமை மங்கையைப்‌ பலருக்கும்‌ தெரியுமாறு ஒருபாகமாகக்‌ கொண்டு மகழ்ந்திருப்பவர்‌. இவர்‌ தேவர்களுக்குத்‌ தலைவராவார்‌.

3

மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்மேவுமதியும் நதியும்வைத்த இறைவர் கழலுன்னும்தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கல் முகவன்சேர்காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
மாவின் உரிவை மங்கை வெருவ மூடி, முடிதன் மேல்மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர்; கழல் உன்னும்தேவர் தேவர்; திரிசூலத்தர் திரங்கல் முகவன் சேர்காவும் பொழிலும் கடுங்கல் சுனை சூழ் கயிலைமலையாரே.
உரை

குரங்குகள்‌ வாழும்‌ காடுகளும்‌, பொழில்களும்‌ மலைகளுக்கு இடையே இயற்கையாக அமைந்த சுனைகளும்‌ சூழ்ந்த தலம்‌ கயிலை மலையாகும்‌. இங்கு, சிவபெருமானார்‌, உமையம்மை அஞ்ச, யானையின்‌ தோலை உரித்துப்‌ போர்த்தியிருக்கின்றார்‌. திருமுடியின்மீது பிறை, கங்கை ஆகியவற்றைக்‌ கொண்டு இருக்கின்றார்‌. திரிசூலத்தை உடையவர்‌. தம்‌ திருவடிகளை நினைந்து போற்றும்‌ தேவர்கட்‌ குத்‌ தலையாய தேவராவார்‌.

4

முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்தென்னீர்உருவம் அழியத்திருக்கண் சிவந்த நுதலினார்மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டுகன்னீர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர், மதனன் தன்தென் நீர் உருவம் அழியத் திருக்கண் சிவந்த நுதலினார்மன் நீர் மடுவும், படு கல்லறையின் உழுவை சினம் கொண்டுகல்—நீர் வரைமேல் இரை முன் தேடும் கயிலை மலையாரே.
உரை

இயற்கையாகத்‌ தோன்றிய கயிலை மலைக்‌ குகைகளில்‌ புலிகள்‌ வாழுகின்றன. இவைகள்‌ பசியினால்‌ சினமடைந்து, கல்லால்‌ இயன்ற மலைமேல்‌ இரையையும்‌, அருந்துவதற்கு நிலைபெற்ற நீரினை உடைய சுனைகளையும்‌ தேடுகின்றன. இந்தக்‌ கயிலை மலையில்‌ நம்‌ தலைவராகிய சிவபெருமானார்‌ உறைகின்றார்‌. இவர்‌ கடலில்‌ பரவித்‌ தோன்றிய நஞ்சினைத்‌ திரட்டி உண்டவர்‌. மன்மதனின்‌ அழகிய உருவம்‌ அழிய, நெற்றியில்‌ சிவந்த கண்ணை உடையவர்.‌

5

ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல் சேர்வார்நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித் திரண்டெங்கும்தென்றியிருளில்திகைத்த கரிதண் சாரல் நெறியோடிக்கன்றும் பிடியும் அடிவாரஞ்சேர் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
ஒன்றும் பலவும் ஆய வேடத்து ஒருவர், கழல் சேர்வார்,நன்று நினைந்து நாடற்கு உரியார் கூடித் திரண்டு எங்கும்தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி,கன்றும் பிடியும் அடிவாரம் சேர் கயிலை மலையாரே.
உரை

யானைகள்‌, இரவில்‌ எங்கும்‌ திரண்டு கூடிச்‌ சிதறித்‌ திகைக்கின்றன. இவைகள்‌ குளிர்ந்த மலைச்சாரல்‌ வழியே விரைந்து சென்று கயிலை‌ மலையின்‌ அடிவாரத்தில்‌ கன்றும்‌, பெண்‌ யானையுமாக ஒன்று “சேருகின்றன. இந்தக்‌ கயிலை மலைக்கு உரிய இறைவர்‌ சிவபெருமானாவார்‌. இவர்‌, ஒருவராக இருந்தே, ஒன்றாயும்‌, பற்பலவாககிய வடிவங்களைக்‌ கொண்டவருமான ஒப்பற்ற பரம்பொருளாவார்‌. பேரின்பத்தை நாடுதற்கிடமான சிவபெருமானை, விரும்பித்‌ தியானிப்பவர்கள்‌, அவர்‌ திருவடியைச்‌ சேர்வார்கள்‌.

6

தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப்போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்மூதாருலகில் முனிவருடனாய் அறநான் கருள்செய்தகாதார் குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
தாது ஆர் கொன்றை தயங்கும் முடியர், முயங்கு மடவாளைப்போது ஆர் பாகம் ஆக வைத்த புனிதர், பனி மல்கும்மூதார் உலகில் முனிவர் உடன் ஆய் அறம் நான்கு அருள் செய்தகாது ஆர் குழையர், வேதத் திரளர் கயிலை மலையாரே.
உரை

கயிலை மலை இறைவர்‌, மகரந்தம்‌ நிறைந்த கொன்றை மாலை விளங்கும்‌ முடியினை உடையவர்‌. தம்மைத்‌ தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்ற தூயவர்‌. குளிர்ந்த இவ்வுலகின்கண்‌ வயதால்‌ முதிர்ந்த சனகர்‌ முதலிய முனிவர்களுக்கு அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு ஆகிய நான்கையும்‌ அருளிச்‌ செய்தவர்‌. வலக்காதில்‌ குழை அணிந்தவர்‌. வேத வடிவாய்‌ விளங்குபவர்‌.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண் பகழியார்எடுத்தான் திரள்தோள் முடிகள்பத்தும்இடிய விரல்வைத்தார்கொடுத்தார் படைகள் கொண்டாராளாக் குறுகி வருங்கூற்றைக்கடுத்தாங்கவனைக் கழலா லுதைத்தார் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
தொடுத்தார், புரம் மூன்று எரியச் சிலைமேல் அரி ஒண் பகழியால்;எடுத்தான் திரள் தோள் முடிகள் பத்தும் இடிய விரல் வைத்தார்;கொடுத்தார், படைகள்; கொண்டார், ஆளா; குறுகி வரும் கூற்றைக்கடுத்து, ஆங்கு அவனைக் கழலால் உதைத்தார் கயிலை மலையாரே.
உரை

கயிலை மலை இறைவர்‌ முப்புரங்களை மேருவில்லை வளைத்து எரியாகிய ஒளி பொருந்திய அம்பைத்‌ தொடுத்து எரித்து அழித்தவர்‌. கயிலை மலையைப்‌ பெயர்த்த இராவணனின்‌ திரண்ட தோள்கள்‌ பத்துத்‌ தலைகள்‌ ஆகியன நெரியுமாறு கால்விரலை ஊன்றியவர்‌. அவன்‌ பிழையுணர்ந்து வருந்த அவனை அடிமையாக ஏற்று வான்‌ முதலிய படைகள்‌ கொடுத்தவர்‌. மார்க்கண்டேயனின்‌ உயிரைக்‌ கவர அவன்மேல்‌ நெருங்கி வந்த எமனைச்‌ சினந்து அவனைக்‌ காலால்‌ உதைத்தவர்‌.

9

ஊணாப் பலிகொண் டுலகிலேற்றார் இலகு மணிநாகம்பூணாணார மாகப்பூண்டார் புகழு மிருவர்தாம்பேணாவோடி நேடஎங்கும் பிறங்கும் எரியாகிக்காணாவண்ணம் உயர்ந்தார் போலுங் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
ஊணாப் பலி கொண்டு உலகில் ஏற்றார்; இலகு மணி நாகம்பூண், நாண், ஆரம், ஆகப் பூண்டார்; புகழும் இருவர்தாம்பேணா ஓடி நேட, எங்கும் பிறங்கும் எரி ஆகி,காணா வண்ணம் உயர்ந்தார் போலும் கயிலை மலையாரே.
உரை

கயிலை மலை இறைவரான சிவபெருமானார்‌, உலகில்‌ மகளிர்‌ இடும்‌ பலியை உணவாகக்‌ கொண்டு அதனை ஏற்பவர்‌. விளங்கும்‌ மணிகளைக்‌ கொண்டுள்ள நாகங்களை அணிகலனாகப்‌ பூண்டவர்‌. எல்லோராலும்‌ புகழப்பெறும்‌ திருமால்‌ பிரமர்கள்‌ ஆகிய இருவரும்‌ அடிமுடி காண விரும்பிச்‌ சென்று தேடியும்‌, அவர்கள்‌ காண முடியாதபடி, எங்கும்‌ விளங்கும்‌ எரிஉருவோடு உயர்ந்து நின்றவர்‌ இவர்‌.

10

விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச் சாக்கியர்பொருதுபகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க் கணியராய்எருதொன்றுகைத்திங் கிடுவார் தம்பால்இரந்துண் டிகழ்வார்கள்கருதும்வண்ணம் உடையார் போலுங் கயிலை மலையாரே.
சொற்பிரிப்பு
விருது பகரும் வெஞ்சொல் சமணர், வஞ்சச் சாக்கியர்,பொருது பகரும் மொழியைக் கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய்,எருது ஒன்று உகைத்து, இங்கு இடுவார் தம்பால் இரந்து உண்டு, இகழ்வார்கள்கருதும் வண்ணம் உடையார் போலும்கயிலை மலையாரே.
உரை

சமணர்கள்‌ கொடுஞ்சொல்‌ பேசுபவர்கள்‌. தாம்‌ பெற்ற விருதுகளைப்‌ பலரிடமும்‌ சொல்லிப்‌ பெருமை கொள்ளும்‌ இயல்பு உடையவர்கள்‌. சாக்கியர்‌ என்னும்‌ பெளத்தர்கள்‌ வஞ்சனையான மனமுடையவர்கள்‌. இவர்கள்‌ பிறசமயத்தாரிடம்‌ சண்டையிடும்‌ குணம்‌ உடையவர்கள்‌. அவர்கள்‌ கூறும்‌ நற்சொற்களைக்‌ கேளாத குணமுடையவர்கள்‌. கயிலை மலை இறைவரான சிவபெருமானார்‌, தம்மைப்‌ புகழ்ந்து போற்றித்‌ துதிப்பவர்களுக்குச்‌ சமீபமாக இருப்பவர்‌. விடை ஒன்றைச்‌ செலுத்துபவர்‌. உணவிடுவார்பால்‌ இரந்து உண்பவர்‌. இகழ்பவரும்‌ தம்‌ பெருமையை நினைந்து போற்றும்‌ இயல்பினை உடையவராய்‌ விளங்குபவர்‌.

11

போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார் சம்பந்தன்காரார் மேகங் குடிகொள் சாரற் கயிலை மலையார்மேல்தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பும் அடியார்மேல்வாரா பிணிகள் வானோருலகில் மருவுமனத்தாரே.
சொற்பிரிப்பு
போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்,கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல்,தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்வாரா, பிணிகள்; வானோர் உலகில் மருவும் மனத்தாரே.
உரை

கரையோடு போர்‌ செய்வது போன்ற தோற்றத்தை உடைய கடல்‌ நீரால்‌ சூழப்பட்ட தலம்‌ சீகாழிப்‌ பதி. இப்பதியில்‌ தோன்றியவர்‌ புகழ்‌ பொருந்திய ஞானசம்பந்தன்‌. இவர்‌, கரிய மேகங்கள்‌ நிலையாகத்‌ தங்கியுள்ள கயிலைமலை இறைவர்மேல்‌, இத்திருப்பதிகத்தைத்‌ தெளிந்து உரைத்தார்‌. இச்செஞ்சொல்‌ மாலையை ஓதும்‌ அடியவர்க்குப்‌ பிணிகள்‌ வாரா. அவர்கள்‌ வானோர்‌ உலகத்தில்‌ கலந்துவிடும்‌ மனதை உடையவர்கள்‌ ஆவார்கள்‌.