திருமுறை 1 · 1.066 · 11

திருச்சண்பைநகர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கேசி
தலம்
சீர்காழி - 09-சண்பை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பங்கமேறு மதிசேர்சடையார் விடையார் பலவேதம்அங்கமாறும் மறைநான்கவையு மானார் மீனாரும்வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கே நுனைமூக்கின்சங்கமேறி முத்தமீனுஞ் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
பங்கம் ஏறு மதி சேர் சடையார், விடையார், பலவேதம்அங்கம் ஆறும் மறை நான்கு அவையும் ஆனார் மீன் ஆரும்வங்கம் மேவு கடல் வாழ் பரதர் மனைக்கே நுனை மூக்கின்சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே.
உரை

கடற்கரை ஊராகிய சண்பை நகரில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. இவர்‌ கலைகுறைந்த பிறைமதி சேர்ந்த சடையையும்‌, விடை ஊர்தியை உடையவராகவும்‌ விளங்குகின்றார்‌. அவரே பலவாக விரிந்த நான்கு வேதங்களாகவும்‌ ஆறு அங்கங்களாகவும்‌ விளங்குபவர்‌. இங்கு, மீன்களும்‌ தோணிகளும்‌ நிறைந்த கடலருகே பரதவர்கள்‌ வாழுகின்றனர்‌. அவர்களின்‌ வீட்டு முற்றங்களில்‌ கூரிய மூக்கினை உடைய சங்குகள்‌ முத்துக்களை ஈனும்‌.

2

சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர் சுடர்க்கமலப்போதகஞ்சேர் புண்ணியனார் பூத கணநாதர்மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில் விண்ணார்ந்தசாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர், சுடர்க் கமலப்போது அகம் சேர் புண்ணியனார், பூதகண நாதர்மேதகம் சேர் மேகம் அம் தண்சோலையில், விண் ஆர்ந்தசாதகம் சேர், பாளை நீர் சேர், சண்பை நகராரே.
உரை

சண்பை நகர்‌ இறைவராகிய சிவபெருமான்‌, சூது ஆடும்‌ காயைப்‌ போன்ற தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டிருக்கிறார்‌. அவர்‌, ஒளிபொருந்திய தாமரை மலரைச்‌ சூடிய புண்ணிய வடிவினர்‌. பூதகணங்களுக்குத்‌ தலைவர்‌. இங்கு, வானகத்தே பறந்து திரிந்து வாழும்‌ சாதகப்‌ பறவைகள்‌ உண்ணும்‌ பொருட்டு, மேன்மை பொருந்திய மேகங்கள்‌ மழைநீரைப்‌ பெய்விக்கும்‌. அழகிய குளிர்ந்த சோலைகளில்‌ உள்ள தென்னை மற்றும்‌ கமுகு மரங்களின்‌ பாளைகளில்‌ தேன்‌ சேரும்‌.

3

மகரத்தாடு கொடியோனுடலம் பொடிசெய் தவனுடையநிகரொப் பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார்பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம் பணிந்தேத்தத்தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி செய்து, அவனுடையநிகர் ஒப்பு இல்லாத் தேவிக்கு அருள்செய் நீல கண்டனார்பகரத் தாரா, அன்னம், பகன்றில், பாதம் பணிந்து ஏத்த,தகரப் புன்னை தாழைப்பொழில் சேர் சண்பை நகராரே.
உரை

தகரம்‌, புன்னை, தாழை முதலிய மரங்கள்‌ உள்ள பொழில்களால்‌ சூழப்பட்ட சண்பை நகரில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. இவரது திருவடிகளை நாரை, அன்னம்‌, அன்றில்‌ போன்ற பறவைகள்‌ பணிந்து போற்றுகின்றன. இவர்‌, மகர மீன்‌ வரையப்பட்ட ஆடும்‌ கொடியை உடைய மன்மதனின்‌ உடலை எரித்து அழித்தவர்‌. தனக்கு ஒப்பில்லாத அழகுடைய, மன்மதனின்‌ மனைவியான இரதிதேவிக்கு, அருள்‌ செய்த நீலகண்டரும்‌ இவரே ஆவார்‌.

4

மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ் சதுவுண்டதெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக்கையர்கட்டங் கத்தர்கரியின் உரியர் காதலாற்சைவர்பாசு பதர்கள்வணங்குஞ் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்டதெய்வர், செய்ய உருவர், கரிய கண்டர், திகழ் சுத்திக்கையர், கட்டங்கத்தர், கரியின் உரியர் காதலால்,சைவர், பாசுபதர்கள், வணங்கும் சண்பை நகராரே.
உரை

சைவர்களும்‌, பாசுபதர்களும்‌ அன்போடு வழிபடுகின்ற இறைவர்‌ சண்பை நகர்ச்‌ சிவபெருமான்‌ ஆவார்‌. இவர்‌, வலிமை பொருந்திய அசுரர்களும்‌, தேவர்களும்‌, கடலைக்‌ கடைந்தபோது எழுந்த நஞ்சு முழுவதையும்‌ உண்டு அருளிய தெய்வம்‌ ஆவார்‌. இவர்‌ சிவந்த திருமேனியை உடையவர்‌. கருநிறம்‌ பொருந்திய கண்டத்தை உடையவர்‌. திருநீறு கொண்டுள்ள சிப்பியைக்‌ கையில்‌ வைத்திருப்பவர்‌. மழுப்படையை உடையவர்‌. யானைத்‌ தோலைப்‌ போர்த்தி இருப்பவர்‌.

5

கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதம் அருள்செய்தகுலமார்கயிலைக் குன்றதுடைய1 கொல்லை யெருதேறிநலமார் வெள்ளை நாளிகேரம் விரியா நறும்பாளைசலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பை நகராரே.பாடம் : 1குன்றொத்துடைய
சொற்பிரிப்பு
கலம் ஆர் கடலுள் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் அருள் செய்தகுலம் ஆர் கயிலைக்குன்று அது உடையர், கொல்லை எருது ஏறிநலம் ஆர் வெள்ளை, நாளிகேரம், விரியா நறும்பாளைசலம் ஆர் கரியின் மருப்புக் காட்டும் சண்பை நகராரே.
உரை

மக்களுக்கு நன்மை தரும்‌ மரம்‌ தென்னையாகும்‌. இதில்‌ இருந்து மணம்‌ மிக்கதும்‌ வெண்மை நிறத்தோடு கூடியதுமான பாளை வெளிவரும்‌. இந்தப்‌ பாளை வஞ்சனைமிக்க யானையின்‌ தந்தத்தைப்‌ போலத்‌ தோன்றும்‌. இத்தகைய சோலை வளம்‌ மிகுந்த சண்பை நகர்‌ இறைவன்‌, சிவபெருமான்‌ ஆவார்‌. இவர்‌ மரக்கலங்கள்‌ நிறைந்த கடலினுள்‌ தோன்றிய விடத்தை உண்டு, அமரர்களுக்கு அருள்‌ செய்தவர்‌. எல்லா மலைகளுக்கும்‌ மேம்பட்ட கயிலை மலைக்கு உரியவர்‌. முல்லை நிலத்து இடபத்தில்‌ ஊர்ந்து வருபவர்‌.

6

மாகரஞ்சேர் அத்தியின்தோல் போர்த்து மெய்ம்மாலான்சூகரஞ்சேர் எயிறுபூண்ட சோதியன் மேதக்கஆகரஞ்சேர் இப்பிமுத்தை அந்தண் வயலுக்கேசாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
மாகரம் சேர் அத்தியின் தோல் போர்த்து, மெய்ம் மால் ஆனசூகரம் சேர் எயிறு பூண்ட சோதியன் மேதக்கஆகரம் சேர் இப்பிமுத்தை அம் தண்வயலுக்கேசாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பைநகராரே.
உரை

கடலில்‌ வாழும்‌ சிப்பிகள்‌' முத்துக்களைத்‌ தருகின்றன. இந்த முத்துக்களை, அழகிய குளிர்ந்த வயல்களுக்குக்‌ கடல்‌ அலைகள்‌ நகர்த்திக்‌ கொண்டு .வருகின்றன. இத்தகைய செழிப்புள்ள சண்பை நகர்‌ இறைவன்‌, சிவபெருமான்‌ ஆவார்‌. இவர்‌ நீண்ட கையினை உடைய யானையின்‌ தோலை உரித்து தம்‌ திருமேனியில்‌ போர்த்தி உள்ளார்‌. திருமாலின்‌ பத்து அவதாரங்களின்‌ ஒன்றான பன்றியின்‌ பல்லை அணிகலனாகப்‌ பூண்டவர்‌. இவர்‌ ஒளிவடிவினர்‌ ஆவார்‌.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

இருளைப்புரையும் நிறத்திலரக்கன் றனையீ டழிவித்துஅருளைச்செய்யும் அம்மான்ஏரா ரந்தண் கந்தத்தின்மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார் திரைக்கையால்தரளத்தோடு பவளம்ஈனுஞ் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை ஈடு அழிவித்து,அருளைச் செய்யும் அம்மான் ஏர் ஆர் அம் தண்கந்தத்தின்மருளைச் சுரும்பு பாடி, அளக்கர் வரை ஆர் திரைக்கையால்-தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே.
உரை

மலை போன்றத்‌ தோற்றமுடைய கடல்‌ அலைகள்‌, தன்‌ கைகளால்‌, முத்துக்களையும்‌ பவளங்களையும்‌ கொண்டு வந்து சேர்க்கும்‌ சண்பை நகரின்‌ இறைவன்‌, சிவபெருமானாகும்‌. இங்கு, அழகிய குளிர்ச்சி தரும்‌ வாசனையோடு மருள்‌ என்னும்‌ பண்ணை வண்டுகள்‌ பாடுகின்றன. இந்தப்‌ பெருமான்‌, இருளைப்‌ போன்ற கரிய நிறத்தை உடைய இராவணனின்‌ வீரத்தை அழித்தவர்‌ ஆவார்‌. அதன்பின்‌ அவன்‌ வருந்திய போது, அவனுக்கு அருள்‌ செய்த அம்மானும்‌ தலைவனும்‌ இவரே ஆவார்‌.

9

மண்டான்முழுதும் உண்டமாலும் மலர்மிசை மேலயனும்எண்டானறியா வண்ணம்நின்ற இறைவன் மறையோதிதண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத் தாதின்மேற்பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை மேல் அயனும்,எண்தான் அறியா வண்ணம் நின்ற இறைவன், மறை ஓதிதண்டு ஆர் குவளைக் கள் அருந்தி, தாமரைத்தாதின் மேல்பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பைநகராரே.
உரை

தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின்‌ தேனை உண்டு, தாமரை மலர்களில்‌ நிறைந்துள்ள மகரந்தங்களில்‌ தங்கி, பண்‌ பாடுகின்ற வண்டுகள்‌ நிறைந்த சண்பை நகரின்‌ இறைவன்‌, சிவபெருமான்‌ ஆவார்‌. இவர்‌, உலகங்கள்‌ முழுதும்‌ உண்ட திருமால்‌, தாமரை மலர்மேல்‌ வீற்றிருக்கும்‌ நான்முகன்‌ ஆகியோரின்‌ மனத்தாலும்‌ அறியாவண்ணமாக நின்ற இறைவனாவார்‌. வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவரும்‌ இவரே ஆவார்‌.

10

போதியாரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும்நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன் இருநான்கின்மாதிசித்தர் மாமறையின் மன்னிய தொன்னூலர்சாதிகீத வர்த்தமானர் சண்பை நகராரே.
சொற்பிரிப்பு
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,நீதி ஆகக் கொண்டு அங்கு அருளும் நிமலன், இரு நான்கின்மாதி சித்தர், மாமறையின் மன்னிய தொல் நூலர்,சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே.
உரை

சண்பை நகரார்‌ ஆன சிவபெருமான்‌ அணிமா முதலிய எண்வகை சித்திகளில்‌ வல்ல சித்தராவார்‌. பழமையான நூல்களாகிய வேதங்களின்‌ பொருளாக நிலைத்து நிற்பவர்‌. சாகரம்‌ முதலாகப்‌ பாடப்படுகின்ற பாட்டுகளில்‌ நிலைத்திருப்பவர்‌. புத்தர்களும்‌ சமணர்களும்‌ புகழ்‌ இல்லாதவைகளைக்‌ கூறினாலும்‌, அவைகளைப்‌ புகழ்‌ மொழிகளாகக்‌ கொண்டருளும்‌ மாசற்றவர்‌ இவர்‌.

11

வந்தியோடு பூசையல்லாப் போழ்தின் மறைபேசிச்சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பை நகர்மேயஅந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம் பந்தன்சொற்சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதி சேர்வாரே.
சொற்பிரிப்பு
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை பேசி,சந்திபோதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேயஅந்தி வண்ணன் தன்னை, அழகு ஆர் ஞானசம்பந்தன் சொல்சிந்தை செய்து பாட வல்லார் சிவகதி சேர்வாரே.
உரை

அடியவர்கள்‌, வந்தனையோடு பூசை செய்யும்‌ காலங்களைத்‌ தவிர்த்த மற்ற நேரங்களில்‌, வேதப்‌ பொருட்களை விசாரனை செய்கின்றனர்‌. மாலைக்‌ காலம்‌ போன்ற செம்மேனியனை, சண்பை நகர்‌ மேவிய சிவபெருமானை, சந்தியா காலங்களில்‌ அடியவர்கள்‌ தியானம்‌, சமாதி நிலைகளில்‌ நின்று வழிபடுகின்றனர்‌. ஞானசம்பந்தன்‌ அருளிய அழகிய . இப்பதிகத்தின்‌ பொருளை, மனதில்‌ நிறுத்திப்‌ பாட வல்லவர்கள்‌, சிவகதியைச்‌ சேர்வார்கள்‌.