திருமுறை 1 · 1.065 · 11

காவிரிப்பூம்பட்டினத்துப்பல்லவனீச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கேசி
தலம்
பல்லவனீச்சுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அடையார் தம்புரங்கள் மூன்றும் ஆரழ லில்லழுந்தவிடையார் மேனிய ராய்ச்சீறும் வித்தகர் மேயவிடம்கடையார் மாடம் நீடியெங்கு1 கங்குல்புறந் தடவப்படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவ னீச்சரமே.பாடம் : 1நீடியோங்கும்
சொற்பிரிப்பு
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர் அழலில் அழுந்த,விடை ஆர் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேய இடம்கடை ஆர் மாடம் நீடி எங்கும் கங்குல் புறம் தடவ,படை ஆர் புரிசைப் பட்டினம் சேர் பல்லவனீச்சுரமே.
உரை

காவிரிப்‌ பூம்பட்டினத்தைச்‌ சேர்ந்த திருப்பல்லவனீச்சரம்‌ என்னும்‌ தலம்‌, வானவெளியைத்‌ தொடும்‌ மதில்களால்‌ சூழப்பட்டுள்ளது. இங்கு, வாயில்களோடு கூடிய உயர்ந்த மாடவீடுகள்‌ எங்கும்‌ உள்ளன. இத்தலத்தில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. இப்பெருமான்‌, பகைவர்களாகிய அசுரர்களின்‌ மூன்று நகரங்களையும்‌ பெருந்தீயில்‌ அழுந்தி அழிக்க இடப வாகனத்தில்‌ ஏறிவரும்‌ திருமேனியராய்ச்‌ சென்று சினந்த வித்தகர்‌ ஆவார்‌.

2

எண்ணா ரெயில்கள் மூன்றுஞ்சீறும் எந்தைபிரான் இமையோர்கண்ணா யுலகங் காக்கநின்ற கண்ணுதல் நண்ணுமிடம்மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலுந்தேன் அருந்திப்பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான், இமையோர்கண் ஆய் உலகம் காக்க நின்ற கண்ணுதல், நண்ணும் இடம்மண் ஆர் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி,பண் ஆர் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
உரை

எம்‌ தந்தையாகிய சிவபெருமான்‌, பகைவர்களாகிய அசுரர்களின்‌ திரிபுரங்களையும்‌ சினந்து அழித்தவர்‌ ஆவார்‌. இவர்‌ தேவர்களுக்குக்‌ கண்களாக விளங்குபவர்‌. இவ்வுலகைக்‌ காக்கின்ற சிவபெருமான்‌, விரும்பி அமர்ந்திருக்கின்ற தலம்‌ காவிரிப்‌ பூம்பட்டினத்துப்‌ பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இத்தலத்தில்‌ நன்கு அமைக்கப்பட்ட சோலைகள்‌ உண்டு. இந்தச்‌ சோலைகளில்‌ நாள்தோறும்‌ அழகிய வண்டுகள்‌ தேனை உண்டு இசைபாடுகின்றன.

3

மங்கை யங்கோர் பாகமாக வாள்2 நில வார்சடைமேல்கங்கை யங்கே வாழவைத்த கள்வன் இருந்தஇடம்பொங்க யஞ்சேர் புணரியோத மீதுயர் பொய்கையின்மேல்பங்க யஞ்சேர் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.பாடம் : 2வான்
சொற்பிரிப்பு
மங்கை அங்கு ஓர் பாகம் ஆக, வாள் நிலவு ஆர் சடைமேல்கங்கை அங்கே வாழவைத்தகள்வன் இருந்த இடம்பொங்கு அயம் சேர் புணரி ஓதம் மீது உயர் பொய்கையின் மேல்பங்கயம் சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
உரை

பள்ளங்கள்‌ நிறைந்த ஆழமான கடலின்‌ வெள்ள நீரால்‌, அண்மையில்‌ உள்ள நீர்நிலைகளில்‌ உள்ள தண்ணீர்‌ மட்டம்‌ உயர்ந்துள்ளன. அந்த நீர்‌ நிலைகளில்‌ தாமரை மலர்கள்‌ பூத்துக்‌ குலுங்குகின்றன. இத்தகைய செழிப்பான தலம்‌ காவிரிப்‌ பூம்பட்டினத்துப்‌ பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இந்தத்‌ தலத்தில்‌ எழுந்தருளியுள்ள சிவபெருமான்‌ உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டுள்ளார்‌. ஒளிபொருந்திய பிறையைத்‌ தன்‌ சடையில்‌ சூடியிருக்கின்றார்‌. கங்கை நதி என்ற நங்கையையும்‌ தன்‌ சடையின்மேல்‌ வாழ வைத்துள்ள கள்வர்‌ இவர்‌.

4

தாரார் கொன்றை பொன்தயங்கச் சாத்திய மார்பகலம்நீரார் நீறு சாந்தம்வைத்த நின்மலன் மன்னுமிடம்போரார் வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசை பாடலினாற்பாரார் கின்ற பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
தார் ஆர் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பு அகலம்நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம்போர் ஆர் வேல்கண் மாதர் மைந்தர் புக்கு இசைபாடலினால்,பார் ஆர்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
உரை

மாலையாகவே பூக்கும்‌ கொன்றை மலர்கள்‌ பொன்‌ போல்‌ விளங்குமாறு சிவபெருமான்‌ தன்‌ திருமார்பில்‌ சூடியுள்ளார்‌. திருமார்பின்‌ பரப்பில்‌ நீரில்‌ குழைத்த சாம்பலை சந்தனத்தைப்‌ போல பூசியுள்ளார்‌. இந்தக்‌ குற்றமற்ற சிவபெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ காவிரிப்‌ பூம்பட்டினத்துப்‌ பல்லவனீச்சரம்‌. இங்கு போரில்‌ பொருந்திய கூரிய வேல்‌ போன்ற கண்களை உடைய மாதர்களும்‌ இளைஞர்களும்‌ சேர்ந்து இசை பாடுகின்றனர்‌. அதனைக்‌ கேட்க மக்கள்‌ வெள்ளம்‌ போல்‌ திரண்டுள்ள தலமாகும்‌.

5

மைசேர் கண்டர் அண்டவாணர் வானவ ருந்துதிப்பமெய்சேர் பொடியர்3 அடியாரேத்த மேவி இருந்தவிடங்கைசேர் வளையார் விழைவினோடு காதன்மை யாற்கழலேபைசே ரரவார் அல்குலார்சேர் பல்லவ னீச்சரமே.பாடம் : 3மெய்சேர்கோடி
சொற்பிரிப்பு
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும் துதிப்ப,மெய் சேர் பொடியர், அடியார் ஏத்த மேவி இருந்த இடம்கை சேர் வளையார், விழைவினோடு காதன்மையால், கழலே,பை சேர் அரவு ஆர் அல்குலார், சேர் பல்லவனீச்சுரமே.
உரை

கருமை நிறம்‌ பொருந்திய கண்டத்தை உடையவர்‌. மண்ணின்‌ மக்களும்‌ விண்ணின்‌ தேவர்களும்‌ துதிக்கத்‌ தக்கவர்‌. மேனிமிசைத்‌ திருநீறு பூசிய நிமலன்‌. அடியார்கள்‌ புகழ விரும்பி எழுந்தருளிய இடம்‌ காவிரிப்‌ பூம்பட்டினத்துப்‌ பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. பாம்பின்‌ படம்போன்ற அல்குலை உடைய இளமகளிர்‌ கைகளில்‌ நிறைய வளையல்களை அணிந்து ஆசையோடும்‌ காதலோடும்‌ சிவபெருமானின்‌ திருவடிகளைச்‌ சேர இங்கு வந்து கூடுகிறார்கள்‌.

6

குழலி னோசை வீணைமொந்தை கொட்ட முழவதிரக்கழலி னோசை யார்க்கஆடுங் கடவு ளிருந்தவிடஞ்சுழியி லாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்பழியி லார்கள் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட, முழவு அதிர,கழலின் ஓசை ஆர்க்க, ஆடும் கடவுள் இருந்த இடம்சுழியில் ஆரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டு எறிய,பழி இலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
உரை

குழலோசைக்கு ஏற்ப வீணை ஒலிக்கின்றது. மொந்தை கொட்டுகிறது. முழவு ஒலிக்கிறது. காலில்‌ அணிந்துள்ள வீரக்கழல்‌, நடனத்துக்கு ஏற்பச்‌ சதங்கை போல்‌ இசைக்கிறது. இத்தகைய இசை ஒலிகளோடு ஆடும்‌ கடவுளாகிய சிவபெருமான்‌ எழுந்தருளிய இடம்‌ புகார்‌ நகரில்‌ உள்ள பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இங்கு சுழிகள்‌ நிறைந்த கடலில்‌, காவிரி ஆற்றின்‌ வெள்ள நீர்‌ தெளிந்த நீரை முகர்ந்து எறிகின்றது. இந்நகரில்‌ பழியற்ற நன்மக்கள்‌ வாழ்கின்றனர்‌.

7

வெந்த லாய வேந்தன்வேள்வி வேரறச் சாடிவிண்ணோர்வந்தெ லாமுன் பேணநின்ற மைந்தன் மகிழ்ந்தஇடம்மந்த லாய மல்லிகையும் புன்னை வளர்குரவின்பந்தலாரும் பட்டினத்துப் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அறச் சாடி, விண்ணோர்வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்மந்தல் ஆய மல்லிகையும், புன்னை, வளர் குரவின்பந்தல் ஆரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.
உரை

தகுதியில்லாத கூட்டத்தை உடைய தக்கன்‌ என்னும்‌ வேந்தன்‌ செய்த வேள்வியை அழித்தவர்‌. அதன்பின்‌ தேவர்கள்‌ எல்லோரும்‌ தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபெருமானது இடம்‌ காவிரிப்‌ பூம்பட்டினத்துப்‌ பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இங்கு மென்மையான மல்லிகைக்‌ கொடி, வளர்ந்து பரவியுள்ள புன்னை, குராமரம்‌ ஆகியவற்றின்மீது படர்ந்துள்ளது.

8

தேரரக்கன் மால்வரையைத் தெற்றி யெடுக்கஅவன்தாரரக்குந் திண்முடிகள் ஊன்றிய சங்கரனூர்காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெ லாமுணரப்பாரரக்கம் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க, அவன்தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரன் ஊர்கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலம் எலாம் உணர,பார் அரக்கம் பயில் புகாரில்பல்லவனீச்சுரமே.
உரை

பொருள்‌: சிறந்த தேரை உடைய இராவணன்‌ பெருமை மிக்க கயிலை மலையைக்‌ கைகளைப்‌ பின்னி அகழ்ந்து எடுக்க முயன்றான்‌. அவனது மாலைகள்‌ அழுத்தும்‌ வலிமையான பத்துத்‌ தலைகளையும்‌ தனது கால்‌ விரலால்‌ ஊன்றி நெரித்தவர்‌ சங்கரன்‌ என்று சொல்லப்படும்‌ சிவபெருமான்‌. இவரது ஊர்‌ புகார்‌ நகரைச்‌ சேர்ந்த பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இங்கு மேகங்கள்‌ வந்து அழுந்துவதால்‌, மேலெழுந்து வரும்‌ கடல்நீரால்‌ எக்காலத்திலும்‌ அழியாது உணரப்படும்‌ சிறப்புடையது இந்தத்தலம். மக்கள்‌ அக்கு மணி மாலை பூண்டு போற்றி வாழும்‌ பெருமையை உடையது இந்தத்தலம்.

9

அங்க மாறும் வேதநான்கும் ஓதும் அயன்நெடுமால்தங்க ணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்வங்க மாரு முத்தம்இப்பி வார்கட லூடலைப்பப்பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன், நெடுமால்,தம் கணாலும் நேட நின்ற சங்கரன் தங்கும் இடம்வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார் கடல் ஊடு அலைப்ப,பங்கம் இல்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.
உரை

ஆறு அங்கங்களையும்‌, நான்கு வேதங்களையும்‌ முறையே ஓதும்‌ பிரமனும்‌ திருமாலும்‌ தம்‌ கண்களால்‌ தேடுமாறு உயர்ந்து நின்றவர்‌ சங்கரன்‌ என்று சொல்லப்படும்‌ சிவபெருமான்‌. இவர்‌ தங்கும்‌ இடம்‌ புகாரில்‌ அமைந்துள்ள பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இங்கு மரக்கலங்கள்‌ வந்து போய்க்‌ கொண்டிருக்கும்‌ கடலானது முத்துக்களையும்‌ சங்குகளையும்‌ அலைகளால்‌ அலைத்துத்‌ தருகின்றது. இங்கு குற்றமற்ற சான்றோர்கள்‌ வாழ்கின்றனர்‌.

10

உண்டுடுக்கை யின்றியேநின் றூர்நக வேதிரிவார்கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறி யாதவிடந்தண்டுடுக்கை தாளந்தக்கை சார நடம்பயில்வார்பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவ னீச்சரமே.
சொற்பிரிப்பு
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்,கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார், கண்டு அறியாத இடம்தண்டு, உடுக்கை, தாளம், தக்கை, சார நடம் பயில்வார்பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.
உரை

சமணர்கள்‌ அளவுக்குமீறி உண்டு ஆடையின்றி ஊரார்‌ சிரிக்கத்‌ திரிகின்றனர்‌. புத்தர்கள்‌ அவர்களைக்‌ கண்டு தாமும்‌ அவ்வாறு திரியாது ஆடையை உடலில்‌ போர்த்துக்‌ கொண்டு உழலுகின்றனர்‌. இவர்கள்‌ கண்டு அறியாத இடம்‌ பல்லவனீச்சரம்‌ ஆகும்‌. இங்கு தண்டு, உடுக்கை, தாளம்‌, தக்கை போன்ற வாத்தியங்கள்‌ முழங்க நடனம்‌ புரிபவர்‌ சிவபெருமான்‌. இவர்‌ அடியவர்களின்‌ துன்பங்களைப்‌ பண்டு முதல்‌ தீர்த்து அருளுபவர்‌.

11

பத்த ரேத்தும் பட்டினத்துப் பல்லவ னீச்சரத்தெம்அத்தன் தன்னை அணிகொள்காழி ஞானசம் பந்தன்சொல்சித்தஞ் சேரச் செப்பும்மாந்தர் தீவினை நோயிலராய்ஒத்த மைந்த உம்பர்வானில் உயர்வினொ டோங்குவரே.
சொற்பிரிப்பு
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்அத்தன்தன்னை, அணி கொள் காழி ஞானசம்பந்தன் சொல்சித்தம் சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோய் இலராய்,ஒத்து அமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே..
உரை

பக்தர்கள்‌ போற்றும்‌ காவிரிப்‌ பூம்பட்டினத்துப்‌ பல்லவனீச்சரத்தில்‌ எம்‌ தலைவனாகிய சிவபெருமான்‌ விளங்குகின்றார்‌. இப்பெருமானை, அழகிய சீகாழிப்‌ பதியில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ போற்றி இப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இப்பதிகத்தை மனம்‌ ஒன்றிச்‌ சொல்லும்‌ மக்கள்‌, தீவினையும்‌, நோயும்‌ இல்லாதவராய்‌, அமைந்த ஒப்புடையவர்கள்‌ ஆவார்கள்‌. இவர்கள்‌ தேவர்‌ உலகில்‌ உயர்வோடு ஓங்கி வாழ்வர்‌.