1
சொற்பிரிப்பு
உரை
திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய சிவபெருமான், வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கருநீலக் கழுத்துடையவராக விளங்குகின்றார். இவரது திருவடிகளைத் துதித்தால் நம் வினைகள் யாவும் முற்றிலும் நீங்கும்.
திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானாகிய சிவபெருமான், வரிகள் அமைந்த சிறந்த நீலமணி போலக் கருநீலக் கழுத்துடையவராக விளங்குகின்றார். இவரது திருவடிகளைத் துதித்தால் நம் வினைகள் யாவும் முற்றிலும் நீங்கும்.
திருக்கரவீரத்தில் விளங்கும் சங்கரனாகிய சிவபெருமான், தாழ்ந்து தொங்கும் சடைமுடிகளை உடையவர். அவர் யாவருக்கும் உயர்ந்தவர். இளம்பிறைச் சந்திரனோடு கங்கையையும் உடனாகச் சூடியவர். இந்தச் சங்கரனின் திருவடிகளை வழிபட்டால் நம்மைப் பற்றின வினைகள் தங்குமோ? தங்காது.
திருக்கரவீரத்தில் எழுந்தருளிய எம் நாதனான சிவபெருமான் அன்பு வடிவினன். நல்லனவாகிய பூதகணங்களைப் பல்வகைப் படைகளாக அமைத்துக் கொண்டவன். இவரது திருவடிகளை அடைவோரைத் துன்பங்கள் வந்தடையா.
திருக்கரவீரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனான சிவபெருமான் நீலமணி போன்ற கழுத்தில் கறையுடையவனாக விளங்குகின்றார். இப்பெருமானின் திருவடிகளை வணங்கினால் நமது சஞ்சித கர்ம வினைகள் நீங்கும்.
: திருக்கரவீரத்தில் உறையும் சிவபெருமான் வானத்தில் சஞ்சரித்த மும்மதில்களையும் எய்து அழித்த மூன்றாம் கண்ணை உடையவராக விளங்குகின்றார். இப்பெருமானை சந்த இசை அமைப்போடு கூடிய வேதங்களால் பாடியும், ஆடியும் அடைபவர்களின் வினைகள் நாசமடையும்.
திருக்கரவீரத்தில் எழுந்தருளிய சிவபெருமான் ஒளி நிறைந்த பிறைமதியைச் சூடியிருக்கின்றார். நீண்ட சடைமுடியினர். நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கிறார். வீரக்கழலை திருப்பாதத்தில் அணிந்திருக்கின்றார். இப்பெருமானைத் தொழ வல்லவர்க்குத் துக்கம் இல்லை.
திருக்கரவீரத்தில் உறையும் சிவபெருமான் விடம் போல் ஒளிவிடும் கண்டத்தை உடையவர். தீயவர்களாகிய அசுரர்களின் முப்புரங்கள் அழிந்து ஒழியுமாறு அம்பை எய்தவர். அனைத்து உலகங்களின் வடிவாக விளங்குபவர். இப்பெருமானை வழிபடும் தொண்டர்களின் துயரங்கள் தூர விலகிவிடும்.
கடலால் சூழப்பட்ட இலங்கை மக்களின் தலைவனாகிய இராவணனின் பத்துத் தலைகளையும் நெரித்தவர் சிவபெருமான். கோபத்தோடு கூடிய அவனது ஆண்மையை அழித்தவர். இப்பெருமான் எரிபோன்ற உருவினராக எழுந்தருளிய தலம் கரவீரம் என்று சொல்ல வல்லவர்க்கு துன்பம் இல்லை.
நீரில் தோன்றும் தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும் திருமாலும் உண்மையைத் தெளிவாக அறியத் தீப்பிழம்பாகத் தோன்றினார் சிவபெருமான். அவர்கள் தன் உருவத்தை அறியாத வண்ணம் கள்ளம் செய்தார். இப்பெருமான் உறையும் திருக்கரவீரத்தைத் தியானிக்க வினைகள் நீங்கும்.
அமணர்கள் முடை நாற்றமுடையவர்கள். அவர்களோடு காவி ஆடை அணிந்த புத்தர்களும் பேசுகின்ற கொடிய வெம்மையான பேச்சுக்களை உண்மை என்று கொள்ள வேண்டாம். அனைத்து உலகையும் காத்து அருளுகின்ற சிவபெருமான் திருக்கரவீரத்துள் உறைகின்றார். அவரை அண்டியவர்களுக்குத் துன்பம் இல்லை.
அழிவில்லாதவனாக விளங்கும் திருக்கரவீரத்துப் பெருமை உடையவனான சிவபெருமான் மேல் அன்புக் கசிவால் தமிழை விரும்பும் ஞானசம்பந்தன் இப்பதிகத்தைப் பாடினார். இத்திருப்பதிகப் பாடல்களைப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.