திருமுறை 1 · 1.056 · 11

திருப்பாற்றுறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
பாற்றுறை
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

காரார் கொன்றை கலந்த முடியினர்சீரார் சிந்தை செலச்செய்தார்பாரார் நாளும் பரவிய பாற்றுறைஆரா ராதி முதல்வரே.
சொற்பிரிப்பு
கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்பாரார் நாளும் பரவிய பாற்றுறையார், ஆர் ஆதி முதல்வரே.
உரை

திருப்பாற்றுறையில்‌ உறையும்‌ ஆதி முதல்வனான சிவபெருமான்‌ கார்காலத்தில்‌ மலரும்‌ கொன்றை மலர்‌ மாலை சூடிய திருமுடியினராக விளங்குகின்றார்‌. உலக மக்கள்‌ நாள்தோறும்‌ இங்கு வந்து வழிபடுகின்றனர்‌. இவர்‌, தெவிட்டாத, அன்பு கனிந்த, நிறைவான நம்‌ சிந்தையைத்‌ தம்மிடமே செல்லச்‌ செய்தார்‌.

2

நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்சொல்லார் நன்மலர் சூடினார்பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறைஎல்லா ருந்தொழும் ஈசரே.
சொற்பிரிப்பு
நல்லாரும் அவர்; தீயர் எனப்படும்சொல்லார்; நல்மலர் சூடினார்;பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறைஎல்லாரும் தொழும் ஈசரே.
உரை

எல்லாராலும்‌ தொழப்படும்‌ எம்‌ ஈசனாகிய சிவபெருமான்‌ திருப்பாற்றுறையில்‌ உறைகின்றார்‌. அவர்‌ பற்கள்‌ நீங்காதிருந்த வெண்மையான தலை ஓட்டை அணிந்த செல்வந்தர்‌. அவர்‌ நல்லவர்‌. கையில்‌ தீயை ஏந்து இருப்பதால்‌ தீயர்‌ எனவும்‌ போற்றப்படுபவர்‌. நிறைந்த நல்ல மலர்‌ மாலையைச்‌ சூடியவர்‌.

3

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்எண்ணார் வந்தென் எழில்கொண்டார்பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறைஉண்ணா ணாளும் உறைவரே.
சொற்பிரிப்பு
விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,எண்ணார் வந்து, என் எழில் கொண்டார்பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறையுள் நாள்நாளும் உறைவரே.
உரை

இயற்கையில்‌ பண்ணின்‌ இசை போன்று வண்டினங்கள்‌ முரலிக்‌ கொண்டிருக்கும்‌ திருப்பாற்றுறையில்‌ எக்காலத்திலும்‌ உறைபவர்‌ சிவபெருமான்‌. இவர்‌, தவழும்‌ பிறைச்‌ சந்திரன்‌ விளங்கும்‌ திருமுடியினர்‌ ஆவர்‌. இவர்‌ என்‌ மனதின்‌ எண்ணத்தில்‌ இருந்து என்‌ எழில்‌ நலம்‌ அனைத்தையும்‌ கவர்ந்து கொண்டார்‌.

4

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்ஏவின் அல்லா ரெயிலெய்தார்பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறைஓவென் சிந்தை யொருவரே.
சொற்பிரிப்பு
பூவும் திங்கள் புனைந்த முடியினர்,ஏவின் அல்லார் எயில் எய்தார்பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,ஓ! என் சிந்தை ஒருவரே.
உரை

சிவபெருமான்‌ மலர்களையும்‌ பிறைமதியையும்‌ தரித்த திருமுடியினர்‌. பகைவராய்‌ வந்த அசுரர்களின்‌ முப்புரங்களை தனது ஒரே கணையால்‌ அழித்தவர்‌. பாவங்களைப்‌ போக்கும்‌ தீர்த்தங்கள்‌ நிறைந்த திருப்பாற்றுறை இறைவன்‌ ஒருவரே. என்‌ சிந்தை முழுவதையும்‌ ஆட்கொண்டு இருப்பவர்‌.

5

மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தெனதாகம் பொன்னிற மாக்கினார்பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறைநாகம் பூண்ட நயவரே.
சொற்பிரிப்பு
மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனதுஆகம் பொன்நிறம் ஆக்கினார்பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறைநாகம் பூண்ட நயவரே.
உரை

சிவபெருமான்‌ தன்னுடைய ஒரு பாதியில்‌ பெண்ணை உடையவர்‌. நாகத்தை அணிகலனாகக்‌ கொண்ட நலமுடையவர்‌. வானகத்தே தோயும்‌ பிறைமதியை முடியிற்சூடி, மகிழ்ந்து வந்து, எனது உடலைப்‌ பொன்னிறமாக்கினார்‌. பசலை பூக்கச்‌ செய்தவராவர்‌.

6

போது பொன்திகழ் கொன்றை புனைமுடிநாதர் வந்தென் நலங்கொண்டார்பாதந் தொண்டர் பரவிய பாற்றுறைவேத மோதும் விகிர்தரே.
சொற்பிரிப்பு
போது பொன் திகழ் கொன்றை புனை முடிநாதர் வந்து, என் நலம் கொண்டார்பாதம் தொண்டர் பரவிய பாற்றுறைவேதம் ஓதும் விகிர்தரே.
உரை

சிவபிரானது தொண்டர்கள்‌ தம்‌ திருவடிகளைப்‌ போற்றத்‌ திருப்பாற்றுறையுள்‌ வீற்றிருக்கின்றார்‌. அவர்‌ வேதங்களை அருளிய விகிர்தர்‌. அலரும்‌ பருவத்து உள்ள அரும்புகளைக்‌ கொண்ட, பொன்னிறம்‌ திகழும்‌ கொன்றை மலர்களைத்‌ தரித்துள்ள திருமுடியினர்‌. இந்தத்‌ தலைவனான சிவபிரானாரே என்பால்‌ விரும்பி வந்து என்‌ அழகினைக்‌ கவர்ந்தவராவார்‌.

7

வாடல் வெண்டலை சூடினர் மால்விடைகோடல் செய்த குறிப்பினார்பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறைஆடல் நாகம் அசைத்தாரே.
சொற்பிரிப்பு
வாடல் வெண்தலை சூடினர், மால்விடைகோடல் செய்த குறிப்பினார்பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறைஆடல் நாகம் அசைத்தாரே.
உரை

பண்‌ இசை போன்ற பாடல்களை முரலுகின்ற வண்டினங்கள்‌ நிறைந்த திருப்பாற்றுறையில்‌ சிவபெருமான்‌ ஆடுதலில்‌ வல்ல நாகப்பாம்பைத்‌ தன்‌ திருமேனியில்‌ பல இடங்களிலும்‌ கட்டி உள்ளார்‌. உலர்ந்த வெண்மையான தலைஓடுகளை மாலையாகச்‌ சூடியுள்ளார்‌. பெரிய இடபத்தின்‌ மேல்‌ ஏறிவந்து என்‌ அழகைக்‌ கவர்ந்து செல்லும்‌ கொள்கையினை உடையவர்‌ ஆயினார்‌.

8

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறைமவ்வல் சூடிய மைந்தரே.
சொற்பிரிப்பு
வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்;எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்;பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறைமவ்வல் சூடிய மைந்தரே.
உரை

திருப்பாற்றுறை இறைவனான சிவபெருமான்‌ கடல்‌ நஞ்சைக்‌ கண்டத்தில்‌ அடக்கியவர்‌. முல்லை மலர்‌ சூடிய மைந்தர்‌. வெம்மையோடு கூடிய மேனியை உடையவர்‌. திருவெண்ணீறு அணிந்தவர்‌. என்‌ எழிலைக்‌ கவர்ந்துப்‌ பின்‌ எனக்குப்‌ பிரிவுத்‌ துன்பத்தைத்‌ தந்தவர்‌ ஆவர்‌.

9

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரிஆன வண்ணத்தெம் அண்ணலார்பான லம்மலர் விம்மிய பாற்றுறைவான வெண்பிறை மைந்தரே.
சொற்பிரிப்பு
ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரிஆன வண்ணத்து எம் அண்ணலார்பானல் அம்மலர் விம்மிய பாற்றுறைவான வெண்பிறை மைந்தரே.
உரை

நீலோற்பவ மலர்கள்‌ நிறைந்த நீர்நிலைகள்‌ உள்ள தலம்‌ திருப்பாற்றுறை. இங்கு வானகத்தே விளங்கும்‌ வெண்மையான பிறைமதியைச்‌ சூடிய மைந்தராகச்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. இவர்‌, பன்றியும்‌ அன்னமுமாய்‌ அடிமுடி தேடிய திருமால்‌, பிரமன்‌ ஆகியோருக்கு தீப்பிழம்பாக ஓங்கி நின்ற அண்ணலார்‌ ஆவார்‌.

10

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்வந்தென் நன்னலம் வௌவினார்பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறைமைந்தர் தாமோர் மணாளரே.
சொற்பிரிப்பு
வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்,வந்து என் நன் நலம் வௌவினார்பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறைமைந்தர்தாம் ஓர் மணாளரே.
உரை

பசுமையான குருக்கத்திக்‌ கொடிகள்‌ சூழ்ந்துள்ள திருப்பாற்றுறை மைந்தரான சிவபெருமான்‌, முன்னரே மலைமகளை மணந்த மணானர்‌ ஆவார்‌. ஆயினும்‌, அவர்‌ தம்‌ மேனிமீது வெந்த திருநீறு பூசியவராய்‌, கையில்‌ வேலை ஏந்தியவராய்‌, மார்பில்‌ பூணூல்‌ அணிந்தவராய்‌ வந்து என்‌ அழகினைக்‌ கவர்ந்து சென்றார்‌.

11

பத்தர் மன்னிய பாற்றுறை மேவியபத்து நூறு பெயரனைப்பத்தன் ஞானசம் பந்தன தின்தமிழ்பத்தும் பாடிப் பரவுமே.
சொற்பிரிப்பு
பத்தர் மன்னிய பாற்றுறை மேவியபத்து நூறு பெயரனை,பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்பத்தும் பாடிப் பரவுமே!
உரை

பக்தர்கள்‌ நிறைந்துள்ள தலம்‌ திருப்பாற்றுறை. இங்கு, ஆயிரம்‌ திருநாமங்களை உடைய சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. பக்தனாகிய ஞானசம்பந்தன்‌ பாடிய இனிய இத்தமிழ்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ பாடிப்‌ போற்றுங்கள்‌.