திருமுறை 1 · 1.055 · 11

திருமாற்பேறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
மாற்பேறு
நாடு
தொண்டைநாடு

1

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமைநீறு சேர்திரு மேனியர்சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்மாறி லாமணி கண்டரே.
சொற்பிரிப்பு
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு, உமைநீறு சேர் திருமேனியர்சேறு சேர் வயல் தென் திருமாற் பேற்றில்மாறு இலா மணிகண்டரே.
உரை

சிவபெருமான்‌ கடலில்‌ ஊறிவந்த நஞ்சினை உண்டவர்‌ ஆதலால்‌ ஒப்பற்ற நீலமணி போன்ற கண்டத்தை உடையவர்‌. உமையம்மையோடு கூடிய திருநீறு பூசிய திருமேனியை உடையவர்‌. இவர்‌ சேற்று வளம்‌ நிறைந்த வயல்களால்‌ சூழப்பெற்ற அழகிய திருமாற்பேற்றின்‌ இறைவனாவர்‌.

2

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மைஅடைவா ராமடி கள்ளெனமடையார் நீர்மல்கு மன்னிய மாற்பேறுடையீ ரேயுமை யுள்கியே.
சொற்பிரிப்பு
தொடை ஆர் மா மலர் கொண்டு, இருபோது, உம்மைஅடைவார் ஆம், “அடிகள்!” எனமடை ஆர் நீர் மல்கு மன்னிய மாற்பேறுஉடையீரே! உமை உள்கியே.
உரை

சிவபெருமானே! நீவீர்‌ வாய்க்கால்‌ மடைகளில்‌ நீர்‌ நிறைந்து விளங்கும்‌ திருமாற்பேற்றை உமது இருப்பிடமாகக்‌ கொண்டிருக்கின்றீர்‌. சிறந்த மாலைகளைத்‌ தொடுத்தும்‌ அதனை ஏந்திய கையினராயும்‌, காலையிலும்‌ மாலையிலும்‌ உம்மைத்‌ தலைவராக எண்ணி நினைந்து தொழுகின்ற அடியார்கள்‌ உம்மை வந்து அடைகின்றனர்‌.

3

பையா ரும்மர வங்கொடு வாட்டியகையா னென்று வணங்குவர்மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்றஐயா நின்னடி யார்களே.
சொற்பிரிப்பு
“பை ஆரும் அரவம் கொடு ஆட்டியகையான்” என்று வணங்குவர்மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்றஐயா! நின் அடியார்களே.
உரை

கருநிறம்‌ பொருந்திய நஞ்சை உண்டு, நீலகண்டராய்த்‌ திருமாற்பேற்றில்‌ வீற்றிருக்கின்ற சிவபெருமானே! உமது அடியார்கள்‌, நீவீர்‌ “படம்‌ பொருந்திய பாம்பை பிடித்து ஆட்டும்‌ கைகளை உடையவர்‌” என்று சொல்லி வணங்குகின்றனர்‌.

4

சால மாமலர் கொண்டு சரணென்றுமேலை யார்கள் விரும்புவர்மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்றுநீல மார்கண்ட நின்னையே.
சொற்பிரிப்பு
சால மா மலர் கொண்டு, “சரண்!” என்று,மேலையார்கள் விரும்புவர்மாலினார் வழிபாடு செய் மாற்பேற்றுநீலம் ஆர் கண்ட! நின்னையே.
உரை

இத்தலத்தில்‌ திருமால்‌ வழிபாடு செய்து அருள்‌ பெற்றதால்‌ இந்த ஊர்‌ திருமாற்பேறு எனப்‌ பெயர்‌ பெற்றது. இங்கு எழுந்தருளி இருக்கும்‌ நீலநிறம்‌ பொருந்திய கண்டத்தை உடைய சிவபெருமானே! மேன்மைமிக்க சான்றோர்கள்‌, அதிகமான நறுமலர்களைக்‌ கொண்டு விருப்பத்தோடு அருச்சித்து, உம்மையே சரணடைகிறோம்‌ என்று வழிபடுகின்றனர்‌.

5

மாறி லாமணி யேயென்று வானவர்ஏற வேமிக ஏத்துவர்கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்நீற னேயென்று நின்னையே.
சொற்பிரிப்பு
“மாறு இலா மணியே!” என்று வானவர்ஏறவே மிக ஏத்துவர்கூறனே! குலவும் திரு மாற்பேற்றில்நீறனே! என்றும் நின்னையே.
உரை

திருமாற்பேற்றுச்‌ சிவபெருமான்‌ உமையம்மையை ஒருபாகமாகக்‌ கொண்டு திருநீறு பூசியவராய்‌ விளங்குகின்றார்‌. தேவர்கள்‌ , இப்பெருமானை, இந்த ஓளியான மாணிக்கமணி எத்தகையோர்க்கும்‌ இன்பமே செய்யும்‌ என எப்போதும்‌ வெகுவாகப்‌ புகழ்ந்து போற்றி வழிபடுகின்றனர்‌.

6

உரையா தாரில்லை யொன்றும்நின் தன்மையைப்பரவா தாரில்லை நாள்களும்திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்றரையா னேயருள் நல்கிடே.
சொற்பிரிப்பு
உரையாதார் இல்லை, ஒன்றும் நின் தன்மையை;பரவாதார் இல்லை, நாள்களும்;திரை ஆர் பாலியின் தென் கரை மாற்பேற்றுஅரையானே! அருள் நல்கிடே!
உரை

அலைகள்‌ பொருந்திய பாலியாற்றின்‌ தென்கரையில்‌ உள்ள இருமாற்பேற்றின்‌ அரசனாக வீற்றிருக்கும்‌ சிவபெருமானே! நாள்தோறும்‌ நினது பெருந்தன்மையை வியந்து உரையாதார்‌ இல்லை. நாள்தோறும்‌ உன்‌ பெருமைகளைப்‌ பரவாதவர்‌ இல்லை. அருள்‌ நல்குவீராக.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல்கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனைஉரைகெ டுத்தவன் ஒல்கிடவரமி குத்தஎம் மாற்பேற் றடிகளைப்பரவி டக்கெடும் பாவமே.
சொற்பிரிப்பு
அரசு அளிக்கும் அரக்கன் அவன்தனைஉரை கெடுத்து, அவன் ஒல்கிடவரம் மிகுத்த எம் மாற்பேற்று அடிகளைப்பரவிடக் கெடும், பாவமே.
உரை

எமது திருமாற்பேற்றுச்‌ சிவபெருமான்‌, இலங்கை அரசனான இராவணனின்‌ புகழை மங்கச்‌ செய்தவர்‌. பின்னால்‌, அவன்தன்‌ பிழையை உணர்ந்து மன்னித்தருள வேண்டியபோது, அவனுக்கு வரங்கள்‌ பலவற்றையும்‌ அளித்தருளியவர்‌. இப்பெருமானின்‌ திருவடிகளைப்‌ போற்றிட நம்‌ பாவம்‌ நீங்கும்‌.

9

இருவர் தேவருந் தேடித் திரிந்தினி1ஒருவராலறி வொண்ணிலன்2மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப்பரவு வார்வினை பாறுமே.பாடம் : 1திரிந்ததில்; 2லறிவுண்டிலன் - லறியுண்டிலன்.
சொற்பிரிப்பு
இருவர்தேவரும் தேடித் திரிந்து, இனிஒருவரால் அறிவு ஒண்ணிலன்,மருவு நீள்கழல் மாற்பேற்று அடிகளைப்பரவுவார் வினை பாறுமே.
உரை

திருமால்‌, பிரமன்‌ ஆகிய இருவரும்‌ அடிமுடியைத்‌ தேடித்‌ திரிந்த போதும்‌, ஒருவராலும்‌ அறிய இயலாத இயல்பினன்‌. இத்தகைய இயல்பினை உடைய திருமாற்பேற்றுச்‌ சிவபெருமானின்‌ விரிந்த திருவடிகளைப்‌ போற்றித்‌ துதுப்பவரின்‌ வினைகள்‌ சிதறி அழியும்‌.

10

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும்நீசர் தம்முரை கொள்ளெலும்3தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின்ஈச னென்றெடுத் தேத்துமே.பாடம் : 3கொள்ளலும்
சொற்பிரிப்பு
தூசு போர்த்து உழல்வார், கையில் துற்று உணும்நீசர்தம் உரை கொள்ளேலும்!“தேசம் மல்கிய தென்திருமாற்பேற்றின்ஈசன்” என்று எடுத்து ஏத்துமே!
உரை

ஆடையை உடம்பில்‌ போர்த்து அலைபவரும்‌, கைகளில்‌ உணவை ஏற்று உண்ணும் உடம்பில்‌ போர்த்து அலைபவரும்‌, கைகளில்‌ உணவை ஏற்று உண்ணும்‌ இயல்புடைய இழிந்த வர்களான புத்தர்‌ மற்றும்‌ சமணர்களின்‌ சொற்களை உண்மை என்று ஏற்காதீர்கள்‌. ஒளி நிறைந்த அழகிய திருமாற்‌பேற்றின்‌ ஈசனான சிவபெருமானைப்‌ புகழ்ந்து போற்றுங்கள்‌.

11

மன்னி மாலொடு சோமன் பணிசெயும்மன்னும் மாற்பேற் றடிகளைமன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல்பன்ன வேவினை பாறுமே.
சொற்பிரிப்பு
மன்னி மாலொடு சோமன் பணி செயும்மன்னும் மாற்பேற்று அடிகளைமன்னு காழியுள் ஞானசம்பந்தன் சொல்பன்னவே, வினை பாறுமே.
உரை

திருமாலும்‌ சந்திரனும்‌ தங்கியிருந்து பணிசெய்து வழிபடும்‌ நிலைபேறுடைய திருமாற்பேற்றுள்‌ விளங்குபவர்‌ சிவபெருமான்‌. நிலைத்த காழி மாநகரில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ இப்பெருமானைப்‌ போற்றிப்‌ பாடினார்‌. இத்திருப்பதிகத்தை ஓதினால்‌ வினைகள்‌ தறி அழியும்‌.