திருமுறை 1 · 1.054 · 11

திருஓத்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
ஓத்தூர்
நாடு
தொண்டைநாடு

1

பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடிஏத்தா தாரில்லை யெண்ணுங்கால்ஓத்தூர் மேய வொளிமழு வாள்அங்கைக்கூத்தீ ரும்ம குணங்களே.
சொற்பிரிப்பு
பூத் தேர்ந்து ஆயன கொண்டு, நின் பொன் அடிஏத்தாதார் இல்லை, எண்ணுங்கால்ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்கூத்தீர்! உம குணங்களே.
உரை

திரு ஓத்தூரில்‌ அழகிய கையில்‌ ஒளி பொருந்திய மழுவாகிய வாளை ஏந்தியவராய்‌ எழுந்தருளியிருக்கும்‌ கூத்தராகிய சிவபெருமானே! ஆராய்ந்து பார்க்கையில்‌, பூசைக்குரிய நறுமலர்களைத்‌ தேர்ந்து பறித்தும்‌, ஏனைய உபகரணங்களைச்‌ சேகரித்துக்‌ கொண்டும்‌, உம்‌ குணநலன்களைய்‌ போற்றியும்‌, பொன்‌ போன்ற திருவடிகளைப்‌ போற்றியும்‌, எல்லோரும்‌ வணங்குகின்றனர்‌.

2

இடையீர் போகா இளமுலை யாளையோர்புடையீ ரேபுள்ளி மானுரிஉடையீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்ச்சடையீ ரேயும தாளே.
சொற்பிரிப்பு
இடை ஈர் போகா இளமுலையாளை ஓர்புடையீரே! புள்ளிமான் உரிஉடையீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்ச்சடையீரே! உம தாளே.
உரை

திரு ஓத்தூரில்‌ சடைமுடியோடு விளங்கும்‌ இறைவனான சிவபெருமானே! ஈர்க்கு இடையில்‌ செல்லாத நெருக்கமான இள முலைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக்‌ கொண்டவரே! புள்ளிமான்‌ தோலை ஆடையாக அணிந்தவரே! உம்மை வணங்குகிறோம்‌.

3

உள்வேர் போல நொடிமை யினார்திறம்கொள்வீ ரல்குலோர் கோவணம்ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க்கள்வீ ரேயும காதலே.
சொற்பிரிப்பு
உள்வேர் போல நொடிமையினார் திறம்கொள்வீர், அல்குல் ஓர் கோவணம்!ஒள் வாழைக்கனி தேன் சொரி ஓத்தூர்க்கள்வீரே! உம காதலே!
உரை

ஒளி சிறந்த வாழைக்‌ கனிகள்‌ தேன்‌ போன்ற சாற்றைச்‌ சொரியும்‌ திருவோத்தூரில்‌ அரையிற்‌ கோவணம்‌ உடுத்தியவராய்‌ விளங்கும்‌ கள்வரே, உம்‌ காதல்‌ மிக நன்று. பொய்‌ பேசும்‌ இயல்பினராய்‌ அடியார்களை நினைப்பவரைப்‌ போலக்‌ காட்டி அவரை ஏற்றுக்‌ கொள்வீர்‌.

4

தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தைஆட்டீ ரேயடி யார்வினைஓட்டீ ரேயும்மை யேத்துதும் ஓத்தூர்நாட்டீ ரேயருள் நல்குமே.
சொற்பிரிப்பு
தோட்டீரே! துத்தி ஐந்தலை நாகத்தைஆட்டீரே! அடியார் வினைஓட்டீரே! உம்மை ஏத்துதும் ஓத்தூர்நாட்டீரே! அருள் நல்குமே!
உரை

செங்காந்தட்பூவை அணிந்தவரே! படப்பொறிகளை உடைய ஐந்து தலை நாகத்தை ஆட்டுபவரே! அடியவர்‌ வினைகளை ஓட்டுபவரே! திருவோத்தூர்‌ நாட்டில்‌ எழுந்தருளியவரே! உம்மைத்‌ துதிக்கின்றோம்‌. அருள்புரிவீராக.

5

குழையார் காதீர்1 கொடுமழு வாட்படைஉழையாள் வீர்திரு வோத்தூர்பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார்அழையா மேயருள் நல்குமே.பாடம் : 1காதா
சொற்பிரிப்பு
குழை ஆர் காதீர்! கொடுமழுவாள் படைஉழை ஆள்வீர்! திரு ஓத்தூர்பிழையா வண்ணங்கள் பாடி நின்று ஆடுவார்அழையாமே அருள் நல்குமே!
உரை

குழை அணிந்த காதினை உடையவரே, கொடிய மழு என்னும்‌ வாட்படையை ஒருபாலுள்ள கரத்தில்‌ ஏந்தி ஆள்பவரே, திருவோத்தூரில்‌ பிழை நேராதபடி வண்ணப்‌ பாடல்கள்‌ பல பாடி நின்று ஆடும்‌ அடியார்க்கு அழையாமலே வந்து அருள்‌ நல்குவீராக.

6

மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத்தக்கார் தம்மக்க ளீரென்றுட்கா தாருள ரோதிரு வோத்தூர்நக்கீ ரேயருள் நல்குமே.
சொற்பிரிப்பு
மிக்கார் வந்து விரும்பிப் பலி இடத்தக்கார் தம் மக்களீர் என்றுஉட்காதார் உளரோ? திரு ஓத்தூர்நக்கீரே! அருள் நல்குமே!
உரை

திருவோத்தூரில்‌ மகிழ்ந்து உறையும்‌ இறைவரே, நீர்‌ பலிகொள்ள வருங்காலத்து, உம்‌ திருமுன்‌ அன்பு மிக்கவராய்‌ விரும்பி வந்து பலியிடுதற்குத்‌ தம்‌ மக்களுள்‌ மகளிரை அனுப்புதற்கு அஞ்சாத தந்‌ைத தாயர்‌ உளரோ? எவ்வாறேனும்‌ ஆக, அவர்‌ தமக்கு அருள்‌ நல்குவீராக.

7

தாதார் கொன்றை தயங்கு முடியுடைநாதா என்று நலம்புகழ்ந்தோதா தாருள ரோதிரு வோத்தூர்ஆதீ ரேயருள் நல்குமே.
சொற்பிரிப்பு
“தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடைநாதா!” என்று நலம் புகழ்ந்துஓதாதார் உளரோ? திரு ஓத்தூர்ஆதீரே! அருள் நல்குமே!
உரை

திருவோத்தூரில்‌ முதற்பொருளாக விளங்குபவரே! மகரந்தம்‌ பொருந்திய கொன்றை மலர்‌ விளங்கும்‌ திருமுடியை உடைய தலைவரே! என்றழைத்து உமது அழகினைப்‌ புகழ்ந்து ஓதாதவர்‌ உளரோ? அருள்‌ நல்குவீராக.

8

என்றா னிம்மலை யென்ற அரக்கனைவென்றார் போலும் விரலினால்ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்தூர்என்றார் மேல்வினை யேகுமே.
சொற்பிரிப்பு
“என்தான் இம் மலை!” என்ற அரக்கனைவென்றார் போலும், விரலினால்;“ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்”என்றார் மேல் வினை ஏகுமே.
உரை

இக்கயிலை மலை எம்மாத்திரம்‌ என்று கூறிய இராவணனைக்‌ கால்‌ விரலால்‌ வென்றவர்‌ சிவபெருமான்‌. அவர்‌, தம்மோடு மனம்‌ பொருந்தாத திரிபுரத்து அசுரர்களின்‌ மும்மதில்களை, தனது அம்பால்‌ எய்து அழித்தவர்‌. திருவோத்தூர்‌ என்று, அப்பெருமானது ஊர்ப்பெயரைச்‌ சொன்ன மாத்திரத்தில்‌, சொன்னவர்மேல்‌ படிந்திருக்கும்‌ வினைகள்‌ அகலும்‌.

9

நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச்சென்றார் போலுந் திசையெலாம்ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர்நின்றீ ரே2யுமை நேடியே.பாடம் : 2நின்றாரே
சொற்பிரிப்பு
நன்றா நால் மறையானொடு மாலும் ஆய்ச்சென்றார் போலும், திசை எலாம்ஒன்றாய்! உள் எரி ஆய் மிக, ஓத்தூர்நின்றீரே! உமை நேடியே!
உரை

திருவோத்தூரில்‌ விளங்கும்‌ இறைவரே! நல்லன செய்யும்‌ நான்கு வேதங்களை ஓதுபவராகிய பிரமன்‌, திருமால்‌ ஆகியோர்‌ எரியுருவாய்‌ நீர்‌ ஒன்றுபட்டுத்‌ தோன்றவும்‌, அறியாராய்‌ திசையனைத்தும்‌ தேடித்‌ திரிந்து எய்த்தனர்‌. அவர்தம்‌ அறிவுநிலை யாதோ?

10

கார மண்கலிங் கத்துவ ராடையர்தேரர் சொல்லவை தேறன்மின்ஓரம் பால்எயில் எய்தவ னோத்தூர்ச்சீர வன்கழல் சேர்மினே.
சொற்பிரிப்பு
கார் அமண், கலிங்கத் துவர் ஆடையர்தேரர், சொல் அவை தேறன்மின்!ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்சீரவன், கழல் சேர்மினே!
உரை

கரிய நிறத்தவராகிய சமணர்களும்‌, கலிங்க நாட்டுத்‌ துவர்‌ ஏற்றிய ஆடையை அணிந்த புத்த துறவியரும்‌ கூறும்‌ பொய்‌ மொழிகளை நம்பாதீர்‌. முப்புரங்களை ஓரம்பினால்‌ எய்து அழித்தவனாகிய, திருவோத்தூரில்‌ விளங்கும்‌ சிறப்புமிக்க சிவபிரானின்‌ கழல்களைச்‌ சேர்வீர்களாக.

11

குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்அரும்பு கொன்றை யடிகளைப்பெரும்பு கலியுள் ஞானசம் பந்தன்சொல்விரும்பு வார்வினை வீடே.
சொற்பிரிப்பு
குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்அரும்பு கொன்றை அடிகளை,பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்விரும்புவார் வினை வீடே.
உரை

கொன்றை அரும்பைச்‌ சடைமுடியில்‌ உடைய சிவபெருமான்‌, திருவோத்தூரில்‌, ஆண்பனைகள்‌ குரும்பைக்‌ குலைகள்‌ ஈனும்‌ அற்புதத்தைச்‌ செய்தருளினார்‌. இப்பெருமானைப்‌ பெருமை மிக்க திருப்புகலி என்னும்‌ பெயரை உடைய சீகாழிப்‌ பதியில்‌ தோன்றிய ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இப்பாமாலை பத்தையும்‌ விரும்பும்‌ அன்பர்களின்‌ வினைகள்‌ அழியும்‌.