திருமுறை 1 · 1.053 · 11

திருமுதுகுன்றம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

தேவராயும் அசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர்நாவராயும் நண்ணுபாரும் விண்எரிகால் நீரும்மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன்என்னும்மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
தேவராயும், அசுரராயும், சித்தர், செழுமறை சேர்நாவராயும், நண்ணு பாரும் விண் எரி கால் நீரும்மேவர் ஆய, விரை மலரோன் செங்கண்மால் ஈசன் என்னும்மூவர் ஆய, முதல் ஒருவன் மேயது முதுகுன்றே.
உரை

தேவர்‌, அசுரர்‌, சித்தர்‌, வளம்‌ மிகுந்த வேதங்களை ஓதும்‌ சான்றோர்கள்‌ ஆகியோர்‌ உயர்மக்களாவர்‌. நாம்‌ வாழும்‌ மண்‌, ஆகாயம்‌, நெருப்பு, காற்று, நீர்‌ ஆகியன ஐம்பூதங்கள்‌ ஆகும்‌. மணம்‌ மிக்க தாமரை மலர்மேல்‌ வீற்றிருக்கும்‌ நான்முகன்‌, சிவந்த கண்களை உடைய திருமால்‌, உருத்திரன்‌ ஆகியவர்கள்‌ மும்மூர்த்திகள்‌. இவர்கள்‌ எல்லாமாகவும்‌, அவர்களின்‌ தலைவராகவும்‌ இருப்பவர்‌ சிவபெருமான்‌. இவர்‌ எழுந்தருளி இருக்கும்‌ தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

2

பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார்எற்றுநீர் தீக் காலு1 மேலை விண்இயமா னனோடுமற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள்முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே.பாடம் : 1தீகாலும்
சொற்பிரிப்பு
பற்றும் ஆகி வான் உளோர்க்கு, பல் கதிரோன், மதி, பார்,எற்று நீர், தீ, காலும், மேலைவிண், இயமானனோடு,மற்று மாது ஓர் பல் உயிர் ஆய், மால் அயனும் மறைகள்முற்றும் ஆகி, வேறும் ஆனான் மேயது முதுகுன்றே.
உரை

சிவபெருமான்‌, தேவர்களுக்குப்‌ பற்றப்படும்‌ பொருளாய்‌ இருப்பவர்‌. பல வண்ணக்‌ கதிர்களை உடைய சூரியன்‌, சந்திரன்‌, பூமி, கரையை மோதும்‌ நீர்‌, நெருப்பு, காற்று, மேலே உள்ள ஆகாயம்‌, உயிர்‌ முதலியன ஆகி அட்ட மூர்த்தங்களாய்‌ இருப்பவர்‌ அவரே. எல்லா உயிர்களாகியும்‌ திருமால்‌, பிரமன்‌, வேதங்கள்‌ முதலான அனைத்துமாகியும்‌ இருப்பவரும்‌ அவரே. இவைகள்‌ எல்லாவற்றினும்‌ வேறானவராகியும்‌ இருப்பவரான சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

3

வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடிநாரிபாகம்2 நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில்சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந் தோன்றியதோர்மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே.பாடம் : 2நாரிபாகர்
சொற்பிரிப்பு
வாரி, மாகம் வைகு திங்கள், வாள் அரவம், சூடி,நாரி பாகம் நயந்து, பூமேல் நான்முகன்தன் தலையில்சீரிது ஆகப் பலி கொள் செல்வன்; செற்றலும் தோன்றியது ஓர்மூரி நாகத்து உரிவை போர்த்தான்; மேயது முதுகுன்றே.
உரை

கங்கை, வானகத்தே தங்கும்‌ சந்திரன்‌, ஒளி பொருந்திய பாம்பு ஆகியவற்றை தன்‌ திருமுடியில்‌ சூடியவர்‌. உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றிருப்பவர்‌. தாமரை மலரில்‌ வீற்றிருக்கும்‌ பிரமனது தலைகளில்‌ ஒன்றைக்‌ கொய்து அந்தத்‌ தலையில் ‌பலி ஏற்கச்‌ செல்பவர்‌. தன்னைச்‌ சினந்து வந்த யானையைக்‌ கொன்று அதன்‌ தோலைப் போர்த்தியவர்‌. இந்தச்‌ சிவபெருமான்‌ எழுந்தருளிய தலம்‌ திருமுதுகுன்றமாகும்

4

பாடுவாருக் கருளும்எந்தை பனிமுதுபௌ வமுந்நீர்நீடுபாரும் முழுதுமோடி யண்டர்நிலை கெடலும்நாடுதானும் ஊடுமோடி ஞாலமும்நான் முகனும்ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
பாடுவாருக்கு அருளும் எந்தை பனி முதுபௌவ முந்நீர்நீடு பாரும் முழுதும் ஓடி அண்டர் நிலைகெடலும்,நாடுதானும் ஊடும் ஓடி, ஞாலமும் நான்முகனும்ஊடு காண, மூடும் வெள்ளத்து உயர்ந்தது முதுகுன்றே.
உரை

தன்னைப்‌ பாடி போற்றுவார்க்கு அருள்செய்யும்‌ எம்‌ தந்தையாகிய சிவபெருமான்‌ எழுந்தருளிய தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. குளிர்ந்த பழமையான கடலானது, நீண்ட மண்‌ உலகிலும்‌; தேவர்‌ உலகிலும்‌ பரவி, அவர்களின்‌ இருப்பிடங்களை அழித்தது. நாடுகளிலும்‌ அவற்றின்‌ இடையிலும்‌ ஓடியது. பூமியில்‌ உள்ளாரும்‌, நான்முகன்‌ முதலிய தேவரும்‌ உயிர்‌ பிழைக்க வழி தேடும்படி ஊழி வெள்ளமாய்‌ பெருகிய காலத்திலும்‌ அழியாது உயர்ந்து நின்ற தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

5

வழங்குதிங்கள் வன்னிமத்தம் மாசுணம்மீ சணவிச்செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத்தழங்குமொந்தை தக்கைமிக்க பேய்க்கணம் பூதஞ்சூழமுழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
வழங்கு திங்கள், வன்னி, மத்தம், மாசுணம், மீது அணவி,செழுங் கல்வேந்தன் செல்வி காண, தேவர் திசை வணங்க,தழங்கு மொந்தை, தக்கை, மிக்க பேய்க்கணம் பூதம் சூழ,முழங்கு செந்தீ ஏந்தி ஆடி மேயது முதுகுன்றே.
உரை

சிவபெருமான்‌, வானத்தில்‌ சஞ்சரிக்கும்‌ சந்திரன்‌, வன்னி இலை, ஊமத்தம்பூ, பாம்பு ஆகியவற்றைத்‌ தன்‌ திருமுடிமீது நெருக்கமாகச்‌ சூடியிருக்கின்றார்‌. மலையரசன்‌ மகளாகிய உமையம்மை காண, தேவர்கள்‌ எல்லாத்திசையிலும்‌ நின்று அவரை வணங்குகின்றனர்‌. மொந்தை, தக்கை ஆகிய பறைகள்‌ ஒலிக்கின்றன. பூதங்கள்‌ சூழ்ந்து இருக்கின்றன. அந்தச்‌ சிவபெருமான்‌ முழங்கும்‌ செந்‌தீயைக்‌ கையில்‌ ஏந்தியபடி ஆடி அமர்ந்த தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

6

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லரா நல் லிதழிசழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைத்தைம் புலனும்அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடுமொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்அழிந்த சிந்தை அந்தணாளர்க்குஅறம் பொருள் இன்பம் வீடுமொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.
உரை

சுழிகளோடு கூடிய கங்கை, அதனோடு உறையும்‌ சந்திரன்‌, பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர்‌ ஆகியன அணிந்த நெருங்கிய தலை உச்சியை உடையவன்‌ சிவபெருமான்‌. தாழ்‌ சடை, வெண்ணீறு, தாழ்வடம்‌ முதலிய சைவ முனிவர்‌ வேடத்தோடு திருவடிகளை நினைவில்‌ நிறுத்தி, ஐம்புலன்களால்‌ தோன்றும்‌ எண்ணங்களை முற்றிலும்‌ அழித்த சான்றோர்களுக்கு, அறம்‌, பொருள்‌, இன்பம்‌, வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினன்‌. முக்கண்‌ உடையவன்‌. அந்தச்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியிருக்கும்‌ தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை
உரை

பாடல் கிடைக்கப்பெறவில்லை

8

மயங்கும்மாயம் வல்லராகி வானினொடு நீரும்இயங்குவோருக் கிறைவனாய இராவணன்தோள் நெரித்தபுயங்கராக மாநடத்தன் புணர்முலைமா துமையாள்முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
மயங்கு மாயம் வல்லர் ஆகி, வானினொடு நீரும்இயங்குவோருக்கு இறைவன் ஆய இராவணன் தோள் நெரித்தபுயங்க ராக மாநடத்தன், புணர் முலை மாது உமையாள்முயங்கு மார்பன், முனிவர் ஏத்த மேயது முதுகுன்றே.
உரை

சிவபெருமான்‌ அறிவை மயங்கச்‌ செய்யும்‌ மாயத்தில்‌ வல்லவராய்‌ இருப்பவர்‌. வானிலும்‌ நீரிலும்‌ இயங்குகின்ற அரக்கர்களுக்குத்‌ தலைவனான இராவணனின்‌ தோளை நெரித்தவர்‌. பாம்பு நடனத்தில்‌ விருப்பமுடையவர்‌. இணைந்த முலையை உடைய உமையம்மையைத்‌ தழுவிய மார்பினர்‌. இப்பெருமான்‌ முனிவர்கள்‌ துதிக்க எழுந்தருளிய தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

9

ஞாலமுண்ட மாலும்மற்றை நான்முகனும் மறியாக்கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங் கொய்மலரால்ஏலஇண்டை கட்டிநாமம் இசையஎப்போ தும்ஏத்தும்மூலமுண்ட நீற்றர் வாயான் மேயதுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
ஞாலம் உண்ட மாலும் மற்றை நான்முகனும்(ம்) அறியாக்கோலம் அண்டர் சிந்தைகொள்ளார் ஆயினும், கொய் மலரால்ஏல இண்டை கட்டி, நாமம் இசைய எப்போதும் ஏத்தும்மூல முண்ட நீற்றர் வாயான் மேயது முதுகுன்றே.
உரை

உலகங்களை உண்ட திருமாலும்‌, நான்முகனும்‌ அறிய முடியாத சிவபெருமானது திருக்கோலத்தைத்‌ தேவர்களாலும்‌ அறிய முடியவில்லை. ஆயினும்‌, நாள்தோறும்‌ கொய்த மலர்களைக்‌ கொண்டு இண்டை வகையான மாலைகள்‌ தொடுத்து, திருவைந்தெழுத்தையே மனம்‌ பொருந்தச்‌ சொல்பவரும்‌, ஆணவ மலத்தை அழிக்கும்‌ திருநீற்றைப்‌ பூசியவர்களின்‌ வாயில்‌ நாம மந்திரமாக உறைந்திருக்கின்றார்‌. அப்பெருமான்‌ எழுந்தருளிய தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌.

10

உறிகொள்கையர் சீவரத்தர் உண்டுழல்மிண்டர் சொல்லைநெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின்மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்டமுறிகொள்மேனி மங்கைபங்கன் மேயதுமு துகுன்றே.
சொற்பிரிப்பு
உறி கொள்கையர், சீவரத்தர், உண்டு உழல் மிண்டர் சொல்லைநெறிகள் என்ன நினைவு உறாதே நித்தலும் கைதொழுமின்!மறி கொள் கையன், வங்க முந்நீர் பொங்கு விடத்தை உண்டமுறி கொள் மேனி மங்கை பங்கன்; மேயது முதுகுன்றே.
உரை

சமணர்கள்‌ கமண்டலத்தைக்‌ கயிற்றில்‌ கட்டித்‌ தூக்கி வைத்திருப்பவர்கள்‌. புத்தர்கள்‌ காவி ஆடை அணிந்திருப்பவர்கள்‌. அவர்கள்‌ பெருந்தீனி தின்று உடல்‌ வலிமை பெற்று அலைபவர்கள்‌. அவர்களின்‌ சொற்களைக்‌ கேளாதீர்கள்‌. மானை ஏந்திய கையினனும்‌, கப்பல்கள்‌ ஓடும்‌ கடலில்‌ இருந்து பொங்கி எழுந்த விடத்தை உண்டவனும்‌, தளிர்போன்ற மேனியை உடைய உமையம்மையை ஒரு கூறாக உடையவனும்‌ ஆகிய சிவபெருமான்‌ எழுந்தருளிய தலம்‌ திருமுதுகுன்றம்‌ ஆகும்‌. அத்திருத்தலத்தை நாள்தோறும்‌ சென்று வணங்குவீராக.

11 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

மொய்த்துவானோர் பல்கணங்கள் வணங்குமு துகுன்றைப்பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத் தலைவன்.... .... .... .... .... .... .... ....இப்பதிகத்தில் 11-ஆம் செய்யுளில் பின்னிரண்டடிகள் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
மொய்த்து வானோர் பல்கணங்கள் வணங்கும் முதுகுன்றை,பித்தர்வேடம் பெருமை என்னும் பிரமபுரத் தலைவன் ... ... ...
உரை

தேவர்கள்‌ கணங்கள்‌ பலவும்‌ நிறைந்து செறிந்து வணங்கும்‌ திருமுதுகுன்றப்‌ பெருமானாகிய சிவபெருமானை, பித்தர்போலத்‌ தன்‌ வயம்‌ இழுந்து தியானம்‌ செய்யும்‌ தவத்தினரது வேடம்‌ பெருமை தருகிறது. இது பிரமபுரத்தலைவனாகிய ஞானசம்பந்தனது கருத்தாகும்‌.