திருமுறை 1 · 1.052 · 11

திருநெடுங்களம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
நெடுங்களம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால்குறையுடையார் குற்றம்ஓராய் கொள்கையினால் உயர்ந்தநிறையுடையார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
“மறை உடையாய்! தோல் உடையாய்! வார்சடை மேல் வளரும்பிறை உடையாய்! பிஞ்ஞகனே!” என்று உனைப் பேசின் அல்லால்,குறை உடையார் குற்றம் ஓராய்! கொள்கையினால் உயர்ந்தநிறை உடையார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே! வேதங்களைத்‌ தனக்கு உடைமையாகக்‌ கொண்டவனே! தோல்‌ ஆடையை உடுத்தவனே! நீண்ட சடை மேல்‌ வளரும்‌ இளம்பிறையைச்‌ சூடியவனே! தலைக்‌ கோலம்‌ உடையவனே! என்றவாறு உன்னைத்‌ தோத்தரிக்கின்றேன்‌. குறையுடையவர்களின்‌ குற்றங்களை நீர்‌ மனதில்‌ கொள்ளாதவர்‌. மனத்தினால்‌ வேறு தெய்வத்தை நினையாத கொள்கையில்‌ மேம்பட்ட மாட்சிமை உடைய அடியவர்களின்‌ துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

2

கனைத்தெழுந்த வெண்டிரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத்தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னைமனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்நினைத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
கனைத்து எழுந்த வெண்திரை சூழ் கடல் இடை நஞ்சு தன்னைத்தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ! நின்னைமனத்து அகத்தோர் பாடல் ஆடல் பேணி, இராப்பகலும்நினைத்து எழுவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களத்தில்‌ எழுந்தருளியிருக்கும்‌ சிவபெருமானே! ஆரவாரித்து எழுந்த, வெண்மையான அலைகளால்‌ சூழப்பட்ட கடல்‌ நஞ்சினைத்‌ தினைஅளவாகச்‌ செய்து, கழுத்தில்‌ நிறுத்திய மேம்பட்ட தேவனே! நின்னை மனத்தின்‌ அகத்தே நிறுத்தி, பாடல்‌ ஆடல்களால்‌ போற்றி, இரவும்‌ பகலும்‌ தியானிக்கும்‌ அடியார்களின்‌ துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

3

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருதஎன்னடியான் உயிரைவவ்வேல் என்றடற்கூற் றுதைத்தபொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
நின் அடியே வழிபடுவான், நிமலா! நினைக் கருத,“என் அடியான் உயிரை வவ்வேல்!” என்று அடல் கூற்று உதைத்தபொன் அடியே பரவி, நாளும் பூவொடு நீர் சுமக்கும்நின் அடியார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே! குற்றமற்றவனே! நின்‌ திருவடிகளையே வழிபடும்‌ மார்கண்டேயன்‌ நின்னையே கருதிச்‌ சரண்‌ புகுந்தான்‌. அவனைக்‌ கொல்ல வந்த வலிமை மிக்க எமனைச்‌ சினந்து, “என்‌ அடியானின்‌ உயிரைக்‌ கவராதே‌ என்று உதைத்தீர்‌. நினது பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும்‌ பூவும்‌ நீரும்‌ சுமந்து வழிபடும்‌ நின்‌ அடியார்களின்‌ துன்பங்களை நீக்கி அருள்க.

4

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்அலைபுரிந்த கங்கைதங்கும் அவிர்சடையா ரூராதலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்றாள் நிழற்கீழ்நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
மலை புரிந்த மன்னவன்தன் மகளை ஓர்பால் மகிழ்ந்தாய்!அலை புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை ஆரூரா!தலை புரிந்த பலி மகிழ்வாய்! தலைவ! நின் தாள் நிழல் கீழ்நிலை புரிந்தார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ எழுந்தருளிய சிவபெருமானே! இமவான்‌ மகளாகிய பார்வது தேவியைத்‌ தன்‌ திருமேனியின்‌ ஓர்‌ பாதியாகக்‌ கொண்டு மகிழ்பவனே! அலைகள்‌ வீசும்‌ கங்கை நீரைத்‌ தாங்கிய விரிந்த சடையினை உடைய திருவாரூர்‌ இறைவனே! தலை ஓட்டை விரும்பி ஏந்தி அதன்கண்‌ பலியேற்று மகிழ்பவனே! தலைவனே! நினது திருவடி நிழலின்கீழ்‌ நிற்பதையே விரும்பும்‌ அடியவர்களின்‌ துன்பத்தை நீக்கி அருள்வாயாக.

5

பாங்கினல்லார்1 படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்தாங்கிநில்லா2 அன்பினோடுந் தலைவநின்தாள் நிழற்கீழ்நீங்கிநில்லார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.பாடம் : 1பாங்கிநல்லார் 2தாங்கிநல்லா
சொற்பிரிப்பு
பாங்கின் நல்லார், படிமம் செய்வார், பாரிடமும் பலி சேர்தூங்கி நல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கி,தாங்கி நில்லா அன்பினோடும் தலைவ! நின் தாள் நிழல் கீழ்நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே! குணங்களில்‌ நல்லவர்களும்‌, தவ வேடம்‌ தாங்கியவர்களும்‌, பூமியில்‌ வாழும்‌ மக்களும்‌, பலருடைய இல்லங்களில்‌ பலிசேர்க்கும்‌ உனது செயல்களில்‌ -எனம்‌ ஒன்றுகின்றனர்‌. நன்மையானவற்றையே செய்யும்‌ நல்லவர்கள்‌, பாடல்களோடு தொழத்தக்க உனது திருவடிகளை வணங்குகின்றனர்‌. தம்மளவில்‌ பொறுக்க இயலாத பொங்கி வருகின்ற அன்போடு, தலைவனாகிய உனது திருவடி நிழலில்‌ நீங்காமல்‌ எப்போதும்‌ இருக்கின்றனர்‌. அந்த அடியவர்களின்‌ துன்பங்களைக்‌ களைந்து அருள்வாயாக.

6

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்துகருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய்அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்நிருத்தர்கீதர் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
விருத்தன் ஆகி, பாலன் ஆகி, வேதம் ஓர் நான்கு உணர்ந்து,கருத்தன் ஆகி, கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்!அருத்தன் ஆய ஆதிதேவன் அடி இணையே பரவும்நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே மூத்த வேடம்‌ தாங்கியும்‌, இளமை வடிவம்‌ கொண்டும்‌ இருப்பவனே! வேதங்கள்‌ நான்கையும்‌ நன்கு உணர்ந்த தலைவனே! கங்கை நங்கையை மனம்‌ கமழும்‌ சடைமேல்‌ வைத்திருப்பவனே! கலைஞானங்கள் மெய்ஞானங்களின்‌ பொருளான முழுமுதற்‌ கடவுளே! உன்‌ திருவடி சேர்ந்து போற்றிப்‌ பாடி, ஆடும்‌ அடியவர்களுடைய துன்பங்களைக்‌ களைந்து அருள்வாயாக.

7

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால்மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்தநீறுகொண்டார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
கூறு கொண்டாய்! மூன்றும் ஒன்றாக் கூட்டி ஓர் வெங்கணையால்மாறு கொண்டார் புரம் எரித்த மன்னவனே! கொடிமேல்ஏறு கொண்டாய்! ”சாந்தம் ஈது” என்று எம்பெருமான் அணிந்தநீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ அமர்ந்திருக்கும்‌ சிவபெருமானே! உமையம்மையைத்‌ திருமேனியின்‌ ஒருபாகமாகக்‌ கொண்டவனே! திருமால்‌ ஆகிய அப்பு, நெருப்பு, காற்று ஆகிய மூன்றையும்‌ ஒன்றாகக்‌ கொண்ட ஒப்பற்ற அம்பினால்‌, பகை கொண்ட அசுரர்களின்‌ முப்புரங்களையும்‌ எரித்து அழித்த மன்னவனே! கொடிமீது இடபத்தை முத்திரையாகக்‌ கொண்டவனே! மணம்‌ பொருந்திய சந்தனம்‌ இதுவேயாகும்‌ என்று எம்பெருமான்‌ அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும்‌ அடியவர்களின்‌ துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

8

குன்றின்உச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூழ் இலங்கைஅன்றிநின்ற அரக்கர்கோனை யருவரைக்கீழ் அடர்த்தாய்என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும்நின்றுநைவார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
“குன்றின் உச்சிமேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை,அன்றி நின்ற, அரக்கர் கோனை அரு வரைக்கீழ் அடர்த்தாய்!”என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி, இராப்பகலும்,நின்று நைவார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

திருநெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே! குன்றின்மேல்‌ விளங்குவதும்‌, கொடிகள்‌ கட்டப்பட்டதும்‌, மதில்களால்‌ சூழப்பட்டதுமான இலங்கை நகரின்‌ மன்னன்‌ இராவணன்‌, முன்பொருகால்‌ கயிலை மலையைப்‌ பெயர்க்க முயன்றான்‌. அந்த அரக்கர்‌ தலைவனை அம்மலையின் கீழே அடர்த்தவனே என்றெல்லாம்‌ நல்ல தோத்திரங்களைக்‌ கூறி, இரவும்‌ பகலும்‌ மனம்‌ உருகித்‌ தொழுகின்ற அடியார்களின்‌ துன்பங்களை நீக்கி அருள்வாயாக.

9

வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும்சூழவெங்கும் நேடஆங்கோர் சோதியுளா கிநின்றாய்கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின்நீழல்வாழ்வார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும், விளங்கிய நான்முகனும்,சூழ எங்கும் நேட, ஆங்கு ஓர் சோதியுள் ஆகி நின்றாய்!”கேழல்வெண்கொம்பு அணிந்தபெம்மான்! கேடு இலாப் பொன் அடியின்நீழல் வாழ்வார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

நெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே, குவலயா பீடம்‌ என்ற யானை, கஞ்சன்‌ என்பவனால்‌ திருமாலைக்‌ கொல்ல ஏவப்பட்டது. அந்த யானையின்‌ கொம்புகளை ஒடித்தான்‌ திருமால்‌. அவனும்‌, புகழ்பெற்ற நான்முகனும்‌, சூழ்ந்துள்ள இடம்‌ முழுவதும்‌ தங்களைத்‌ தேடியபோது, அவர்களுக்கு இடையில்‌ சோதிப்பிழம்பாய்‌ நின்றாய்‌. பன்றியின்‌ வெண்ணிறமான கொம்பை அணிகலனாக அணிந்த பெருமானே! அழிவற்ற உன்‌ பொன்‌ போன்ற திருவடி நிழலின்‌கீழ்‌ வாழும்‌ அடியவர்களின்‌ துன்பங்களைக்‌ களைந்தருள்வாயாக.

10

வெஞ்சொல்தஞ்சொல் லாக்கிநின்ற வேடமிலாச் சமணும்தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார்துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியேநெஞ்சில்வைப்பார் இடர்களையாய் நெடுங்களம்மே யவனே.
சொற்பிரிப்பு
வெஞ்சொல் தம் சொல் ஆக்கி நின்ற வேடம் இலாச் சமணும்,தஞ்சம் இல்லாச் சாக்கியரும், தத்துவம் ஒன்று அறியார்;துஞ்சல் இல்லா வாய்மொழியால் தோத்திரம் நின் அடியேநெஞ்சில் வைப்பார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே!
உரை

சமணர்கள்‌, தமது வேடத்திற்குப்‌ பொருந்தாத கொடுஞ்சொற்களையே தம்‌ சொற்களாகக்‌ கொண்டவர்கள்‌. புத்தர்கள்‌ நற்சார்பு இல்லாதவர்கள்‌ சைவ சமயம்‌ கூறும்‌ உண்மைப்‌ பொருளை ஒரு சிறிதும்‌ உணராதவர்கள்‌. அவர்களின்‌ உரையைவிட்டு விடுங்கள்‌. நெடுங்களம்‌ மேவிய சிவபெருமானே! என்றும்‌ அழியாத புகழுடைய வேதங்களோடு தோத்திரங்களால்‌ நின்னைப்‌ பரவி நின்‌ திருவடிகளை நெஞ்சில்‌ வைப்பவர்களின்‌ துன்பங்களைப்‌ போக்கியருள்வாயாக.

11

நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச்சேடர்வாழும் மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால்நாடவல்ல பனுவன்மாலை ஞானசம் பந்தன்சொன்னபாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
சொற்பிரிப்பு
நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்சேடர் வாழும் மா மறுகின் சிரபுரக் கோன் நலத்தால்நாட வல்ல பனுவல்மாலை, ஞானசம்பந்தன் சொன்னபாடல் பத்தும், பாட வல்லார் பாவம் பறையுமே.
உரை

மேலும்‌ மேலும்‌ நீண்டு வளரத்தக்க சடைமுடியை உடைய சிவபெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ தலம்‌ திருநெடுங்களம்‌. பெரியோர்‌ பலர்‌ வாழும்‌ பெரிய வீதிகளைக்‌ கொண்ட சிரபுரம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியின்‌ தலைவனாகிய ஞானசம்பந்தன்‌ இத்தலத்தின்‌ இறைவனைப்‌ போற்றிப்‌ பனுவல்மாலை பாடினார்‌. நன்மைப்‌ பொருளால்‌ ஆராய்ந்து உணரத்தக்க இப்பாடல்கள்‌ பத்தையும்‌ பாடவல்லவர்களின்‌ பாவங்கள்‌ நீங்கும்‌.