திருமுறை 1 · 1.051 · 11

திருச்சோபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
சோபுரம்
நாடு
நடுநாடு

1

வெங்கண் ஆனை யீருரிவை போர்த்துவிளங் குமொழி1மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுவென் னைகொலாம்கங்கையோடு திங்கள்சூடிக் கடிகமழுங் கொன்றைத்தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே.பாடம் : 1விளங்குமெழில்
சொற்பிரிப்பு
வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து, விளங்கும் மொழிமங்கை பாகம் வைத்து உகந்த மாண்பு அது என்னை கொல் ஆம்?கங்கையோடு திங்கள் சூடி, கடி கமழும் கொன்றைத்தொங்கலானே! தூய நீற்றாய்! சோபுரம் மேயவனே!
உரை

கங்கை நதியுடன்‌ பிறைச்‌ சந்திரனையும்‌ சூடி, மணம்‌ கமழும்‌ கொன்றை மலர்‌ மாலையை அணிந்து, தூய திருநீறு பூசித்‌ திருச்சோபுரத்தில்‌ விளங்கும்‌ சிவபெருமானே! கொடிய யானையை உரித்து அதன்‌ தோலைப்‌ போர்த்தி, விளக்கமான மொழிகளைப்‌ பேசும்‌ மலை மங்கையை இடப்பாகத்தே கொண்டு மகிழும்‌ உனது செயலின்‌ மாண்பு எத்தகையதோ?

2

விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்குசடையொடுங்கத் தண்புனலைத் தாங்கிய தென்னைகொலாம்கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தன லுள்ளழுந்தத்தொடைநெகிழ்ந்த2 வெஞ்சிலையாய் சோபுரமே யவனே.பாடம் : 2நிகழ்ந்த
சொற்பிரிப்பு
விடை அமர்ந்து, வெண்மழு ஒன்று ஏந்தி, விரிந்து இலங்குசடை ஒடுங்க, தண் புனலைத் தாங்கியது என்னை கொள் ஆம்?கடை உயர்ந்த மும்மதிலும் காய்ந்து அனலுள் அழுந்த,தொடை நெகிழ்ந்த வெஞ்சிலையாய்! சோபுரம் மேயவனே!
உரை

வாயில்களாற்‌ சிறந்த முப்புரங்களும்‌ அனலுள்‌ அழுந்துமாறு சினத்தோடு அம்பு செலுத்திய கொடிய மலை வில்லை உடையவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! விடைமீது அமர்ந்து வெண்மையான மழு ஒன்றைக்‌ கையில்‌ ஏந்தி விரிந்து விளங்கும்‌ சடையின்கண்‌ ஒடுங்குமாறு குளிர்ந்த நீரைத்‌ தடுத்துத்‌ தாங்கி இருத்தற்குக்‌ காரணம்‌ என்னையோ?

3

தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச்சாயஎய்து வானவரைத் தாங்கிய தென்னைகொலாம்பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித்தோல் உடுத்ததூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
தீயர் ஆய வல் அரக்கர் செந்தழலுள் அழுந்தச்சாய எய்து, வானவரைத் தாங்கியது என்னை கொள் ஆம்?பாயும் வெள்ளை ஏற்றை ஏறி, பாய் புலித்தோல் உடுத்ததூய வெள்ளை நீற்றினானே! சோபுரம் மேயவனே!
உரை

பாய்ந்து செல்லும்‌ வெண்ணிறமான விடையேற்றின்மீது ஏறி, பாயும்‌ புலியினது தோலை உடுத்துத்‌ தூய வெண்ணீற்றை அணிந்துள்ளவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! கொடியவர்களாகிய வலிய அரக்கர்‌ சிவந்த அழலுள்‌ அழுந்துமாறு கணை எய்து தேவர்களை வாழ்வித்தது என்ன காரணம்‌ பற்றியோ?

4

பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந்தல்லல்வாழ்க்கை மேலதான ஆதரவென் னைகொலாம்வில்லைவென்ற நுண்புருவ வேல்நெடுங்கண் ணியொடும்தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
பல் இல் ஓடு கையில் ஏந்தி, பல்கடையும் பலி தேர்ந்து,அல்லல் வாழ்க்கை மேலது ஆன ஆதரவு என்னை கொல் ஆம்?வில்லை வென்ற நுண் புருவ வேல் நெடுங்கண்ணியொடும்தொல்லை ஊழி ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!
உரை

வில்லை வென்றை வளைந்த நுண்‌ புருவத்தையும்‌, வேல்‌ போன்ற நீண்ட கண்ணையும்‌ உடைய உமையம்மையோடும்‌, பழமையான பல ஊழிக்காலங்களாக நிற்பவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! பல்‌ இல்லாத மண்டையோட்டைக்‌ கையிலேந்திப்‌ பலர்‌ இல்லங்களுக்கும்‌ சென்று பலி ஏற்கும்‌ அல்லல்‌ பொருந்திய வாழ்க்கையின்மேல்‌ நீ ஆதரவு காட்டுதற்குக்‌ காரணம்‌ என்னவோ?

5

நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேல் மதியம்ஏற்றமாக வைத்துகந்த காரணம்என் னைகொலாம்ஊற்றமிக்க காலன் தன்னை யொல்க வுதைத்தருளித்தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
நாற்றம் மிக்க கொன்றை துன்று செஞ்சடைமேல் மதியம்ஏற்றம் ஆக வைத்து உகந்த காரணம் என்னை கொல் ஆம்?ஊற்றம் மிக்க காலன்தன்னை ஒல்க உதைத்து அருளி,தோற்றம் ஈறும் ஆகி நின்றாய்! சோபுரம் மேயவனே!
உரை

வலிமை பொருந்திய காலனை அழியுமாறு உதைத்தருளி, எல்லாப்‌ பொருள்கட்கும்‌ தோற்றமும்‌ ஈறுமாகி நிற்பவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! மணம்‌ மிக்க கொன்றை மலர்கள்‌ நிறைந்த செஞ்சடையின்மேல்‌ பிறைமதியை அழகுபெற வைத்து. மகிழ்தற்குக்‌ காரணம்‌ என்னையோ?

6

கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன்பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம்அன்னமன்ன மெல்நடையாள் பாகம்அமர்ந் தரைசேர்துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
கொல் நவின்ற மூ இலைவேல், கூர் மழுவாள் படையன்,பொன்னை வென்ற கொன்றைமாலை சூடும் பொற்பு என்னை கொல் ஆம்?அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து, அரை சேர்துன்ன வண்ண ஆடையினாய்! சோபுரம் மேயவனே!
உரை

அன்னம்‌ போன்ற மெல்லிய நடையினை உடைய உமையம்மையை ஒரு பாகமாகப்‌ பொருந்தி, இடையில்‌ அழகிய கோவண ஆடையை அணிந்தவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! கொல்லும்‌ தொழில்‌ பொருந்திய மூவிலை வேலையும்‌ தாய மழுவாட்‌ படையையும்‌ உடையவனே! நிறத்தால்‌ பொன்னை வென்ற கொன்றை மாலையை நீ விரும்பிச்‌ சூடுதற்குரிய காரணம்‌ என்னையோ?

7

குற்றமின்மை யுண்மைநீயென் றுன்னடியார் பணிவார்கற்றகேள்வி3 ஞானமான காரணம்என் னைகொலாம்வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில்துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே.பாடம் : 3கற்றல்கேள்வி
சொற்பிரிப்பு
“குற்றம் இன்மை, உண்மை, நீ” என்று உன் அடியார் பணிவார்,கற்றல் கேள்வி ஞானம் ஆன காரணம் என்னை கொல் ஆம்?வற்றல் ஆமை வாள் அரவம் பூண்டு, அயன் வெண் தலையில்துற்றல் ஆன கொள்கையானே! சோபுரம் மேயவனே!
உரை

ஊன்‌ வற்றிய ஆமை ஓட்டையும்‌, ஒளி பொருந்திய பாம்பையும்‌, அணிகலனாகப்‌ பூண்டு, பிரமனின்‌ வெண்மையான தலையோட்டில்‌ பலியேற்று உண்ணும்‌ கொள்கையனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! குணமும்‌ குற்றமும்‌ நீயே என்று பணியும்‌ உன்‌ அடியவர்கட்கு அவர்கள்‌ கற்ற கல்வியும்‌, கேள்வியும்‌ அதனால்‌ விளையும்‌ ஞானமுமாக நீயே விளங்குதற்குக்‌ காரணம்‌ என்னவோ?

8

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்குலங்கள்வாழும் ஊரெரித்த கொள்கையிதென் னைகொலாம்இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
விலங்கல் ஒன்று வெஞ்சிலையாக் கொண்டு, விறல் அரக்கர்குலங்கள் வாழும் ஊர் எரித்த கொள்கை இது என்னை கொல் ஆம்?இலங்கை மன்னு வாள் அவுணர் கோனை எழில் விரலால்துலங்க ஊன்றிவைத்து உகந்தாய்! சோபுரம் மேயவனே!
உரை

இலங்கையில்‌ நிலைபெற்று வாழும்‌, வாட்போரில்‌ வல்ல அவுணர்‌ தலைவனாகிய இராவணனைத்‌ தனது அழகிய கால்விரலால்‌ நடுங்குமாறு ஊன்றிப்‌ பின்‌ அவன்‌ மன்னிப்பு வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! மேரு மலையைக்‌ கொடியதொரு வில்லாகக்‌ கொண்டு வலிமை பொருந்திய அரக்கர்‌ குலங்கள்‌ வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக்‌ காரணம்‌ என்னவோ?

9

விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர்கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணம்என் னைகொலாம்இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மேல் அயனும்தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
விடம் கொள் நாகம் மால்வரையைச் சுற்றி, விரிதிரை நீர்கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை கொல் ஆம்?இடந்து மண்ணை உண்ட மாலும், இன் மலர்மேல் அயனும்,தொடர்ந்து முன்னம் காணமாட்டாச் சோபுரம் மேயவனே!
உரை

மண்ணுலகை அகழ்ந்து உண்ட திருமாலும்‌, இனிய தாமரை மலர்மேல்‌ விளங்கும்‌ பிரமனும்‌, முற்காலத்தே உன்னைத்‌ தொடர்ந்து அடிமுடி காணமாட்டாராய்‌, நின்றொழியத்‌ திருச்சோபுரத்தில்‌ மேவி விளங்கும்‌ இறைவனே! தேவர்கள்‌ விடத்தை உடைய வாசுகி என்னும்‌ பாம்பை மந்தரம்‌ என்னும்‌ பெரிய மலையைச்‌ சுற்றிக்‌ கட்டி, விரிந்த அலைகளை உடைய கடல்நீரைக்‌ கடைந்தபோது, அதனிடை எழுந்த நஞ்சை உண்டு மகிழ்தற்குக்‌ காரணம்‌ என்னையோ?

10

புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப்பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம்மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல்துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே.
சொற்பிரிப்பு
புத்தரோடு புன்சமணர் பொய் உரையே உரைத்து,பித்தர் ஆகக் கண்டு உகந்த பெற்றிமை என்னை கொல் ஆம்?மத்தயானை ஈர் உரிவை போர்த்து, வளர் சடைமேல்துத்திநாகம் சூடினானே! சோபுரம் மேயவனே!
உரை

மதம்‌ பொருந்திய யானையை உரித்து அதன்‌ தோலைப்‌ போர்த்து, நீண்ட சடையின்மேல்‌ புள்ளிகளை உடைய நாகப்‌ பாம்பைச்‌ சூடியவனே! திருச்சோபுரம்‌ மேவிய இறைவனே! புத்தர்களும்‌, சமணர்களும்‌ பொய்யுரைகளையே பேசிப்‌ பித்தராகத்‌ தரிதலைக்‌ கண்டு நீ மகிழ்தற்குக்‌ காரணம்‌ என்னையோ?

11

சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுரமே யவனைச்சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தால்ஞாலம்மிக்க தண்டமிழால் ஞானசம் பந்தன்சொன்னகோலம்மிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.
சொற்பிரிப்பு
சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் மேயவனை,சீலம் மிக்க தொல்புகழ் ஆர் சிரபுரக் கோன் நலத்தால்,ஞாலம் மிக்க தண் தமிழால், ஞானசம்பந்தன் சொன்னகோலம் மிக்க மாலை வல்லார் கூடுவர், வான் உலகே.
உரை

சோலைகள்‌ மிகுந்ததும்‌, குளிர்ச்சியான வயல்களால்‌ சூழப்பட்டதுமான திருச்சோபுரத்தில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளியுள்ளார்‌. சிரபுரம்‌ என்ற சீகாழிப்‌ பதியில்‌ நல்லொழுக்கம்‌ மிக்க, பழமையான புகழை உடைய சான்றோர்கள்‌ வாழுகின்றனர்‌. இந்தப்‌ பதியின்‌ நன்மைகளையே கருதுபவரும்‌, தலைவரும்‌ ஆவார்‌ ஞானசம்பந்தன்‌. இவர்‌, உலகில்‌ மேம்பட்ட அருள்மொழியான தமிழில்‌ அழகுமிக்க இந்த தமிழ்‌ மாலையைப்‌ பாடினார்‌. இத்தமிழ்‌ மாலையை ஓதவல்லவர்கள்‌ வானுலகை அடைவர்‌.