திருமுறை 1 · 1.049 · 11

திருநள்ளாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
நள்ளாறு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டிஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
போகம் ஆர்த்த பூண் முலையாள் தன்னோடும் பொன் அகலம்பாகம் ஆர்த்த பைங்கண் வெள் ஏற்று அண்ணல், பரமேட்டி,ஆகம் ஆர்த்த தோல் உடையன், கோவண ஆடையின் மேல்நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே.
உரை

நம்‌ பெருமானாகிய சிவபெருமான்‌, இன்பத்திற்கு நிலைக்களனாய்‌ உள்ளனவும்‌, அணிகலன்கள்‌ பொருந்தியதுமான தனங்களை உடைய உமையம்மையை, தம்முடைய அழகிய திருமேனியின்‌ இடப்பாகத்தில்‌ நிறைந்து இருக்கச்‌ செய்தவர்‌. குளிர்ந்த கண்களையும்‌ வெண்மையான நிறத்தையும்‌ உடைய எருதைத்‌ தனது வாகனமாகக்‌ கொண்ட தலைவர்‌. மேலானவர்‌. திருமேனியில்‌ தோல்‌ ஆடையைப்‌ போர்த்தவன்‌. இடுப்பில்‌ உள்ளாடையாகக்‌ கட்டிய கோவண ஆடையின்மேல்‌ நாகத்தைக்‌ கச்சாக இறுக்கிக்‌ கட்டியவர்‌. இந்த நம்பெருமான்‌ எழுந்தருளி இருக்கும்‌ இடம்‌ திருநள்ளாறு.

2

தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்ஏடுடைய மேலுலகோ டேழ்கட லுஞ்சூழ்ந்தநாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
தோடு உடைய காது உடையன், தோல் உடையன், தொலையாப்பீடு உடைய போர் விடையன், பெண்ணும் ஓர்பால் உடையன்,ஏடு உடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்தநாடு உடைய நம் பெருமான், மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌, உமையம்மை பாகத்தே உள்ள இடது காதில்‌ தோடணிந்தவர்‌. தோலை ஆடையாகக்‌ கொண்டவர்‌. குன்றாத பெருமை உடையதும்‌ போர்‌ செய்தலில்‌ வல்லதுமான விடை ஊர்தியர்‌. மலை மகளை ஒரு பாகமாகக்‌ கொண்டவர்‌. அடுக்குகளாக அமைந்த மேல்‌ உலகங்களோடு ஏழு கடல்களாலும்‌ சூழப்பட்ட இந்த நிலவுலகத்தையும்‌ உடையவர்‌. இந்த நம்‌ பெருமான்‌ விரும்பிய இடம்‌ திருநன்ளாறு ஆகும்‌.

3

ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்தமான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகைநான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
ஆன் முறையால் ஆற்ற வெண் நீறு ஆடி, அணியிழை ஓர்பால் முறையால் வைத்த பாதம் பத்தர் பணிந்து ஏத்த,மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கைநால் மறையான், நம்பெருமான், மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌ பசுவிடமிருந்து முறையாக எடுக்கப்பட்ட திருவெண்ணீற்றை மேனி முழுவதும்‌ பூசியவர்‌. அழகிய அணிகலன்களைத்‌ தரித்த உமையம்மையை ஒரு பாகமாக வைத்துள்ளவர்‌. தன்‌ திருவடிகளை பக்தர்கள்‌ பணிந்து போற்றத்தக்க மேன்மையானவர்‌. இளமையான மான்‌, வெண்மையான மழு, சூலம்‌ ஆகியவற்றை ஏந்திய கையினர்‌. நான்மறைகளையும்‌ அருளியவர்‌. இந்த நம்‌ பெருமான்‌ விரும்பிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

4

புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலேமல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்பல்கவல்ல தொண்டர்தம் பொற்பாத நிழற்சேரநல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
புல்க வல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்து, அயலேமல்க வல்ல கொன்றை மாலை மதியோடு உடன் சூடி,பல்க வல்ல தொண்டர் தம் பொன்பாத நிழல் சேர,நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌ தனது நீண்ட சடையின்‌ மேல்‌ கங்கையை வைத்துள்ளார்‌. அதன்‌ அருகில்‌ கொன்றை மாலையையும்‌ பிறைச்சந்திரனையும்‌ ஒரு சேரச்‌ சூடியுள்ளார்‌. தன்னை இறுகப்‌ பற்றிக்‌ கொண்டு வழிபடுபவர்க்குத்‌ தனது திருவடி நிழலைச்‌ சேரும்‌ பேற்றை நல்குபவர்‌. இப்பெருமான்‌ மேவிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

5

ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடிநீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றைநாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
ஏறு தாங்கி, ஊர்தி பேணி, ஏர் கொள் இளமதியம்ஆறு தாங்கும் சென்னிமேல் ஓர் ஆடு அரவம் சூடி,நீறு தாங்கி நூல் கிடந்த மார்பில் நிரை கொன்றைநாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌ தனது கொடியாக இடபத்தைக்‌ கொண்டுள்ளார்‌. அதனையே தனது வாகனமாகவும்‌ விரும்பி ஏற்றுள்ளார்‌. அழகிய இளம்பிறைச்‌ சந்திரன்‌, கங்கை ஆகியன பொருந்திய சடைமுடியின்‌ மேல்‌ ஆடுகின்ற பாம்பைச்‌ சூடியுள்ளார்‌. திருநீறுபூசியுள்ளார்‌. பூணூலோடு விளங்கும்‌ மார்பில்‌ மணம்‌ கொண்ட மாலையை ஆகியன பொருந்திய பூணூலோடு விளங்கும்‌ மார்பில்‌ மணம்‌ கொண்ட மாலையை அணிந்துள்ளார்‌. இந்த நம்பெருமான்‌ விரும்பிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

6

திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
திங்கள் உச்சிமேல் விளங்கும் தேவன் இமையோர்கள்,“எங்கள் உச்சி எம் இறைவன்!” என்று அடியே இறைஞ்சத்தங்கள் உச்சியால் வணங்கும் தன் அடியார்கட்கு எல்லாம்நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌ தன்‌ திருமுடியின்‌ உச்சிமீது பிறைச்சந்திரனை வைத்துள்ளார்‌. எங்கள்‌ தலைவனாய்‌ உன்ள எம்பெருமானே! என்று தேவர்கள்‌ அடிபரவி இறைஞ்சுவர்‌. தங்கன்‌ தலையால்‌ தன்னை வணங்கும்‌ அடியவர்களும்‌ “எங்கள்‌ முடிமீது விளங்கும்‌ நம்பெருமானே” என்று போற்றுவர்‌. இந்தச்‌ சிவபெருமான்‌ மேவிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

7

வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண் முழவதிரஅஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளேநஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
வெஞ்சுடர்த் தீ அங்கை ஏந்தி, விண் கொள் முழவு அதிர,அஞ்சு இடத்து ஓர் ஆடல் பாடல் பேணுவது அன்றியும், போய்,செஞ்சடைக்கு ஓர் திங்கள் சூடி, திகழ்தரு கண்டத்துள்ளேநஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌ கொடிய ஒளிபொருந்திய நெருப்பைக்‌ கையில்‌ ஏந்தியவர்‌. விண்ணளாவும்‌ ஒலிக்கும்‌ முழவு முழங்கப்‌ பலரும்‌ அஞ்சும்‌ சுடுகாட்டில்‌ ஆடுவதையும்‌ பாடுவதையும்‌ விரும்புபவர்‌. தலையில்‌ ஓர்‌ இளம்பிறையைச்‌ சூடியவர்‌. பிரகாசிக்கின்ற தன்‌ கழுத்தில்‌ நஞ்சினை நிறுத்தியவர்‌. இந்த நம்பெருமான்‌ விரும்பிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

8

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்சுட்டுமாட்டிச் சுண்ண வெண்ணீறாடுவ தன்றியும்போய்ப்பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்ம தியஞ்சூடிநட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
சிட்டம் ஆர்ந்த மும்மதிலும் சிலைவரைத் தீ அம்பினால்சுட்டு மாட்டி, சுண்ண வெண் நீறு ஆடுவது அன்றியும், போய்ப்பட்டம் ஆர்ந்த சென்னிமேல் ஓர் பால் மதியம் சூடி,நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌, பெருமை மிக்க முப்புரங்களையும்‌ வில்நாணில்‌ பூட்டிய தயாகிய அம்பினால்‌ சுட்டு அழித்தவர்‌. திருவெண்ணீற்றுப்‌ பொடியில்‌ திளைத்து விளங்குபவர்‌. நெற்றியில்‌ பட்டம்‌ என்னும்‌ அணிகலன்‌ கட்டித்‌ தலைமுடிமேல்‌ பால்போன்ற நிறமுடைய பிறைமதியைச்‌ சூடி நடனம்‌ ஆடுபவர்‌. இந்த நம்‌ சிவபெருமான்‌ மேவிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

9

உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கிஅண்ணலாகா வண்ணல்நீழல் ஆரழல் போலுருவம்எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு, உடனே ஒடுக்கி,“அண்ணல் ஆகா அண்ணல் நீழல் ஆர் அழல் போல் உருவம்எண்ணல் ஆகா, உள் வினை” என்று எள்க வலித்து, இருவர்நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சிவபெருமான்‌ யாராலும்‌ உண்ண முடியாத நஞ்சினை உண்டு அதன்‌ வலிமையைக்‌ கெடுத்து, அதனைத்‌ தம்‌ கழுத்தில்‌ நிறுத்தியவர்‌. யாராலும்‌ அணுக இயலாத தலைவர்‌. ஒளி பொருந்திய அழல்‌ போன்ற திருஉருவினர்‌. அநாதியாகவே உள்ள வினையால்‌ உண்மையை உணரமுடியவில்லையே எனச்‌ சோர்ந்து வருந்திய திருமால்‌ பிரமர்களாலும்‌ அணுக முடியாதவர்‌ நம்பெருமான்‌. இவர்‌ விரும்பிய தலம்‌ திருநள்ளாறு ஆகும்‌.

10

மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணம்இலிகள்பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி ளும்முடனேநாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே.
சொற்பிரிப்பு
மாசு மெய்யர், மண்டைத் தேரர், குண்டர் குணம் இலிகள்பேசும் பேச்சை மெய் என்று எண்ணி, அந் நெறி செல்லன்மின்!மூசு வண்டு ஆர் கொன்றை சூடி, மும்மதிலும் உடனேநாசம் செய்த நம் பெருமான் மேயது நள்ளாறே.
உரை

சமணர்கள்‌ அழுக்கேறிய உடம்பினர்‌. புத்தர்கள்‌ மண்டை ஓட்டை உண்கலமாகக்‌ கொண்டு கையில்‌ ஏந்தித்‌ திரிபவர்கள்‌. இவர்கள்‌ தடித்த உடம்புடன்‌ விளங்குபவர்கள்‌. நற்குணமும்‌ இல்லாதவர்கள்‌. அவர்கள்‌ பேச்சை உண்மை என்று எண்ணி, அவர்கள்‌ சமயங்களில்‌ செல்ல வேண்டாம்‌. வண்டுகள்‌ மொய்த்துப்‌ பொருந்தும்‌ கொன்றை மலர்‌ மாலையைச்‌ சூடி, மும்மதில்களையும்‌ ஒருசேர அழித்து, தேவர்களைக்‌ காத்தவர்‌ நம்‌ சிவபெருமான்‌. அவர்‌ விரும்பிய தலம்‌ திருநள்ளாறே.

11

தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்லபண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே.
சொற்பிரிப்பு
தண்புனலும் வெண்பிறையும் தாங்கிய தாழ்சடையன்,நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன், நல்லபண்பு நள்ளாறு ஏத்து பாடல் பத்தும் இவை வல்லார்உண்பு நீங்கி, வானவரோடு உலகில் உறைவாரே.
உரை

நட்புக்கு ஏற்ற நல்லோர்‌ வாழும்‌ சீகாழிப்‌ பதியில்‌ தோன்றியவர்‌ ஞானசம்பந்தன்‌. குளிர்ந்த கங்கையையும்‌ வெண்மையான பிறையையும்‌ தாங்கிய தாழ்ந்த சடைமுடியை உடைய சிவபெருமான்‌ எழுந்தருளிய, நல்ல இயல்பு வாய்ந்தோர்‌ வாழும்‌ திருநள்ளாற்றைப்‌ போற்றிப்‌ பாடினார்‌. இத்திருப்பதிகப்‌ பாடல்கள்‌ பத்தையும்‌ ஓத வல்லவர்கள்‌ பிராரத்த கன்ம வலிமை குறைந்து, வானவர்களோடு தேவருலகில்‌ வாழ்வர்‌.