திருமுறை 1 · 1.048 · 11

திருச்சேய்ஞலூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
சேய்ஞலூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்குமாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தைஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னேசேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
நூல் அடைந்த கொள்கையாலே நுன் அடி கூடுதற்குமால் அடைந்த நால்வர் கேட்க, நல்கிய நல் அறத்தை,ஆல் அடைந்த நீழல் மேவி, அருமறை சொன்னது என்னேசேல் அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?
உரை

சேல்‌ மீன்கள்‌ நிறைந்த குளிர்ந்த வயல்களால்‌ சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில்‌ அமர்ந்திருக்கும்‌ சிவபெருமானே! வேதம்‌ முதலிய நூல்களில்‌ விதிக்கப்பட்ட முறைகளினால்‌, உன்‌ திருவடிகளை அடைய முயன்றும்‌ சனகாதி முனிவர்களாகிய நால்வருக்கும்‌ அஞ்ஞானம்‌ நீங்கவில்லை. அதனால்‌ அவர்கள்‌ உன்னை அடைந்து உண்மைப்‌ பொருளைக்‌ கேட்டனர்‌. அவர்கள்‌ தெளிவு பெறுமாறு, கல்லால மர நிழலில்‌ வீற்றிருந்து, அரிய அநுபூதி நிலையாகிய இரகசியத்தை, எவ்வாறு அவர்களுக்கு உணர்த்தி அருளினாய்‌? கூறுவாயாக.

2

நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால்கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல்ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னேசேறடைந்த தண்கழனிச்1 சேய்ஞலூர் மேயவனே.பாடம் : 1வார்கழனிச்
சொற்பிரிப்பு
நீறு அடைந்த மேனியின் கண் நேரிழையாள் ஒருபால்கூறு அடைந்த கொள்கை அன்றி, கோல வளர் சடைமேல்ஆறு அடைந்த திங்கள் சூடி, அரவம் அணிந்தது என்னேசேறு அடைந்த தண் கழனிச் சேய்ஞலூர் மேயவனே?
உரை

சேறு மிகுந்த குளிர்ந்த வயல்களால்‌ சூழப்பட்ட திருச்சேய்ஞலூரில்‌ எழுந்தருளிய சிவபெருமானே! திருநீறணிந்த நின்‌ திருமேனியின்‌ ஒருபாகமாக உமையம்மை இருக்கின்றபோது, அழகியதாய்‌ நீண்டு வளர்ந்த சடைமேல்‌ கங்கையையும்‌, காமத்தால்‌ கலை குறைந்த சந்திரனையும்‌, போடியாகிய பாம்பையும்‌ அணிந்துள்ள காரணம்‌ யாதோ?

3

ஊனடைந்த வெண்டலையி னோடு பலிதிரிந்துகானடைந்த பேய்களோடு பூதங் கலந்துடனேமானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி யாடலென்னேதேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
ஊன் அடைந்த வெண் தலையினோடு பலி திரிந்து,கான் அடைந்த பேய்களோடு பூதம் கலந்து உடனே,மான் அடைந்த நோக்கி காண, மகிழ்ந்து எரி ஆடல் என்னேதேன் அடைந்த சோலை மல்கு சேய்ஞலூர் மேயவனே?
உரை

வண்டுகள்‌ நிறைந்த சோலைகள்‌ செறிந்த திருச்சேய்ஞலூரில்‌ எழுந்தருளிய சிவபெருமானே! ஊன்‌ பொருந்திய வெண்மையான தலையோட்டைக்‌ கையில்‌ ஏந்தி பலியேற்றுத்‌ திரிகின்றாய்‌. அதோடு காட்டில்‌ பேய்களோடு பூதங்களும்‌ கலந்து சூழ, மான்போன்ற கண்களை உடைய உமையம்மை காணும்படி, மகிழ்வோடு இடுகாட்டில்‌ எரியாடுதல்‌ ஏன்‌?

4

வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாவரவின்நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னேபாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார்சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
வீண் அடைந்த மும்மதிலும், வில் மலையா, அரவின்நாண் அடைந்த வெஞ்சரத்தால், நல் எரியூட்டல் என்னேபாண் அடைந்த வண்டு பாடும் பைம்பொழில் சூழ்ந்து அழகு ஆர்சேண் அடைந்த மாடம் மல்கு சேய்ஞலூர் மேயவனே?
உரை

பண்ணிசையோடு வண்டுகள்‌ பாடும்‌ பசுமையான பொழில்‌ “சூழ்ந்ததும்‌, அழகியதாய்‌ வானுயர்ந்த மாடவீடுகள்‌ நிறைந்ததுமான திருச்சேய்ஞலூரில்‌ எழுந்தருளிய இறைவனே! மும்மதில்களும்‌ வீணடையுமாறு மலையை வில்லாகவும்‌ அரவை அவ்வில்லின்‌ நாணாகவும்‌ கொண்டு கொடிய அம்பால்‌ பெரிய எரியை அம்முப்புரங்களுக்கு ஊட்டியது ஏன்‌?

5

பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்வேயடைந்த தோளியஞ்ச வேழம் உரித்ததென்னேவாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித்தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
பேய் அடைந்த காடு இடமாப் பேணுவது அன்றியும், போய்,வேய் அடைந்த தோளி அஞ்ச, வேழம் உரித்தது என்னேவாய் அடைந்த நால்மறை ஆறு அங்கமோடு ஐவேள்வித்தீ அடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே?
உரை

சேய்ஞலூரில்‌ வாழும்‌ அந்தணர்கள்‌ வாயினால்‌ ஓதப்படும்‌ நான்கு வேதங்களுடன்‌ ஆறு அங்கங்களையும்‌ கற்றவர்கள்‌. ஐவகை வேள்விகளை இயற்றி தீப்பொருந்திய சிவந்த கையினராக விளங்குபவர்கள்‌. அந்த மறையோர்கள்‌ வாழும்‌ சேய்ஞலூரில்‌ எழுந்தருளிய சிவபெருமானே! பேய்கள்‌ விளங்கும்‌ சுடுகாட்டை விரும்பி அமர்ந்ததுமன்றி மூங்கில்‌ போன்ற தோளையுடைய உமையம்மை அஞ்சும்படி யானையை உரித்தது ஏனோ?

6

காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்துவேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னேகோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய்சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
காடு அடைந்த ஏனம் ஒன்றின் காரணம் ஆகி வந்து,வேடு அடைந்த வேடன் ஆகி, விசயனொடு எய்தது என்னேகோடு அடைந்த மால்களிற்றுக் கோச்செங்கணாற்கு அருள்செய்சேடு அடைந்த செல்வர் வாழும் சேய்ஞலூர் மேயவனே?
உரை

கோடுகளோடு கூடிய பெரிய யானைப்‌ படைகளை உடைய கோச்செங்கட்‌ சோழனுக்கு அருள்‌ செய்தவனும்‌, பெருமை பொருந்திய செல்வர்கள்‌ வாழும்‌ திருச்சேய்ஞலூரில்‌ மேவியவனுமாகிய இறைவனே! வில்லடிபட்டுக்‌ காட்டுக்குள்‌ சென்று பதுங்கிய பன்றி ஒன்றின்‌ காரணமாக, தான்‌ வேடன்‌ உருத்தாங்கி வந்து அருச்சுனனோடு போர்‌ புரிந்தது ஏனோ?

7

பீரடைந்த பாலதாட்டப் பேணா தவன்தாதைவேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத்தாரடைந்த மாலைசூட்டித் தலைமை வகுத்ததென்னேசீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
பீர் அடைந்த பால் அது ஆட்ட, பேணாது, அவன் தாதைவேர் அடைந்து பாய்ந்த தாளை வேர்த் தடிந்தான் தனக்குத்தார் அடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்தது என்னேசீர் அடைந்த கோயில் மல்கு சேய்ஞலூர் மேயவனே?
உரை

சிறப்பு மிக்க மாடக்‌ கோயிலாய்‌ விளங்கும்‌ திருச்சேய்ஞலூரில்‌ விளங்கும்‌ சிவபெருமானே! பசுவின்‌ முலைக்காம்பின்‌ வழியே தானாகச்‌ சுரந்த பாலை விசார சருமன்‌, தான்‌ மணலால்‌ உருவாக்கிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம்‌ செய்தார்‌. அதனை விரும்பாத அவனது தந்தை எச்ச தத்தன்‌ சினந்து, பாற்குடத்தை தன்‌ காலால்‌ இடறினான்‌. அந்தக்‌ காலை வெட்டிய விசார சருமரின்‌ பக்தியை மெச்சி அவருக்கு சிவன்‌ தாரையும்‌ தனக்குச்‌ சூட்டப்பட்ட மாலையையும்‌ சூட்டி அவரைச்‌ சிவகணங்களுக்கும்‌ தலைவனாக ஆக்கியது ஏன்‌?

8

மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன்நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னேபூவடைந்த நான்முகன்போற் பூசுரர் போற்றிசெய்யும்சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
மா அடைந்த தேர் அரக்கன் வலி தொலைவித்து அவன்தன்நா அடைந்த பாடல் கேட்டு நயந்து, அருள் செய்தது என்னேபூ அடைந்த நான்முகன் போல் பூசுரர் போற்றி செய்யும்சே அடைந்த ஊர்தியானே, சேய்ஞலூர் மேயவனே?
உரை

தாமரை மலரில்‌ விளங்கும்‌ நான்முகன்‌ போன்ற அந்தணர்கள்‌ போற்றும்‌, விடையை ஊர்தியாகக்‌ கொண்டவனே! திருச்சேய்ஞலூரில்‌ மேவிய இறைவனே! குதிரைகள்‌ பூட்டப்பட்ட தேரை உடைய இராவணனது வலிமையை அழித்து அவன்‌ நாவினால்‌ பாடிய பாடலைக்‌ கேட்டு விரும்பி அவனுக்கு அருள்கள்‌ பல செய்தது ஏனோ?

9

காரடைந்த வண்ணனோடு கனக மனையானும்பாரிடந்தும் விண்பறந்தும் பாத முடிகாணார்சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னேதேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
கார் அடைந்த வண்ணனோடு கனகம் அனையானும்,பார் இடந்தும் விண் பறந்தும் பாதம் முடி காணார்,சீர் அடைந்து வந்து போற்ற, சென்று அருள் செய்தது என்னேதேர் அடைந்த மா மறுகின் சேய்ஞலூர் மேயவனே?
உரை

தேர்‌ ஓடும்‌ அழகிய வீதிகளை உடைய திருச்சேய்ஞலூர்‌ மேவிய சிவனே! கருமை நிறம்‌ பொருந்திய திருமால்‌ பொன்‌ வண்ணனாகிய பிரமன்‌ ஆகியோர்‌ உலகத்தை அகழ்ந்தும்‌ விண்ணில்‌ பறந்தும்‌ சென்று அடிமுடிகளைக்‌ காணாராய்த்‌ தம்‌ தருக்கொழிந்து பின்‌ அவர்கள்‌ போற்ற அவர்பால்‌ சென்று அருள்‌ செய்தது ஏனோ?

10

மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சிநேசடைந்த வூணினாரும் நேசமி லாததென்னேவீசடைந்த தோகையாட விரைகம ழும்பொழில்வாய்த்தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே.
சொற்பிரிப்பு
மாசு அடைந்த மேனியாரும், மனம் திரியாத கஞ்சிநேசு அடைந்த ஊணினாரும், நேசம் இலாதது என்னேவீசு அடைந்த தோகை ஆட, விரை கமழும் பொழில்வாய்,தேசு அடைந்த வண்டு பாடும் சேய்ஞலூர் மேயவனே?
உரை

வீசி ஆடுகின்ற தோகைகளை உடைய மயில்கள்‌ ஆடுவதும்‌, மணம்‌ கமழும்‌ பொழில்களில்‌ ஒளி பொருந்திய வண்டுகள்‌ பாடுவதும்‌ செய்யும்‌ திருச்சேய்ஞலூரில்‌ மேவிய இறைவனே! அழுக்கேறிய உடலினரும்‌, மனத்தில்‌ வெறுப்பின்றிக்‌ கஞ்சியை விரும்பி உணவாகக்‌ கொள்வோரும்‌ ஆகிய சமண புத்தர்கள்‌ உன்பால்‌ நேசம்‌ இல்லாததற்குக்‌ காரணம்‌ யாதோ?

11

சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித்தோயடைந்த தண்வயல்சூழ் தோணி புரத்தலைவன்சாயடைந்த ஞானமல்கு சம்பந்தன் இன்னுரைகள்வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே.
சொற்பிரிப்பு
சேய் அடைந்த சேய்ஞலூரில் செல்வன சீர் பரவி,தோய் அடைந்த தண்வயல் சூழ் தோணி புரத் தலைவன்-சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன்—இன் உரைகள்வாய் அடைந்து பாட வல்லார் வான் உலகு ஆள்பவரே.
உரை

முருகப்‌ பெருமான்‌ வழிபட்ட சிறப்புமிக்கத்‌ தலம்‌ திருச்சேய்ஞலூர்‌. இத்தலத்தில்‌ விளங்கும்‌ செல்வனான சிவபிரானது புகழைப்‌ போற்றிப்‌ பாடினார்‌ ஞானசம்பந்தன்‌. இவர்‌, நீர்வளம்‌ மிக்க வளமையான வயல்களால்‌ சூழப்பட்ட தோணிபுரத்தின்‌ தலைவர்‌. நுட்பமான ஞானம்‌ கொண்டவர்‌. அவர்‌ பாடிய இந்த இனிமையான பதிகத்தை வாயினால்‌ பாடி வழிபட வல்லவர்கள்‌ வானுலகை ஆள்வர்‌.