திருமுறை 1 · 1.047 · 11

திருச்சிரபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பழந்தக்கராகம்
தலம்
சீர்காழி - 07-சிரபுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வ தன்றியும்போய்வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னேசொல்லடைந்த தொல்மறையோ டங்கங் கலைகளெல்லாஞ்செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
பல் அடைந்த வெண் தலையில் பலி கொள்வது அன்றியும், போய்,வில் அடைந்த புருவ நல்லாள் மேனியில் வைத்தல் என்னேசொல் அடைந்த தொல் மறையோடு அங்கம் கலைகள் எல்லாம்செல் அடைந்த செல்வர் வாழும் சிரபுரம் மேயவனே?
உரை

பொருள்‌ பொதிந்த சொற்கள்‌ நிரம்பி இருப்பது பழமையான வேதங்கள்‌: அவற்றின்‌ அங்கங்களையும்‌ பிற கலைகளையும்‌ கற்றுணர்ந்த சான்றோர்கள்‌ வாழும்‌ இடமானது திருச்சிரபுரம்‌ என்னும்‌ சீகாழிப்‌ பதியாகும்‌. இங்கு எழுந்தருளிய இறைவனான சிவபெருமானே! பற்கள்‌ பொருந்திய வெண்மையான தலையோட்டில்‌ பல இடங்களுக்கும்‌ சென்று பலியேற்கிறீர்‌. அது மட்டுமின்றி வில்‌ போன்ற புருவத்தை உடைய உமையம்மையை உமது திருமேனியில்‌ வைத்திருக்கின்றீர்‌. இதற்குக்‌ காரணம்‌ யாதோ?

2

கொல்லைமுல்லை நகையினாளோர் கூறது வன்றியும்போய்அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணும் ஆதர வென்னைகொலாஞ்சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார்செல்லநீண்ட செல்வமல்கு சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு அது அன்றியும், போய்,அல்லல் வாழ்க்கைப் பலி கொண்டு உண்ணும் ஆதரவு என்னைகொல் ஆம்சொல்ல நீண்ட பெருமையாளர், தொல்கலை கற்று வல்லார்,செல்ல நீண்ட செல்வம் மல்கு சிரபுரம் மேயவனே?
உரை

அளவிட முடியாத பெருமையாளர்களும்‌, பழமையான கலைகளில்‌ வல்லவர்களுமாகிய அறிஞர்களும்‌ வாழ்கின்ற பெரும்‌ செல்வ வளத்தை உடைய சிரபுரத்தில்‌ எழுந்து அருளும்‌ சிவபெருமானே! முல்லை நிலத்தில்‌ தோன்றிய முல்லை அரும்பு போன்ற பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகத்தில்‌ வைத்திருக்கின்றீர்‌. ஆயினும்‌ துன்ப வாழ்க்கையாகிய பலியை ஏற்றுத்‌ திரிவது ஏனோ?

3

நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னேகாரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச்சீரடைந்த செல்வமோங்கு சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி அன்றியும், போய்,ஊர் அடைந்த ஏறு அது ஏறி உண் பலி கொள்வது என்னேகார் அடைந்த சோலை சூழ்ந்து காமரம் வண்டு இசைப்ப,சீர் அடைந்த செல்வம் ஓங்கு சிரபுரம் மேயவனே?
உரை

சிரபுரத்தில்‌ வண்டுகள்‌ சீகாமரம்‌ என்னும்‌ பண்ணைப்‌ போல்‌ பாடி இசைக்கின்றன. மேகங்கள்‌ தவழும்‌ சோலைகளால்‌ சூழப்பெற்றது சிரபுரம்‌. அல்தெறியில்‌ ஒட்டிய செல்வம்‌ பெருகி விளங்குவது சிரபுரம்‌. அந்த சிரபுரத்தை விரும்பிய சிவபெருமானே! கங்கையை அணிந்த சடைமுடியின்மேல்‌ விளங்கும்‌ பிறைமதி ஒன்றை அணிந்திருந்தும்‌, பல ஊர்களுக்கும்‌ சென்று அடைவதற்கு ஏதுவாக இடபத்தில்‌ ஏறிச்சென்று, பலரிடம்‌ பலி ஏற்பது ஏனோ?

4

கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்ததென்னேகையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள்செய்யடைந்த வயல்கள்சூழ்ந்த சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
கை அடைந்த மானினோடு கார் அரவு அன்றியும், போய்,மெய் அடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தல் என்னேகை அடைந்த களைகள் ஆகச் செங்கழுநீர் மலர்கள்செய் அடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுரம் மேயவனே?
உரை

களையெடுப்போர்‌ கைகளில்‌, மிக அதிகமான களைகளாகச்‌ செங்கழுநீர்‌ மலர்‌ வந்தடைகின்றன. இத்தகைய செழுமையான வயல்களால்‌ சூழப்பெற்ற சிரபுரம்‌ மேவிய சிவபெருமானே! கையில்‌ மானை வைத்திருக்கின்றீர்‌. கரிய பாம்பை வைத்திருக்கின்றீர்‌. அதுவன்றி திருமேனியில்‌ பெருவிருப்போடு உமையம்மையை இடப்பாகமாக கொண்டுள்ளீர்‌. இது ஏனோ?

5

புரம்எரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னைக்கரம்எடுத்துத் தோலுரித்த காரணம் ஆவதென்னேமரம்உரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ்சிரம்எடுத்த கைகள்கூப்புஞ் சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை தன்னைக்கரம் எடுத்துத் தோல் உரித்த காரணம் ஆவது என்னேமரம் உரித்த தோல் உடுத்த மா தவர் தேவரோடும்சிரம் எடுத்த கைகள் கூப்பும் சிரபுரம் மேயவனே?
உரை

மரத்தை உரித்ததால்‌ ஆன மரவுரி என்னும்‌ ஆடையை அணிந்த முனிவர்களும்‌, திரிபுரங்களை எரித்து அழித்த பெரு வீரத்தோடு, போர்‌ செய்ய வந்த மத யானையைக்‌ கையால்‌ தூக்கி அதன்‌ தோலை உரித்துப்‌ போர்த்த, காரணம்‌ யாதோ?

6

கண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னேஎண்ணுமூன்று கனலும்ஓம்பி யெழுமையும் விழுமியராய்த்திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில் வெண்மழுவும்பண்ணு மூன்று வீணையோடு பாம்பு உடன் வைத்தல் என்னேஎண்ணும் மூன்று கனலும் ஓம்பி, எழுமையும் விழுமியர் ஆய்,திண்ணம் மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே?
உரை

சான்றோர்கள்‌, ஆகவனீயம்‌, காருகபத்தியம்‌, தஷிணாக்கினி என்று சொல்லப்படும்‌ முத்தயையும்‌ வேட்பவர்கள்‌ சிரபுரத்தில்‌ வாழ்கின்றார்கள்‌. அவர்கள்‌ எழுபிறப்பிலும்‌ தூயவராய்‌ உறுதிப்பாட்டுடன்‌ தேவயாகம்‌, பிதுர்யாகம்‌, இருடியாகம்‌ எனப்படும்‌ மூன்று வேள்விகளையும்‌ புரிபவர்கள்‌ ஆவர்‌. அப்படிப்பட்ட சான்றோர்கள்‌ வாழும்‌ சிரபுரம்‌ மேவிய சிவபெருமானே! முக்கண்களை உடையவராய்‌ இருக்கின்ற நீர்‌ கைகளில்‌ வெண்மமுவும்‌, பண்‌ மூன்று உடைய வீணை பாம்பு ஆகியவற்றை வைத்திருக்கும்‌ காரணம்‌ யாதோ?

7

குறைபடாத வேட்கையோடு கோல்வளை யாளொருபாற்பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மை1 யென்னேஇறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்துசிறைபடாத பாடலோங்கு சிரபுரம் மேயவனே.பாடம் : 1மேன்மை
சொற்பிரிப்பு
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்பொறை படாத இன்பமோடு புணர்தரும் மெய்ம்மை என்னேஇறை படாத மென்முலையார் மாளிகைமேல் இருந்து,சிறை படாத பாடல் ஓங்கு சிரபுரம் மேயவனே?
உரை

சிறிதும்‌ சாயாத மெல்லிய தனங்களை உடைய இளமகளிர்‌ மாளிகைகளின்‌ மேல்‌ இருந்து குற்றமற்ற பாடல்களைப்‌ பாடும்‌ மகிழ்ச்சி மிகுந்துள்ள சிரபுரம்‌ மேவிய இறைவனே! குன்றாத வேட்கையோடு திரண்ட கை வளைகளை உடைய உமையம்மையை ஒரு பாகமாக அளவற்ற இன்பத்துடன்‌ ஏற்றுக்‌ கொண்டிருப்பதற்குக்‌ காரணம்‌ என்னையோ?

8

மலையெடுத்த வாளரக்கன் அஞ்ச வொருவிரலால்நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார்துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ்சிலையெடுத்த தோளினானே சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
மலை எடுத்த வாள் அரக்கன் அஞ்ச, ஒருவிரலால்நிலை எடுத்த கொள்கையானே! நின்மலனே! நினைவார்துலை எடுத்த சொல் பயில்வார் மேதகு வீதிதோறும்சிலை எடுத்த தோளினானே! சிரபுரம் மேயவனே!
உரை

திருச்சிரபுரத்தில்‌ மேன்மைமிக்க வீதுதோறும்‌ சிவனடியார்கள்‌ வாழ்கின்றார்கள்‌. அவர்கள்‌ வனை எப்பொழுதும்‌ தங்கள்‌ நெஞ்சத்தில்‌ நினைந்து போற்றித்‌ துதுப்பவர்கள்‌. அவர்கள்‌ “கேடும்‌, ஆக்கமும்‌ கெட்ட திருவினர்‌; ஓட்டையும்‌ செம்பொன்னையும்‌ ஓக்கவே நோக்குவர்‌”. இருவினை ஒப்பு என்ற பக்குவ நிலையை அடைந்தவர்கள்‌. இன்பத்திலும்‌ துன்பத்திலும்‌ ஒரே மனநிலை கொண்டவர்கள்‌. அருச்சுனனுக்காக தனது தோளில்‌ வில்லைச்‌ சுமந்தவன்‌ சிவபெருமான்‌. முன்‌ ஒரு காலத்தில்‌ கயிலை மலையை தூக்க முயற்சித்த வாள்வலி உடைய இராவணன்‌ அஞ்சுமாறு கால்விரல்‌ ஒன்றினால்‌ அடர்த்துத்‌ தன்‌ நிலையை எடுத்துக்‌ காட்டிய செயலைப்‌ புரிந்த குற்றமற்றவனே! இச்செயலைச்‌ செய்து காட்டிய உனது உள்‌ நோக்கம்‌ - செயல்‌ என்னே!

9

மாலினோடு மலரினானும் வந்தவர் காணாதுசாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னேநாலுவேதம் ஓதலார்கள் நம்துணை யென்றிறைஞ்சச்சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாதுசாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னேநாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச,சேலு மேயும் கழனி சூழ்ந்த சிரபுரம் மேயவனே?
உரை

நான்கு வேதங்களையும்‌ ஓதும்‌ அந்தணர்கள்‌ நம்‌ துணைவனே என்று போற்றி இறைஞ்சச்‌ சேல்‌ மீன்கள்‌ மேயும்‌ வயல்கள்‌ சூழ்ந்த சிரபுரம்‌ மேவிய இறைவனே! தாமே பெரியர்‌ என வந்த திருமாலும்‌ தாமரை மலரில்‌ உறையும்‌ நான்முகனும்‌ அடிமுடி காண இயலாது அவர்கள்‌ மிகவும்‌ அஞ்சுமாறு செய்த மிக நீண்ட திருவுருவைக்‌ கொண்டது ஏன்‌?

10

புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும்பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம்மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனேசித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுரம் மேயவனே.
சொற்பிரிப்பு
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை என்று இருக்கும்பத்தர் வந்து பணிய வைத்த பான்மை அது என்னை கொல் ஆம்மத்தயானை உரியும் போர்த்து மங்கையொடும் உடனே,சித்தர் வந்து பணியும் செல்வச் சிரபுரம் மேயவனே?
உரை

மதம்‌ பொருந்திய யானையின்‌ தோலைப்‌ போர்த்து சித்தர்கள்‌ பலரும்‌ பணியச்‌ செல்வச்‌ சிரபுரநகரில்‌ உமையம்மையாருடன்‌ மேவிய இறைவனே! புத்தர்கள்‌ சமணர்கள்‌ ஆகிய புறச்சமயிகளின்‌ வார்த்தைகள்‌ புறனுரை என்று கருதும்‌ பத்தர்‌ வந்து பணியுமாறு செய்த பான்மை யாதோ? உரியும்‌ - உம்மை இசை நிறை.

11

தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுரம் மேயவனைஅங்கம்நீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தன்உரைபங்கம்நீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற்சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
சொற்பிரிப்பு
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனைஅங்கம் நீண்ட மறைகள் வல்ல அணி கொள் சம்பந்தன் உரைபங்கம் நீங்கப் பாட வல்ல பத்தர்கள் பார் இதன் மேல்சங்கமோடு நீடி வாழ்வர், தன்மையினால் அவரே.
உரை

தென்னைகள்‌ நீண்டு வளர்ந்து பயன்தரும்‌ சோலைகள்‌ சூழ்ந்த சிரபுரம்‌ மேவிய இறைவனை ஆறு அங்கங்களுடன்‌ விரிந்துள்ள வேதங்களை அறிந்துணர்ந்த அழகிய ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடிய இப்பதிக வாசகங்களைக்‌ குற்றமறப்‌ பாடவல்ல பக்தர்கள்‌ இவ்வுலகில்‌ அடியவர்‌ கூட்டங்களோடு வாழும்‌ தன்மையினால்‌ வாழ்நாள்‌ பெருகி வாழ்வர்‌.