திருமுறை 1 · 1.043 · 11

திருக்கற்குடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
கற்குடி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத்தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாம்கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
வடம் திகழ் மென் முலையாளைப் பாகம் அது ஆக மதித்து,தடந் திரை சேர் புனல்மாதைத் தாழ்சடை வைத்த சதுரர்;இடம் திகழ் முப்புரி நூலர்;துன்பமொடு இன்பம் அது எல்லாம்கடந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.
உரை

சிவபெருமான்‌, திருக்கற்குடி மாமலையை விரும்பி அதன்கண்‌ வாழும்‌ இறைவர்‌ ஆவார்‌. முத்துவடம்‌ விளங்கும்‌ மெல்லிய தனங்களை உடைய உமையம்மையை மதித்து இடப்பாகமாகக்‌ கொண்டவர்‌. பெரிய அலைகள்‌ வீசும்‌ கங்கை நங்கையை தாழ்கின்ற சடைமிசை வைத்துள்ள சதுரப்பாடு உடையவர்‌. திருமேனியில்‌ விளங்கும்‌ முப்புரி நூலை அணிந்தவர்‌. இன்ப துன்பங்களைக்‌ கடந்தவர்‌.

2

அங்கமொ ராறுடை வேள்வி யான அருமறை நான்கும்பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர்சங்கம தார்குற மாதர் தங்கையின் மைந்தர்கள் தாவிக்கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
அங்கம் ஓர் ஆறொடு ஐவேள்வி ஆன அருமறை நான்கும்பங்கம் இல் பாடலோடு ஆடல் பாணி பயின்ற படிறர்சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவிக்கங்குலில் மா மதி பற்றும் கற்குடி மா மலையாரே.
உரை

சங்கு வளையல்களைக்‌ குறப்பெண்கள்‌ அணிந்துள்ளனர்‌. அவர்கள்‌ கைகளில்‌ இருக்கும்‌ பிள்ளைகள்‌ இரவு நேரத்தில்‌ தாவிப்‌ பெரிய சந்திரனைக்‌ கைகளால்‌ பற்ற முயற்சிக்கின்றனர்‌. இப்படிப்‌ பட்ட உயரமான திருக்கற்குடி மாமலையில்‌ சிவபெருமான்‌ எழுந்தருளி உள்ளார்‌. இவர்‌ வேள்விகட்குரிய விதிகளை விளக்குபவர்‌. ஆறு அங்கங்களுடன்‌ கூடிய அரிய வேதங்கள்‌, நான்காகிய குற்றமற்ற பாடல்‌, ஆடல்‌, தாளச்‌ சதிகள்‌ ஆகியவற்றைப்‌ பழகியவர்‌.

3

நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத்தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில்காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
நீர் அகலம் தரு சென்னி நீடிய மத்தமும் வைத்து,தாரகையின் ஒளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர்போர் அகலம் தரு வேடர் புனத்து இடை இட்ட விறகில்கார் அகிலின் புகை விம்மும் கற்குடி மா மலையாரே.
உரை

வேடர்கள்‌ போர்‌ செய்வதற்கு ஏற்ற அகன்ற மார்பினைக்‌ கொண்டுள்ளவர்கள்‌. அவர்கள்‌ காடுகளிலிருந்து அகில்‌ மரங்களை வெட்டிக்‌ கொணர்ந்து எரிக்கின்றனர்‌. அதினின்று வரும்‌ கரிய அகிலின்‌ புகை மணம்‌ வீசும்‌ திருக்கற்குடி, மாமலையின்‌ இறைவர்‌ சிவபெருமான்‌. அவர்‌ பரந்து விரிந்து வந்த கங்கை நதியை உடைய முடிமீது நீண்டு மலர்ந்த ஊமத்தை மலரை அணிந்துள்ளார்‌. அவர்‌ விண்மீன்களின்‌ ஒளி சூழ்ந்து விளங்கும்‌ குளிர்ச்சியான பிறைமதியைச்‌ சூடியுள்ள இறைவர்‌ ஆவர்‌ (திருக்கற்குடி மலையில்‌ அகில்மரங்களே இருக்கின்றன என்பதாம்‌).

4

ஒருங்களி நீயிறை வாவென் றும்பர்கள் ஓல மிடக்கண்டிருங்கள மார விடத்தை இன்னமு துண்ணிய1 ஈசர்மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக்கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.பாடம் : 1துன்னிய
சொற்பிரிப்பு
“ஒருங்கு அளி, நீ இறைவா!” என்று உம்பர்கள் ஓலம் இடக் கண்டு,இருங்களம் ஆர விடத்தை இன் அமுது உன்னிய ஈசர்மருங்கு அளி ஆர் பிடி வாயில் வாழ் வெதிரின் முளை வாரி,கருங்களியானை கொடுக்கும் கற்குடி மா மலையாரே.
உரை

பசுமையோடு முளைத்து வரும்‌ மூங்கல்களை, மதம்‌ கொண்ட கரிய யானை, தானுண்ணாது, அன்பு காட்டி வரும்‌ பெண்‌ யானையின்‌ வாயில்‌ வாரிக்கொடுத்து ஊட்டுகின்றது. அதுபோலவே, கற்குடியில்‌ வீற்றிருக்கும்‌ சிவபெருமான்‌, தேவர்கள்‌ ஒன்றுகூடி, இறைவா! நீ அனைவரையும்‌ ஒருங்கு காத்தளிப்பாயாக என ஓலமிடுவதைக்‌ கேட்டு, அமுதத்தை அவர்களுக்கு அளித்துவிட்டுத்‌ தாம்‌ நஞ்சினை உண்டார்‌.

5

போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப்பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்கும்கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
போர் மலி திண் சிலை கொண்டு, பூதகணம் புடை சூழ,பார் மலி வேடு உரு ஆகி, பண்டு ஒருவற்கு அருள் செய்தார்ஏர் மலி கேழல் கிளைத்த இனொளி மா மணி எங்கும்கார் மலி வேடர் குவிக்கும் கற்குடி மா மலையாரே.
உரை

அழகிய பன்றிகள்‌ நிலத்தைக்‌ கிளைக்கின்றன. அதிலிருந்து இனிய ஒளியோடு கூடிய சிறந்த மணிகள்‌ வெளிப்படுகின்றன. அந்த மணிகளைக்‌ கரிய நிறமுள்ள வேடர்கள்‌ பல இடங்களில்‌ குவித்துள்ளனர்‌. அப்படிக்‌ குவித்துள்ள திருக்கற்குடி மாமலையில்‌ சிவபெருமான்‌ வீற்றிருக்கின்றார்‌. இவர்‌ போர்‌ செய்யத்தக்க வலிய வில்லைக்‌ கையில்‌ கொண்டு வேடர்‌ உருவம்‌ தாங்கி, பூதகணங்கள்‌ புடைசூழ்ந்து வர, மண்ணுலகத்திற்கு வந்து அருச்சுனனுக்கு பாசுபதம்‌ அளித்து அருள்‌ செய்தார்‌. ஒருவர்‌ என்றது அருச்சுனனைக்‌ குறிப்பதாயிற்று.

6

உலந்தவர் என்ப தணிந்தே யூரிடு பிச்சைய ராகிவிலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார்நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலேகலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
உலந்தவர் என்பு அது அணிந்தே, ஊர் இடு பிச்சையர் ஆகி,விலங்கல்வில் வெங்கனலாலே மூ எயில் வேவ முனிந்தார்நலம் தரு சிந்தையர் ஆகி, நா மலி மாலையினாலேகலந்தவர் காதலில் வாழும் கற்குடி மா மலையாரே.
உரை

சிவபெருமான்‌ எழுந்தருளிய திருக்கற்குடி மாமலையில்‌, நன்மை தரும்‌ எண்ணங்கள்‌ உடையவர்களும்‌, நாவினால்‌ புகழும்‌ சொல்‌ மாலைகளினாலே இறைவன்‌ திருவருளில்‌ ஒருமைப்பட்டவர்களும்‌ வாழ்கின்றார்கள்‌. இங்குள்ள சிவபெருமான்‌ இறந்தவர்களின்‌ எலும்பை அணிந்து ஊர்‌ மக்கள்‌ இடும்‌ பிச்சையை ஏற்பவர்‌. மேரு மலையாகிய வில்லிடைத்‌ தோன்றிய கொடிய கனலால்‌ முப்புரங்களும்‌ வெந்து அழியுமாறு முனிந்தவர்‌.

7

மானிடம் ஆர்தரு கையர் மாமழு வாரும் வலத்தார்ஊனிடை யார்தலை யோட்டில் உண்கல னாக வுகந்தார்தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக்கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
மான் இடம் ஆர்தரு கையர், மா மழு ஆரும் வலத்தார்,ஊன் இடை ஆர் தலை ஓட்டில் உண்கலன் ஆக உகந்தார்தேன் இடை ஆர் தரு சந்தின் திண் சிறையால் தினை வித்தி,கான் இடை வேடர் விளைக்கும் கற்குடி மா மலையாரே.
உரை

தவபெருமான்‌ வீற்றிருக்கும்‌ திருக்கற்குடி மாமலையானது, தேனடைகள்‌ பொருந்திய சந்தன மரங்கள்‌ இடையே, வேடர்கள்‌ கரைகளைக்‌ கட்டி, தினைகளை விதைத்துப்‌ பயிர்களை விளைவிக்கும்‌ இடமாகும்‌. இவர்‌ மானை இடக்கையிலும்‌, மழுவை வலக்கையிலும்‌ தரித்தவர்‌. ஊன்பொருந்திய தலை ஓட்டை உண்‌ கலனாக உகந்தவர்‌.

8

வாளமர் வீரம் நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்தோளமர் வன்றலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க்காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
வாள் அமர் வீரம் நினைந்த இராவணன் மாமலையின் கீழ்தோள் அமர் வன்தலை குன்றத் தொல்விரல் ஊன்று துணைவர்தாள் அமர் வேய் தலை பற்றித் தாழ் கரி விட்ட விசை போய்,காளம் அது ஆர் முகில் கீறும் கற்குடி மா மலையாரே.
உரை

அடிமரத்தோடு கூடிய மூங்கிலினது நுனித்‌ தழையைப்‌ பற்றி வளைத்து உண்ட யானையானது, மீதமுள்ள அடிமரத்தை வேகமாக வீசுகின்றது. அம்மூங்கில்‌ விசையோடு சென்று கரிய நிறம்‌ பொருந்திய மேகங்களைக்‌ கீறுகிறது. சிவபெருமான்‌ அந்த திருக்கற்குடி மாமலையில்‌ வீற்றிருக்கின்றார்‌. இவர்‌, வாட்போரில்‌ வல்லவனும்‌, தனது பெருவீரத்தை நினைந்தவனும்‌ ஆகிய இராவணனைக்‌ கயிலை மலையின்கீழ்‌ அவன்‌ தோள்களும்‌, வலிய தலைகளும்‌ நெரியுமாறு தமது பழம்புகழ்‌ வாய்ந்த கால்விரலால்‌ ஊன்றிய துணைவர்‌ ஆவார்‌.

9

தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை யளந்துகொண்டவ னும்மறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை யூர்வர்வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல்கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
தண்டு அமர் தாமரையானும், தாவி இம் மண்ணை அளந்துகொண்டவனும், அறிவு ஒண்ணாக் கொள்கை யர்; வெள்விடை ஊர்வர்வண்டு இசை ஆயின பாட, நீடிய வார் பொழில் நீழல்,கண்டு அமர் மா மயில் ஆடும் கற்குடி மா மலையாரே.
உரை

வண்டுகள்‌ இசைபாட, நீண்ட பொழிலின்‌ நிழலைக்‌ கண்டு, சிறந்த மயில்கள்‌ மகிழ்ந்து ஆடும்‌ திருக்கற்குடி மாமலையில்‌ சிவபெருமான்‌ வீற்றிருக்கின்றார்‌. குளிர்ந்த தாமரை மலர்மேல்‌ உறையும்‌ நான்முகனாலும்‌, உயர்ந்த இவ்வுலகை அளந்த திருமாலாலும்‌ இவர்‌ அறிய ஒண்ணாத இயல்பினர்‌. இவர்‌ வெண்ணிறமான விடைமீது ஊர்ந்து வருபவர்‌.

10

மூத்துவ ராடையி னாரும் மூசு கருப்பொடி யாரும்நாத்துவர் பொய்ம் மொழியார்கள் நயமில ராமதி வைத்தார்ஏத்துயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச அவரிட ரெல்லாம்காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.
சொற்பிரிப்பு
மூத் துவர் ஆடையினாரும், மூசு கடுப்பொடியாரும்,நாத் துவர் பொய்ம்மொழியார்கள், நயம் இலரா மதி வைத்தார்;ஏத்து உயர் பத்தர்கள் சித்தர் இறைஞ்ச, அவர் இடம் எல்லாம்காத்தவர் காமரு சோலைக் கற்குடி மா மலையாரே.
உரை

காவியாடை அணிந்தவர்கள்‌ புத்தர்கள்‌. கடுக்காய்ப்‌ பொடியை நிரம்ப உண்ணுபவர்கள்‌ சமணர்கள்‌. இவர்கள்‌ வெறுப்பை உண்டாக்கும்‌ பொய்மொழி பேசுபவர்கள்‌. நேயமற்றவர்களாகவும்‌, அறிவில்லாதவர்களாகவும்‌ இருப்பவர்கள்‌. அழகிய சோலைகள்‌ நிறைந்த திருக்கற்குடி மாமலையில்‌ விளங்கும்‌ சிவபெருமான்‌, அவர்களை விடுத்துத்‌, தம்மை ஏத்தி வாழ்த்தி உயரும்‌ பக்தர்களும்‌ சித்தர்களும்‌ வணங்க, அவர்கட்கு வரும்‌ இடர்களை அகற்றிக்‌ காத்தவர்‌.

11

காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரைநாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன்பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள்பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே.
சொற்பிரிப்பு
காமரு வார் பொழில் சூழும் கற்குடி மா மலையாரைநா மரு வண்புகழ்க் காழி நலம் திகழ் ஞானசம்பந்தன்பா மரு செந்தமிழ் மாலை பத்து இவை பாட வல்லார்கள்பூ மலி வானவரோடும் பொன்னுலகில் பொலிவாரே.
உரை

அழகிய பரந்த பொழில்களால்‌ சூழப்பட்ட திருக்கற்குடி மாமலையில்‌ வீற்றிருப்பவர்‌ சிவபெருமான்‌. இப்பெருமானை நாவிற்‌ பொருந்திய வண்புகழால்‌ போற்றப்‌ பெறும்‌ சீகாழிப்‌ பதியில்‌ தோன்றிய நன்மை அமைந்த ஞானசம்பந்தன்‌ செந்தமிழ்‌ மாலையாகிய இத்திருப்பதிகத்தைப்‌ பாடினார்‌. இப்பாடல்கள்‌ பத்தையும்‌ ஓத வல்லவர்கள்‌ பொலிவுடன்‌ கூடிய தேவர்களோடும்‌ பொன்னுலகின்கண்‌ செழித்து வாழ்வார்கள்‌.