திருமுறை 1 · 1.041 · 11

திருப்பாம்புரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
தக்கராகம்
தலம்
பாம்புரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர் திரிபுர மெரிசெய்த செல்வர்வாரணி வனமுலை மங்கையோர் பங்கர் மான்மறி யேந்திய மைந்தர்காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல் கண்ணுதல் விண்ணவ ரேத்தும்பாரணி திகழ்தரு நான்மறை யாளர் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர், திரிபுரம் எரிசெய்த செல்வர்,வார் அணி வனமுலை மங்கை ஓர் பங்கர், மான்மறி ஏந்திய மைந்தர்,கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல், கண்ணுதல், விண்ணவர் ஏத்தும்பார் அணி திகழ் தரு நால்மறையாளர் பாம்புர நன்நகராரே.
உரை

விண்ணவர்‌ போற்றும்‌ திருப்பாம்புர நன்னகரில்‌ வீற்றிருப்பவர்‌ சிவபெருமான்‌. இவர்‌ சிறந்த அணிகலன்கள்‌ விளங்கும்‌ அழகிய மார்பில்‌ முப்புரிநூல்‌ அணிந்தவர்‌. திரிபுரங்களை எரித்த வீரச்செல்வர்‌. கச்சணிந்த அழகிய தனங்களையுடைய உமையம்மையை ஒரு பாகமாக ப்‌ பொருந்தியவர்‌. மான்குட்டியை கையில்‌ ஏந்தியவர்‌ நீலமணிபோலும்‌ திகழ்கின்ற கண்டத்தையுடைய தலைவர்‌. உலகில்‌ அழகிய புகழோடு விளங்கும்‌ மறைகளை அருளிய நெற்றிக்‌ கண்ணர்‌ இவர்‌ ஆவார்‌.

2

கொக்கிற கோடு கூவிள மத்தம் கொன்றையொ டெருக்கணி சடையர்அக்கினொ டாமை பூண்டழ காக அனலது ஆடுமெம் மடிகள்மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும் விண்ணவர் விரைமலர் தூவப்பக்கம்பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர்,அக்கினொடு ஆமை பூண்டு அழகு ஆக அனல் அது ஆடும் எம் அடிகள்,மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரைமலர் தூவ,பக்கம் பல் பூதம் பாடிட, வருவார் பாம்புர நன் நகராரே.
உரை

சிவபெருமான்‌ திருப்பாம்புர நன்னகர்‌ இறைவராவார்‌. இவர்‌ கொக்கிறகு என்னும்‌ மலர்‌, வில்வம்‌, ஊமத்தம்பூ, கொன்றை மலர்‌ எருக்க மலர்‌ ஆகியவைகளைத்‌ தனது சடைமுடியில்‌ அணிந்தவர்‌. எம்‌ தலைவராகிய இவர்‌ சங்கு மணிகளோடு ஆமை ஓட்டைப்‌ பூண்டு அழகாக அனலின்கண்‌ ஆடுபவர்‌. விண்ணோர்கள்‌ மணம்‌ கமழும்‌ மலர்களால்‌ அருச்சிக்கவும்‌ அருகில்‌ பூதங்கள்‌ பல பாடவும்‌ வருவார்‌.

3

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர் சூறைநல் லரவது சுற்றிப்பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப் பித்தராய்த் திரியும்எம் பெருமான்மன்னுமா மலர்கள் தூவிட நாளும் மாமலை யாட்டியுந் தாமும்பன்னுநான் மறைகள் பாடிட வருவார் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர் சூறை நல் அரவு அது சுற்றி,பின்னுவார் சடைகள் தாழவிட்டு ஆடி, பித்தர் ஆய்த் திரியும் எம்பெருமான்,மன்னு மா மலர்கள் விட, நாளும் மாமலையாட்டியும் தாமும்,பன்னும் நால்மறைகள் பாடிட, வருவார் பாம்புர நன்நகராரே.
உரை

திருப்பாம்புர நன்னகர்‌ இறைவர்‌ கோவண ஆடையை அணிந்திருப்பவர்‌. அதன்மேல்‌ காற்றை உட்கொள்ளும்‌ நல்ல பாம்பு ஒன்றைச்‌ சுற்றி இருப்பவர்‌. பின்னிய நீண்ட சடைகளைத்‌ தாழவிட்டுக்‌ கொண்டு பித்தராய்‌ ஆடித்‌ திரிபவர்‌ எமது பெருமான்‌. அவர்‌ மேல்‌ மணம்‌ நிறைந்த சிறந்த மலர்களைத்‌ தூவி ஒவ்வொரு நாளும்‌ நாம்‌ வழிபட வேண்டும்‌. அப்போது மலையரசன்‌ மகளாகிய பார்வதியும்‌ தாமுமாய்‌, நான்மறைகளை அடியவர்‌"புகழ்ந்து போற்றிப்‌ பாடிக்கொண்டுவர, நம்முன்‌ காட்சி தருவார்‌.

4

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் சுடர்விடு சோதியெம் பெருமான்நஞ்சுசேர் கண்டம் உடையஎன் நாதர் நள்ளிருள் நடஞ்செய்யும் நம்பர்மஞ்சுதோய் சோலை மாமயி லாட மாடமா ளிகைதன் மேலேறிப்பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான்,நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர், நள் இருள் நடம் செயும் நம்பர்மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட, மாடமாளிகை தன்மேல் ஏறி,பஞ்சு சேர் மெல் அடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்நகராரே.
உரை

மேகங்கள்‌ தோயும்‌ சோலைகளில்‌ சிறந்த மயில்கள்‌ ஆடுகின்றன. மாடமாளிகைகளில்‌ ஏறி, செம்பஞ்சு தோய்த்த சிவந்த மெல்லிய பாதங்களை உடைய பெண்கள்‌ ஆடுகின்றனர்‌. சிவபெருமான்‌ இவ்வித சிறப்புக்களைக்‌ கொண்ட திருப்பாம்புர நன்னகரின்‌ இறைவர்‌ ஆவார்‌. எம்பெருமான்‌ இறக்கும்‌ நாள்‌ இல்லாதவராய்‌, தோற்றமும்‌ இல்லாதவராய்‌ ஒளி பெற்று விளங்கும்‌ சோதி வடிவினராய்த்‌ திகழ்பவர்‌. இவர்‌ விடம்‌ பொருந்திய கண்டத்தை உடையவர்‌. நள்ளிருளில்‌ நடனம்‌ புரியும்‌ நம்பப்படத்தக்க கடவுளாவார்‌.

5

நதியதன் அயலே நகுதலை மாலை நாண்மதி சடைமிசை யணிந்துகதியது வாகக் காளிமுன் காணக் கானிடை நடஞ்செய்த கருத்தர்விதியது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்தொலி ஓவாப்பதியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
நதி அதன் அயலே நகுதலை மாலை, நாள்மதி, சடைமிசை அணிந்து,கதி அது ஆக, காளி முன் காண, கான் இடை நடம் செய்த கருத்தர்;விதி அது வழுவா வேதியர் வேள்வி செய்தவர் ஓத்து ஒலி ஓவாப்பதி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
உரை

விதிமுறை வழுவாமல்‌ வேதியர்கள்‌, வேள்விகள்‌ பல‌ செய்து வருகின்றனர்‌. அதனால்‌ வேத ஒலி நீங்காத பதி அது என விரும்பி உமையம்மையும்‌ தாமுமாய்த்‌ திருப்பாம்புர நன்னகரில்‌ விளங்குகிறார்‌ நம்‌ இறைவர்‌. தம்‌ சடைமுடிமீது கங்கையின்‌ பக்கத்தில்‌ சிரிக்கும்‌ தலைமாலையையும்‌ பிறைமதியையும்‌ அணிந்துள்ளார்‌. இந்த அணிகள்‌ நடனத்திற்குரிய கதி அதுவே என்னும்படி, காளி முன்னே இருந்து காண, இடுகாட்டுக்குள்‌ நடனம்‌ செய்த தலைவர்‌ இவர்‌ ஆவார்‌.

6

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர் ஒளிதிக ழுருவஞ்சேர் ஒருவர்மாதினை யிடமா வைத்தஎம் வள்ளல் மான்மறி யேந்திய மைந்தர்ஆதிநீ அருளென் றமரர்கள் பணிய அலைகடல் கடையஅன் றெழுந்தபாதிவெண் பிறைசடை வைத்தஎம் பரமர் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை ஒருவர்; ஒளி திகழ் உருவம் சேர் ஒருவர்;மாதினை இடமா வைத்த எம் வள்ளல்; மான்மறி ஏந்திய மைந்தர்;"ஆதி, நீ அருள்!" என்று அமரர்கள் பணிய, அலைகடல் கடைய, அன்று எழுந்தபாதி வெண்பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன்நகராரே.
உரை

திருப்பாம்புர நன்னகர்‌ இறைவர்‌ கல்வி கற்றுத்‌ தெளிந்த ஞானியர்களால்‌ உணரப்படும்‌ ஒருவராவார்‌. ஒளியாக விளங்கும்‌ சோதி உருவினராவார்‌. உமையம்மையை இடப்பாகமாகக்‌ கொண்டவர்‌ எம்‌ வள்ளல்‌ ஆவார்‌. இளமான்‌ மறியைக்‌ கையில்‌ ஏந்திய மைந்தர்‌ ஆவார்‌. திருப்பாற்கடலைக்‌ கடைந்த பொழுது எழுந்த ஆலகால விடத்திற்கு அஞ்சிய தேவர்கள்‌, “ஆதியாக விளங்கும்‌ தலைவனே, நீ எம்மைக்‌ காத்தருள்க” என வேண்டினர்‌. அந்த வேண்டுகோளுக்கு இணங்கி நஞ்சினை உண்டும்‌, கடலினின்று எழுந்த பிறை மதியைச்‌ சடையிலே வைத்தும்‌ அருள்‌ புரிந்தவர்‌ எம்‌ மேலான தலைவராயெ சிவபிரான்‌ ஆவார்‌.

7

மாலினுக் கன்று சக்கர மீந்து மலரவற் கொருமுகம் ஒழித்துஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி அனலது வாடும் எம்மடிகள்காலனைக் காய்ந்து தம்கழ லடியாற் காமனைப் பொடிபட நோக்கிப்பாலனுக் கருள்கள் செய்தஎம் மடிகள் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு ஒரு முகம் ஒழித்து,ஆலின் கீழ் அறம் ஓர் நால்வருக்கு அருளி, அனல் அது ஆடும் எம் அடிகள்;காலனைக் காய்ந்து தம் கழல் அடியால், காமனைப் பொடிபட நோக்கி,பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன்நகராரே.
உரை

திருப்பாம்புர நன்னகர்‌ இறைவர்‌ முன்பு திருமாலுக்குச்‌ சக்கராயுதம்‌ அளித்தவர்‌. தாமரை மலர்‌ மேல்‌ உறையும்‌ பிரமனது ஐந்தலைகளில்‌ ஒன்றைக்‌ கொய்தவர்‌. சனகாதி முனிவர்கள்‌ நால்வருக்குக்‌ கல்லாலின்‌ கீழிருந்து அறம்‌ அருளியவர்‌. தீயில்‌ நடனமாடுபவர்‌. தமது கழலணிந்த திருவடியால்‌ காலனைக்‌ காய்ந்தவர்‌. காமனைப்‌ பொடிபட நோக்கியவர்‌. உபமன்யு முனிவருக்குப்‌ பாற்கடல்‌ அளித்து அருள்கள்‌ செய்த தலைவர்‌ ஆவார்‌.

8

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க மெல்லிய திருவிர லூன்றிஅடர்த்தவன் தனக்கன் றருள்செய்த அடிகள் அனலது ஆடும்எம் மண்ணல்மடக்கொடி யவர்கள் வருபுன லாட வந்திழி அரிசிலின் கரைமேல்படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க, மெல்லிய திருவிரல் ஊன்றி,அடர்த்து அவன் தனக்கு அன்று அருள் செய்த அடிகள்; அனல் அது ஆடும் எம் அண்ணல்மடக்கொடி அவர்கள் வருபுனல் ஆட, வந்து இழி அரிசிலின் கரைமேல்படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன்நகராரே.
உரை

இளங்கொடி போன்ற பெண்கள்‌ அரிசிலாற்றில்‌ நீராட வருகின்றனர்‌. அந்த நத, ஆற்றங்கரைத்‌ தோட்டங்களில்‌, பெரிய மணிகளை அடித்து வந்து சேர்க்கின்றன. திருப்பாம்புர நன்னகர்‌ இறைவர்‌ இங்கு வீற்றிருக்கிறார்‌. செருக்குற்ற வலிய இராவணன்‌ கயிலை மலையைப்‌ பெயர்த்து எடுத்தபோது மெல்லிய திருவடி விரல்‌ ஒன்றை ஊன்றி அவனை நெருக்கினார்‌. பின்னர்‌ இராவணன்‌ தன்‌ பிழையை உணர்ந்து வருந்தி இறைவனைப்‌ போற்றினான்‌. அதன்பின்‌ அவனுக்கு அருள்பல செய்தவர்‌ நம்‌ தலைவர்‌ ஆவார்‌.

9

கடிபடு கமலத் தயனொடு மாலுங் காதலோ டடிமுடி தேடச்செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந் தீவண ரெம்முடைச் செல்வர்முடியுடை யமரர் முனிகணத் தவர்கள் முறைமுறை யடிபணிந் தேத்தப்படியது வாகப் பாவையுந் தாமும் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
கடி படு கமலத்து அயனொடு மாலும், காதலோடு அடிமுடி தேட,செடி படு வினைகள் தீர்த்து அருள் செய்யும் தீவணர்; எம்முடைச் செல்வர்;முடி உடை அமரர் முனிகணத்தவர்கள் முறை முறை அடி பணிந்து ஏத்த,படி அது ஆகப் பாவையும் தாமும் பாம்புர நன்நகராரே.
உரை

முடிசூடிய அமரர்களும்‌ முனிகணத்தவர்களும்‌ முறையாக‌ சிவபெருமான்‌ திருவடிகளைப்‌ பணிந்து ஏத்துதற்கு உரிய தகுதி வாய்ந்த நல்ல இடம்‌ திருப்பாம்புரம்‌. இந்த நன்னகரத்தில்‌ உமையம்மையும்‌ தாமுமாய்‌ எழுந்தருளி இருக்கிறார்‌. மணம்‌ பொருந்திய தாமரை மலர்‌ மேல்‌ விளங்கும்‌ பிரமனும்‌ திருமாலும்‌ அன்போடு அடிமுடி காண முடியாமல்‌ திகைத்து நின்றனர்‌. அப்போது தீவண்ணராய்த்‌ தோன்றிய சிவனார்‌ தூறாக மண்டிக்‌ கடக்கும்‌ வினைகள்‌ பலவற்றையும்‌ தீர்த்து அவர்களுக்கும்‌ அருள்‌ செய்தார்‌. இவர்‌ எம்‌ செல்வர்‌ ஆவார்‌.

10

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங் குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங் கையர்தா முள்ளவா றறியார்வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க வாரண முரிசெய்து போர்த்தார்பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்னக ராரே.
சொற்பிரிப்பு
குண்டர், சாக்கியரும், குணம் இலாதாரும், குற்றுவிட்டு உடுக்கையர் தாமும்,கண்ட ஆறு உரைத்துக் கால் நிமிர்த்து உண்ணும் கையர்தாம் உள்ள ஆறு அறியார்;வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார்;பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன்நகராரே.
உரை

பரு உருவம்‌ படைத்த சமணர்களாலும்‌ புத்தர்களாலும்‌, மிகச்‌ சிறிய ஆடையை அணிந்தும்‌ கண்டபடி பேசக்‌ கொண்டும்‌, நின்றபடியே உண்ணும்‌ சமணத்‌ துறவியராலும்‌, உள்ளபடி அறியப்படாதவராகுிய சிவபெருமான்‌ திருப்பாம்புர நன்னகரின்‌ இறைவர்‌ ஆவார்‌. வண்டுகள்‌ மொய்க்கும்‌ கூந்தலை உடைய மலைமகளாகிய பார்வதி தேவி நடுங்க யானையை உரித்துப்‌ போர்த்தவர்‌. நாம்‌ முற்பிறவிகளில்‌ செய்த பாவங்களைத்‌ தீர்ப்பவர்‌.

11

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த பாம்புர நன்னக ராரைக்கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக் கழுமல முதுபதிக் கவுணிநார்மலிந் தோங்கும் நான்மறை ஞான சம்பந்தன் செந்தமிழ் வல்லார்சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச் சிவனடி நண்ணுவர் தாமே.
சொற்பிரிப்பு
பார் மலிந்து ஓங்கிப் பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரைக்கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாடக் கழுமல முது பதிக் கவுணிநார் மலிந்து ஓங்கும் நால் மறை ஞான சம்பந்தன்—செந்தமிழ் வல்லார்சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி, சிவன் அடி நண்ணுவர் தாமே.
உரை

உலகில்‌ புகழ்‌ நிறைந்து ஓங்கியதும்‌ பெரிய மதில்களால்‌ சூழப்பெற்றதுமான நன்னகரம்‌ திருப்பாம்புரம்‌. இங்கு வீற்றிருக்கும்‌ இறைவனை, மழை வளத்தால்‌ சிறந்து அழகியதாய்‌ விளங்கும்‌ வயல்கள்‌ சூழப்பெற்றதும்‌, மாடவீடுகள்‌ உடையதும்‌, கழுமலம்‌ என்னும்‌ பெயர்‌ பெற்ற பழம்பதியில்‌, கவுணியர்‌ கோத்திரத்தில்‌ அன்பிற்‌ சிறந்தவனாகவும்‌, புகழால்‌ ஓங்கி விளங்கும்‌ நான்மறை வல்ல ஞானசம்பந்தன்‌ போற்றிப்‌ பாடினார்‌. இந்த செந்தமிழ்ப்‌ பதிகத்தை ஓதவல்லவர்‌ புகழும்‌ அழகும்‌ மிகுந்தவராய்ச்‌ செல்வத்தால்‌ சிறந்து வாழ்ந்து, முடிவில்‌ சிவனடியை அடைவார்‌.